நூல் அறிமுகம்: மந்தைப்பிஞ்சை
மண்வாச மனிதர்கள்
– பா. கெஜலட்சுமி
தனி மனிதனின் அனுபவங்கள் படைப்பாகும் போதுதான், வாழ்க்கையின் மீதான மாய பிம்பம், சிலருக்கு உடையும்; பலருக்கு நாமும் கரை சேர்ந்துவிடலாமென நம்பிக்கையூட்டும்; பெரும்பாலோருக்கு, தமது மனதின் ஆழத்திலுள்ள தாமே கண்டிராத பக்கங்களைக் காண்பது போல பரவசமூட்டும். குரலற்ற மனிதர்களின் வாழ்க்கை, நிலத்தின் அழகு, அதிலிருந்து பெருகும் பண்பாட்டு வெளி என வாழ்வு குறித்த மேடு பள்ளங்கள் இன்னின்னவாக இருக்கின்றன என்று பிரச்சாரத் தன்மையில்லாத, பக்கச் சார்பற்ற நிதர்சனத்தைப் பேசுவதாக, தொகுப்பிலுள்ள இருபது கதைகளும் அமைந்திருக்கின்றன. வாசகனைச் சொற்களோடு தொடர்ந்து வரச்செய்யும் வட்டார வழக்கு, கதைகளுக்கு வலு சேர்க்கிறது.
தற்போது, அறமென்பதே பொருள் மதிப்பீட்டின் அடிப்படையில் உருவாகிறது. முதலாளித்துவ மதிப்பீட்டில், அதன் அதிகாரம் சார்ந்த அறமே அறமாகக் கருதும் தலைமுறைக்கு, அறவிழுமியத்தை வெளிச்சமிடும் கதையாக ‘சம்சாரித்தனம்’ களிப்பூட்டுகிறது. கரிசல் காட்டில் மட்டுமே இருக்கும் சில பழக்க வழக்கங்களைக் கதையில் பட்டியலிடும்போது, இயல்பு வாழ்க்கையிலே நம் முன்னோர்கள் கட்டமைத்த அறக் கோட்பாடுகள் புலப்படுகின்றன. அவற்றுள் சில, “கம்மங்கதிர் புனையலின்போது காளை மாடுகள் எவ்வளவுதான் தின்னாலும் அவற்றிற்கு வாக்கூடு போடக்கூடாது; களத்தில் செருப்புடன் நடக்கக் கூடாது”, போன்றவையாகும். குடும்பத்தோடு குலதெய்வ வழிபாட்டிற்குப் பயணமாகும் அழகர்சாமி, பசுமையான நிலப்பரப்பைக் கண்டதும், உணவருந்தக் காரை அங்கே நிறுத்தி, உண்டு களைப்பாறுகிறார். குழந்தைகள் ஆர்வமிகுதியில் நன்றாக முற்றிய சோளக் கதிர்களைகத் தம் பிஞ்சுக் கைகள் கொள்ளுமளவிற்கு ஒடித்து விளையாடுகின்றனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அழகர்சாமி, பட்டப்படிப்பு படித்து விட்டு தங்கநாற்கரச் சாலைக்குத் தன் விவசாய நிலத்தைத் தாரை வார்த்து, நான்கு லாரிக்கு முதலாளியானவர். பிள்ளைகளின் இந்த செயலைக் கடுமையாக கண்டித்ததைப் பார்த்த அவர் மனைவி, யாரேனும் வருவதற்குள் போய்விடலாமென அவசரப்படுத்துகிறார். ஆனால், ஈரங்கசிந்த நிலம் போன்ற அவர் மனம், புஞ்சைக்காரரைப் பார்த்து நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று ஏங்குகிறது. உங்களுக்குச் சளைத்தவர் நானல்ல என்பதுபோல், அங்கு வந்த நில உரிமையாளர், “குழந்தைகளா! இன்னும் வேணும்னாலும் போயி பறிச்சுக்குங்க. நல்லா சுட்டுச் சாப்பிடுங்க. இதுக்குப் போயி பணம் அது இதுன்னுக்கிட்டு… ” . இப்படியான அன்பைப் பரிமாறும் உரையாடல்களை உள்ளடக்கிய கதைகளை இளந்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்தால், ஊடகங்களின் தொடர்பறுந்து, மனிதத்தின் சிலிர்ப்பினுள் சிக்கிக் கொள்வர்.
பகடியாக, ஒரு தனியார் ஆசிரியரின் பயத்துடனான புலம்பலாகவும், தன்னிலை விளக்கமாகவும் விரியும் ‘என்ன சொல்லவோ’ கதையில், தற்கால தனியார் பள்ளியின் சூழல், தவறு செய்யும் பிள்ளையை அடித்ததால், செகரட்டரியால் தண்டிக்கப்பட்ட ஈஸ்வரி டீச்சர், பிள்ளைகள் எந்தெந்த விளையாட்டில் திறமை பெற்றவர்கள் என கண்டறிந்து, இருநூறு சதவிகிதம் உழைக்கும் சுப்பையா சாருக்கு நிர்வாகம் ஏற்படுத்திய களங்கமென அருவியாய் நிகழ்வுகளின் வீழ்ச்சிகளினூடே வரும் நச் வரிகள், “ஆசிரியரால் கண்டிக்கப்படாதவர்கள் பிற்காலத்தில் சமுதாயத்தால் தண்டிக்கப்படுவார்கள்”. கல்வி, ஒருவரின் வாழ்நாள் செயற்பாடு. மாணவர்களுக்குப் பள்ளியில் கற்பிக்கும் போது, உளவியல், உடலியல், சூழலியல், அறிவியலென அனைத்தும் அழகியலோடு இணைக்க வேண்டும். பெருந்தரவு, ஊடகங்களில் விரவி, உலகைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. எது பொய், எது உண்மை என பகுத்தறியும் திறனை உருவாக்க பள்ளியிலேயே வாசிப்பை இயல்பாக்கிடுவது இன்றியமையாததாகும். மாறாக, விரிந்து, பரந்து, விசாலமான மனமிருக்க வேண்டிய ஆசிரியர்கள், பாடத்திட்டத்தில் சுருங்கி, உழைக்க சலித்து, கருகி முடை நாற்றமெடுக்கும் மனங்களாக திரிந்திருப்பதைப் படம்பிடித்து காட்சிப்படுத்துகிறது, ‘பெரும்போட்டுக்காரர்கள்’ கதை.
இரத்த உறவைத் தவிர்த்து, வயது வித்தியாசமின்றி, ‘அண்ணே, யக்கா’ என நாம் விளிப்பதும், நம்மை விளிப்பவர்களும் ஒவ்வொரு தெருக்கோடியிலும் மளிகைக் கடை, காய்கறி கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளும், அக்காக்களும்தான். குடும்ப உறவுகளிடம் பகிர முடியாத துக்கங்களையும், ஏக்கங்களையும் இருமுனைகளிலிருந்தும் நம்பிக்கையோடு பரிமாறலாம்.அறஞ்சார்ந்து, இவர்கள் செய்யும் வியாபாரத்தையும், அடுத்த தலைமுறை தொழில் தெரியாமல், தகப்பன் சேமித்த நற்பெயரை மட்டுமல்லாமல், தங்கள் வாழ்வில் தடம் புரளும் புள்ளியையும் பேசும் ‘வாழ்ந்தவர்கள்’, எண்பதுகளில் பிறந்தவர்களின் நினைவலைகளை மீட்டெடுக்கும். போலவே, வாழ்க்கை முரணின் நிதர்சனத்தையும் அலசுகிறது, ‘ஏமிலாந்தி’. தலைப்பின் பொருள், ‘கவனக்குறைவாய் நடந்து கொள்ளும் நபர்’ என இறுதியில் தரப்பட்டுள்ளது. மளிகைக் கடை வைத்து நேர்மையாகத் தொழில் செய்யும் மாணிக்கத்தை ஏமாற்றி, சமையல் காண்ட்ராக்ட் செய்யும் முத்தையா நோய்வாய்ப்பட்டாலும், ஊரில் அமோகமாக வாழ்வதும், ஏமாந்த மாணிக்கத்தின் குடும்பம் நொடிந்து போவதும் பதிவு செய்து, வாழ்க்கைக் குறித்து, வாசக சுதந்திரத்தையும், கதையாளரின் கருத்தையும் சமமாக வைத்துப் பார்க்கும் வாய்ப்பினை நல்கியிருக்கிறது.
‘முறிமுக்கால்’, ‘தசகூலி’, ‘மந்தைப் பிஞ்சை’ – இயற்கை பொய்த்ததால் விவசாயிக்கு ஏற்படும் சிறிய நஷ்டத்தை, பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். நுகர்வுச் சந்தைக்காக இயற்கை ஆதாரங்கள் அனைத்தும், அவசர அவசரமாக நிர்மூலமாக்கப்படுகிறது. பெருந்தொழில் உற்பத்தி, நுகர்வு போதை. பூச்சிக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை உயிர்ப்புள்ள நிலங்களை எப்படி காவு வாங்குகிறது என்பதை இக்கதைகள் விரிவாக விமர்சிக்கிறது. “மண்ணுக்குத் தகுந்த விதை விதைத்து எடுத்துக்கிட்டு இருந்த இடத்தில இப்ப விதைக்குத் தகுந்தவாறு மண்ணை மாத்திக்கிட்டு இருக்கோம். வருசாவருசம் பூமியில போட்டு நல்லது செய்யுற நுண்ணுயிர்களை எல்லாம் கொன்னுட்டு நாம பூமியை மலடாக்குறோமுன்னு யாருக்கும் தெரிய மாட்டேங்குது.”
“மதங்கள் ஒவ்வொருவரின் தனி வளர்ச்சியைத் தடைப்படுத்துவதால், நன்மை செய்வதை விட நூறு மடங்கு தீமை செய்கின்றன. ” – விவேகானந்தர். வாழ்வின் ஒரு பகுதியான, ஆன்மீகத்தை,(ஒழுக்கம்) மதங்களே நம் இயல்பிலிருந்து விலக்கி, தனி பிரிவாக அனுசரித்து, அதை கடைப்பிடித்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற பாதையை அடிகோலியிருக்கிறது. ஆழமான கருத்தியலை, பேச்சு வழக்கில் அழகாக ஆரம்பித்து எளிமையாகக் கொண்டு செல்கிறார்’ ‘சக்தியை நோக்க’ கதையில். தலைப்பிற்கும், கதைக்கும் சம்பந்தமில்லை என ஆரம்பிக்கும் ஆசிரியர், பூடகமாக சினிமாக்காரர்களை, ‘அவங்கதான் படத்துக்குப் பேரு வக்கிறதுக்குள்ள இது ஏம்பேரு, அது ஒம்பேருன்னு சண்டை போட்டு நாறிக்கிட்டு இருப்பாங்க.” என பகடி செய்கிறார். காந்தி பேரை வைத்திருப்பவர்களெல்லாம், குடிகாரனாக இருப்பது போல, என தொடங்கி இராமசாமியிடம் தன்னிலை விளக்கம் கொடுத்து, தன் மனைவி கால வரையற்று சாமி கும்பிடுவதால், பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளின் பசியைக் கூட போக்காமலிருக்கும் நிலையை ஆற்றாமையாக முன்வைக்கிறார். உச்சமாக, தன் தங்கையின் கணவன், பிள்ளைகளின் காது குத்துதல் விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்தபோது, வாவென்றுகூட வரவேற்காமல், சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் பொறுத்து, பொறுத்து பார்த்து, இரண்டு முறை செறுமியம் கவனிக்கப்படாததால், தம் வருகை பிடிக்கவில்லையோ என சந்தேகித்து, அழைப்பிதழை வைத்துவிட்டு சென்றுவிடுகிறார். இப்படியெல்லாமா நடக்குமென்பது பற்றியோ, கதையின் முடிவைப் பற்றியோ நாம் பேசப் போவதில்லை. சொல்லவரும் கருத்தியலின் ஆழத்தைப் பொறுத்து, புனைவைக் கூட்ட வேண்டியிருக்கிறதையும், எளிய நிகழ்வின் மூலம் தடம் மாறும் சிந்தனையைக் கவனிக்க சொல்லி கூர் தீட்டுகிறார் நூலாசிரியர்.’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’, கணவன் அமைவது கூடத்தான். வாழ்நாள் துணைச் சரியாக அமைய பெறாததால், முன் முடிவுகளால், தாங்கள் தேர்ந்தெடுக்கத் தவறிய நபர்களை எண்ணி மருகும் பாத்திரங்களாக உலா வருகின்றனர், ‘பூரிதக்குஞ்சலம்’ சேதுவும், ‘பிசகு’ மீனாவும்.
எல்லா கதைகளும், இனிய, எளிய மொழிநடையால், முதல் பத்தியிலேயே வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. நகைச்சுவையும், கிண்டலும் உரையாடலில் ஊடாடி, வாசகர் நின்று, நிதானித்து, தனக்கான களத்தைக் கண்டறிய ஏதுவான வாய்ப்பு வழங்கியிருக்கிறது. உணர்வுகளை, உணர்ச்சிகளைப் பிரித்து, அவற்றின் தோற்றுவாய் சூழல்களை ஊடுருவி நுட்பமாக வெளிச்சப்படுத்துகிறது இத்தொகுப்பு. “சிறுகதை வாசிப்பு கடுகுக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஏழு கடல்களைக் கண்டறியும் மாயம்” – கவிஞர் அ. வெண்ணிலாவின் இக்கூற்றுக்கேற்ப, அவரவர் வாசிப்பின் ஆழத்தைக் பொறுத்து, பல மாயங்களைக் கண்டடைந்து தெளியலாம். மனிதர்களுடனேயே அவர்தம் அனைத்து நினைவுகளும் அழிந்து போவதில்லை. அவை எழுத்துகளின் வழி படைப்புகளாக உருப்பெற்று வாசகர்களைப் புதுப்பிக்கின்றன. நன்றி!
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வரும் இந்நூலாசிரியர், கா. சி. தமிழ்க் குமரன், தூத்துக்குடி மாவட்டம் புதூருக்கு அருகே சென்னம்பட்டியில் பிறந்தவர். விலங்கியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தைப் பெற்ற இவர், ஆசிரியர் பயிற்சியும் முடித்து, தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக எழுத்தராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுதி, ‘பொலையாட்டு” பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசையும், ‘ஊமைத்துயரம்’ நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதையும் பெற்றுள்ளது.
நூலின் தகவல்கள்:
மந்தைப்பிஞ்சை,
கா.சி.தமிழ்க் குமரன்,
சிறுகதைத் தொகுப்பு,
சிறுவாணி வாசகர் மையத்துக்காக,
பவித்ரா பதிப்பகம்,
2024,
174 பக்கங்கள்,
ரூ 180/-
நூல் அறிமுகம் எழுதியவர்:
பா. கெஜலட்சுமி
சென்னை – 19.
*****************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

