நூல் அறிமுகம்: *மண்டோ படைப்புகள்* – பிரபாகரன்புத்தகம்- மண்ட்டோ படைப்புகள்
ஆசிரியர்- சாதத் ஹசன் மண்ட்டோ, தமிழில்: ராமாநுஜம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கம்:584 
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mantopadaippukal/

இத்தொகுப்பில் இடம்பெற்ற “காலித்” என்ற முதல் சிறுகதையே என்னுள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தக் கதை, அவர் தன்னுடைய முதல் குழந்தையை அதன் ஒரு வயதில் இழந்த வேதனையை அடிப்படையாய் வைத்து உருவாகியிருக்கலாம். கிட்டத்தட்ட கடந்த இரண்டு மூன்று மாதங்களாக “மண்ட்டோ” வுடன் தான் இருந்தேன். ஆம். அவரே என்னுடன் உரையாடிய உணர்வு தான் இருந்தது.. அவர் தன் எல்லாப் படைப்புகளிலும் மனிதர்களை மனிதர்களாகப் பார்த்துள்ளார். தன் கதாபாத்திரங்களை அவர்கள் மீது திணிக்கப்பட்ட எல்லா அடக்குமுறைகளையும் மீற வைத்துள்ளார்… குறிப்பாக பெண் உடல் சார்ந்த அடக்குமுறைகள், கலாச்சாரக் குறியீடுகள், மதம் சார்ந்த அடக்குமுறைகள் இவை எல்லாவற்றையும் மீற வைத்துள்ளார்..

விலைமாதுக்களை அவர்களின் உடலைத் தாண்டி அவர்களின் இதயத்தையும் அதிலுள்ள ஆசைகளையும் உணர்வுகளையும் பார்த்துள்ளார். இதன் வெளிப்பாடே “அவமானம், கருப்பு சல்வார், சாந்தி, நூறு விளக்குகளின் வெளிச்சம், மம்மி” போன்ற சிறுகதைகள். இவர்களைத் தங்கள் மீது கட்டப்பட்ட மரபான போலி முகமூடிகளைக் கழற்ற வைத்துள்ளார். அவர்கள் மீது சுமத்தப்பட்ட சிலுவை பாரங்களை நீக்கி அவர்களை இலகுவாக்கியுள்ளார். அதனாலையே ஆறு முறைகள் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது..

தன் காதலன், வேறொரு பெண்ணை பலாத்காரம் செய்தான் என்று அறிந்த பொழுது-அவர்கள் உடலுறவு கொண்டிருக்கும் பொழுது-அவனின் கழுத்தை அறுத்தப் பெண் (சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்), செத்துக் கொண்டிருக்கும் தன் நிர்வாண உடலை மறைக்க ஒரு சீக்கியனின் தலைப்பாகை பயன்படக் கூடாது என அதைத் தூக்கியெறிந்து நிர்வாணமாகவே செத்துப் போன “மோஸல்” (மோஸல்). இவர்கள் பெண்களின் வலிமையான ஆளுமைகளாக விளங்குகிறார்கள். இதில் “மோஸல்” கதையில் ‘த்ரிலோச்சன்’ என்ற ஒரு தீவிர சீக்கிய இளைஞனை, தன் காதலியைக் காப்பாற்றக் கூட தன் தலைப்பாகையைக் கழற்றாத இளைஞனை கதையின் முடிவில் அவனது தலைப்பாகையை கழற்ற வைத்துள்ளார் மண்ட்டோ.. இதன் மூலம் “மத” நம்பிக்கைகள் எல்லாம் “மனித” நலனிற்குப் பின்பு தான் என்ற அவரது நிலை தெளிவாகத் தெரிகிறது.. த்ரிலோச்சனை அவனது மத பாரத்திலிருந்து விடுவித்துள்ளார்.

Saadat Hasan Manto, the family man

சுதந்திரத்திற்காகவே என்றாலும் மனித உணர்வுகளை குழி தோண்டி புதைக்கும் “பாபுஜி” யின் ஆசிரமத்தையும் அவரது கொள்கையையும் கடுமையாக விமர்சிக்கிறார். (சுதந்திரத்திற்காக)

“திற” என்ற சிறுகதையில் மருத்துவரால் இறந்து விட்டதாக கூறப்பட்ட காணாமல் போன ஒரு பெண், “அந்த ஜன்னலைத் திற” என்ற சத்தம் கேட்டு அனிச்சையாக அவள் தன் சல்வார் நாடாவைக் கழற்றுவது அவளை பலாத்காரம் செய்தவர்களை பாதிக்கிறதோ இல்லையோ நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
நூர்ஜகான், நர்கீஸ், அசோக் குமார், ஷ்யாம், முகமது அலி ஜின்னா இவர்களைப் பற்றின நினைவோடைகள் மிகுந்த சுவாரஸ்யமாக படைக்கப்பட்டுள்ளது.. சினிமாத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கை அப்படித்தானே இருக்கும்.. காதல், திருமணம் போன்றவற்றின் மீது இவர் கொண்ட மதிப்பீடுகள் அவருக்கு குடும்ப வாழ்க்கையின் மீதிருந்த அவ நம்பிக்கையைக் காட்டுகிறது..

அங்கிள் சாம்க்கு எழுதிய எல்லாக் கடிதங்களிலும் அவர் தன் கூர்மையான அரசியல் அறிவை தனக்கே உறிய நய்யாண்டித் தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார். “ஹைட்ரஜன்” குண்டு தயாரித்து அதை ஒரு நகரத்தின் மீது வீசினால் கூடவே “ஆக்சிஜன்” குண்டையும் வீசி அந்த நகரை நீரினால் நிரப்புங்கள் என்கிறார்..
அவரைப் பற்றிய அவரது நண்பர்கள் எழுதிய ஹிப்டுல்லாக்கள் அத்தனையும் வேதனை கொள்ளச் செய்கின்றன. குடித்துக் குடித்தே அழிந்து போயுள்ளார். தான் குடிப்பது விஷம் தான் என்று அவருக்கே தெரிந்தாலும் அதிலிருந்து அவர் மீண்டு வர விரும்பவில்லை. அதற்கு காரணம் 1948 ல் தான் தேர்ந்தெடுத்த பாகிஸ்தானும் தன்னைக் கைவிட்டதாக இருக்கலாம். பெரும் பெரும் ஆபத்துகளிலிருந்து மீண்டு வந்தவர், நிஜமாகவே ஒரு நாள், தன் முழு வாழ்க்கையை வாழாமலே இறந்து போகிறார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை விரும்பாதவர். ஒரு லட்சம் இந்துக்களும் ஒரு லட்சம் இஸ்லாமியர்களும் இறந்ததாகச் சொல்லாதீர்கள்.. இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்ததாகச் சொல்லுங்கள் என ஆதங்கப்படுகிறார்..

நான் ஆபாச எழுத்தாளன் என்றால் அப்படியான ஆபாச எழுத்தை எனக்குள் உருவாக்கும் இந்தச் சமூக நிலையை முதலில் மாற்றுங்கள் என்கிறார். “மண்ட்டோ” வை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். நான் இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன். இப்போது மட்டும் “மண்ட்டோ” உயிரோடு இருந்திருந்தால் லாகூர்க்கே சென்று அவரைக் கட்டிப் பிடித்து ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் அவரை டேஃக் செய்திருப்பேன்.. ❤💚💙