மந்தைப்பிஞ்சை – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : மந்தைப்பிஞ்சை
எழுத்தாளர்: கா. சி. தமிழ்க்குமரன்
பதிப்பகம்: பவித்ரா பதிப்பகம்
வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம்
தொடர்புக்கு: 8778924880, 9940985920
ஒரு புத்தக அறிமுகம் என்பது புத்தகத்தை வாசித்தவன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் வழிநின்று அந்தப் புத்தகத்தை மற்றவர்களிடம் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பாகும். இந்த உலகில் எண்ணிட இயலாத அளவு புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் எல்லோராலும் வாசித்து விட முடியாது. இன்றைய நிலையில் மின்நூல்கள் வேறு தன் பங்கிற்குக் கொட்டிக் கிடக்கின்றன. நாடறிந்த எழுத்தாளர்களின் புத்தகங்களே புத்தகக் கண்காட்சிகளில் மீண்டும் மீண்டும் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் காலமிது. ஊடக வெளிச்சம் பட்டு பொது மக்களின் பார்வையில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு வாசகர்கள் கிடைத்து விடுகின்றனர். ஆனால், மிக நல்ல எழுத்தாற்றல் உள்ள, வெகுவாக அறிந்திரப்படாத எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாசகர்களின் கைகளைச் சென்றடைவதும் அப்புத்தகங்கள் குறித்த மதிப்பாய்வுகள் வெளிவருவரும் மிக அரிதாகவே உள்ளது. எழுத்தாளர் கா. சி. தமிழ்க்குமரன் எழுதி சிறுவாணி வாசகர் மையம் – பவித்ரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள மந்தைப்பிஞ்சை அந்த வகையைச் சார்ந்த ஒரு புத்தகமாகும். இச்சிறுகதைத் தொகுப்பில் 20 சிறுகதைகள் உள்ளன.
முறிமுக்கால்
ஒரு சம்சாரியின் வாழ்வினை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகள் உள்ளூர் விவசாயிகளின் வாழ்க்கையோடு ஆடும் சதிராட்டம் இக்கதையில் விவரிக்கப்படுகிறது. எத்தனையோ விவசாயிகளின் வாழ்வு இவ்வாறு நிலைதடுமாறி சீரழிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளத் தட்டையில் காணப்படும் சோளக்கதிர்களை பச்சைப்பிள்ளைக்காரி தன் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்திருப்பது போல என்ற உவமை கொண்டு விவரித்திருப்பது ஒரு காட்சியாய் விரிகிறது. அதே போல மக்காச்சோளத்தில் காணப்படும் புழுக்களை கண்மாய் அழியும் நேரத்தில் ஊர்சசனம் மீன் பிடிக்க நிற்பது போல் என்ற உவமையும் அழகு. மாமன் மச்சான்களை எகடாசிப் பேசிக் கொண்டும் என்று ஒரு வரி வருகிறது. எகடாசி என்ற சொல்லாடலும், புன்செய் என்பதைப் பிஞ்சை என்றழைக்கும் மண் மணம் கலந்த வார்த்தைப் பயன்பாடும் நெஞ்சில் ஒட்டிக்கொள்கிறது.
பெத்தவள்
குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடிக்க அதிகாரிகள் அலைந்த காலத்தில் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆசை ஆசையாய் பெத்துப் போட்ட குழந்தைகளில் ஒருவர் கூட கவனிக்காமல் சாவை எதிர்நோக்கும் பெரியநாயகி அம்மாளின் மரண வேதனை கண்களில் நீரை வரவழைக்கிறது. கிராமத்திற்குள் நுழையும் புதிய நபர்களை விசாரிக்கும் பாட்டிகளின் தோரணை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். கதையில் விற்ற கிளிமார்க் டீத்தூள் வாங்கி டீ போடுற அழகில் கதையின் காலம் தெரிய வருகிறது. ஒத்தப்பேரி மனுசி என்பது அறியாத வார்த்தை.
ஏமிலாந்தி (கவனக் குறைவாய் நடந்து கொள்ளும் நபர்)
மளிகைக் கடைக்காரர் மாணிக்கத்தின் கடை, அவர் உட்காரும் விதம் (சப்பள சளபுள), அவரின் உடை, தனிச்சிறப்பாய் முதலாளிக்கென வரும் காபி, வியாபார நுணுக்கம் என்று பழங்கால அண்ணாச்சி கடைகளையோ, செட்டியார் கடைகளையோ அச்சு அசலாய் கண் முன் நிறுத்துகிறது.
முத்தையாவின் சமையல் காண்ட்ராக்ட், மாணிக்கத்தை ஏமாற்றி வளர்ந்த விதம், வாய்ச்சவடால், மாணிக்கம் நோயால் பாதிக்கப்பட்டது, முத்தையா நோயால் படுத்து எழுந்து மீண்டது, (ஆயிரம் யும் நயன்தாராவையும் அரசாங்கம் கைது செய்தது என்று சொன்னால் விவசாயிகளை மறந்து விட்டு நயன்தாராவை ஏன் கைது செய்தார்கள் என்று கேட்க கூட்டம் வருமாம்) எதார்த்தமாய் நல்லவன் வீழ்ந்ததும் வஞ்சகன் வாழ்ந்ததுமாக கதையை முடித்துள்ளார்.
தசகூலி
நாத்துச் சோளம் விவசாயம் பற்றி இந்தக் கதையில வர்ற வாசகம் இப்படி இருக்கு.
“மனசனுக்குக் குத்திப்போட்டுக் கஞ்சி குடிக்கத் தவசமும் மாட்டுக்கு நாத்துக்கூளமும் வந்துட்டா மனுசனுக்கும் மாட்டுக்கும் சாப்பாட்டுப் பஞ்சம் தீந்துச்சுல்ல.”
விவசாயத்தையே நம்பி வாழ்ற குடும்பங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருக்கு. மல்லி விவசாயத்துல பூப்பூத்த காலத்துல காலை நேரத்துல போனாப்போதும் கமகமன்னு அப்படித்தான் வாசம் எட்டுக்காடு தள்ளி வரும்போதே மணக்கும் அப்படின்னு வாசிக்கிறப்ப நமக்கும் (நாட்டு) மல்லி மணக்கிறது. இந்தக் கதையிலயும் லட்சுமிங்கற சம்சாரி காலந்தப்பி பெய்யுற தொடர் மழையால எப்படி தன் கனவுகளை இழக்கறாங்கங்கறதை எழுதியிருக்காரு.
பூரிதக்குஞ்சலம்
இந்தக் கதையில் மேகாட்டு மாமா, மாமாவின் மகள் மீனா, ஒண்ணுவிட்ட தங்கச்சி பூரணி, மலங்காட்டுக்கு ஒரு வாரம் தங்கப் போன இடத்தில் பார்த்த மீனா பற்றிய வர்ணனை, மீனாவைப் பார்க்காமலே திருமணத்தை மறுத்த சேது, கொரோனாவால் இறந்த மாமாவின் இறப்பைக் கேட்கப் போவதாய் காரணம் சொல்லி விட்ட குறை தொட்ட குறையாய் மனதில் கிடந்த காதல் என்று ஒரு மெலிதான உணர்வுப் போராட்டம் இழையோடிக் கிடக்கிறது.
ஊர்ச்சேவகம்
ஊர்ச்சேவகம் (சலவைத் தொழில்) செய்யற அப்பா, அம்மாவிற்குப் பிறந்த சுந்தரம் நகரத்துக்கு வந்து இஸ்திரி வண்டி போட்டு பிழைக்கிற கதை. ஊரில் இருந்த போது அவர்களுக்குக் கிடைத்த அவமானமும் நகரத்துல வந்து பிழைக்கிற போது கிடைத்த மரியாதையையும் ஒப்பிட்டு கீழே உள்ள வரிகளை எழுதியிருப்பாரு எழுத்தாளர்.
சிறுவர்கள் மட்டுமல்லாது பெண்களும் பெரியவர்களும் நீன்னு ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. நீங்க, வாங்க, போங்க தான், எவ்வளவு பெரிய ஆபீசரும் மரியாதையாக அழைப்பது சுந்தரத்தை நிமிர்ந்து நடக்கச் செய்தது. தன்மேல் பின்னிப்படர்ந்திருந்த தொழ்வுமனப்பான்மைக் கொடிகள் ஒவ்வொன்றாய் அறுபட்டுக் கீழே விழுந்தன. இந்த உலகத்தில் சக மனிதர்கள் போலத் தானும் மனிதன் தான் என்று இது நாள் வரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இங்கு வந்த பின் தான் புதிதாய்ப் பிறந்தது போன்ற ஒரு நம்பிக்கை மனதிற்குள் பிறந்தது, தெருவிற்குள் தலைநிமிர்ந்து நடப்பதே ஒரு விதக் கூச்சத்தை ஏற்படுத்தியது. சகமனிதனாகக் கலக்கவே கொஞ்ச நாள் ஆனது.
