Manthira Coat - Poongodi BalaMurugan | மந்திரக்கோட் - பூங்கொடி பாலமுருகன்

மனிதர்களின் வாழ்வில் மறக்க முடியாத பருவமாகவும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் எல்லோரது நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்லும் எண்ணத்தைத் தூண்டும் பருவமாகவும் அமைந்திருக்கும் குழந்தைப் பருவத்தை நமக்குள் அறிமுகப்படுத்தும் உலக திரைப்படங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல் இது.

கவலைகள் மறந்து கற்பனை உலகில் கொடி கட்டிப் பறக்கும் சிறுவர்களின் மனங்களுக்குள் எப்போதும் வண்ணக் கனவுகளே விரிகின்றன. அவர்களின் உலகம் ஆனந்தமயமானது. அன்பு நிறைந்தது. கருணையினாலும் கனிவினாலும் தாம் எதிர்ப்படும் எல்லோரிடமும் நேசத்தை விதைப்பது; விசாலமானது. அவர்களின் உலகத்திற்குள் அடிதடிகள் இல்லை; போட்டிகள் இல்லை; பொறாமைகள் இல்லை. அத்தகு குழந்தைகளின் எண்ணங்களை மேலும் விரிவுபடுத்தவும் அறம் சார்ந்த சிந்தனைகளையும் தன்னம்பிக்கையையும் விதைத்து சிறந்த குணநலன்களுடனும் பண்புகளுடனும் புதியதொரு உலகத்தை படைத்திட சிறுவர்களுக்கான வழிகாட்டுதல் மிக மிக அவசியம்.

இந்தி குஜராத்தி மலையாளம் ஈரானிய மொழி என உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான சிறார் திரைப்படங்கள் 13 பற்றிய விளக்கமும் விவரிப்பும் அடங்கிய இத்தொகுப்பில் அன்பும் கருணையும் மனித நேயமும் விசாலப் பார்வையும் விளைந்து நிற்கின்றன. கலையின் வழியே ஒவ்வொரு மனிதனும் தனது மனதிற்குள் முளைத்திடும் சிந்தனைகளை பிற மனங்களுக்கு கடத்திட விளைகிறான். அவனுக்கு கலை சிறந்ததொரு தளமாக அமைந்து உதவி செய்கிறது. அவ்வகையில் வாசிப்பை விட காட்சிகள் காண்போரின் மனதில் உடனடியான தாக்கத்தையும் சிறந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. நாடகங்களைத் தாண்டி திரைப்படங்கள் இன்று எல்லோர் மனதிற்குள்ளும் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்கின்றன. ஆனால் இன்றைய வளர்ந்து வரும் அறிவியலின் வேகமான வளர்ச்சியினாலும் பொறுமை சகிப்புத்தன்மை போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வரும் தலைமுறையாலும் படங்களில் கூட வன்முறையும் ஆபாசமும் அதிகரித்து வரும் சூழலில் சிறார்களுக்கென திரைப்படங்கள் வருகை சற்று குறைவாகவே உள்ளன.

சிறார்களை வைத்து திரைப்படம் எடுப்பதும் சிறார்களுக்காக திரைப்படம் எடுப்பதும் வேறு வேறு. சிறார்கள் மணங்களை முழுமையாக உணர்ந்து கொள்ளும் இயக்குனர்களே சிறார் திரைப்படங்களை சிறப்பாக எடுக்கத் துணிகின்றனர். அந்த வகையில் இந்த நூலில் உள்ள 13 திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் நம்மை முழுமையாக உணர வைப்பது குழந்தைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் குழந்தைத்தனமும் குறும்புத்தனமும் அதன் வழியே அவர்கள் காண்பவரிடம் விதைத்துச் செல்லும் ஆனந்த அலைகளும் நேசத்தருணங்களுமே.

கணிதப் பாடத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக கல்வியை வெறுக்கும் சிறுவனிடம் வீட்டுப்பாடத்தை தானே செய்யும் மந்திரப் பேனா கிடைத்தால் எப்படி இருக்கும்? அதை வைத்து தனக்கான தேவைகளை மட்டுமல்ல தனது நண்பர்களுக்கான நேசத்தையும் அவர்களுக்கான உணர்வுகளையும் புரிந்து கொண்டு கல்வியின் மகத்துவத்தை அறியத் துவங்கும் மாணவனின் மனதினை வெகுவாக பிரதிபலிக்கிறது பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பென் என்ற மலையாள திரைப்படம்.

மாணவர்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்டு அவர்களுக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும் ஆசிரியர்களே மாணவர்களில் மனதில் பதிகின்றனர். அதேபோல தம்மை நாடிவரும் குழந்தைகளை தம் உயரத்தில் இருந்து கொண்டு பார்ப்பதை விட அவர்களுக்கு ஏற்றார் போல் தம்மை சுருக்கி அவர்களின் உலகத்தில் சென்று பார்க்கும் ஆசிரியர்களே குழந்தைகளின் உளவியலை நன்கு அறிந்து கொண்டு அவர்களைச் சரியாக வழிநடத்திட உதவுகிறது என்பதை இப்படம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

பெற்றோர் இல்லாமல் தாய் மாமாவிடம் வளரும் சிறுவன் அவரது எல்லா விதமான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான். ஆனால் எந்த ஒரு இடத்திலும் தனது இயலாமையை வலியை வேதனையை வெளிப்படுத்தாமல் காணும் எல்லோரிடமும் சிரிக்க சிரிக்க விளையாட்டாகப் பேசி தனக்கான கற்பனை உலகத்தை எல்லோர் மனங்களிலும் விதைத்துச் செல்கிறது அக்குழந்தையின் அன்பு மனம். தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தி மற்றவர்களிடம் ஆறுதல் தேட விரும்பாமல் தனது நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் மட்டுமே தரும் ஸ்டான்லி வழியாக குழந்தைகளின் அக உலகத்தை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது ஸ்டேன்லி கா டுப்பா என்ற ஹிந்தி திரைப்படம்.

விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் சிறுவன் பாட்டியின் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணரும் தருணத்தில் அவர்களுக்குள் ஏற்படுகிறது பிரிவு. பாட்டியின் அன்பை முழுமையாக உணரத் துவங்கிய சிறுவனுக்குள் அன்பு எவ்விதமான மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறுகிறது த வே ஹோம் என்ற கொரியத் திரைப்படம்.

இயற்கை மற்றும் தொழில்நுட்பத்துடன் மனித குலத்தின் உறவு இயற்கையான மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளால் வரும் ஆரோக்கியம் நிறைந்த அமைதியான வாழ்க்கை இவற்றிலிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள ஏராளமான கருப்பொருட்கள் உள்ளன என்பதை எடுத்துக் கூறுகிறது மை நெய்பர் டோட்டோரோ என்ற ஜப்பானின் மொழி திரைப்படம்.

குழந்தைகளை அச்சுறுத்தியும் கண்டித்தும் அவர்களின் போக்கை மாற்றி விட முடியாது. அவர்களது கற்றல் திறனை அதிகரிப்பதற்கும் அவர்களுக்குள் விளையும் கற்பனைகளை செழுமைப்படுத்தவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அன்பையும் நேசத்தையும் மட்டுமே கைக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு குழந்தையும் தனது சக்தியை விரயமாக்கி எதிர்மறை எண்ணங்களையே அதிகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து விடும். தேர்வின் மீதான பயத்தினாலும் பெற்றோரின் மீதான பயத்தினாலும் கல்வியை முழுமையாகப் பெறாத மூன்று மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசாகப் பெற்ற பொம்மைக்கு பாடம் நடத்தினால் அவர்களது எல்லா குறைகளும் தீரும் என்ற பரிசளித்தவரின் வேண்டுகோளை ஏற்று மூவரும் படிக்கத் துவங்குகின்றனர். அதன் வழியே கல்வியை முழுமையாக உணரத் துவங்குகின்றனர். குழந்தைகளின் மனங்களில் அன்பும் நேசமுமே அவர்களது பாதைகளை முழுமையாக நிர்ணயிக்கின்றன என்பதை அருமையாக எடுத்துச் சொல்கிறது டி ஹச் ஹச் என்ற குஜராத்தி மொழி படம்.

