மணி எம்.கே. மணி எழுதிய "மதுர விசாரம்" நாவல் புத்தகம் | Mani MK Mani's Madhura Visaaram Tamil Novel Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

மணி எம்.கே. மணி எழுதிய “மதுர விசாரம்” நாவல் – நூல் அறிமுகம்

புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020ல் பரிசு பெற்ற பத்து குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பை வாசிக்கையில் ‘புயா! மின்னா! இதி!’ என்ற மணி எம்.கே.மணியின் குறுநாவலை வாசித்து அசந்து போய், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அவரது பிற படைப்புகளைத் தேடுகையில் சிக்கியது இந்தப் புதினம் – ‘மதுர விசாரம்?’.

இனிமை/இன்பம் என்றால் என்ன என்ற சிந்தனை – இனிமையான நினைவுகளை மீட்டுவது – என்று எளிமையாக மதுர விசாரம் என்ற சொற்களுக்குப் பொருள் காணலாம். எது இன்பம் எனப்படுவது – மனநிறைவான பொழுதுகள். பிரதி முழுக்க சிவதாசன் எனும் திரைக்கதை எழுத்தாளர் கதைசொல்லியாக இருந்து தான் எழுதிய ‘யாமினி’ என்ற திரைக்கதையையும் அதனூடாக அக்கதை எழுதப்பட்ட காரணமாய் இருந்த தன் வாழ்வின் சம்பவங்களையும் தன்னைச் சுற்றி நிகழ்ந்தவைகளையும் இணைப்பிரதியாகச் சொல்லிச் செல்கிறார்.

திரை இயக்குநர் பரமுவின் பார்வையில் தொடங்குவதாக தொடக்கத்தில் போக்குக் காட்டும் கதை, உண்மையில் சிவதாசனாலேயே புனையப்படுகிறது. ஒரு முழுத் திரைப்படத்தின் எழுபத்தியோரு காட்சிகளைக் கொண்ட திரைக்கதையை – அப்படியே திரைக்கதைக்கான எழுத்து வடிவில் – கொண்டுள்ள முதல் பிரதி இதுதான் என்று நினைக்கிறேன்.

தன் சொந்த வாழ்வில் சுஜாதா என்ற உறவுக்காரப் பெண் மீது கொண்ட இறைஞ்சும் காதலை அவளும் ஏற்றுக் கொண்டு, இன்னொரு உறவுப்பெண் தங்கத்தின் திருமணத்திற்கு முந்தைய நாளிரவில், தன் கேரள நண்பன் திலகனுடன் மதுவருந்திக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், அசந்தர்ப்பவசமாக சுஜாதாவுடன் முதல் கலவி நேர்கிறது. இருவரும் வெறி கொண்ட அக்கலவிக்குப் பின்னான உச்சகட்ட காதோர கிசுகிசுப்பில் சுஜாதா சொல்கிறாள் – ‘இப்ப உனக்குப் புரியுதா? எனக்கு உன் மேலேயும், திலகன் மேலேயும் கொள்ளை ஆசை’.

அந்தக் குரலின் உறுதியும் உண்மையும் காதலும் தான் – அதோடு தங்களது கூடலை ஏற்படுத்திக் கொடுத்ததே திலகன்தான் என்றும் அவனுக்கும் சுஜாதாவுக்குமான கலவிக்குப் பின் அவளது வேண்டுகோளுக்கிணங்க என்று அறிந்ததும்தான் – ‘யாமினி’ திரைக்கதைக்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என்கிறான் சிவதாசன்.

சுஜாதாவாக ‘யாமினி’, திலகன் – சிவதாசனாக ‘பழனி – குமார்’ கதாபாத்திரங்கள் திரைக்கதையில் புனைவாகி இருக்கிறார்கள். திலகன்/பழனி என்று ஏற்கனவே உனக்கு காதலன்/கணவன் இருக்கும் போது சிவதாசன்/குமாரின் மேல் எப்படி காதல் உண்டாக முடியும் என்ற கேள்வியும் பிரதியினூடாகவே எழுப்பப்பட்டு, ‘எனக்கு சிவதாசனை/குமாரைப் பார்த்தால் அப்பாவித்தனத்தின் மொத்த உருவாக, பாவமாகத் தோன்றுகிறது. இறுக்க அணைத்துக் கொண்டு முலையருந்தக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கை எழுகிறது’ என்கிறாள் சுஜாதா/யாமினி. இந்த இடத்தில் ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கலானது (Oedipus complex) மகன்xதாய் என்ற நிலையின் தலைகீழாக்க முறையாக மாறி தாய்xமகன் என உருமாறுவதைக் காண முடிகிறது. அதை உணர்ந்தோ என்னவோ சிவதாசன் தனது ‘யாமினி’ திரைக்கதைப் பிரதியில் யாமினியின் அணைப்பில் பொங்கிய தனது தாய்ப்பாலின் சொட்டை குமாரின் நாவில் தடவுவதாகக் காட்சியமைத்திருக்கிறார்.

இப்படி இருக்க முடியுமா? ஒரு பெண் எப்படி உளப்பூர்வமாக இரண்டு ஆண்கள் மேல் காதல் கொள்ள முடியும் என்ற கலாச்சாரக் காவல் தரப்பு வினாக்களும் எழத்தான் செய்கின்றன – பிரதிக்குள்ளேயும்..!

நமக்கு இது புதிதில்லைதான் என நினைக்கிறேன். ஒரு பெண்ணை ஐந்து ஆண்களுக்கு மனைவியாக்கி ஆண்டுக்கு ஒரு கணவன் என்று பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பிள்ளை (வாரிசு) பெற்ற திரௌபதியை – பாஞ்சாலியை இந்தியத் துணைக் கண்டப் பரப்பெங்கும் பல்வேறு வடிவங்களில் – கதைகளாய், காவியங்களாய், நாடகங்களாய், பாடல்களாய் – பாடிக்கொண்டே இருந்தோம் – இருக்கிறோம். அதில் சாவகாசமாய் ஒன்றை மறந்துவிட்டோம் – அல்லது அது குறித்த பெரும் ஓர்மையில் அதனை நனவிலி மனதிற்குள் மறைத்துவிட்டோம். திரௌபதி உளமார விரும்பியது – காதலித்தது அர்ஜூனனைத்தான். அவனைக் கணவனாக வரித்தே திருமணம் செய்தாள். ஆனால், தேச பரிபாலனத்திற்காகக் குந்தியின் குறுக்கீடால், திரௌபதியின் தலையில் ஆண்டுக்கொரு கணவன் என தர்மன் தொடங்கி சகாதேவன் வரை முறை வைத்து காதல் ‘செய்ய’ வேண்டிய நிர்ப்பந்தம் விழுந்தது. அவர்களிலும் பீமன் ஒருவனே திரௌபதியை உண்மையாக நேசித்தான் என்றொரு வாசிப்புமுண்டு. இங்கு பெண்ணின் விருப்பமின்றி நாட்டு நலன் என்ற பெயரில் பல ஆண்களுடனான உறவு அவள் மீது பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.

ஆனால், யாமினியோ – சுஜாதாவோ எந்த நிர்ப்பந்தமும் இன்றி இயல்பெழுச்சியாக இன்னொரு ஆண் மீது காதல் கொள்ள நேர்வதாகப் பிரதி பேசுவது கவனிக்கத்தக்கது.

நடப்பில், சுஜாதா உமேஷ் என்பவனை மணந்து கொள்ள நேர்ந்ததும் – அந்த உமேஷ் சுஜாதாவுடனான திலகன்/சிவதாசன் உறவு குறித்து முழுதும் அறிந்தவனாக இருந்ததும் – சுஜாதா தன்னை எரித்துக் கொள்ளவோ/உமேஷால் எரித்துக் கொள்ளப்படவோ நேர்ந்து துன்பியல் முடிவாகிப் போகிறாள்.

