சற்றே உயர்ந்த குரல்கள்…
பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 8
“இயந்திரகதியில் உழைப்பது, கிடைப்பதைச் சாப்பிடுவது, தொழுவங்கள் போன்ற இடங்களில் நெருக்கியடித்து முடங்கிக் கொள்வது, இயற்கையின் தூண்டுதலுக்கு இரையாகி வருஷந்தோறும் புதிய கூலிகளை உருவாக்குவது, பழைய சம்பிரதாயங்கள், சடங்குகளில் உளுத்துப் போனவற்றைக் கூட உதறிவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொள்வது, புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டு அவற்றிற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாமல் சோம்பிக் கிடப்பது. இப்படியான உலகத்தின் மத்தியில் தான் பிறந்து வளர்ந்திருப்பதைப் பற்றிய தெளிவு பாலனுக்கு முதன் முதலில் ஏற்பட்டது.”
இந்த மிகநீண்ட சொற்றொடர் ஐம்பதுகளில் தமிழ் வாசகர்கள் பலருக்கும் பிரியமான எழுத்தாளரான அகிலனின் பால்மரக் காட்டினிலே எனும் நாவலுக்குள் உருகி ஓடுகிறது. எழுத்தாளர் அகிலன் (Writer Akilan) கலைமகள் இதழில் தொடராக எழுதிய நாவல் பால்மரக் காட்டினிலே (Paal Marak Kaattinile Novel). இந்த நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த அறுபதுகளின் கடைசி நாட்களில் கலைமகளின் வாசகர் கடிதங்களாக வந்தவை யாவும் மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களிடமிருந்துதான். ஒரு விதத்தில் இந்த நாவல் பஞ்சம் பிழைக்கவோ அல்லது தமிழகத்தில் வாழமுடியாத துக்கத்தைச் சுமந்து கொண்டோ இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வைத்தான் பேசுகிறது. இது தங்களைப் போலானவர்களின் குரல் என்பதால்தான், புலம் பெயர் தமிழர்கள் பால்மரக் காட்டினிலே நாவலை வரவேற்று இருக்கிறார்கள். தமிழ் மொழிக்காக ஞானபீடம் விருதுபெற்ற எழுத்தாளர் அகிலனின் புகழ்பெற்ற நாவல் பால்மரக் காட்டினிலே (Paal Marak Kaattinile Novel).
நாவல் மலேசிய ரப்பர் தோட்டத்தில் பிறந்து தமிழ்நாட்டின் வாசம் அறிந்திடாத, ஆனாலும் தன்னுடைய தாய்மண் குறித்த வேட்கையில் உழல்கிற பாலன் எனும் தமிழ்ப் பள்ளிக்கூட வாத்தியாரின் பார்வையில் நகர்கிறது. மலேசிய ரப்பர் தோட்டத்தின் காற்றுப் புகக்கூட சாத்தியமற்ற லயன்வீடுகள், ஆளரவமற்று இருள்சூழ்ந்து கிடக்கும் தோட்டக்காடுகள். அங்கொன்றும், இங்கொன்றுமாக பால்மரத்தில் கத்தியால் கீறிக் கொண்டிருக்கும் யுவன்கள், யுவதிகள். காடுகளுக்குள் கைக்குழந்தைகள் போக சாத்தியமில்லாததால் எஸ்டேட் நிர்வாகமே ஏற்படுத்தித் தந்திருக்கும் ஆயாக்கொட்டகைகள். ஏற்றத்தாழ்வையயும் அதன் படிநிலைகளையும் துல்லியமாக வெளிப்படுத்திடும்படியான கங்காணிகளின் சின்னச் சின்ன வீடுகள். தோட்டத்துரைமார்களின் பங்களாக்கள் என நாவலுக்குள் மிக நீண்ட திரைச்சீலையில் வரையப்பட்ட தைல ஓவியம் போல காட்சிகள் எழுத்தாளர் அகிலனால் வரையப்பட்டிருக்கிறது. பாலனுக்கு தன்னைக் குறித்தும், தன்னுடைய மூதாதையர் நரக வாழ்கையில் வாழ்ந்திட நிர்ப்பந்திக்கப்படுகிற சூழல் குறித்தும் பெரும் கவலை இருக்கிறது. காந்தியரான அகிலன் தன்னுடைய முதன்மைப் பாத்திரமான பாலனையும் காந்தியராகவே படைத்தளித்திருக்கிறார்., அடிமைத் தளையில் இருந்து அவர்களை விடுவிக்க பாலனும் அவனுடைய கூட்டாளிகளும் சேர்ந்து நடத்திய போராட்டங்களின் வரலாற்றையே அகிலன் (Writer Akilan) “ பால்மரக் காட்டினிலே” (Paal Marak Kaattinile Novel) எனும் நாவலாக எழுதியிருக்கிறார்.