எல்லாம் இருக்கும் குழந்தைகளுக்கும் எந்த வசதியும் இல்லாமல் அனாதையாய் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும் நட்பும் நேசமும் எப்படி அவர்களது வாழ்வை மாற்றுகின்றன என்பதையும் அவர்களின் நட்பு தொடர்கிறதா என்பதையும் குறும்புத்தனமும் சேட்டைகளும் நிறைந்த குழந்தைகளின் அப்பாவித்தனமான பக்கங்களையும் அன்பான நேர்மையான செயல்களையும் அழகாக படம் பிடித்து காட்டுகிறது சில்லார் பார்ட்டி என்ற ஹிந்தி திரைப்படம்.

எந்த நேரமும், இல்லை என்று சொல்லும் பெற்றோர்களை விட தேவையறிந்து ஆம் சொல்லும் பெற்றோர்களின் மூலம் வளரும் குழந்தைகள் குடும்பத்தின் போக்கை முழுமையாக உணர்ந்து கொண்டு தமது வாழ்க்கை பாதையையும் தெளிவாக தீர்மானிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது எஸ் டே என்ற ஆங்கில மொழி படம்.

அடித்துட்டு மக்களுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களது வாழ்வை மிகுந்த உயரத்திற்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான ஆயுதம் கல்வி.

ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் முழுமையாக கிடைப்பதில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் ராஜாவின் மகனுக்கும் வீதியில் டீ கடையில் வேலை செய்யும் ஏழை சிறுவனுக்கும் இடையே ஏற்படும் நட்பு எவ்விதம் அவர்களுக்கு முழுமையான கல்வியை பெற்று தருகிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது ஐ அம் கலாம் என்ற ஹிந்தி மொழி படம்.

பெற்றோரை இழந்த ஏழை சிறுவனுக்கு அதிர்ஷ்டமாக கிடைக்கிறது சிவப்பு நிற கோட். அதில் அவன் கைவிடும் போதெல்லாம் காசு கிடைக்கிறது. அதை வைத்து தனது நண்பர்களுக்கும் இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்கும் நிறைய உதவிகள் செய்கிறான். ஒரு கட்டத்தில் அந்த சிவப்பு நிற கோட் அவனுக்கு மிகப்பெரிய துன்பத்தை விளைவிக்கிறது. இறுதியில் அந்த கோட் என்ன ஆனது? சிறுவன் தனது மகிழ்ச்சியான தருணங்களை எப்படி மீண்டும் பெற்றான் ? என்பதை விவரிக்கிறது கராமட்டி கோட் என்ற ஹிந்தி திரைப்படம்.

பொழுதுபோக்கு அம்சங்களும் கற்பனைத் திறனும் நிறைந்த கலையில் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ள திரைப்படங்கள் வழியாக காண்போரின் மனதிற்குள் புதுப்புது கற்பனை ஆற்றலை வளர வைக்கவும் அவரவர் வாழ்க்கைக்கான சிறப்பான பாதையை கட்டமைக்கவும் திரைப்படங்கள் உதவி செய்தல் அவசியம். சிறார் திரைப்படங்களும் அவ்வகையில் அடுத்த தலைமுறையினரின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதற்கு பேருதவி செய்கின்றன. அப்படியான திரைப்படங்கள் பற்றிய அழகானதொரு அறிமுகத்தையும் அன்பையும் நமக்குள் விதைக்கிறது மந்திரக்கோட் நூல்..

 

நூலின் தகவல்கள் 

நூல் : மந்திரக்கோட் (சிறார் திரைப்படங்கள் தொகுப்பு)

ஆசிரியர் பூங்கொடி பாலமுருகன்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2022

பக்கம் 88

விலை : ரூ.80

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *