“மக்களின் தோழர்” – நூல் அறிமுகம்
2016 முதல் 2021 வரையிலான சவால் மிகுந்த காலகட்டத்தில் கேரளத்தின் இடதுசாரி அரசினுடைய சுகாதாரத்துறை அமைச்சராகப் பணி புரிந்த ஷைலஜா டீச்சர் என்று அன்புடன் விளிக்கப்படும் தோழர் கே.கே.ஷைலஜாவின் வாழ்க்கையை நமக்கு மிக அற்புதமாக அவருடன் உரையாடி மஞ்சு சாரா ராஜன் எழுத, அதனை தி.அ.ஸ்ரீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்து காலச்சுவடு பதிப்பகம் நமக்கு அளித்துள்ளது. சென்னை ஐம்பதாவது புத்தகத் திருவிழாவில் வெளியான புத்தகங்களில் சிறந்தவற்றில் இது ஒன்றாக இருக்கும்.
ஏன் இந்த சுயவரலாற்றை எழுதினேன் என்று விளக்கும் தோழர் ஷைலஜா அலெக்சாண்ட்ரா கொல்லந்தாயை மேற்கோள் காட்டுகிறார்: ‘An autobiography of a Sexually Emancipated Communist Women(1926)’ என்ற தனது நூலின் தொடக்கத்தில் அவர் சொல்லியிருப்பது எனக்கும் பொருந்துகிறது: ‘தன்வரலாறு எழுதுவது மிகக் கடினமானது. எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? மக்களுக்கு எது பிடிக்கும்? தன் வாழ்க்கை உருவான விதத்தையும் தான் சாதித்தவற்றையும் எழுதும் ஒருவர் தன்னைப் பற்றி எழுதுகிறோம் என்பதை மறந்து, தான் எனும் அகந்தையைத் துறந்து, இயன்றவரை விலகி நின்று பார்த்து நிகழ்ந்தவற்றைத் தொகுத்தளிக்க வேண்டும்.’ இந்த நூலினை அப்படியே படைத்துள்ளார் டீச்சர்.
ஒரு அரசியல் பின்புலமுள்ள குடும்பத்தில், தியாகிகள் நிறைந்த குடும்பத்தில் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த தோழர் ஷைலஜா பின்னர் ஷைலஜா டீச்சராகி அதன் பிறகு முழுமையான அரசியலில் நுழைந்து சுகாதாரத் துறை அமைச்சராகி சாதித்த கதைதான் இது. அவரது குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பமாக இருந்துள்ளது. அதில் அவரது மாமா நேரடியாக சேலம் சிறையில் குண்டுகளை சந்தித்து, இறுதி வரை தன் நெற்றியில் அந்தக் குண்டைத் தாங்கி இருந்தவர்.
பய்யம் என்ற அவரது கிராமத்தில் அவரது குடும்பம் 1930இல் குடியேறிய போது அது காடாகவே இருந்துள்ளது. பிறகு படிப்படியாக வளர்ந்துள்ளது.
”அந்த ஊர்தான் எனக்கு முழு உலகமாக இருந்துள்ளது. ஆனால் அரசியல் அறிவு பெற்று அதன் மூலம் சிறு சிறு மாற்றங்களை உருவாக்கி அதன் மூலம் பெரிய வித்தியாசங்களை உருவாக்க முடியும் என்பதை உணரும் போது நமது எல்லைகள் விரிவடைகின்றன. நம்மைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதை விடுத்து விரிந்த மக்கள் திரளைப் பற்றி எண்ணத் தொடங்குகிறோம். நான் என்பது நாம் ஆகிறது. என்னைப் பொருத்தவரை அரசியலில் இருப்பது என்பதன் பொருள் இதுதான்: என்னால் முடிந்ததைச் செய்து நிரந்தரமான தாக்கமொன்றை விட்டுச் செல்வது. சூழலில் ஏதோ ஒரு நல்ல மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடிந்தால் போதும், அது தருகின்ற மன நிறைவே எத்தனை ஏமாற்றங்கள் தோல்விகளை வேண்டுமானாலும் நம்மைத் தாங்கிக் கொள்ள வைக்கும். இது ஒரு போதை என்பது எனக்குப் புரிகிறது. பொது வாழ்க்கையில் நமக்கு ஒரு போதும் பணி இல்லாமலேயே போகாது, சரி செய்வதற்கு எதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும். நான் ஒரு கிராமத்தில் கட்சித் தொண்டராக இருந்த போது எனது வரம்புக்குள் என்ன மாற்றங்களைச் செய்ய முடியுமோ அதைச் செய்ய முடிந்தது. பின்னர், மாவட்ட அளவிலான பொறுப்பை ஏற்ற போதும், பின்னால் மக்கள் பிரதிநிதியாக ஆன போதும் தாக்கத்தையும் மாற்றத்தையும் உருவாக்குவதற்கான எனது செயல் வட்டமும் விரிவடைந்து கொண்டே போனது.
ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்கள் மன்ற அமைப்பு சார்ந்ததும், அதைச் சாராததுமான செயல்பாடுகள் அவரது மக்கள் பணியின் இரண்டு அம்சங்கள். எல்லா முயற்சிகளின் பின்னாலிருக்கும் குறிக்கோள், அனுகூலமான சமூக மாற்றத்தைக் கொண்டு வர வேண்டுமென்பதுதான். வர்க்க வேறுபாடுகளைத் தாங்கிப் பிடிக்கிற நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ அமைப்புகளைத் தகர்ப்பதற்கான வர்க்கப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது என்றே ஒரு கம்யூனிஸ்ட் இதற்குப் பொருள் கொள்வான்.
மேலே எழுதியிருக்கும் அவரது இரண்டு பத்திகளே ஒரு சிறந்த அரசியல் வகுப்புக்கு இணையாக உள்ளன. இந்தக் கோட்பாடுகளை உள்வாங்கி ஒரு கம்யூனிஸ்ட்காகப் பயணித்துள்ளார் ஷைலஜா டீச்சர். அவர் ஏற்ற பொறுப்பை நிறைவேற்றியது குறித்து அவர் எழுதியுள்ள விவரங்கள் அனைவரும் உள்வாங்க வேண்டியவை. இன்னும் சொல்லப் போனால் சுகாதாரத் துறையில் பணிபுரியும் அமைச்சரிலிருந்து கீழ்நிலை வரை அவரது பணிகள் படித்துப் பின்பற்ற வேண்டியவை.
கேரளாவும் தமிழ்நாடும் எப்படி மத்திய அரசால் பழிவாங்கப் படுபவை என்பதை நாமறிவோம். அப்படிப்பட்ட நிலையிலும் அவரது தலைமையில் நிலைமையை கடுமையான நிபா, கரோனா போன்ற பேரிடர் காலத்திலும் இடதுசாரி அரசு சமாளித்தது என்பது அனைவருக்கும் ஒரு பாடம்.
இந்தப் போராட்டத்தில் செவிலியர் ஒருவர் தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்து வெளிநாட்டிலிருந்த தனது கணவருக்குத் தகவல் கொடுத்துத் தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு துணிச்சலுடன் மரணத்தைத் தழுவியதைப் படிக்கும் போது அவர்களது தியாகம் சிலிர்க்க வைக்கிறது. எனினும், இப்போது அனைத்து அரசுகளும் கடைப்பிடித்து வரும் தாராளமயக் கொள்கைகளால் அவர்கள் காண்டிராக்ட் தொழிலாளர்களாக உழைப்பு உறிஞ்சப் படுவதை நினைத்து வருந்த வேண்டியிருக்கிறது.
தமது அனுபவங்கள் அனைத்தையும் நேர்மையுடன் அவர் பதிவு செய்துள்ளார். ஓரிரு முறை பாஜக தலைமையிலான மத்திய அரசு கூட உடனடியாக உதவியதையும் அவர் பதிவு செய்து நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல்வாதியாக இருக்கும்போது எந்த அளவுக்குத் தமது குடும்பத்தின் பாசத்தை, நேசத்தை இழக்க வேண்டியிருக்கிறது என்பதையும் பதிவு செய்துள்ளார். அவர் இல்லாமலேயே அவரது குழந்தைகள் வளர வேண்டியிருந்தது என்பது எவ்வளவு இழப்பு! ஆனால் கம்யூனிஸ்ட் குடும்பத்திலேயே வந்த அவரது அம்மா, மாமியார், அவரது கணவர் தோழர் பாஸ்கரேட்டன் ஆகியோரது முழு ஆதரவு இருந்ததால் அனைத்தையும் கடந்து சாதித்திருக்கிறார் தோழர் ஷைலஜா டீச்சர்.
தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன் மொழிபெயர்த்தாரா, அல்லது தமிழிலேயே எழுதினாரா என்பது விவாதத்துக்குரியது. அவ்வளவு சிறப்பான மொழிபெயர்ப்பு. எந்த இடத்திலும் தடங்கல் இல்லை. ஒரு தெளிந்த நீரோட்டமாக புத்தகம் முழுவதும் பயணிக்கிறது. பாராட்டுகள்.
ஒரு அரசியல் செயல்பாட்டாளராக, ஒரு கம்யூனிஸ்டாக, ஒரு கம்யூனிஸ்ட் எதிரியாக, யாராக இருந்தாலும், ஒரு அரசியல்வாதி, மக்களுக்கான அரசியல் செய்பவர் எப்படிப் பயணிக்க வேண்டும் என்ற ஒரு பாடப்புத்தகமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது.
இந்தப் புத்தகத்தை எழுத சாரா ராஜன் எடுத்த முயற்சிகள் பாராட்டத் தக்கவை. அவரது ஈடுபாடு எழுத்துகளில் தெரிகிறது. மேலும் அவரது தனிச்செயலாளர் பிரமோத், பிருந்தா காரத், சுபாஷினி அலி ஆகியோரின் ஆதரவும் தூண்டுதலும் இந்தப் புத்தகத்தை எழுத உதவியுள்ளன. அவர்களுக்கும் நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “மக்களின் தோழர்“ |
| ஆசிரியர்: | மஞ்சு சாரா ராஜன் | தமிழில் : தி.அ. ஸ்ரீனிவாஸன் |
| வெளியீடு: | காலச்சுவடு |
| விலை: | 10% Discount price was: ₹370.00 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கி.ரமேஷ் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

