மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 5

 

ஆவாரம் பூ என்று ஒரு படம். பலரும் பார்த்திருக்கக் கூடியது. தகரா என்று முன்னர் செய்த மலையாளப் படத்தை பரதனே தான் தமிழில் செய்தார். திரைக்கதை பத்மராஜன் தான். ஆவாரம் பூ ஒரு குரோட்டன் என்றால் தகரா ஒரு காட்டுச் செடி. புழுதி படிந்து புதர் மண்டிக் கிடக்கிற செடி. பத்மராஜன் காட்டுசெடியின் ஆள். ஒரு ஒழுக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கான விடையைத் தேடும் வழக்கமான சினிமா பாடம் அவரிடம் நடக்காது. அதனால் தான் ஓரிடத்தொரு பயில்வான் படத்துக்கு ஆளுக்கு ஆள் ஒரு கதை சொல்கிறார்கள். எப்படியாவது அதில் ஒரு நீதியைக் கண்டு விட முடியாதா என்கிற அவர்களுடைய ஆதங்கம் சரிதான். ஆனால் உலகம் எந்தத் திக்கிலும் நீதியை தனியாக பிதுக்கக் கூடியது அல்ல.மல்யுத்தம் என்கிற சென்று தேய்ந்துறும் ஒரு கலையின் கடைசிக் கண்ணிகளில் ஒரு கண்ணி அறுந்து போவதின் தயவு தாட்ஷண்யமற்ற விவரிப்பே படம்.

ஓரிடத்தொரு பயில்வான் என்பது தலைப்பு. ஒரு இடத்தில் ஒரு பயில்வான் என்பது பொருள். கதாநாயகன் அந்த பயில்வான் தான். அவனுடைய ஊரையோ, பேரையோ நாம் ஆராய வேண்டியதில்லை. யாருக்காவது ஒரு கடிதம் போடுவது என்றால் கூட கையெழுத்து கிடையாது. ஒரு சங்கு வரையப்படும். அவனை சார்த்தவர்கள் அவனை அறிவார்கள். அதற்கு என்ன பொருள் என்பது கூட சொல்லப்படுவதில்லை. ஆனால் அது அவனது கலையின் அடையாளம் என்பது உறுதி. அவன் அதில் பேர் கேட்டவனாக இருந்திருக்கக் கூடும்.

Aavarampoo Full Movie HD | Vineeth, Nandhini, Nassar | Superhit ...

நடுஇரவில் வயல்களில் அப்போது பையன்கள் எல்லாம் தவளை பிடிக்கப் போவார்கள். அவைகளை வாங்கிக் கொள்கிற வணிகம் இருந்தது. மற்றும் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி இருந்தது. அதற்கான அப்படி ஒரு இரவில் பையன்கள் பார்த்துக் கொண்டிருக்க ஆற்றில் நீந்தி வந்து பயில்வான் கரையேறுகிறான். எங்கே இருந்து வருகிறேன் என்று அவன் சொல்லிக் கொள்ளவில்லை. தலையை துவட்ட துண்டு கேட்கிறான். ஒருவனிடமிருக்கிற இடுப்புத் துண்டை அவிழ்த்துக் கொண்டு தலையைத் துடைத்துக் கொள்கிறான். அடுத்த நிமிடம் பசிக்கிறது என்கிறான். பையன்கள் இருப்பதைக் கொடுக்கிறார்கள். அது முடிந்ததும் உடனடியாக சௌகர்யமான ஒரு இடத்தில் படுத்துக் கொள்கிறான். காலையில் எழுந்ததும் ஒரு பறவை வேட்டைக்காரனிடம் சாப்பிட கிடைக்கிற இடம் பற்றி பேசி, அது வளர்ந்ததில் அந்த ஊர்க்காரனான சிவன் பிள்ளையை சந்திக்கிறான். அவன் ஒரு சண்டை போடுகிற ஆள் என்பதுசிவன்பிள்ளைக்கு தெளிவாகிறது. அவர் மூலம் அவன் அந்த ஊரில் செட்டிலாகிறான்.

பத்மராஜனின் திரைக்கதை இதுவரையில் ஒரு சோம்பேறியைப் போன்ற தடியனின் அசட்டுத்தனத்தையும் அவனது தீராத பசியையும் தான் சொல்லுகிறது. பெரிய திருப்பங்கள் எதுவுமற்ற அலுப்பூட்டுகிற கிராம வாழ்க்கையில் அந்த பயில்வானின் வருகை ஒரு வினோதம். குன்று போன்ற அவனது உடல், அவனது தீனி இதெல்லாம் புத்துணர்வைக் கூட்டின பொழுதுபோக்குகள். எல்லோருக்கும் அவனை முன்னிட்ட ஒரு கிளர்ச்சி மின்சாரம் போலவே ஓடுகிறது. அவன் தவளை பிடிப்பதாக அறிமுகமான கண்ணனின் வீட்டில் தான் தங்க வைக்கப்படுகிறான். ஊரே பொருட்காட்சி போல பார்த்து செல்லும் ஒரு மாமிச உடல்காரனை அடுத்த வீட்டிலிருக்கிற சக்கரை மட்டும் பார்க்காமல் இருப்பாளா? கிளுகிளுத்து சிரித்து முடிந்து அங்கிருந்து ஓடிப்போனாலும் அவளது குளத்தில் கல் விழுந்து வட்டங்கள் சுற்ற ஆரம்பிக்கின்றன. திரைக்கதையின் ஒரு யதார்த்தமான போக்கின்படி அநேகமாக இது நாம் எதிர்பாராதது. நமக்கு பிடிக்காததாகக் கூட இருக்கலாம்.

ஊரில் பயில்வானின் சிபாரிசில் இன்னொரு பயில்வான் வரப் போகிறான், சண்டை நடக்கப் போகிற கட்டம் வரும்போது இப்போது பயிவானின் இன்னொரு பக்கம் வெளிப்பட ஆரம்பிக்கிறது. அவன் தின்று தூங்கி பொழுதை ஓட்டும் வெறும் தடியன் அல்ல. அவனது பயிற்சிகள் காத்திரமாக இருக்கின்றன. அவனுக்கு மூர்க்கம் இருக்கிறது. அவனது கண்களில் ஒரு வெறிப்பு வருகிறது. மக்களுக்கு புரியலாம், புரியாமல் போகலாம். அந்த நேரம் அவனை ஆட்கொண்டிருப்பது அவனது கலை. அசோகமித்திரனின் காதர் டைகர் பைட்டை டெமோ செய்து காட்டப் போய் புலியாக நின்றதற்கு சமம். டிக்கெட்டு வாங்குகிற மக்களுக்கு நம்மூர் பயில்வான் மற்றவனை அடித்து வீழ்த்த வேண்டும். அந்தக் கலையின் நெளிவு சுளிவுகளை கண்டறிந்து வித்தகனைப் போற்ற இது என்ன பழைய மகாராஜாக்களின் காலமா? மக்கள் வீறிடுகின்றனர். கொண்டாடுகின்றனர். நமது ஆள் வென்று விட்டான். அந்த சூட்டோடு சூட்டில் வெற்றியின் குருட்டுத்தனத்தில் சிவன் பிள்ளை பயில்வானுக்கு சக்கரையை திருமணம் செய்து வைக்கக் காரனமாகிறான்.

Vineyards of passion and bloody beaches: 5 eternal Padmarajan ...

சிவன்பிள்ளையின் ஆதாயம் தேடுகிற குறுக்கு புத்தியும் இதற்கு காரணமாக இருக்கிறது.

சக்கரை ஒரு வீச்சு. திமிறுகிற இளமை. யாரால் இவளை வெல்லக் கூடும் என்கிற மன அரிப்பு அந்த கிராமத்துக்கே கூட இருந்திருக்கக் கூடும். அவளது பால்ய தோழன் கண்ணன் அவள் தன்னை விரும்ப முடியாது என்பதால் தூரத்திலேயே நின்று கொள்கிறான். துபாய் ரிட்டர்ன் ஜாப் சோப்பு சீப்பு காட்டி அவளை சரசம் பேசும்போது அவளுக்கும் ஆசைதான். விபத்து போல தப்பித்தவாறு வந்தவள் பயில்வானுக்கு மனைவியான போது அவளுக்கு பாலுறவு குறித்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். பால் சக்கரியா கரடியை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கதை எழுதியிருக்கிறார். ஒருவிதமான கற்பனையில் இது அதெல்லாம் தான். ஒரு கரடியைப் போலவோ, சிம்பன்சியைப் போலவோ அவளை கைகளில் தூக்கிக் கொண்டு தட்டாமாலை சுற்றும்போது என்ன நடக்கப் போகிறதோ என்கிற ஆர்வம் அவளுக்கும், ஆடியன்சுக்கு ஒரு மனச்சுழிப்பும் இருக்கிறது. அப்படி வைக்கிற நினைப்புகள் தவறிப் போகின்றன. அவன் அவள் நினைப்புக்கு மறுபக்கத்தில் இருந்து, தனக்கு அவளிடத்தில் உள்ள அன்பை அவன் வெளிப்படுத்தியாயிற்று. ஆனால் பாலுறவு? அது கேள்விக்குறியாக நிற்கும்போதுதான் இந்ந்தக் கலையின் சீரழிவுகள் மெதுவாக சொல்லப்படுகின்றன. சண்டை போடுவதற்கு எவ்வளவு காத்திருந்தும் யாரும் வரவில்லை. சோற்றுக்கு காசு வேண்டாமா?

முதலில் இது ஒரு கலையென்று யாருக்கு மதிப்பிருக்கிறது?

இவனைப் போன்ற பயில்வான்கள் எல்லோரும் பசியால் அவமானத்தால் புறக்கணிப்பால் ஒதுங்கிப் போயிருக்கின்றனர். தன்னை அழித்துக் கொண்டிருக்கின்றனர். பத்து வெற்றிகளை சர்வ சாதாரணமாகக் கொண்டாடி விட்டு ஒரே ஒரு தோல்விக்கு எவனையும் கழித்துக் கட்டிவிடுகிற நவீன காலம். பயில்வான் தனது அந்திமத்தை உணர்ந்தவாறே தான் இருக்கிறான் என்பது முக்கியம். அவனுக்கும் பசி வாட்டுகிறது. அவமானங்கள் சூழ்கின்றன. சிவன் பிள்ளையைப் போன்ற ஒரு வெத்துவேட்டு, கடையில் உட்கார்ந்து பீடி எடுத்து கொடுக்க சொல்கிறான். அநேகமாக இந்த இடத்தின் வாழ்க்கை முடிந்து விட்டது என்று அவனுக்குப் படும்போதுதான் திரைக்கதையில் வேறு ஒன்று திறக்கிறது.

ஒரு இடத்தில், ஒரு இடத்தில், ஒரு இடத்தில் என்று அவனை வாழ்வு துரத்தியிருக்கிறது. இது மாதிரி எத்தனை தங்கல்களோ, எத்தனை தோல்விகள், எத்தனை வெளியேற்றங்களோ, முக்கியமாக அவனுக்கு எத்தனை மனைவிகளோ?

பணம் எதையாவது சம்பாதித்துக் கொண்டு வருகிறேன் என்று விட்டுப் போன அவனது சக்கரை கண்டிப்பாக அவளை நேசித்திருக்கிறான். அவன் தனது மேல் உடலாசை இல்லாமலிருப்பதும், அப்படியே இருந்தால் கூட லங்கோட்டை நனைத்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொள்வதுமான பிரம்மச்சாரியத்துக்கு அவனை வெறுத்தாலுமே கூட அவனது தொழிலின் நோக்கம் அவளை நெகிழ்த்துகிறது. அவன் மீது அவள் அன்பு செய்கிறாள். உதவி செய்கிறாள். மேலும் காத்திருக்கிறாள். ஆனால் ஒருவேளை அவன் தனது வேறு ஒரு மனைவியைத் தேடிப் போயிருக்கிறாம் என்று தெரிந்ததும் உடனடியாக வெறும் ஒரு சுரண்டல்காரனிடம் தனது உடலைத் தோற்கிறாள். கதை நகர கண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள்.

போன இடத்தில் என்ன ஏமாற்றமோ?

அல்லது சக்கரை மீது கொண்ட பற்றோ, பரிவோ?

திரும்பி வந்த அவனால் அவளை கைகொள்ள முடியவில்லை.

Oridathoru oridathoru phayalvan Movie By Padmarajan

ஏற்கனவே எல்லா பக்கமிருந்தும் கைவிடப்பட்ட பயில்வான் தனது மேன்மையைக் கூட இழந்து அவனது கலைக்கு எதிரான வன்முறையைக் கூட பிரயோகித்துப் பார்க்கிறான். அவனால் அவளை வெல்ல முடியவில்லை. அந்த வெறுப்புக்கு எதிராக ஒரு மனிதன் எதையும் செய்ய முடியாது.நீ என்னை நேசிக்கவில்லையா என்று கேட்டு, அவனுக்குக் கிடைக்கிற பதில் அவனது நெஞ்சை நொறுக்கியது தான். இப்போது சக்கரையாலும் மூர்க்கமாக ஒதுக்கப்பட்டு திரும்பிப் போகிறான்.

படம் முடிகிறது.

இதற்கு மேல் அவனுக்கு வேறு ஓரிடம் கிடைக்குமா தெரியாது.

பத்மராஜன் தனது படத்தில் நல்ல கலைஞர்களுக்கு நேரக்கூடிய இடர்ப்பாடுகளை மிகவும் நுட்பமாக சொல்லத் தவறவில்லை. சிவன் பிள்ளை பயில்வானின் கூலியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும்போது ஒருபோதும் அவன் முகம் சுளிப்பதே கிடையாது. அவனது வாழ்வை சூறையாடுவதாக இருந்த போதிலும் பணத்தின் மீது அவனுக்கு எள்ளளவில் நோக்கமில்லை. குறைந்த கூலியில் உன்னோடு மோதுகிறவனை சண்டைக்கு இறக்கலாம் என்கிறபோது அந்த சண்டை நன்றாக இருக்காது என்கிறான் அவன்.வருகிறவனை அடித்துப் போடு என்னும்போது எனக்கு சண்டைதான் வரும், நடிப்பு வராது என்றுமே சொல்லுகிறான். ஒரு கட்டத்தில் காசுக்காக தத்தளிப்பு நிகழும்போது சிவன்பிள்ளை பேசுகிற பேரத்துக்கு அதுவாவது நடக்கட்டும் என்று ஒப்புக் கொள்கிற அவலமும் நேர்கிறது. ஒருவேளை தெருவை பசியோடு சுற்றிவரும் ஒரு கூத்தாடியைக் கூட கலையில் அடையாளபடுத்திக் கொள்ள யாரேனும் இருந்து விடுவர், கேவலம் பயில்வான் ஒரு சண்டை போடுகிற ஆள் அல்லவா?  குறைந்த பட்ஷம் அவனது பெருந்தீனிக்கு யார் பொறுப்பெடுத்துக் கொள்வார்? உடம்பு இருக்கிறதே, கூலி வேலைக்கு போகக் கூடாதா என்பாள் சக்கரையின் அம்மா. வேலை செய்வதிருக்கட்டும், ஒரு மரப்பாலத்தை ஆள் துணை இல்லாது கடக்க முடியாதவன் அவன். ஒரு கலைஞன் மற்றவர்களின் போற்றுதலின்றி தனித்து வாழ முடியாது. தனது வாழ்வில் கடந்து வந்த பல ரகசியங்களை வெளியே சொல்லாமல் சக்கரையை மணமுடித்ததற்கு காரணம் தனிமையைப் பற்றின பயமாகத் தான் இருக்கும். அன்பிற்கான பரிதவிப்பாகவும் கூட இருக்கும்.

பத்மராஜன் எல்லாவற்றையும் சொல்வதில்லை.

முதலில் அவருக்கு இருக்கிற சிறப்பே தனது திரைக்கதையில் பார்வையாளர்களை பங்கேற்க செய்வதுதான்

Oridathoru Phayalvaan Classical Malayalam Movie | P. Padmarajan ...

முன்னம் எப்போதோ படம் பார்த்தபோது நான் இதை மண்டைக்குள் போட்டு உருட்டிக் கொண்டது நினைவில் இருக்கிறது. அதனாலேயே படத்தை மறக்க முடிந்ததில்லை. எல்லாவற்றையும் பானை கவிழ்த்து சொல்லி பத்மராஜன் நம்மை திருப்தி கொள்ள விடுவதில்லை.

படத்தில் இதற்கு வேறு ஒரு முக்கியமான உதாரணம் இருக்கிறது.

கண்ணன் சக்கரைக்கு பால்ய நண்பன் என்று சொல்லியிருந்தேன். அவளது விலகலை கவலைப்பட்டு நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கலாம் என்கிறான் கண்ணன் .கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்காதே என்கிறான். ஒருமுறை அவனிடம் உண்மையாகவே உரிமை எடுத்துக் கொண்டு அவள் கோபித்துக் கொண்டு போவதைப் பார்க்க முடியும். பயில்வானை திருமணம் முடித்த அவல காலங்களில் அவனிடம் மட்டுமே அவள் சில வெளிப்பாடுகளை காட்டுகிறாள். ஒரே உறவாக இருந்த கண்ணனின் தந்தை இறந்து அவன் தனியாக இருக்க, பல்வேறு அனுபவங்களுக்கு அப்புறம் வாழ்வுடன் சமாதானம் செய்து கொள்கிற சக்கரை அவனுடன் இணைந்து கொள்கிறாள். உண்மையில் சரியான ஜோடிகளாக மாறுகின்றனர். ஒருவரையொருவர் எந்நிலையிலும் விட்டுக் கொடுக்காத அன்பு செய்கின்றனர். கண்ணன் பெரிய ஆம்பிளையல்ல என்பதில் அவளுக்கும், அவள் யாருடைய குழந்தையையோ வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்பதில் அவனுக்கோ ஒரு இடறலுமில்லை. இதையெல்லாம் பத்மராஜன் போகிறபோக்கில் கோடு காட்டிதான் தான் சொல்லுவார். திரைக்கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்கிரிப்டை மேஜையின் மீது வைத்து அவர் அதன் மீது ஏறி உட்கார்ந்து கொள்வதில்லை.

கேரளத்தில் மக்களை ஆண்ட எவ்வளவோ காவிய சினிமாக்கள் இருக்கின்றன. ஆனால் ஓரிடத்தொரு பயில்வான் எல்லோரையும் சீண்டிக் கொண்டிருக்கிற ஒரு சவால்.

 

Image

-மணி எம்.கே மணி 

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *