கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் மனுதர்ம ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது – அருணன்
தஞ்சாவூரில், டிசம்பர் 4-7 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டை ஒட்டி நடபெற்ற வெறுப்பின் கொற்றம் வீழ்க என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து அருணன் ஆற்றிய உரையின் சாரம்:
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற வந்திருக்கக்கூடிய தலைவர்களே, பிரதிநிதித் தோழர்களே, உங்கள் உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவது மாநில மாநாடு மதுரையிலே 1975ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டிலே பங்கேற்றவன் என்ற முறையில் நானும் தோழர் எஸ் ஏ பெருமாளும் இந்த அரங்கத்தில் இருக்கின்றோம். என்னைப் பொறுத்தவரை அதற்காக இயற்கைக்கு நன்றி சொல்கிறேன். என்னோடு இணைந்து பயணம் செய்து இன்னும் சரியாகச் சொல்வதென்றால் என்னை ஒருவகையில் பாதுகாத்த என் இணையருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
1975ஆம் ஆண்டிலே நாங்கள் எல்லாம் மதுரையிலே கூடியபோது இன்று எழுந்திருக்கக்கூடிய இந்த மனுவாத மதவெறி பேரபாயம் என்பது அன்றைக்கு இல்லை. இந்த அளவுக்கு வெறுப்பு என்பது கொற்றமாக அரியணையிலே ஆட்சி அதிகாரத்திலே கொழுவிட்டிருக்கக்கூடிய சூழல் அன்றையதினம் இல்லை. மதவெறி கூடாது சாதி வெறி கூடாது இனவெறி கூடாது என்று பொதுவாக நாங்கள் பேசினோம். கொள்கை அறிக்கையிலும் கூட குறிப்பிட்டிருக்கிறோம். உண்மை. ஆனால் நாங்கள் அன்றைக்கு மனுவாத மதவெறி சிவில் அமைப்பாகிய ஆர்எஸ்எஸ் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றும், இன்றைக்குத் தொடர்ந்து 11 ஆண்டுகள் மோடி தலைமையிலே ஒன்றியத்திலே இந்த ஆட்சி இருக்கும் என்று நாங்கள் எண்ணிப்பார்த்ததில்லை. இதுதான் உண்மை.
நாம் எல்லாம் எதிர்பாராதவிதத்தில் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். அதுதான் வரலாறு. அப்படி ஒரு பேராபத்து இன்றையதினம் வந்திருக்கிறது. ஆகவேதான் இந்தக் கருத்தரங்கத்தின் தலைப்பு வெறுப்பின் கொற்றம் வீழ்க என்பதாகும். வெறுப்பு இன்றைக்கு ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறது. அது பாபர்மசூதிஇடிக்கப்பட்டு அந்த இடத்தில் அமைக்கப்பட்ட ராமர் கோவில் மீது காவி கொடியை ஏற்றி இருக்கிறது. காவி கொடியை ஏற்றி இந்த நாட்டின் பிரதமர் பேசி இருக்கிறார். தர்மக் கொடி ஏறிவிட்டது என்று பேசி இருக்கிறார். ஆக காவிதான் அவர்களுக்கு தர்மம். மனு தர்மம் என்று சொல்லாமல் தர்மம் என்று சொல்லிஇருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் மனுதர்மம்தான். மனு அதர்மம். அந்த அதர்மத்தினுடைய கொடியை அங்கே ஏற்றி இருக்கிறார்.
இந்த நிலையை 50 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இவருடைய குருநாதர் மோகன் பகவத், ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு விழாவில் பேசுகிறார், இந்தியாவும் இந்து மதமும் ஒன்றுதான் என்று பேசுகிறார். இந்த நாட்டை இந்து ராஷ்ட்ரம் என்று தனியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது நடப்பில் அவர்கள் இந்து ராஷ்ட்ரத்தை அதாவது மனு ராஷ்ட்ரத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள் அல்லது கொண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆர்எஸ்எஸ் தலைவருடைய ஒப்புதல் வாக்குமூலம்.
நீங்கள் மனுதர்மத்தைப் படித்துப்பார்த்தால் பிற மதத்தினர் மீது பிற வருணத்தினர் மீது எவ்வளவு வெறுப்பை அது ஏற்படுத்திஇருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த மனு ராஷ்ட்ரம் இங்கே வந்துவிட்டது நாங்கள் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். சாதாரணமான மக்களுக்கு கேட்பதற்கு இது ஆனந்தமாக இருக்கக்கூடும். அப்படியானால் நம் சகோதரர்களாக இருக்கக்கூடிய முஸ்லீம்கள், கிறித்தவர்கள், பார்சிகள் – இவர்கள் இந்தியர்கள் இல்லையா? இந்தியா என்றால் இந்துக்கள் மட்டும்தான் என்று இன்றைய ஆட்சியாளர்களின் குருபீடம் இன்றைக்கு கூறுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதைத்தான் நான் வேதனையோடு சொல்கிறேன்.
இதே மோகன் பகவத் இரண்டு நாட்கள் கழித்து வேறொரு கருத்தை சொல்கிறார். இந்துக்கள் இல்லையெனில் உலகமே இல்லையாம். நான் அசந்துபோய்விட்டேன். இவ்வாறு ஆர்எஸ்எஸ் சங்பரிவாரக் கூட்டம் இன்றைக்கு உலகத்திற்கே எதிரியாகி இருக்கிறது. எந்த அளவுக்கு பிற மதங்கள் மீது வெறுப்பு இந்த குருஜியிடம் இருக்கிறது என்று பாருங்கள்.
தமிழ் சங்கத்தை காசியிலே நடத்துகிறீர்கள். ஆனால் தமிழர்களுடைய பெருமைமிகு இலக்கியங்கள்குறித்து நீங்கள் பேசுவீர்களா? அந்த சங்கமத்தில் அவர்கள் சொல்கிற செய்தி என்ன என்று தெரியுமா? இந்திய மொழிகள் அனைத்தும் ஒரே மொழியிலிருந்து பிறந்தவைதான் என்று சொல்வதற்காகத்தான் இந்த சங்கமம் என்று சொல்கிறது. இந்தியாவிலே பல மொழி குடும்பங்கள் இருக்கின்றன. இரு முக்கிய மொழி குடும்பங்கள். ஒன்று சமஸ்கிருத மொழி குடும்பம். இன்னொன்று திராவிட மொழி குடும்பம். இதை ஏற்பதில்லை அவர்கள். இதை தமிழர்களுடைய நெஞ்சிலே ஏற்றுவதற்காக காசியிலே தமிழ்ச் சங்கமம் வைத்திருக்கிறார்கள். எத்தனை அக்கிரமங்கள் இன்றைய தினம் நடந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவும் எதன் அடிப்படையில்? பிற மத வெறுப்பின் அடிப்படையில்.
விதம் விதமான வெறுப்புகள் இன்றையதினம் மண்டிக்கிடக்கின்றன.
நண்பர்களே, நாம் எல்லாம் எழுத்தாளர்கள், கலைஞர்கள். இத்தகைய வெறுப்பு மண்டிக்கிடக்கும்போது அன்பே அறம் என நம் எழுத்தாளர்கள் எழ வேண்டாமா?
நீங்கள் அமைதி காத்தால் சங் பரிவாரத்தை புகழ்ந்து நீங்கள் எழுத வேண்டியிருக்கும். அநீதியைச் செய்பவர்கள் மட்டுமல்ல அதனைக் கண்டு அமைதி காப்பவர்களும் அநீதியாளர்களே. நன்றி. வணக்கம்.
இவ்வாறு அருணன் கூறினார்.
எழுதியவர் :
✍️ – தொகுப்பு: ச.வீரமணி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