இதைப்படிக்கிற போது சாதி ஒழிப்பிற்கு நகர்மயமாதலே தீர்வு என்று சொன்ன அம்பேத்கரின் வார்த்தைகள் நெஞ்சில் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
கதை கொரோனா பெருந்தொற்றால் அன்றாடங் காய்ச்சிகளாக இருந்த தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வில் எவ்வாறு தீராத் துயராய் அமைந்தது என்பதை இந்தக் கதை விளக்கிச் சொல்கிறது.
சம்சாரித்தனம்
கிராமத்தில விவசாயம் செய்து பிழைத்த ஒருவர் (அழகர்சாமி) லாரித் தொழிலுக்கு மாறியபின் குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் வழியில் தன் குழந்தைகள் தெரியாமல் ஒரு புஞ்சைக் காட்டில் பறித்து வந்த சோளத்தட்டைகளுக்காய் நெஞ்சம் பதைபதைத்துக் கிடந்து புஞ்சைக்காட்டின் சொந்தக்காரர் வரும் வரை காத்திருந்து நட்ட ஈடு கொடுக்கக் காத்திருக்கும் நொடிகளே கதை. புஞ்சைக் காட்டின் சொந்தக்காரரோ குழந்தைகள் செய்த தவற்றை பெருந்தன்மையாய் வெள்ளந்தியாய் ஏற்றுக்கொண்டதோடு கதை முடிகிறது.
விதிவிலக்கல்ல அப்பாவும்
ஒரு அப்பா தான் ஆசை ஆசையாய் வளர்த்த மகளைக் கல்யாணம் செய்து கொடுக்கும் போது மகளிடம் நடக்கும் மனப்போராட்டங்களை வழக்கமான சொலவடைகளின் கிண்டல் கேலியோடு கலந்து கொடுத்திருக்கிறார். ஐந்தறிவுள்ள ஒரு உயிரை வளர்த்துப் பலிகொடுத்து விருந்து படைக்கும் செயலோடு ஒப்பிட்டு ஒரு மகளின் திருமணத்தை விவரித்துள்ளார். ஒரு இயல்பான கதை.
என்ன சொல்லவோ
ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அந்தப் பள்ளியின் செயலாளரின் அழைப்பிற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று பதைபதைப்பாக இருக்கும் நிமிடங்களையே கதையாய் மாற்றியிருக்கிறார். ஆசிரியர்களில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே ஊதியமாய் இருந்தாலும் பள்ளி அளவிலான நிர்வாகத்தில் பெரும் வேறுபாடு இருக்கும். இது அப்படிப்பட்ட ஒரு வித்தியாசத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பிசகு
இந்தக் கதை பூரிதக்குஞ்சலத்தின் இன்னொரு பதிப்பு எனலாம். அங்கு ஒரு ஆண் பெண்ணைத் தவற விட்டுப் பின்னர் வருந்தும் நிகழ்வு. அங்கே சேது – மீனா. இக்கதையில் லட்சுமி – வெள்சை்சாமி. இக்கதையில் நிறம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக லெட்சுமி வெள்ளைச்சாமியை இழந்த கதை. இரண்டுமே ஒரே இரகம் தான்.
இராசகுமாரன்
அம்மாவை விட்டு அப்பா ஓடிப்போன ஒரு குடும்பத்தில் கருப்பாகவும் சற்று குண்டாகவும் இருக்கும் ஒரு முதிர் கன்னியின் கதை. அம்மாவின் ஆற்றாமையின் காரணமாக வெளிப்படும் புலம்பல்களைக் கேட்டுக்கேட்டு மரத்துப்போன ஒரு பெண்ணிற்குள் இருக்கும் தன் சுயம் பற்றிய கழிவிரக்கம் எவ்வாறு தன்னை நாடி வரும் ஒருவனிடம் தன்னை இழக்கக்காரணமாகிறது என்பதை அந்தப் பெண்ணின் நிலையிலிருந்து கூறியுள்ளார்.
சக்தியை நோக்க
ஒரு கணவனின் புலம்பல். இங்கு பிரச்சனை அதீத பக்தி. மனைவி வீட்டிலேயே பூஜை அறையில் செய்யும் அலப்பறைகள். இன்று நிறைய குடும்பங்களில் இது வாடிக்கையாகி விட்டது. வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமி, ஒவ்வொரு விரதம் னு. வந்தவர்களை வா என்று சொல்ல முடியாத அளவிற்கு பூஜை சமாச்சாரங்களில் இந்தக் கதையின் போக்கு தன்னை விட வயதில் மூத்த இல்லறத்தான்களிடம் தனது நிலையினை சுய பச்சாதாபத்தோடு புலம்பும் விதமாக அமைந்துள்ளது. (ஆமாம். ஒரு சந்தேகம். அந்தப் பாடல் சஷ்டியை நோக்கவா? சக்தியை நோக்கவா?)
மந்தைப்பிஞ்சை
இந்தச் சிறுகதையும் ஏமிலாந்தி சிறுகதையில் வாழ்ந்த மாணிக்கம் அண்ணாச்சி போன்ற ஒரு மளிகைக் கடை முதலாளியின் வாழ்ந்து கெட்ட கதையாகவே உள்ளது. ஏமிலாந்தியில் மாணிக்கம் அண்ணாச்சியை துரோகம் செய்தது முத்தையாங்கற சமையல் காண்ட்ராக்டர். இதிலோ முதலாளி பெற்ற பிள்ளைகளிடமே தன் காடு கரை எல்லாத்தையும் இழந்து விடுகிறார். தன் கணவரை முதலாளி என்று நீண்ட நாள்களுக்குப் பின் கேட்கும் மனைவிக்குக் கிடைக்கும் பெருமித உணர்வு கீழ்க்கண்ட வாக்கியங்களில் பொங்கிப் பிரவாகிக்கிறது.
“முதலாளி இருக்காரா?” என்ற கேள்விக்குப் பிறகான வரிகள்
“அந்தப் பெரியமனுசியின் மனதிற்குள் ரகசியமாய்ச் சந்தோசம் குடிகொண்தைப்போல் இருந்தது. அந்தத் தள்ளாட்டம் மிகுந்த நடையிலும் லேசாய் ஒரு மிடுக்குத் தெரிந்தது.” இப்புத்தகத்தின் தலைப்பாகவும் இந்தக் கதையின் பெயரே இருக்கிறது.
கொட்டாப்புளி
பொதுவாக சினிமாவை ஒப்பிட்டு ஒரு எழுத்தாளரை விமர்சிக்கக் கூடாது என்பார்கள். இருப்பினும் திரையில் சில சிறைச்சாலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கதையிலும் அப்படி ஒரு சிறைக்கொடுமை நம் கண்முன் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதைத் தடுப்பதற்காக தன் கணவனையே கொட்டாப்புளியால் கொன்றது, குழந்தையின் பெயரை சம்பந்தப்படுத்தாமல் தண்டனையை அனுபவிப்பது என்று கதை செல்கிறது. இந்தக் கதை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கதை இதை இன்னும் நிறைய சிலாகித்துப் பேசலாம். நேரம் கருதி அப்படியே விட்டுச் செல்கிறேன்.
உடுக்கை இழந்தவன்
80 களில் வாழ்ந்த நிறையப் பேர் இப்படித்தான் இருந்தனர். இப்பொழுதும் கூட சிலர் இருக்கக்கூடும். தன் வீட்டு மனிதர்களின் சுதந்திரத்தைத் தன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். கருத்தப்பாண்டிக்குக் கிடைத்த நண்பர் பிச்சுமணி இப்படியான ஒரு மனநிலையைத் தான் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் தன் நண்பருக்கும் கடத்தி விடுகிறார். பிச்சுமணியின் மரண நாளில் அந்த வீடு அவரின் மரணத்தை எதிர்கொள்ளும் விதத்தில் கருத்தப்பாண்டி விழித்துக் கொள்கிறார். தன் இயல்பை மாற்றிக் கொண்டு மனைவி, குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தொடங்குவதாய் கதை முடிகிறது.
வாழ்ந்தவர்கள்
இக்கதையும் 60, 70, 80 களில் பிறந்தவர்கள் அனுபவித்த ஒன்றாகவே இருக்கும். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் உள்ள ஊர்களில் ராஜாக்களைப் போல் வாழ்ந்த பெருந்தனக்காரர்கள் பின்னர் தாங்கள் வாழ்ந்த அடையாளங்களை இழந்து பெருநகரங்களில் தங்கள் பிழைப்புக்காக பெரிய நிறுவனங்களில் ஒரு வேலையாளாகப் பணியாற்றி தங்கள் பிழைப்பினை நடத்திச் செல்லப்பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். அவ்வாறானவர்கள் தங்கள் ஊர் மக்கள் கண்களில் அடையாளப்படுவதைத் தவிர்க்கவே நினைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தக் கதை விவரிக்கிறது. மனிதர்களின் சுயபச்சாதாப உணர்வு இக்கதையில் வெளிப்படுகிறது.
ஒரு ஒரு விமர்சனம் ஒரு தொகுப்பிற்குள் ஒரே சாயலில் இரண்டு கதைகளைத் தவிர்த்திருக்கலாம்.
நூல் அறிமுகம் எழுதியவர் :
நா. ரெ. மகாலிங்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.