அகிலனுடைய எழுத்துக்கள் வர்க்கப்போராட்டங்களை கலையாக்குபவை அல்ல. அகிலனுக்குள் எப்போதும் ஒரு காந்தியவாதி விழிப்புடன் இருந்து கொண்டேதான் இருக்கிறார். அதனை பால்மரக் காட்டினிலே (Paal Marak Kaattinile Novel) என்கிற அவருடைய இந்த நாவலை வாசிக்கிற எவராலும் உணரமுடியும். பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் தொடருக்குள் அகிலனைப் பொருத்த முடியுமா எனும் தயக்கம் எனக்கு இந்த வாச்சியத்தை எழுதுகிற இந்த நொடிவரையிலும் இருக்கவே செய்கிறது. தயக்கத்தை உடைத்து இதனை எழுதுவதற்கான மிக அடிப்படையான காரணம் நாவல் நிகழும் களமும், நாவலுக்குள் மக்கள் நடத்த யத்தனிக்கும் போராட்டங்களும்தான். மலேசியாவின் ரப்பர் தோட்டங்களுக்குள் கூலித் தொழிலாளிகளாக இறக்கி விடப்பட்ட தமிழ்க்குடிகளின் துயரங்களைப் பேசுகிற நாவலே பால்மரக் காட்டினிலே. நாவல் நிகழும் காலமும்கூட மிகவும் முக்கியமானதுதான். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகான நாட்களில் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் மக்களுடைய வாழ்வினில் சுதந்திரக்காற்று மெதுவாக வீசத்துவங்கிய காலம். இந்த இரண்டு புள்ளிகளையும் பேசும் இலக்கியப்பிரதி என்பதால் இதனை பாட்டாளிகளின் கதைப்பாடல்களுக்குள் பொருத்திக் கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
நாவலுக்குள் துக்கம் மேலிடும் போதிலான நொடியில் பாலனின் தாயான வேலம்மாள் ஒப்பு வைத்து அழுகிறாள். ஊரே கூடி நின்று அந்தத் துயரப்பாடலைக் கேட்கிறது. அகிலனின் எழுத்தாற்றலுக்கான சாட்சியக் காட்சியது. தன்னைக் குறித்தும், தான் இந்த ரப்பர் தோட்டத்து வாழ்க்கைக்குக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டதைக்குறித்தும் கதை கதையாக அடுக்குகிறாள். தமிழ்நாட்டில் நாகபட்டணத்திற்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவள் அவள். எப்படியவள் வீரப்பனுடன் காதல் வயப்பட்டு இந்த பால்மரக் காடுகள் நிறைந்திருக்கும் ரப்பர் தோட்டத்திற்குள் வந்து விழுந்தாள் என்பதையே அவள் கண்ணீரும், கம்பலையுமாகச் சொல்கிறாள். “ நாடு விட்டு நாடு, தேசம் விட்டு தேசம் கண்காணாச் சீமைக்குப் போக வேண்டாம்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேனே கேட்டாரா?.நம்ம நாட்டுக்குள்ளயே எங்கேயாச்சும் வெளியூருக்குப் போயி பொளச்சுக்குவோம்னு சொன்னேனே கேட்டாரா?.. நம்மளத் தேடிப்பிடிச்சு கொன்னே போடுவாங்கன்னு இப்பிடி மீளவே முடியாத நரகக்க்குழியில வந்து இறக்கிப்புட்டிச்சே இந்த மனுஷன்..”இப்படித் தொடரும் ஒப்பாரி வாசகனுக்கு உணர்த்துவது ஒருநூறு தமிழ்க் குடும்பங்களின் கதைகள் மலேசிய ரப்பர் தோட்டங்களுக்குள் புதைந்து கிடக்கிறது என்பதைத்தான். வீரப்பனுக்கும் வேலம்மாளுக்கும் நேசம் பிறக்கிறது. இவர்களுக்கு திருமணத்தை பெற்றோர்களே நடத்தியிருக்கலாம். இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் பொருளாதார வேறுபாடுகள் எதுவுமில்லை. பிறகு இருவரும் இணைந்திட எது தடையாக. இருக்கிறது?. வேறு எதுவாக இருக்க முடியும் சாதியைத்தவிர. குடும்பங்களை முறித்து இருவரும் சேர்ந்தால் அவர்கள் தங்கள் குடும்பத்தாராலேயே பலியிடப்படுவோம் எனும் அச்சம் துரத்தியதால்தான் அவர்கள் மலேசியாவிற்கு கப்பல் ஏறுகிறார்கள். நாவலுக்குள் சாதி தட்டுப்படுகிற இடம் நமக்கு மிகவும் முக்கியமானது. வீரப்பன் அகமுடையார் சாதியைச் சேர்ந்தவன். வேலம்மாள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவள் என அகிலன் எழுதுகிறார். நான் மறுபடியயும் மறுபடியும் அந்தத் வரியை வாசித்தேன். ஆணவக்கொலைகளின் புள்ளி இறுகியிருந்த, இப்போதும் இருக்கிற தமிழ் நிலத்தின் சாதிய மனத்தின் குரூரம் புரிதலுக்குள்ளானது. முக்குலத்தோர் எனும் சாதிக்குள் இருக்கும் உட்பிரிவுக்குள்ளும்கூட பலியெடுக்கும் வன்மம் நிறைந்து இருந்திருக்கிறது. சாதி ஆணவக்கொலைகளைக் குறித்தும், சாதிய வன்மம் குறித்தும் மீக நீண்ட ஆய்வுகளையும், விவாதத்தையும் நடத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இவற்றைத் தகவலாக மட்டுமே சொல்லிவிட்டு கடந்துவிடுகிறார் அகிலன்.

வீரப்பன், வேலம்மாள் குடும்பத்தின் கதையைச் சொல்லத்துவங்கி அது கோலாலம்பூர் அருகில் உள்ள விக்டரி எஸ்டேட் தொழிலாளிகளின் கதைத் தொகுப்பாக வடிவம் பெற்றுவிடுகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் வரலாற்றையும் அதன் உபவிளைவுகளையும் எழுத்தாக்குவதில் தேர்ந்தவர்கள். தமிழில் ஐம்பதுகளின் தேர்ந்த எழுத்தாளர் அகிலன் (Writer Akilan). அவரும் பால்மரக் காட்டினிலே நாவலுக்குள் வரலாற்றுக் குறிப்புகளை வாசகன் அறியத்தருகிறார். இரண்டாவது உலக யுத்த நாட்களின் போது ரப்பர் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலான ஆண்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களை இரண்டு இடங்களில் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ. மற்றொன்று ஐப்பான் படைகளுக்கு எதிரான தலைமறைவுக் குழுக்களான கொரில்லா யுத்தக்குழுவிற்குள். இரண்டு படைப்பிரிவிற்குள்ளும் ஆண்கள் போய் சேர்ந்தபிறகு, பெண்களே குடும்பப் பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கிறார்கள். ரப்பர் தோட்டங்களில் ஆளரவமற்ற வனாந்திரங்களில் உழைத்துக்களைத்து வீடு திரும்பி குழந்தைகளையும் பராமரித்துக் கிடந்தனர் பெண்கள். இந்த துயர்மிகு கதைகளை அகிலன் எழுதியிருக்கலாம். ஆனாலும் அவர் எழுதவில்லை. ஆண் மையக்கதாபாத்திரங்களை அமைத்துக் கொண்டு அதன்வழியில் நாவலைக் கட்டியதால் அதற்குள் உருவாகியிருக்க வேண்டிய பிரம்மாண்டம் தவறியிருக்கிறது. இதேபோல சயாம் மரண ரயில் விபத்து அந்த நிலத்து மக்களை துயரத்துக்குள்ளாக்கியது என ஒற்றை வரியில் அந்த வரலாற்றுத் துக்கத்தை கடந்து விடுகிறார்.
போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு உலகெங்கும் அடிமைப்பட்டுக்கிடந்த நாடுகள் விடுதலையடைந்தன. விடுதலை நிஜத்தில் எளிய மக்களுக்கு வாழ்வது குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியதா என்பதைத்தான் அந்நாளின் எழுத்தாளர்கள் நாவல்களாக எழுதத்துவங்கினர். எழுத்தாளர் கி.ராஜநாராயனின் கோபல்ல கிராமம் நாவல் விடுதலை நாளினை விமர்சித்தே துவங்கும். எழுத்தாளர் பூமணி தன்னுடைய நாவலின் தலைப்பாக பிறகு என்று குறிப்பிடுவது விடுதலைக்குப் பிறகு என்பதைத்தான். விடுதலைக்குப் பிறகும் எளிய மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடந்தது விடவில்லை என்பதையே இருவரும் எழுதியிருக்கிறார்கள். அகிலனும் பால்மரக் காட்டினிலே (Paal Marak Kaattinile Novel) எனும் நாவலில் இதைத்தான் பரிசோதனை செய்கிறார். அடிமைப்பட்டுக்கிடந்த நாடுகளின் விடுதலை எளிய மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. துக்கத்தையே தங்களுக்கு வழங்கியமையால்தான் இதுக்கு பேசாமா வெள்ளைக்காரனே நம்மை ஆண்டிருக்கலாம் என்று சொல்லிக் கொண்ட இருந்திருக்கிறார்கள். இதனை வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் மீதான பெருமிதத்தின் வெளிப்பாடாக சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. துக்கத்தில் இருந்து வெளியேற முடியாது தவித்தலைந்த இயலாமையின் குரல் அது.
விடுதலைக்குப்பிறகு ரப்பர் தோட்டத்தின் முதலாளிகளாக இருந்த வெள்ளைக்காரன் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம். அதுவரையிலும் ஆண்டு அனுபவித்து வந்த ஆஸ்தி பாஸ்திகளை விற்றுவிட்டு போக வேண்டிய கட்டாயம். இவையாவும் தெற்காசிய பிராந்தியம் முழுக்க இருந்த நிலைதான். அதே நிலைமை மலேசியாவிற்கும் வந்து சேர்ந்தது. எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கக்கூடிய தனி முதலாளிகள் எவரும் அங்கு இல்லை. சின்ன முதலாளிகள் பெரிய எஸ்டேட்டைத் துண்டு துண்டாக்கி அதனை தங்களுடையதாக்கிக் கொள்ள முயல்கிறார்கள். வெள்ளைக்காரனுக்கும் அது லாபம் தரக்கூடியதுதான். ஆனால் நூறு வருடங்களுக்கும் மேலாக தோட்டத்தில் உழைத்துக் கொண்டிருந்த உழைப்பாளிகளை என்ன செய்வது. அவர்களை முழுவதுமாக வெளியேற்றினால் மட்டுமே நிலங்களை துண்டாக்கிப் பங்கிட முடியும். அப்போது தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் தருகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் தோட்டங்களை விட்டு தொழிலாளிகள் அனைவரும் வெளியேற வேண்டும் என்பதே நோட்டீஸ் சொல்லும் செய்தி. தடுமாறிப் போகிறார்கள் தமிழ்க்குடிகள். மலேசியாவில் மலாய் மக்கள், சீனர்கள் இவர்களோடு மிகச் சிறுபான்மையினராக தமிழர்களும் வாழ்கிறார்கள். தோட்டக்காட்டான்கள் என்று குறுக்கிப் பார்க்கப்படும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் பேசத் தெரியாது. கோலாலம்பூரை பார்த்ததுகூட கிடையாது. நாற்பதுகளில் மலேசியாவில் தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாக மட்டும்தான் வாழ்ந்தார்கள். அவர்களுடைய பூர்வீக நிலமான தமிழகம் அவர்களின் நினைவுகளில் மட்டும்தான் இருக்கிறது. சரிபாதிக்கும் மேலானவர்கள் மலேசியத் தோட்டக்காட்டில் பிறந்தவர்கள். இப்போது அவர்களை வேறு அறுத்து விரட்ட முயற்சிக்கிறார்கள் தோட்ட முதலாளிகளாக துடிப்பவர்கள்.
மக்களைத் துயரங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள் பாலனும் அவனுடைய தோழர்களும். தோட்டத் தொழிலாளிகளுக்காக கூட்டுறவுச் சங்கத்தை அமைத்திட முயற்சிக்கிறார்கள்.. தோட்டம் தோட்டமாக அலைகிறார்கள் பாலனும் அவனுடைய தோழர்களும். குடும்பத்திற்கு நூறு வெள்ளிகள் பணம் வசூல் செய்கிறார்கள். அப்போதிருந்த மலேசிய அரசு கூட்டுறவுச்சங்கம் அமைத்து தொழில் முனைவோரை நெறிப்படுத்தத் துவங்கியிருக்கிறது. அதனை நாமும் பயன்படுத்துவோம் என்கிறான் பாலன். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளைப் போராடிப் பெறுவதற்கான தொழிற்சங்க இயக்கமும் அங்கே வளர்ந்து கொண்டும் இருக்கிறது. காந்திய சிந்தனையில் ஈடுபாடு கொண்ட பாலன் தொழிற்சங்க அமைப்புகளோடு ஊறவு வைத்துக்கொண்டே கூட்டுறவுச்சங்கத்தை அமைக்கும் முயற்சியையும் எடுக்கிறான். உழைப்பாளிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டுறவுச் சங்கம் அமைத்தால் அரசாங்கமும் நிதி தருகிறது. நம்முடைய நிலத்திற்கு நாமே எஜமானர்கள். இனி எப்போதும் யாருக்கும் அடிமையில்லை என்கிறான் பாலன். மக்களும் தங்களுடைய சொந்தப் பணத்தை நிதியாகத் தந்து சங்கம் காண்கிறார்கள். அரசாங்கத்திடம் எடுத்துக்கூறும் மனுக்களையும் பாலனின் தலைமையிலான குழுவே முன்நின்று செய்கிறது. எல்லாவற்றையும் அப்படியே சகித்து ஏற்றுக் கொள்வார்களா முதலாளிகள். தொழிலாளிகளிடம் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். அடிமைத்தளையில் இருந்து முற்றாக விலகிட முயற்சித்த தொழிலாளர்களின் போராட்ட களம் வேரிலேயே வெந்நீர் உற்றிடக் கருகிப் போகிறது. தன்னுடைய பெரும் முயற்சி தோல்வி அடைந்ததிற்குப் பின் உள்ள முதலாளிகளின் சதிகளைப் புரிந்து கொள்கிறான் பாலன். நான் இங்குதான் பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். எத்தனை தோல்விகள் வந்தாலும் தொழிலாளத் தோழர்களின் கண்ணீரைத் துடைத்திட நான் முயற்சித்துக் கொண்டேயிருப்பேன் என்கிறான் பாலன். எல்லாம் முடிந்த பிறகு வெள்ளைக்காரன் இருந்த இடத்தில் இப்போது கங்காணிகள் குட்டி முதலாளிகளாக அமர்கிறார்கள். ஆள்தான் மாறியதே தவிர அதிகாரத்தின் குணம் மாறவேயில்லை. மாறாக முன்பைவிட மூர்க்கமாகிறது. தமிழ் மொழி மட்டும் படித்தால் தோட்டத் தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகள் ஆறாம் வகுப்பைக்கூடத் தாண்ட முடியாது என்கிற உண்மையைப் புரிந்து கொண்ட பாலன் பள்ளிக்கூடத்திலேயே ஆங்கிலம் கற்றுத்தருவதற்கு முயற்சிக்கிறான். தோட்ட நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக விதி மீறியததாக குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுகிறான். அதுவரையிலும் மக்கள் பணி செய்வதற்கென இருந்த தடை விலகியதாகவே நினைத்தான் பாலன். தோட்டங்கள் எங்கும் தொழிலாளர்களுக்கான சங்கமும் உருவாகிறது. அதிகார வர்க்கத்திடம் கோரிக்கைகளை வைத்துப் போராடுகிறார்கள் தொழிலாளிகள்.
காந்தியரான பாலன் அப்போதைய கோரிக்கைகளோடு தோட்டக்காரத்துரையை சந்திக்க மக்களைத் திரட்டுகிறான். அவனே எதிர்பாராத வகையில் மக்கள் திரள்கிறார்கள். அதுவரையிலும் தொழிலாளிகளின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை அனுமதிக்க முடியாது என்கிறார்கள் மக்கள். மக்கள் சக்திக்கு முன்பாக அதிகாரம் அடங்கிப் போவதை தொழிலாளிகள் காண்கிறார்கள். மாற்றத்தை நோக்கிய பாதையின் முதல் அடியை பாலனின் தலைமையில் தொழிலாளர்கள் அந்த பால்மரக் காட்டினில் வைக்கிறார்கள்..
( ஞான பீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனின் (Writer Akilan) பால்மரக் காட்டினிலே (Paal Marak Kaattinile) எனும் நாவலுக்கு எழுதப்பட்ட வாச்சியம்)
கட்டுரையாளர்:
ம.மணிமாறன்
முந்தைய தொடரை வாசிக்க: பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 7:- முத்ரா வாக்கியங்களின் முழக்கம் – எழுத்தாளர் ம.மணிமாறன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.