புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

பூமிக் கோளத்தைப் படைத்தது இயற்கை –அதை

உலகமாய் மாற்றியது உழைக்கும் கை.

குழந்தைப் பருவத்திலிருந்து குடும்ப வழிபாடுகள், சடங்குகள், பயமுறுத்தல்கள், கற்பிதங்கள் என ஊட்டப்பட்டிருந்த, அற்ப மனிதர்களால் எதையும் மாற்றி எழுத முடியாது என்ற தலைவிதி நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பில் கணிசமான காலம் கடந்து போயிருந்தது. தத்துவத் தேடல்களைத் தொடங்கிய வயதில் அறிவியல் கண்ணோட்டம் சார்ந்த, முற்போக்கான, சமத்துவச் சமுதாயச் சிந்தனைகள் துளிர்விடுவதற்குக் காரணமாய் அடிப்படையான புத்தகங்களில் ஒன்று ‘மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்’. மார்க்சியத் தலையாசான்களில் ஒருவரான ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் எழுதியது. இதயத்திலும் இயக்கத்திலும் உற்ற தோழர் கார்ல் மார்க்ஸ் கடும் போராட்டத்திற்கிடையே ‘மூலதனம்’ நூலை எழுதி வழங்குவதற்குத் துணையாக இருந்ததன் மூலம் உலக உழைப்பாளி வர்க்கத்தின் தோழரானவர் ஏங்கெல்ஸ்.

உழைக்கும் வர்க்க எழுச்சியால் ஒரு மாற்றுச் சமுதாயத்தை மண்ணில் உருவாக்க முடியும் என்று காட்டிய சோவியத் யூனியன் அன்று உலகத்திற்குச் செய்துவந்த முக்கியமானதொரு பங்களிப்பு, மார்க்சிய அடிப்படைச் சிந்தனைகள், புதிய சமுதாயத்திற்கான இலக்கியங்கள், அறிவியல் தொகுப்புகள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள் எனப் பல வகை புத்தகங்களைப் பல்வேறு மொழிகளில் வெளியிட்டதாகும். அந்த மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்களில் ஒன்றான முன்னேற்றப் பதிப்பகம், இந்தப் புத்தகத்தையும் கொண்டுவந்தது.

அதற்கான பதிப்பாளர் உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல, ‘அடிமைத்தனத்தின் மூன்று அடிப்படை வடிவங்கள்’ என்ற விரிவான புத்தகத்தை எழுதத் திட்டமிட்டிருந்த ஏங்கெல்ஸ் அதற்காக ஒரு முன்னுரை எழுதி வைத்திருந்தார். அந்தப் புத்தகத்தை எழுத முடியாமல் போன சூழலில், முன்னுரையையே தனிக்கட்டுரையாக்கினார். 1876ல் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை, ஜெர்மனி சோசலிச ஜனநாயகக் கட்சி நடத்தி வந்த ‘டை நியூ ஜெய்ட்’ (புதிய காலம்) பத்திரிகையில் 1896ல் வெளியிடப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பல மொழிகளில் சிறிய புத்தக வடிவில் கொண்டுவரப்பட்டது. அதன் தமிழாக்கம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வழியாகக் கிடைத்தது.

உழைப்பின் பாத்திரத்தைச் சொல்லும் அந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன், வேறொரு புத்தகத்தில் மனிதக் கையில் கட்டை விரலின் பாத்திரத்தைச் சொல்லும் கட்டுரையைப் படித்திருந்தேன். இரண்டு கட்டுரைகளுமாகச் சேர்ந்து ஏற்படுத்திய தெளிவு எவ்வளவு அருமையானது! கடினமானது என்று கருதப்படும் பல்வேறு புத்தகங்களுக்குள் சென்று வருவதை எளிதாக்கிய தெளிவு அது. ஆயினும், அந்தப் புத்தகங்களின் அன்றைய மொழிபெயர்ப்பு தடையற்ற வாசிப்பு அனுபவத்துக்கு ஒரு சவாலாக இருப்பதையும் உணர முடிந்தது.

இப்படிப்பட்ட அடிப்படை மார்க்சிய எழுத்துகளை இயல்புத் தமிழில் கொண்டுவருகிற முயற்சிகளை யாராவது மேற்கொள்ள மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும், முடிந்தால் நாமே அதிலே ஈடுபட்டால் என்ன என்ற ஆசையும் மனதில் குடியேறின. உடனடித் தேவைகள் சார்ந்த எழுத்துப் பணிகளால் இரண்டாவது ஆசை இதுவரையில் நிறைவேறவில்லை. ஆயினும் முதல் எதிர்பார்ப்பை இன்று சிலர் நிறைவேற்றி வருகிறார்கள் – அவர்களையெல்லாம் அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் ...

மார்க்ஸ்சின் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’, ஏங்கெல்ஸ்சின் ‘மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்’ ஆகிய இரண்டு புத்தகங்களை இன்றைய தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் தொலைக்காட்சி ஊடகவியலாளரும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் ஆசீப்.

இரண்டாவது புத்தகத்தை முதலில் வாசித்து முடித்ததும் ஏற்பட்ட உடனடிச் சிந்தனை, சரளமான மொழிபெயர்ப்பால் இத்தகைய ஆய்வுகளை விரும்பிப் படிக்கிற மனநிலை, குறிப்பாக இளைய தலைமுறை வாசிப்பாளர்களுக்கு ஏற்படச் செய்திருக்கிறார் என்பதே. கதை படிக்கிற ஆர்வத்தோடு பரிணாம அறிவியலையும் வர்க்க அரசியலையும் தெரிந்துகொள்ள வைத்த ஏங்கெல்ஸ்சின் வெற்றி தமிழிலும் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய எழுத்தாக்கங்களைத் தொடக்கத்தில் மொழிபெயர்த்தவர்களிலிருந்து இன்று இதில் ஈடுபட்டிருப்பவர்கள் வரையில் இந்த வெற்றியில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்பதும் உண்மையே.

புத்தகத்தால் ஏற்படுகிற ஒரு மலைப்பு – எங்கெல்ஸ்சின் உழைப்பு. அதுவும், இன்றைய தகவல் தொடர்பு வசதிகளை அடைவதற்கு இன்னும் ஒன்றரை நூற்றாண்டு இருந்த காலத்தில் அத்தனை நூல்களைப் படித்து, சாறெடுத்து, கோர்வைப்படுத்திக் கொடுத்திருக்கிறார். மனித சமுதாயம் உருவெடுத்ததற்குக் காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் கருணையல்ல, அதைச் செய்தது தங்களுடைய உழைப்பின் மகிமைதான் என்று மனிதர்களுக்கு எடுத்துக்கூறுவது எளிதான செயலல்ல. பரிணாமவியல் வல்லுநர்களே கூட உரக்கச் சொல்லாமல் விட்டுவிட்ட உண்மை அது. அந்த உண்மையைச் சொல்ல ஏங்கெல்ஸ் முன்வந்ததற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் – மனிதர்கள் கற்பிதங்களிலிருந்து விடுபடுவது புரட்சிகரமான சமுதாய மாற்றத்திற்கான ஒரு அடிப்படைத் தேவை.

“உலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என அரசியல் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இயற்கை அளிக்கக்கூடிய மூலப்பொருட்களை உழைப்பு செல்வங்களாக மாற்றுகிறது. உழைப்பை இந்த வகையில் சுருக்கியும் கூற முடியாது. மனித வாழ்க்கைக்கு உழைப்பே அடிப்படையாக விளங்குகிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் உழைப்பே மனிதனை உருவாக்கியுள்ளது.”

Stone Age - HISTORY

இவ்வாறு தொடங்குகிற புத்தகம், “மூன்றாம் காலம்” என்று குறிப்பிடப்படும் 6.6 கோடி ஆண்டுகளிலிருந்து 25.8 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தின் இறுதிப் பகுதியில், பின்னர் இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப்போனதாகக் கருதப்படும் மிகப்பெரிய கண்டத்தின் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்ந்த மிக வளர்ச்சியடைந்த மனிதக் குரங்கினத்தை அறிமுகப்படுத்துகிறது. முன்னங்கால்களாக இருந்த கைகளை நடப்பதற்குப் பயன்படுத்தியதை நிறுத்தியதைத் தொடர்ந்து, நிமிர்ந்த உடல் அமைந்தது.

இதுவே மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவான முக்கியமான முதல்படியாகும் என்று கூறும் ஏங்கெல்ஸ் கட்டுரையின் ஒவ்வொரு பத்தியாக விடுபட்ட கைகளின் பல்வகை உழைப்பையும், அதன் தொடர்வினையாக முழுமையான மனிதர்கள் உருவெடுத்ததையும் சுவைபடச் சொல்கிறார். மற்றவற்றை விடத் திறமை வாய்ந்த மனிதக்குரங்குகள் உண்ணத்தக்க யாவற்றையும் உண்ணத் தொடங்கின; அதனால் உடலுக்குள் சென்ற சத்துப்பொருள்கள் மனிதப் பரிணாமத்துக்கான ரசாயன அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன என்று ஒரு பேராசிரியராக அவர் மாறுகிறார்.

விலங்குகளின் “சூறையாடும் பொருளாதாரம்” பற்றி அவர் விளக்கியிருப்பது நுட்பமான பகுதி. ஆறறிவு விலங்குகளான மனிதர்களின் “சூறையாடும் பொருளாதாரம்” பற்றிய விளக்கமாக அது விரிகிறது. இயற்கை வளங்களை மட்டுமல்லாமல், மனித உழைப்புத் திறன்களையும் சூறையாடுகிற பொருளாதாரமாக அது வடிவமெடுக்கிற சுரண்டல் வேட்டை பற்றிய விளக்கமாக அது முடிவடைகிறது.

மனித உழைப்பும் புதிய வளர்ச்சிகளை அடைகிறது. பாதுகாப்பான இருப்பிடங்களும், பருவ மாறுதல்களுக்கேற்ற உடைகளும் கட்டாயத் தேவையாகின்றன. அப்போது உழைப்புக்கான புதிய துறைகளும் புதிய செயல்வடிவங்களும் தோன்றின. இதை ஏங்கெல்ஸ் சொல்லிச்செல்கிறபோது, நமக்கு இன்றைய அறிவுசார் உழைப்பின் வளர்ச்சி சொல்லாமலே புரிகிறது.

மனிதத் தேவைகளுக்கேற்ப தானிய வகைகளும் மாற்றங்களுக்கு உள்ளானதால், அவற்றின் மூலமான காட்டுச்செடிகள் எவை என்று அடையாளம் காண்பது கடினமாகிவிட்டது. மனிதர்களோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்ட நாய், குதிரை (இங்கே மாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) போன்ற விலங்குகள் எந்தக் காட்டு விலங்குகளின் வழித்தோன்றல்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

Stone Age Europeans Get Older and Colder | WIRED

உழைப்பின் இவ்வகைத் தாக்கங்களையும் சுட்டிக்காட்டுகிற ஏங்கெல்ஸ் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை, இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அறிவியலாளர்கள், கருத்து முதல்வாதக் கற்பிதங்களின் தாக்கத்தால், மனிதப் பரிணாமத்தில் உழைப்பின் பாத்திரத்தை அங்கீகரிக்க மறுத்ததை விமர்சிக்கிறார். உழைப்புக்கே அங்கீகாரம் மறுக்கப்படுகிற இன்றைய காலக்கட்டத்தில், மாற்றங்களுக்கான நெடும் போராட்டத்தின் ஒரு அங்கமாகப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்க்கிற பரப்புரைகளையும் பக்குவமான முறையில் மேற்கொள்ள வேண்டியதன் தேவை புரிபடுகிறது.

“சமூகம்” என்பது உருவானது பற்றி ஓரிடத்தில் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கும் ஏங்கெல்ஸ், கட்டுரையை விரிவாக எழுதியிருப்பாரானால் மனிதர்களின் சிறப்புத் தகுதியும் இன்றியமையாத் தேவையுமாகிய தகவல்தொடர்பின் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டியிருப்பாரே என்ற எண்ணம் ஏற்படுகிறது. இறைச்சி உணவின் சத்துகள் மூளை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்து மனிதன் உருவாக இட்டுச்சென்றது பற்றி அவர், மரக்கறி உணவுக்காக வாதாடுவோருக்குப் பணிவாக விளக்கியிருக்கிறார். சத்தான உணவு எது என்ற கோணத்தில் அல்லாமல், உணவு உரிமையை மறுக்கும் அரசியல் வன்மமாகவே கிளறிவிடப்படும் காலக்கட்டத்தில் எங்கெல்ஸ்சின் இந்த விளக்கம் முக்கியமானது.

stone age - latest news, breaking stories and comment - The ...

மூல எழுத்தோடு வாசகர்கள் பயணிப்பதற்குக் கொஞ்சமும் இடையூறு செய்துவிடாமல், தேவையான சில இடங்களில் தனது விளக்கங்களை அடைப்புக்குறிகளுக்கிடையே கொடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். கருத்துமுதல்வாதமா, பொருள்முதல்வாதமா, டார்வினின் தொடர்பு வளர்ச்சி விதி, கருவின் வளர்ச்சியில் லட்சக்கணக்கான ஆண்டுக்கால மனித உருவாக்கத்தின் சுருங்கிய வடிவம், குழந்தையின் வளர்ச்சியில் அறிவு வளர்ந்ததன் சுருங்கிய வடிவம் போன்ற சில விளக்கங்கள் அவருடைய அக்கறைக்கு எடுத்துக்காட்டுகள். மொழிபெயர்ப்பில் ‘மூன்றாம் காலம்’ பற்றிய வரியில் “66 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளிலிருந்து” என்றிருப்பது பிழைதிருத்தலில் கவனக்குறைவால் ஏற்பட்டிருக்கலாம். பூமியின் வயதே சுமார் 454 கோடி ஆண்டுகள்தான் என்கிறபோது ஒரு கண்டம் 6600 கோடி ஆண்டுக்காலத்தில் இருந்திருக்க முடியாதல்லவா?

ஆசீப் மறுமொழிபெயர்ப்புச் செய்துள்ள இன்னொரு புத்தகம் பற்றிச் சொல்வதற்கு முன் ஒரு வாழ்த்தைத் தெரிவித்துவிடலாம். அவரும், போதிவனம் பதிப்பகமும் இது போல் இன்னும் நிறைய மொழியாக்கங்களையும் சமகாலப் படைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்ற விருப்பம்தான் அந்த வாழ்த்து.

‘மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்’

ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்

வெளியீடு:

போதிவனம் பதிப்பகம்,

அஹமது வணிகவளாகம்,

தரைத்தளம்,

12/293 இராயப்பேட்டை நெடுஞ்சாலை,

இராயப்பேட்டை,

சென்னை – 600 014

தொலைபேசி: 91 – 9841450437

மின்னஞ்சல்: [email protected]

பக்கங்கள்: 32

விலை: ரூ.50

File:A.Kumaresan.jpg - Wikimedia Commons

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *