மனோகர் மல்கோன்கர் எழுதிய ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) Book - இந்தியப் பிரிவினையின் பல பரிமாணங்களைச் சித்தரிக்கும் நாவல்

மனோகர் மல்கோன்கரின் ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) – இந்தியப் பிரிவினையின் பல பரிமாணங்களைச் சித்தரிக்கும் நாவல்

மனோகர் மல்கோன்கரின் ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) நாவலிலிருந்து

– பெ.விஜயகுமார்

ஹிட்லரின் ஃபாசிஸகாலத்துக் கொடுமைகளை விவரிக்கப் பயன்படும் ’ஹாலோகாஸ்ட்’ (Holocaust) என்ற வார்த்தையினாலேயே இந்தியப் பிரிவினைக்காலக் கொடுமைகளும் அழைக்கப்படுகின்றன. இவ்விரண்டு அழிவுகளுக்கு இணையான பேரழிவு வேறெங்கும் அரங்கேறவில்லை. இந்திய விடுதலையுடன் சேர்ந்து நடந்த இந்தப் பிரிவினை, உலகின் மிகப் பெரிய பிரிவினை (The Great Partition) என்றழைக்கப்படுகிறது. இரு நூறாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷ் அரசு இரு நாடுகளாக இந்தியா பிரிக்கப்படும் நேரத்தில் இத்துணைக் கொடூரங்கள் நடக்கும் என்பதைக் கணிக்கத் தவறியது வரலாற்றின் மன்னிக்க முடியாத குற்றமாகிப் போனது. பிரிவினை இவ்வளவு வன்முறைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் முன்னின்ற இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லீம் லீக், சீக்கியர்களின் அகாலி தளம், இந்தியப் பொதுவுடமைக் கட்சி போன்ற அமைப்புகளும் எண்ணவில்லை.

பிரிவினைக்காலத் துயரங்களை எல்லா இலக்கிய வகைமைகளும் சித்தரித்துள்ளன. இந்த வரலாற்றின் துயர்மிகு பக்கங்களை ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) எனும் நாவல் இலக்கியமாக மனோகர் மல்கோன்கர் (Manohar Malgonkar) வடித்துள்ளார். மனோகர் மல்கோன்கர் (1913-2010) பெல்காம் நகருக்கு அருகில் ஜகல்பெட் எனும் ஊரில் நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் உயர்அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் பெரிய அளவில் வணிகம் செய்தும், ஒரு பெரிய மங்கனீச சுரங்கத்தின் சொந்தக்காரராகவும் இருந்தார். Shalimar, Distant Dreams, Devil’s Wind, The Sea Hawk, The Princes போன்ற நாவல்களும், சிறுகதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். பிரிவினைக்காலச் சோகங்கள் குறித்த நாவல்களைப் படைத்த குஷ்வந்த்சிங், பிஷம் சஹனி, சாமன் நஹல் போன்ற மற்ற எழுத்தாளர்களிடமிருந்து மல்கோன்கர் முற்றிலும் மாறுபட்டவராக, ஆங்கிலேயர் ஆட்சியைப் பெருமையாகக் கருதியவராக இருந்தார். ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்றிருந்தமனோகர் மல்கோன்கர் (Manohar Malgonkar) தன்னுடைய படைப்புகள் அனைத்தையும் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.

நானூறு பக்கங்களில் விரிந்து செல்லும் இந்நாவல் வாசகர் மனதை நெகிழச் செய்யும் நிகழ்வுகளையும், அழகிய வர்ணனைகளையும் கொண்டுள்ளது. இந்திய விடுதலைப் போராட்டம் 1919இல் நடந்த ஜாலியான்வாலா பாக் படுகொலைக்குப் பின்னர் கொதிநிலையை எட்டியது. ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) நாவல் 1939க்கும் 1947க்கும் இடைப்பட்ட காலத்தில் நடக்கும் சம்பவங்களைக் காட்சிப்படுத்தும் வரலாற்று நாவலாகிறது. வடக்குப் பஞ்சாபில் (இன்றைய பாகிஸ்தான்) செனாப் நதிக் கரையில் அமைந்துள்ள துரியாபாத் நகரை மையப்படுத்தியது. இருப்பினும் மும்பை, கல்கத்தா, லாகூர், அந்தமான், கான்செட் எனும் சிறு கிராமம் என்று பல பகுதிகளுக்கும் நாவலின் கதாபாத்திரங்கள் பயணிக்கின்றன. அவர்களுடன் வாசகர்களாகிய நாமும் பல்வேறு இடங்களுக்குச் செல்கிறோம். அது இந்திய விடுதலைப் போரின் மிக முக்கியமான காலம் என்பதாலும், இரண்டாம் உலகப் போர் அதன் உச்சகட்டத்தில் இருந்தமையாலும் நாடெங்கிலும் மிகுந்த பதட்டம் நிலவிய காலகட்டமாகும்.

இந்தியப் பிரிவினைத் துயரங்களைக் கருப்பொருளாகக் கொண்ட மற்ற நாவல்களில் இருந்து ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) நாவல் சற்று மாறுபடுகிறது. பிரிவினைக் கலகங்கள் நாவலின் கடைசி மூன்று அத்தியாயங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றன. நாவல் முழுவதும் காதல்-காமம், தேசப்பற்று-தேசத்துரோகம், நட்பு-பகை, வன்முறை-அமைதி, மதநல்லிணக்கம்-மதமோதல், அன்பு-வெறுப்பு, நாம்-மற்றவர் என்று பல்வேறு முரண்களையும் கொண்டதோர் உலகத்தை நாவலாசிரியர் படைத்துள்ளார். இவ்வுலகில் தேபி தயாள், கியான் தல்வர், சஃபி உஸ்மான், சுந்தரி, மும்தாஜ் டேக்சந்த், விஷ்ணு தத், ஹரி, பாசு ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக வலம் வருகின்றனர்.

துரியாபாத் நகரில் சஃபி உஸ்மான் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தங்கள் உடல், உடைமை, உயிர் அனைத்தையும் தியாகம் செய்வோம் என்ற சூளுரையுடன் ஓர் இளைஞர் குழு இணைகிறது. தங்களை “விடுதலைப் போராளிகள்” என்று அழைத்துக் கொண்ட அவர்கள் சந்திக்குமிடம் ‘அனுமான் உடற்பயிற்சி மையம்’. வெளி உலகிற்கு மட்டுமே அது உடற்பயிற்சி மையம். ஆனால் உண்மையில் அது பிரிட்டிஷ் அரசை வன்முறை மூலம் வீழ்த்திட சதித் திட்டம் தீட்டும் இடமாகவே செயல்பட்டு வந்தது. 1919இல் நடந்த ஜாலியான் வாலாபாக் வன்முறை சம்பவத்தில் சஃபி உஸ்மான் தன் தந்தையை இழக்கிறான். வன்முறையை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அசையா நம்பிக்கை கொண்டவனாகிறான். நகரின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த தேபி தயாளும் அந்தக் குழுவில் ஒருவனாக இருக்கிறான். அவன் கெர்வாடு கன்ஸ்டரக்சன் கம்பெனியின் உரிமையாளரான திவான் பகதூர் டேக்சந்தின் மகன். கல்லூரி மாணவனான தேபி குழந்தைப் பருவத்தில் அன்பே வடிவமாக இருந்தவன். ஆனால் இப்போது காந்தியின் அகிம்சைக் கொள்கைக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு புரட்சிப் படையின் முன் வரிசையில் நிற்கிறான்.

கியான் தல்வர் இக்குழுவுடன் முரண்பட்டு நிற்பவன். இந்தியா காந்தியின் அகிம்சை வழியில் விடுதலை அடைய வேண்டுமென்ற விருப்பமுடையவன். இந்து, முஸ்லீம், சீக்கியர் என்று அனைத்து மதத்தவர்களும் பிரிட்டிஷ் அரசை அகற்றும் ஒரே லட்சியத்துடன் அந்தக் குழுவில் இணைந்தனர். இதில் பாசு, கியான், தேபி தயாள் மூவரும் கல்லூரியில் ஒன்றாகப் படிப்பவர்களும்கூட. அவர்கள் அரசு அலுவலகங்களுக்குத் தீவைப்பது, தண்டவாளங்களை அகற்றி ரயில்களைக் கவிழ்ப்பது என்று சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இராணுவ விமானம் ஒன்று துரியாபாத் நகரத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதை அறிகிறார்கள். தேபியும், சஃபி உஸ்மானும் சேர்ந்து அந்த விமானத்தைத் தீயிலிட்டுக் கொளுத்துகிறார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த வேளையில், அதில் நிறைய முரண்பாடுகளும் தோன்றுகின்றன. காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ், ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், இந்து மகாசபை, நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம், இந்திய பொதுவுடைமைக் கட்சி, பல்தேவ்சிங் தலைமையிலான சீக்கியர்களின் அகாலி தளம் என்று பல்வேறு இயக்கங்களும் அவரவர்களுக்கென தனித்தனி கொள்கைகளுடன் செயல்பட்டனர். ஒன்றுபட்ட விடுதலைப் போராட்டம் சாத்தியப்படவில்லை. ஆங்கிலேய அரசு நாட்டில் நிலவிய பிளவுகளைப் பெரிதாக்கி குளிர் காய்ந்தது. நாடெங்கிலும் நிலவிய மதமோதல்களின் பிரதிபலிப்பு அந்த இளைஞர்கள் குழுவையும் தொற்றிக் கொள்கிறது. குழுவின் தலைவன் சஃபி உஸ்மான் மதவெறிக்கு ஆளாகிறான். நாடு விடுதலை பெற்றால் ஆட்சி அதிகாரம் காங்கிரஸ் கைகளில் சென்றடையும். காங்கிரஸ் எப்போதும் முஸ்லீம்களுக்கு எதிராகவே இருக்கும். எனவே இஸ்லாமியர்கள் எதிர்க்க வேண்டியது ஆங்கிலேயர்களை அல்ல, இந்துக்களையே என்று மூளைச் சலவைக்குள்ளாகிறான்.

தன்னுடைய குழுவின் இந்து உறுப்பினர்களை நகர காவல்துறை அதிகாரியிடம் சஃபி உஸ்மான் காட்டிக் கொடுக்கிறான். ஒரு மாலைப் பொழுதில் அனுமான் உடற்பயிற்சி மையத்தில் கூடியிருந்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இஸ்லாமிய உறுப்பினர்களை ஏற்கனவே எச்சரித்து தப்பிக்கச் செய்கிறான் சஃபி உஸ்மான். அன்று கூடியிருந்த இந்து இளைஞர்கள் மட்டும் கைதாகிறார்கள். கைதான தேபி தயாள் விமானத்தை எரித்த குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையாக அந்தமான் சிறைக்கு அனுப்பப்படுகிறான்.

கியான் தல்வர் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய தந்தை பங்காளிகள் சண்டையில் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தவர். நீதிமன்றத்தில் நீண்ட நாள் அந்த வழக்கு நடைபெறுகிறது. தந்தையின் மரணத்திற்குப்பின் கியானின் அண்ணன் ஹரி வழக்கைத் தொடர்ந்து நடத்துகிறான். பெற்றோர்களை இழந்த இருவரும் பாட்டி அஜியின் அரவணைப்பில் வளர்க்கப்படுகிறார்கள். வழக்கில் வெற்றி பெற்ற போதிலும், பங்காளி விஷ்ணு தத் நிலத்தை அவர்களுக்குத் தரமறுக்கிறான். சொத்து வெறிதலைக்கேற ஹரியை அவன் கோடாலியால் வெட்டிக் கொல்கிறான். அண்ணனைக் கொன்ற விஷ்ணு தத்தை அதே கோடாலியால் கொன்று விட்டு கியான் சிறைக்குச் செல்கிறான். அரசியலில் காந்தியின் அகிம்சை கொள்கையைக் கறாராகக் கடைப்பிடிக்கும் கியான் சொந்த வாழ்வில் வன்முறையைக் கையிலெடுத்து சிறை செல்கிறான். நண்பர்கள் கியான் – தேபி தயாள் இருவரும் பகைவர்களாக அந்தமான் சிறையில் இருக்கிறார்கள்.

தேபி தயாள் கைதாகி இருந்த சமயத்தில் அவனின் அக்கா சுந்தரியின் திருமணம் நிச்சமயாகி இருந்தது. மகள் திருமண நேரத்தில் மகன் கைதாகி இருந்தது தந்தை டேக்சந்தையும், தாய் ராதாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன் தம்பி தேபி தயாள் மீது சுந்தரி அளவில்லாப் பாசம் கொண்டிருந்தாள். தம்பி அந்தமான் சிறையில் வாடிக் கொண்டிருக்கும்போது நடந்த தனது திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாதவளாகவே அவள் இருந்தாள். அவள் கணவன் கோபால் சந்திதார் மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் உயர்அதிகாரி. திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தேனிலவிற்காக மும்பை நகருக்குப் போகிறார்கள். தன் தம்பியின் நினைவிலேயே ஆழ்ந்திருந்த சுந்தரிக்கு தேனிலவு இனிக்கவில்லை; மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியிருந்த அவள் கணவன் கோபாலுக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தார்கள். திரைப்பட நடிகையும், ஆண்களை மயக்கி ஆடம்பர வாழ்வு வாழ ஆசைப்படுபவளுமான மாலினியிடம் அவன் நெருங்கிப் பழகுகிறான். ஆனாலும் சுந்தரி-கோபால் தம்பதிகள் ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.

அந்தமான் சிறைப் பொறுப்பில் இருக்கும் ஆங்கில அதிகாரிகளின் கையாளாக கியான் மாறுகிறான். ஆனால் தேபி தயாளின் நெஞ்சம் முழுவதும் வீரம் நிறைந்துள்ளது. சிறையிலிருந்து தப்பிக்க முயலும் தேபியைக் காட்டிக் கொடுத்து கொடூரமான சவுக்கடிகளுக்கு ஆளாக்குகிறான் கியான். விரைவில் நிலைமை மாறுகிறது. ஜப்பான் இராணுவம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பிடிக்கிறது. ஜப்பான் உதவியுடன் ஆங்கிலேயர்களைத் தோற்கடித்து விடுதலை பெறலாம் என்று கருதிய நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் ஜப்பானுக்கு முழு ஆதரவைத் தருகிறது. அந்தமான் தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றிக் கொள்கிறது. கியான் அதற்கு முன்னரே ஆங்கிலேய அதிகாரியின் துணைகொண்டு அந்தமான் சிறையிலிருந்து தப்பிவிடுகிறான். தேபி தயாள் ஜப்பான் இராணுவத்தின் உதவியுடன் அந்தமான் சிறையிலிருந்து மீண்டு பர்மா வழியாக கல்கத்தாவிற்கு வந்து சேருகிறான்.

தேபி கல்கத்தா வந்ததும் நண்பன் பாசுவைக் காண்கிறான். அன்று மதநல்லிணக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த பாசு, இன்று இஸ்லாமிய வெறுப்பை நெஞ்சில் ஏற்றியிருந்தான். கல்கத்தாவில் நடந்த மதக் கலவரத்தின்போது பாசுவின் மனைவி டிப்பிலி மீது இஸ்லாமிய மதவெறியர்கள் ஆசிட் பாட்டிலை வீசியிருந்தனர். அழகிய முகம் விகாராமாகியிருந்த காரணத்தால், தன் முகத்தை அவள் எந்நேரமும் முக்காடிட்டு மறைத்திருந்தாள். பாசு தன் மனைவியைக் காயப்படுத்திய முஸ்லீம்களைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தான். தேபியும் விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த சஃபி உஸ்மானைப் பழிவாங்க விரும்பினான்.

எனவே இருவரும் லாகூரில் வாழ்ந்துகொண்டிருந்த சஃபியை பழிதீர்க்கப் புறப்படுகிறார்கள். லாகூர் நகரின் சிகப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த மும்தாஜ் என்ற அப்பாவி இஸ்லாமியப் பெண்ணிடம் சஃபி மனதைப் பறிகொடுக்கிறான். அவளை விலைக்கு வாங்கி தனக்குச் சொந்தமாக்கிட விரும்புகிறான். இதனை அறிந்து கொண்ட தேபி தயாள் அதிகப் பணம் கொடுத்து மும்தாஜை மீட்டுக்கொண்டு வருகிறான். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத சஃபி உஸ்மான் ஆசிட் பாட்டிலை மும்தாஜ் மீது வீசுகிறான். அன்று மதவெறியர்கள் பெண்கள் மீது பிரயோகித்த ஆயுதங்களில் ஆசிட் பாட்டிலும் ஒன்று. ஆனால் தேபி தன் கைகளால் ஆசிட் பாட்டிலைத் தடுத்து மும்தாஜைக் காப்பாற்றுகிறான். சஃபி உஸ்மானைப் பழிதீர்த்த மகிழ்ச்சியில் பாசு கல்கத்தா திரும்புகிறான்.

மும்தாஜ் தன்னைக் காப்பாற்றிய தேபி தயாளின் கைகளில் ஏற்பட்ட புண்ணை மருந்திட்டுக் குணப்படுத்துகிறாள். இருவரும் திருமணம் முடித்து தம்பதிகளாக வாழ்கிறார்கள். தேபி தன் மனைவியைக் கூட்டிக்கொண்டு மும்பையில் வாழும் தன் அக்கா சுந்தரியைப் பார்க்க வருகிறான். தன் தம்பியைக் கண்டதில் சுந்தரி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறாள். ஓர் இஸ்லாமியப் பெண்ணை- அதுவும் சிகப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்திருந்தவளை அவன் திருமணம் செய்திருந்ததை தான் ஏற்றுக்கொண்டாலும் தங்கள் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்று பயந்தாள். எனவே முதலில் சுந்தரி துரியாபாத் சென்று பெற்றோர்களிடம் பக்குவமாகச் சொல்லி அவர்களைத் தயார்படுத்துவது என்றும் ,அதற்குப்பின்னர் சில நாட்கள் கழித்து தேபி-மும்தாஜ் தம்பதிகள் துரியாபாத் வருவது என்றும் முடிவெடுக்கிறார்கள். மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது.

இந்திய விடுதலையும், பிரிவினையும் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. இரண்டு பக்கமும் மக்கள் எதிரும் புதிருமாகப் புலம்பெயர்ந்து செல்கிறார்கள். வன்முறை தாண்டவமாடுகிறது. என்ன செய்வதென்று தெரியாது தலைவர்கள் திகைக்கிறார்கள். இந்துக்களும், சீக்கியர்களும் இந்தியாவை நோக்கியும், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானை நோக்கியும் லட்சக்கணக்கில் நகர்கிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்று அனைத்துக் கொடுமைகளும் நடந்தேறுகின்றன. கணக்கில் அடங்காத எண்ணிக்கையில் உயிர்ப்பலி நடக்கிறது. ஒன்றாக இருந்த நிலப்பரப்பில் புதிதாக எல்லைக் கோடு போடப்படுகிறது. எல்லையின் ஒருபுறம் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாடும், மறுபுறம் மதச்சார்பற்ற இந்தியா என்ற நாடும் உதயமாகின்றன. ஏக இந்தியா என்ற காந்தியின் கனவு சிதைந்து போகிறது.

நாடு பிரிக்கப்படும்போது கலகம் வெடிக்கும் என்பதறிந்த மக்கள் பதற்றம் அடைகின்றனர். மும்பையிலிருந்து துரியாபாத்துக்கு சுந்தரி பத்திரமாகச் செல்கிறாள். அடுத்த நான்கு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறுகிறது. தேபி – மும்தாஜ் தம்பதிகளின் பயணம் நினைத்துப் பார்க்க முடியாத துயரத்தைச் சந்திக்கிறது. மூச்சுவிடமுடியாத அளவிற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு எல்லையைக் கடந்து பாகிஸ்தான் நோக்கி ரயில் செல்கிறது. தேபியும், மும்தாஜும் கட்டிப்பிடித்துக் கொண்டு ரயிலில் செல்கிறார்கள். வழியில் ரயிலை நிறுத்தி யாரேனும் இந்துக்கள் இருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள். இந்துக்களை ரயிலிலிருந்து கீழே இறக்கி கொலை செய்கிறார்கள். இந்துப் பெண்களைப் பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். ஆண்களை நிர்வாணப்படுத்திப் பார்க்கிறார்கள். சுன்னத் செய்யாதவர்களை இந்துக்கள் என்று அடையாளம் கண்டு கொல்கிறார்கள். தேபியும், மும்தாஜும் கதறக் கதற அடித்துக் கொல்லப்படுகிறார்கள். நாடு விடுதலை பெற்ற அதே நேரத்தில் மனிதம் தொலைந்து போனது.

அந்தமானிலிருந்து இந்தியா திரும்பிய கியான் சொந்த ஊர் செல்கிறான். அவன் பாட்டி அஜி இறந்துவிட்டதை அறிகிறான். அந்த வீட்டிலிருந்த ஒரே விலைஉயர்ந்த பொருளான சிவன் சிலையை மட்டும் பூஜை அறையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு துரியாபாத் வருகிறான். சுந்தரி வீட்டுக்குச் சென்று சுந்தரியின் தந்தை டேக்சந்திடம் சிலையைக் கொடுத்து ஏதேனும் பணம் கிடைக்குமா என்று கேட்கிறான். டேக்சந்த் பழைய பொருட்களைச் சேகரித்துப் பாதுகாப்பவர். வீட்டில் கலைப் பொருட்கள் கொண்ட மியூசியம் வைத்துள்ளார். அவரிடம் தனக்கொரு வேலை வாங்கித்தருமாறும் கேட்டுக் கொள்கிறான். தன்னை அடையாளம் கண்டு கொண்ட சுந்தரியிடம் தேபியைப் பற்றி எதுவும் சொல்லாமல் உண்மைகளை மறைக்கிறான்.

கியான் மீது இரக்கப்பட்டு, டேக்சந்த் அவனுக்கு மும்பை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருகிறார். திருமணத்துக்குப் பிறகு மும்பையில் குடியிருக்கும் சுந்தரி அடிக்கடி கியானைச் சந்திக்க வருகிறாள். சுந்தரியின் தாம்பத்திய வாழ்வு தோற்றுப்போய் அவள் தனிமையில் தவிப்பதை கியான் அறிகிறான். சுந்தரியும் அவன் மீது அன்பைப் பொழிகிறாள். கியானுடன் நெருக்கமாகப் பழகுவதன் மூலம், தன் கணவன் கோபாலைப் பழிவாங்குவதாக நினைக்கிறாள். கியானுக்கும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சுந்தரியின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. இருவரும் அன்னியோன்னியமாகப் பழகுகிறார்கள்.

நாவலில் இரண்டு இடங்களில் காம ரசம் சொட்டும் காட்சிகளைக் காண்கிறோம். திருமணம் முடிந்ததும் சுந்தரி-கோபால் தம்பதிகள் மும்பைக்குத் தேனிலவு வந்தபோது ,சுந்தரி தனது தம்பி தேபி அந்தமான் சிறையிலடைக்கப்பட்ட சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். தம்பதிகளுக்கிடையில் இருந்த இடைவெளியைப் பயன்படுத்தி கோபாலின் காதலி மாலினி அவனை மயக்கி தன்வசமாக்கியிருந்தாள். ஒருநாள் மாலை கோபாலும், மாலினியும் ஜுஹு கடற்கரையில் காதல் களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தக் காதல் காட்சியை அறையிலிருந்த தொலைநோக்கி மூலம் சுந்தரி பார்க்கிறாள். கோபால் வீட்டிலிருக்கும் ஒரு மாலைப்பொழுதில் அவள் கியானுடன் கடற்கரைக்குச் செல்கிறாள். கியானுடன் காதல் விளையாட்டில் தான் ஈடுபடுவதை கோபாலைப் பார்க்கவைத்து வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்.

நாவலின் கடைசி மூன்று அத்தியாயங்கள் படிப்பவர் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. ஒருபுறம் தேபி-மும்தாஜ் தம்பதிகளின் கொடூர முடிவைப் பார்க்கிறோம். மறுபுறம் துரியாபாத் நகரம் மிகப் பெரிய வன்முறைக்கு ஆளாவதைக் காண்கிறோம். இஸ்லாமியர்கள் இந்தியாவில் கொல்லப்படும் செய்தி வந்துசேருகிறது. உடனே துரியாபாத்தில் இந்துக்களும், சீக்கியர்களும் வேட்டையாடப்படுகிறார்கள். துரியாபாத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து பெயரும், புகழும் பெற்ற திவான் பகதூர் டேக்சந்த் தான் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள், அரிய கலைப் பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு இந்தியா செல்ல வேண்டிய கட்டாயம் வருகிறது. ஊரே பதற்றத்தில் இருக்கிறது. நன்கு பழகிய இஸ்லாமியர்கள்கூட அடைக்கலம் கொடுக்க மறுக்கிறார்கள். இந்துக்களுக்கு அடைக்கலம் தரும் இஸ்லாமியர்களும் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

தேபி அந்தமான் சிறையிலிருந்து விடுதலை பெற்று இந்தியா வந்துள்ள செய்தியை சுந்தரி தன் பெற்றோரிடம் சொல்கிறாள். தேபி திருமணமாகி மனைவியுடன் வருகிறான் என்ற செய்தி அறிந்து அவன் பெற்றோர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குகிறார்கள். ஆனாலும் அந்த நெருக்கடி காலத்தில் அவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை. இந்தியா செல்லவிருக்கும் சுந்தரியின் வீட்டுக்கு கியான் வருகிறான். அவர்களுக்குத் துணையாக கியானும் இந்தியா வருவதை அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இந்தியாவிற்குப் புலம்பெயரவிருக்கும் குடும்பங்களை துரியாபாத் நகரின் காவல்துறை ஒரு கான்வாயாக இணைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறது. கான்வாய் புறப்படவிருக்கும் நேரத்தை அறிந்துகொள்ள கியான் அடிக்கடி காவல்நிலையம் வந்துசெல்கிறான்.

அன்றிரவு அவர்கள் வீட்டைச் சூறையாட ஒரு கும்பல் வருகிறது. கும்பலுக்குத் தலைமைதாங்கி சஃபி உஸ்மான் வருவதைப் பார்த்து சுந்தரியும், கியானும் அதிர்ச்சி அடைகிறார்கள். கொடூர ஆயுதங்களுடன் வரும் கும்பலில் ஒருவன் சுந்தரியின் அம்மாவைக் கொல்கிறான். சூழ்நிலை சுந்தரியை வீராங்கனையாக மாற்றுகிறது, கையில் கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு சஃபி உஸ்மானை தாக்குகிறாள். அவள் கையில் கிடைத்த ஆயுதம் கியான் கொண்டுவந்த சிவன் சிலை. சிவன் சிலையை சஃபியின் தலையில் ஓங்கி அடிக்கிறாள். அவன் செத்து விழுந்ததும் மற்றவர்கள் ஓடி விடுகிறார்கள்.

மறுநாள் காலை கான்வாய் கிளம்புகிறது. மைல் கணக்கில் நீண்டிருக்கும் கான்வாய். மெதுவாக ஊர்ந்து செல்கிறது. ஓரிடத்தில் நீண்ட நேரம் கான்வாய் நிற்கிறது. பலரும் வண்டிகளில் இருந்து கீழிறங்கி இயற்கை உபாதைகளைக் கழிக்கிறார்கள். பெரியவர் டேக்சந்தும் இறங்குகிறார். கான்வாய் மீண்டும் கிளம்புகிறது. ஓடிவந்து அவரால் கான்வாயைப் பிடிக்க முடியவில்லை. காவல்துறை விரட்டலுக்குப் பயந்து கியான் காரைக் கிளப்புகிறான். கியான்-சுந்தரி இருவர் மட்டும் இந்தியா வந்தடைகிறார்கள்.

‘Taste of the pudding is in the eating of it’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல் இந்த நாவலின் அருமை அதைப் படிப்பதில்தான் இருக்கிறது. நாவலைச் சுருங்கச் சொல்ல நினைத்து இத்தனை பக்கங்களுக்கு விரிந்து சென்றுவிட்டது. சொல்லியதைவிடவும் சொல்லாதவை நிறைய உள்ளன. வாசகர்கள் நாவலைப் படித்து இன்புற வேண்டுகிறேன். நிறைய சம்பவங்களையும், உணர்ச்சிமிகு காட்சிகளையும் கொண்ட இந்த நாவல் ஒரு செவ்வியல் படைப்பாகும் .காதல், காமம், வன்மம், அன்பு, வெறுப்பு, பழி, பாவம், குற்றம். தண்டனை என்று மனித வாழ்வின் அத்தனை உணர்ச்சிகளையும் காட்சிப்படுத்தும் உன்னமான படைப்பு இந்நாவல். ‘எ பெண்டு இன் தி கேன்ஜஸ்’ (A Bend in the Ganges) என்ற நாவலின் தலைப்பு இராமாயணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. கங்கை நதியின் ஒரு வளைவில் ஏற்படும் மாற்றம் காப்பியத்தின் போக்கையே மாற்றுகிறது. அதுபோல் நாவலின் பல திருப்பங்கள் கங்கை நதியின் வளைவுகளில் மறையும் நிகழ்வுகளாகி வாசகர்களைப் பிரமிக்கச் செய்கின்றன.

——————————————————

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *