கருத்து ஆயுதமான தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) உரைகள்
– எஸ்.பாலா
இந்திய கம்யூனிச இயக்கத்தின் மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உரைகளைக் கொண்ட சிறப்புமிக்க தொகுப்பு வெளிவந்துள்ளது. தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) அவர்கள், சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1952 முதல் 55ஆம் ஆண்டு வரை ஆற்றிய 10 உரைகளும் ஆண்டு அலுவலக மொழிகள் திருத்த மசோதா 1967இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது ஆற்றிய உரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. மகத்தான விடுதலைப் போராட்டத்தில் பலனாக இந்திய ஆட்சி அதிகாரத்திற்கான புதிய நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் உருவாகி இருந்த காலகட்டமாகும். கம்யூனிஸ்ட் இயக்க போராட்டத்தின் விளைவாக சாணிப்பால், சவுக்கடி, பண்ணை அடிமை, வெட்டிவேலை போன்ற கொடிய சுரண்டலை விவசாய சங்கமும் செங்கொடி இயக்கமும் வேரறுத்திருந்தது.
விடுதலைக்குப் பின் 1951இல் சிறைகளிலிருந்து கம்யூனிஸ்டுகள் விடுதலை அடைந்தனர். தமிழ்நாட்டில் கட்சியை புனரமைக்கும் பணிக்கு ஆர்கனைசிங் கமிட்டி செயலாளராக செயல்பட தோழர் பி.ராமூர்த்திக்கு பொறுப்பு தீர்மானிக்கப்பட்டது. சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த சட்டமன்றத்தில் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகள் சிறையிலிருந்து வெற்றி பெற்று அவைகளுக்கு தேர்வானார்கள். சிறையிலிருந்தே பி.ஆர். வெற்றி மதுரை வடக்கு தொகுதியில் சிறையில் இருந்து வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தோழர் பி.ராமமுர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள் தேர்வு செய்யப்பட்டனர். கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வுள்ள ராஜாஜியை முதலமைச்சராக கொண்ட காங்கிரஸ் அரசு உருவானது. இதனை கண்டித்து உயர்நீதிமன்றத்தில் தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) வழக்கு தொடுத்தார். ராஜாஜியை மேலவை உறுப்பினராக நியமித்து முதலமைச்சராக்க முயல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயல் என்றும், இந்த ஜனநாயக படுகொலையை தடுக்க வேண்டும் என வழக்கில் முறையிட்டார். ஆனால், மனுதாரர் நேரடியாக பாதிக்கப்படவில்லை என என்று கூறி நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் பீ.ஆரின் வாதங்கள் மிக முக்கியமானது.
ஆந்திர கம்யூனிஸ்ட் தலைவர் நாகி ரெட்டியை தொடர்ந்து 1953 ஆம் ஆண்டில் தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரின் பொதுக்கூட்டங்கள் வகுப்புகளைப் பற்றி மூத்தத் தோழர்கள் சிலாகித்துப் பேசுவார்கள். 1990களுக்குப் பின் கட்சியில் சேர்ந்த வர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்குறையை புத்தகம் தீர்த்து வைக்கிறது. சென்னை மாகாண சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தும், அமைச்சரவை மீது நம்பிக்கை தீர்மானம், காவல்துறை, நில வருவாய், தொழிற்சாலை, தொழிலாளர் நலன், குத்தகைதாரர் மற்றும் பண்ணையாள் பாதுகாப்பு மசோதா, அரிஜன மக்கள் மேம்பாடு, பட்ஜெட் மீதான விவாதம், நிலச் சீர்திருத்தச் சட்டம் மற்றும் மக்களவையில் அலுவலக மொழிகள் திருத்த மசோதா என ஒவ்வொரு உரையும் காத்திரமானது.
மிகக் கூர்மையான ஆய்வு
தஞ்சாவூர் குத்தகைதாரர் மற்றும் பண்ணையால் பாதுகாப்பு மசோதா – 1952 மீதான விவாதத்தில், வரலாற்றை சுட்டிக்காட்டி, வடிவமைக்கப்பட்ட நோக்கத்தை நிறைவு செய்கிறதா என்பதை தன்னுடைய ஆழமான அறிவா லும் அளப்பரிய நடைமுறையாலும் ஒவ்வொரு அம்சத்தையும் மிக கூர்மையாக ஆய்வு செய்கிறார். இதில் குறிப்பாக நில உரிமையாளருக்கும், பண்ணையாளுக்கும் ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதால் உண்டாகும் விளைவுகள் என்று பார்க்கும் போது நீதிமன்றத் தீர்ப்பை பண்ணையாள் ஏற்க மறுத்தால் தண்டனையும், அதே தவறை நில உரிமையாளர் செய்தால் எவ்வித தண்டனையும் இன்றி சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுகிறார். இம்மசோதாவின் நோக்கத்தை எப்படி துல்லியமாக தோற்கடிக்கிறது என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார். வெற்று முழக்கங்கள், ஆரவாரங்கள் இல்லாமல் உண்மையான சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஆழமான பார்வையோடு உரை அமைந்துள்ளது. சென்னை மாகாண சட்டமன்றத்தில் உரையாற்றிய மேற்குறிப்பிடப்பட்ட 10 உரைகளும் எத்தகைய ஆழமான முறையில் பிரச்சனைகளை தெளிவாக எடுத்து வைக்கிறது.
ஒவ்வொரு பிரச்சனையிலும் பி.ஆர் அவர்களின் வாதமும், அந்த பிரச்சனையின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றிய துல்லியமான மதிப்பீடுகளாக இவை அமைகின்றன. நாட்டு மக்களின் துல்லியமான நிலைமைகளை பற்றிய அவருடைய துல்லியமான மதிப்பீடுகள் மேற்கண்ட உரைகளில் பிரதிபலிக்கின்றன. இயக்கவியல் நோக்கில் தேர்ச்சி பெற்ற கம்யூனிஸ்ட் ஆன தோழர் பி. ராமமூர்த்தி இப்பணியை செவ்வனே செய்துள்ளார். இதுவே இன்றைக்கு இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய வரலாறாக மாறி நிற்கிறது. இந்நூலை தொகுத்துள்ள தோழர் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) அவர்களின் மகள் ஆர் வைகை, நர்மதா தேவி இருவரின் இச்செயல் அளவிடற்கரிய முறையில் மிகச் சிறப்பானதாகும் பி.ராமமூர்த்தி (P. Ramamurthi)-ன் உரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள வீ.பா. கணேசன், கி ரமேஷ் ஆகியவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலுக்கு அறிவார்ந்த முறையில் விரிவான முன்னுரை வழங்கியுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது. இப்புத்தகத்தை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் அளப்பரிய பணி போற்றுதலுக்குரியது. இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் போராட்ட களத்திலும், சட்டமன்ற, நாடாளுமன்ற, நீதிமன்றத்திலும் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பணிகள் மிக குறிப்பிடத்தக்கது . இதனை ஆவணப்படுத்தும்போது வரலாற்று நெடுகிலும் எத்தகைய சவால்களை சந்தித்தது என்ற நீண்ட நெடிய அனுபவத்தை வழங்குகிறது. இன்றைக்கும் அது எந்த வகையில் சவால் மிக்கதாக தொடர்கிறது என்பதை புரிந்து செயலாற்றுவதற்கான செறிவு மிக்க ஆயுதமாக இந்நூல் திகழ்கிறது.
நூலின் விவரம்:
நூல்: மனித உயிர்களா? சொத்துடைமையா? (Manitha Uyirgala Sothudaimaiya)
பி.ராமமூர்த்தி (P. Ramamurthi) தொகுக்கப்பட்ட சட்டமன்ற – நாடாளுமன்ற உரைகள்
தொகுப்பு : ஆர்.வைகை, நர்மதா தேவி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.250
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் எழுதியவர்:
எஸ்.பாலா,
மாநிலக்குழு உறுப்பினர் – சிபிஐ (எம்),
மதுரை.
நன்றி: தீக்கதிர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.