ஆனால், சிவதாசனின் ‘யாமினி’ திரைப்பிரதியில், யாமினி தன் காதல் கணவர்கள் பழனி, குமார் ஆகியோருடனும் மகளுடனும், வயிற்றில் இன்னொரு மகவையும் சுமந்தபடி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துவதாக முடித்திருப்பது சிவதாசனின் விருப்ப விழைவின் பாற்பட்ட முடிவு எனக் கொள்ளலாம்.

இப்புதினத்தில் பெண் பாத்திரங்கள் அம்மு, சுஜாதா, கீர்த்தி, யாமினி, விலாசினி, பீனா, தங்கம் முதலியோர் அனைவருமே ஒரு சுயத்தன்மையோடும் வலிமையாகவும் தீர்க்கமான முடிவுகளை துணிவுடனும் வலுவுடனும் செயல்படுத்துபவர்களாகவும் புனையப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, பரமு, சிவதாசன், திலகன், மூர்த்தி, ரவி, ஜூட், மனோஜ், பழனி, குமார், கர்ணா போன்ற ஆண்களானவர்கள் உணர்வுகளில் சிக்கி உடைபடுபவர்களாகவும், ஊசலாட்டமான மனநிலை கொண்டவர்களாகவும், சிறு செயல்களுக்குள்ளும் பெரும் காரணங்களைத் தேடி அலைக்கழிபவர்களாகவும் துலங்குகின்றனர்.

இந்த இருபாலர்க்கும் இடையிலான நுட்பமான ஆளுமை குணாம்ச வேறுபாடு நூலாசிரியரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது தற்செயலாக புனைவுப் போக்கில் நிகழ்ந்ததா என அறிய இயலவில்லை.

இன்னொரு விசயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் முதலில் வாசித்த மணி எம்.கே. மணியின் ‘புயா! மின்னா! இதி!’ குறும் புதினத்தில் இருந்த ஒரு வடிவ நேர்த்தி – கட்டுசெட்டான சொல்லல் முறை – இப்புதினத்தில் சற்றே தளர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சில இடங்களில் சிவதாசன் குரலாகவும் சில இடங்களில் மணியின் குரலாகவும் தத்துவ விசாரங்கள் சற்றே உரத்த குரலில் துருத்தியபடி இருக்கின்றன. புனைவெழுதத் தெரிவு செய்த வடிவ (புதினம் – குறும் புதினம்) வேறுபாடுகளுக்குத் தக்கவாறு படைப்பே தன்னை நீட்டி சுருக்கி எழுதிக் கொள்கிறதோ? மற்றபடி பரமு, சிவதாசன் போன்றோர் இரு பிரதிகளிலும் ஊடாடித் திரிவதும், மழையும் வெள்ளமும் இரண்டிலும் முக்கிய திருப்பங்களுக்குக் காரணமாகியிருப்பதும் ஆசிரியரின் புனைவு மன வெளிக்கான கண்ணுக்குத் தெரியாத நீள் தொடர் சரடைப் புலப்படுத்துகிறது.

பிரதி உருவாக்கும் பெண் மன உணர்வுச் சிக்கல்களைப் புரிந்து கொண்டாலும், திரைத்துறை சார்ந்த பெண்கள் பற்றிய பொதுப்புத்தியின் கருத்தை (நடிகைகள் மிகுந்த பாலியல் வேட்கை கொண்டவர்கள்) உறுதிப்படுத்தும் விதமாக மேலோட்ட வாசிப்பில் அமைந்துவிடும் ஆபத்தும் உள்ளது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறேன்.

புதியதொரு களத்தில் புதியதொரு பொருளைப் பேசிய வகையில் தமிழ் நவீன நாவல்களின் வரிசையில் மதுர விசாரமும் இடம் பெறும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“மதுர விசாரம்” நாவல்
ஆசிரியர்:
மணி எம்.கே. மணி
வெளியீடு:
யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை:₹.325
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *