மருத்துவர் சு.அனுரத்னா (Dr. S. Anurathna) எழுதிய மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal) நூல் அறிமுகம் | பாரதி புத்தகாலயம் வெளியீடு - https://bookday.in/

மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal)- நூல் அறிமுகம்

மஞ்சள் மரணங்கள் – 2023 (Manjal Marangal)- நூல் அறிமுகம்

இந்திய நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய அடிப்படையிலான சமூகம் மனிதர்கள் செய்யும் தொழில் மதிப்புக்குரிய தொழிலா அல்லது இழிவான தொழிலா என்பதை முடிவு செய்கிறது. பொதுவாக உடல் உழைப்பைவிட மூளை உழைப்பு மிகுந்த மதிப்பு உடையதாகவும் உயர்சாதியினருக்கு உரியதாகவும் இந்த நாட்டில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

“பசிப்பிணி என்னும் பாவி” என்றும் “பசி வந்தால் பத்தும் பறந்து போகும்” என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. எத்தகைய பசி வந்தாலும் இழிவான தொழிலைச் செய்வதற்கு உயர்சாதி மற்றும் இடைநிலை சாதிகள் நாட்டில் முன் வருவதில்லை. இழிவான தொழில் என்று மனிதர்கள் கருதும் தொழிலைச் செய்வதற்காக மனிதர்களுள் ஒரு பிரிவு சாதிய சமூகத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனிதர்கள் உண்ணும் உணவு மலக் கழிவாக வெளியேற்றப்படுகிறது. விலங்கினத்தின் கழிவு வேளாண்மைக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மனித மலக் கழிவு அருவருப்பான ஒரு கழிவாக உள்ளது. ஓடையில், ஆற்று ஓரத்தில், சாலைகளின் ஓரத்தில் மனிதக் கழிவகற்றிய மனிதர்கள் இன்று வீட்டிற்குள்ளேயே கழிப்பிடங்களை கட்டி அதற்கென்று வசதிகளை உருவாக்கி தங்கள் மனித கழிவை வெளியேற்றுகிறார்கள்.

கிராமங்கள் சிறு நகரங்களாகவும், சிறுநகரங்கள் பெருநகரங்களாகவும் மாறிவரும் சூழ்நிலையில் தனி வீடுகளுக்கென முன்பு அமைக்கப்பட்ட செப்டிக் டேங்க் இன்று வீதி தோறும் சாக்கடை குழாய்கள் மூலம் பாதாள சாக்கடையாக மாறி பொதுவாக ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தனி வீட்டு செப்டிக் டேங்குகளும் நடைமுறையில் உள்ளன. இந்த செப்டிக் டேங்குகளில் அல்லது பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி மனிதக் கழிவை அகற்றும் துப்புரவு பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டிலும் அடித்தட்டு மக்களாக இருக்கக்கூடிய எளிய மக்களே.
இத்தொழில் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட து என நாட்டில் உள்ள அனைத்து சாதியினர் மனங்களிலும் பதிவாகியுள்ளது. இந்த செப்டிக் டேங்குகளில் அல்லது சாக்கடை களில் அடைப்புகள் ஏற்பட்டு விட்டால் அதை சரி செய்ய பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகிய இந்த எளிய மக்களையே பயன்படுத்துகிறார்கள்.

நிலவில் கால் பதிப்பதிலும் கால் பதிக்க முடியாத நிலையில் மனிதனை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலும் அளப்பரிய அறிவியல் மாற்றங்களை உருவாக்கிய மனித சமூகம் சாக்கடைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு உரிய சிந்தனைகளை மேற்கொள்ளவில்லை. கண்டுபிடித்த இயந்திரங்களையும் பயன்படுத்த கூடுதல் அக்கறையும் அரசு காட்டுவதில்லை.

இந்தப் பணியில் ஈடுபடும் தொழிலாளிகள் பணியின்போது விஷவாயுவால் தாக்கப்பட்டு பரிதாபமாக மரணித்து விடுகிறார்கள். இந்த மரணச் செய்தியை ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் ஒரு ஓரத்தில் பிரசுரித்து எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.

இப் பிரச்சனையை மனிதநேயத்தோடு அணுகிய மருத்துவர் சு. அனுரத்னா (Dr. S. Anurathna)” மஞ்சள் மரணங்கள் (Manjal Marangal)  2023 ” என்ற புத்தகத்தில் உண்மைத் தரவுகளை ப் பதிவு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

மருத்துவர் சு. அனுத்னா அவர்கள் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியை பூர்வீகமாக கொண்டவர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிபவர். சிறந்த மருத்துவர் என்ற பரிசு பெற்றவர். “கழிவுநீர் இழப்பு ஒழிப்பு விரைவு நடவடிக்கை குழு “என்ற அமைப்பின் மாநிலத்
தலைவராகவும் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவராகவும் செயல்படுகிறார்.

மருத்துவர் என்ற நிலையில்பொதுவாக மரணங்கள் மனதில் ஆழப்பதிவதில்லை. மலக்குழி மரணங்களும் என்னை வெகுவாக பாதித்ததில்லை எனக் குறிப்பிடும் அவர்
மே 1 ஆம் நாள் நிகழ்ந்த மலக்குழி மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது எனக் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு நடக்கும் கழிவு நீர் கொலைகளின் தரவுகள் அனைத்தும் போராடுபவர் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டும் என எண்ணிய மருத்துவர் 2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மலக்குழி மரணங்களை ஆய்வு செய்திருக்கிறார்.

இது சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மலக்குழி மரணங்கள் சார்ந்த புள்ளி விவரங்களை சேகரிக்க மிகுந்த போராட்டங்கள் தேவைப்பட்டன என்று குறிப்பிடுகிறார். அரசுத் துறையிலும் கூட சரியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை என்றும் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

2023 ஆம் ஆண்டு சென்னை பெருநகரத்தை ஒட்டிய திருவள்ளூர்,கடலூர், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் நிகழ்ந்த 11 மலக்குழி மரணங்களை ஆவணப்படுத்தி உள்ளார் .

மரணங்களைச் சந்தித்தவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக மருத்துவர் ஆய்வு செய்து இருக்கிறார். 11 மலக்குழி மற்றும் வேதிக்கழிவு மரணத்தில் உயிர் நீத்த 11 பேர்களின் ஊர், சமூகம் உள்ளிட்ட தரவுகளைப் பட்டியலிட்டுள்ளார். 8 இந்துக்கள், 1 முஸ்லிம், 2 கிறிஸ்தவர்கள். இவர்கள் அனைவரும் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்களில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 3 பிற்படுத்தப்பட்டோர் 2 பிற்படுத்தப்பட் முஸ்லிம் 1 பட்டியல் பிரிவினர் 5.

இந்த ஆய்வு புதிய ஒரு பரிமாணத்தையும் சொல்கிறது.ஏழை என்றும் அடிமை என்றும் உள்ள இந்த நாட்டில் இழிவு கொண்ட மனிதர் மட்டுமே செய்யக்கூடிய தொழில் என்று வரையறுக்கப்பட்ட தொழிலில் அனைத்து மதத்தினரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும் வயிற்றுப் பசி போக்க ஈடுபடுகிறார்கள் என்ற செய்தி தான் அது. மனிதக் கழிவுகளை அகற்றும் இந்த மனிதர்களின் மரணச் செய்திகள் மனிதாபிமானத்தை சுக்குநூறாக உடைத்து எறிகின்றன.

மஞ்சள் நிறம் புனிதமான நிறமாகக் கருதப்படும் நாட்டில் மனித மலக்கழிவுகளும் மஞ்சளாகவே தான் இருக்கின்றன. ஆனால் அவைகள் அருவருப்பாக பார்க்கப்படுகின்றன. இத் தொழிலில் ஈடுபடுபவரும் அருவருப்பாகவே பார்க்கப்படுகின்றனர்.

இந்த மரணங்களை ஆவணப்படுத்தவும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் புத்தகமாக வெளியிட வெளியிட வேண்டும் என்று மருத்துவர் சு. அனுரத்னா (Dr. S. Anurathna)  பாரதி புத்தகாலையத்தை அணுகிய போது ஏற்றுக்கொண்டு புத்தகமாக வெளிவர துணை செய்துள்ளார்கள்.

“மஞ்சள் மரணங்கள் (Manjal Marangal) 2023 “என்ற தலைப்பில் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

“ஒரு மனிதனின் கழிவை இன்னொரு மனிதன் அகற்றுவது என்பது சாதி மற்றும் வர்க்க பாகுபாடுகளால் உருவாகிறது”

“மனிதக் கழிவுகளை சக மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைக்கும் அரச முதலாளித்து ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இந்த நூல் சமர்ப்பணம் ”
என்று இந்நூலை மருத்துவர் சு.அனுரத்னா (Dr. S. Anurathna) சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கத்தை ஒழிப்போம் சமூக நீதியையும் அறிவியலையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று சிந்திப்போர் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

நூலின் தகவல்கள் : 

நூல் : மஞ்சள் மரணங்கள் (Manjal Marangal)
ஆசிரியர் : மருத்துவர்.சு.அனுரத்னா (Dr. S. Anurathna)
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள் :47
விலை : ரூபாய் 50
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/manjal-marangal-2023/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

ச. செல்லத்துரை
உடுமலைப்பேட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *