ஆளும் வர்க்கக் கல்விக் கொள்கை எப்படி மக்களுக்கான கல்விக் கொள்கையாக இருக்க முடியும்? புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 20l9ன் உள்ளடக்கம் காவிமய மனுதர்மத்தையும், பன்னாட்டு நிறுவன தொழில் உற்பத்தி முறை மூலதனகுவிப்பு சார்பையும், தேசிய இனங்களின் மொழி மற்றும் பண்பாட்டுத்தளங்களைத் தகர்க்கும் திட்டத்தையும் உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு தொடர்பற்ற மன்னர்களின் உல்லாச வாழ்க்கை தொடர்புடைய ஆயக்கலைகள் 64 ஐ தூக்கி பிடிக்கிறது இந்த கல்விக் கொள்கை. நாளந்தா திட்டம் (MISSION NALANDA), தக்ஷசீலா திட்டம் (MISSION TAKSHASHILA) என்னும் இரண்டு திட்டங்களை உயர்கல்விக்கான முன்மொழிவுகளாக வைக்கப்படுகிறது. நாளந்தா பல்கலைக்கழகம் பற்றியாவது வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
ஹர்ஷ வர்த்தனன் யுவான் சுவாங்குக்கு எழுதிய கடிதத்தில் நாளந்தா பற்றிய குறிப்புகள் உள்ளன. பௌத்த பிக்குகளால் நிர்மாணிக்கப்பட்ட இந்த நாளந்தா பல்கலைக் கழகத்தில் தர்க்கம், தத்துவம், மருத்துவம் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. சீனா, கிரேக்கம் போன்ற நாடுகளில் இருந்து பலர் கற்க வந்ததற்கான குறிப்புகள் உள்ளன. கி பி ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஹர்ஷ வர்தன் யுவான் சுவாங்குக்கு எழுதிய கடிதத்தில் அசோகர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகம் இருந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.
தக்ஷசிலா பல்கலைக்கழகம் பற்றியும் அர்த்த சாத்திரம் குறித்தும் குறிப்புகள் குப்தர் காலத்தில், விசாகதத்தனால் எழுதப்பட்ட முத்ரா ராட்சஷம் என்ற நாடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கியன் தான் இந்த நாடகத்தின் கதாநாயகன். ஆனால் தக்ஷசீலா பல்கலைக்கழகத்தை நிறுவப்பட்டதற்கோ, சாணக்கியன் அங்கே படித்ததற்கோ வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை.
புதிய கல்விக் கொள்கை 2019 (ஆங்கிலம்) வரைவு அறிக்கையில் 224 பக்கத்தில்
“Among the eminent scholars of
Takshashila and Nalanda were the philosopher
and economist Chanakya; the Sanskrit Grammarian,
mathematician, and discoverer of generative Grammar,
Panini, the leader and Statesman Chandra Gupta Maurya
And the mathematician and astronomer Aryabhata”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ஆதாரங்கள்உள்ள நாளந்தாவையும், இலக்கிய அடிப்படையில் உள்ள தக்ஷசிலாவையும் ஒரு சேர கூறி சாணக்கியன், பாணிணி நாளந்தாவிலும் தக்ஷசிலத்திலும் படித்தது போன்ற மயக்கத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன? பௌத்த பிக்குகளால் நிறுவப்பட்டது நாளாந்தா என்பதை மறைப்பதும், நாளந்தாவில் படித்து வெளிவந்தவர்களில் பார்ப்பனிய பின்புலம் உள்ளவர்களும், மனுதர்மத்தை தூக்கிப்பிடிப்பவர்களும் உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குவது தானே!
2010ல் மன்மோகன் சிங் காலத்தில் நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் பீகாரில், ராஜ்கிர் என்னும் இடத்தில் இயங்கி வருகிறது. இந்த நாளந்தா பல்கலைக் கழகம் நிறுவ, தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட பதினேழு நாடுகளும் உதவியுள்ளன. இதன் வேந்தராக இருந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் 2015 பிப்ரவரி மாதம் பாஜக அரசாங்கத்தின் இடையூறுகள் காரணமாக பதவி விலகினார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பௌத்தம் குறித்து ஆய்வு செய்யும் இடமாக உள்ள தற்போதைய நாளந்தா பல்கலைக்கழக நிர்வாகத்தில் பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இவர்கள் கூறும் கி.மு மூன்றாம் நூற்றாண்டு அசோகர் காலத்து நாளந்தா மாதிரியில் MISSION NALANDA திட்டம் எவ்வாறு இருக்கப் போகிறதென ஊகிக்கலாம்.
1948 ராதாகிருஷ்ணன் குழு அறிக்கை இரண்டு முக்கியமான செய்திகளைக் கூறியது. Professional Education எனப்படும் பொறியியல் சார்ந்த, மருத்துவம், தொழில் நுட்பம் சார்ந்த, உயர்கல்விக்கு பரிந்துரைத்தது. 1947ல் பதவியேற்ற நேரு அரசாங்கம் சோவியத் ஒன்றிய உதவியுடன் பிலாய், பொக்காரோ எஃகு தொழிற்சாலைகளை 1955ல் நிறுவ திட்டமிட்டது. 1957 ல் மும்பையில் அப்ஸரா (APSARA) எனப்படும் அணு உலை நிறுவப்பட்டது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIMS) நேருவின் கனவு. ரயில்வே பொதுத் துறை ஊக்குவிக்கப்பட்டது. தேசிய முதலாளிகள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
1948ன் கல்விக் கொள்கை இதற்கு அடித்தளமிட்டது, சோவியத் ஒன்றிய சிதறலுக்குப் பின் இன்று உலகமய உலக வர்த்தகக் கழகப் பிடியில் இந்திய ஆளும் வர்க்கமும் சிக்குண்டு திட்டங்களைத் தீட்ட வேண்டி உள்ளது. கஸ்தூரிரங்கன் குழு என்ன கூறுகிறதென பின்னர் பார்ப்போம்.
ராதாகிருஷ்ணன் குழு கூறிய மற்றொரு செய்தி கல்வியாளர்களால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழக நல்வகைக் குழு எனப்படும் UGC. இன்று UGC கலைக்கப்படப் போகிறது.
இரயில்வே, BSNL, அஞ்சல் துறைகள் எல்லாமே உள்நாட்டு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு கார்பரேட்டுகளுக்கும் தாரைவார்க்கப்படுகிறது. இந்த பின் புலத்தில் கஸ்தூரி ரங்கன் குழு கல்வி வரைவு அறிக்கையை பார்க்க வேண்டி உள்ளது. 1966 கோத்தாரி குழு அறிக்கை அமலாக்கம் நடை பெற்ற கால கட்டம் இந்திராகாந்தி காலம்.
கோத்தாரி குழு அறிக்கை 6 சதம் GDP கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்றதும், அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி பரிந்துரைத்ததும், நமக்கு தெரியும். இன்னொரு முக்கியமான பரிந்துரை உயர்கல்வியில் தன்னாட்சி, கற்பித்தல் முறை, பாடத்திட்டம் வகுத்தலுக்கான Academic Autonomy, நிர்வாக தன்னாட்சி (Administrative Autonomy) அன்று. கஸ்தூரி ரங்கன் குழு எல்லா கல்லூரிகளும் இனிமேல் தன்னாட்சி கல்லூரிகள் எனக் கூறுவதோடு, பட்டங்களை அவர்களே வழங்கிக் கொள்ளலாம் எனக் கூறுகிறது.
கோத்தாரி குழு பள்ளிக்கல்வியில் கூறிய மாற்றங்களையும், நிதி ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரையையும் எந்த அரசாங்கமும் அமலாக்கவில்லை என்பது நமக்குத் தெரியும். கோத்தாரி பரிந்துரைத்த மற்றொன்று, பட்ட வகுப்பும் முதுநிலை வகுப்பும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
1968ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், பட்டவகுப்பு நிலையிலும் முதுநிலை பட்ட வகுப்புக்கும் தமிழ் வழிப் பாட நூல்களை வரலாறு, பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு வெளியிட்டதும், தமிழ் வழி படிக்கின்ற மாணவர்க்கு ஊக்கத் தொகை வழங்கியதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதி உதவியும் வழங்கியது. இன்று நிதி உதவியும் இல்லை – தமிழ்வழி பட்ட வகுப்புகளுக்கான நூல்களும் இல்லை.
கஸ்தூரி ரங்கன் வரைவறிக்கையில் பயிற்று மொழி பற்றி எந்த குறிப்பும் இல்லை. வலியுறுத்தப்படுவது, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருத மேன்மை தேசிய இனங்களின் மொழியையும், பண்பாட்டையும், சிதைக்கும் வேலையோடு இந்துத்துவ கருத்தாக்கத்தை ’Volunteers’ எனப்படும் தொண்டர்கள் ,மூலமாக பள்ளிப் பருவத்தில் திணிப்பதும் எதிர்கால திட்டமாக இந்த அரசு கையில் எடுக்கிறது.
இந்திரா காந்தி காலத்துக்குமுன் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது காங்கிரசு தலைமை அமைச்சராக இருந்தவர் லால்பகதூர் சாஸ்திரி. காங்கிரசும் தொடர்ந்து பிரிட்டிசார் இருந்த காலம் தொடங்கி தன்னுடைய மாநாடுகளில் இந்தியை கட்டாயமாக்க தீர்மானம் போட்ட வரலாறு உண்டு.
இன்று இந்தி திணிப்போடு சமஸ்கிருத ஆதிக்கமும் நுழைக்க பாஜக திட்டமிடுகிறது. இந்த பண்பாட்டு ஆதிக்கத்தை நிலை நாட்டி ஒருமுகப்படுத்தினால் கார்ப்பரேட் வணிகத்தை கார்பரேட் நலனுக்கான திட்டங்களை செயலாக்க எளிதென பாஜக நினைக்கிறது.
1976 ல் அவசரநிலை காலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு இந்திரா காந்தி கொண்டு சென்றதும் கல்வியை திட்டமிடலை மையப்படுத்தினால் உற்பத்தி முறை மாற்றங்கள் சார்ந்தும், ஆளும் வர்க்க நலன் சார்ந்தும் அவ்வப்போது கல்விக் கொள்கைகளை திட்டமிட எளிதாக இருக்கும் என கருதியே! பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் – ம் கூடுதலாக இந்துத்துவ பண்பாட்டு ஆதிக்கத்தை வித்திடவும் பொதுப்பட்டியல் உதவும் என நினைக்கிறது.
தேசிய தேர்வு முகமை (NTA) கருத்தாக்கம் பிர்லா அம்பானி அறிக்கையின் பத்தி 4.5.2 ல் பார்க்கலாம். SAT, GMAT, GRE போன்ற தேர்வுகள் பட்டவகுப்பு சேர தேவையென அந்த அறிக்கை கூறுகிறது. வாஜ்பாய் கால பரிந்துரை, மன்மோகன் சிங் காலத்தில் என்ன ஆகிறதென பார்க்கலாம். பேராசிரியர் யஷ்பால் Rejunuvation of Higher Education எனப்படும் அறிக்கையில் [பத்தி 3.4] அமெரிக்க GRE போன்ற தேர்வு பல்கலைக்கழகங்களில் சேர தேவை என வலியுறுத்தப்படுகிறது. 2016 TSR சுப்ரமணியன் குழு அறிக்கையும் மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வை வலியுறுத்துகிறது.
SAT என்ற தேர்வு அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உள்ள பட்டப்படிப்பில் சேர தேவைப்படும் தேர்வு ‘Scholastic Aptitude Test’ எனப்படும் திறனறிவு தேர்வு. இதன் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையினால் விளிம்பு நிலை மாணவர்கள், குறிப்பாக கறுப்பின குழந்தைகள் பாதிக்கப்படுவதை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவில் போராடி உள்ளன. TIME இதழில் வந்த கட்டுரை ஒன்றில் நியூயார்க் நகரில் வசிக்கும் மாணவர்களில் 70 சதம் கறுப்பர்கள் இருந்தாலும் 11 சதம் மாணவர்கள் மட்டுமே SAT தேர்வில் வெற்றிப் பெற்று உயர்கல்வி பெறமுடிகிறது என கூறப்பட்டுள்ளது. எனவே SAT- ஐ எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள் போராடி சில பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கைக்கு SAT தேவை இல்லை என முடிவு செய்துள்ளதாகவும் TIME இதழ் கூறுகிறது.
இங்கே NEET, SAT எதிர்த்த போராட்டங்கள் அனைத்திந்திய அளவில் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து இடது சாரி முற்போக்கு சக்திகள் இயக்கம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. SAT மூலம் வடிகட்டல் உயர்கல்வி நுழைய முற்படும் போது, கஸ்தூரி ரங்கன் குழு 3-வது 5-வது 8-வது வகுப்புகளிலேயே திறன் அறிதேர்வு மூலம் வடிகட்ட நினைக்கிறது.
எட்டாம் வகுப்பு வரை விளையாட்டும் கதையும், பாடலும் உள்ள பள்ளிகள் பின்லாந்தில் மட்டுமா சாத்தியம்?
உயர்கல்வி நிறுவனங்களை மூன்றாக வகைப்படுத்தி அவை எந்த தளங்களில் செயல்பட வேண்டும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது.
வகை 1: ஆய்வு பல்கலைகள் எனவும், இவை பட்ட வகுப்பு முதல் ஆய்வு வரை ஈடுபடலாம் எனவும், 25 ஆயிரம் மாணவர்கள் வரை சேர்ந்து படிக்க முனைய வேண்டும் எனவும், உலகத் தரம் வாய்ந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
நிதி ஆதாரம் கேள்விக்குறி – பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC), அறிவியல், தொழில் நுட்பத்துறை (DST), உயிரி தொழில்நுட்பத் துறை (DBT) இந்திய வரலாற்று ஆய்வுக் குழு (ICHR), இந்திய மருத்துவ ஆய்வுக் குழு (ICMR), இந்திய வேளாண்மை ஆய்வுக் குழு (ICAR) போன்ற பல துறைகள் ஆய்வுக்கென நிதி உதவியை வழங்குகின்றன.
அந்தந்த துறைசார் வல்லுநர்கள் இந்த குழுக்களில் இருப்பார்கள். இவற்றையெல்லாம் ஒழித்துவிட்டு “National Research Foundation” தேசிய ஆய்வு நிறுவனம் ஒன்று அமைக்கப்படப் போகிறது. அரசுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவிக்கு ” Higher Education Grants Council” எனப்படும் உயர் கல்வி மான்யக்குழு அமைக்கப்பட உள்ளது.
அதிகார மையமாக மத்திய அரசு இப்போதே உள்ளது , இந்த அதிகாரம் போதாதென்று கல்விக்கான ஓரளவு ஜனநாயகத் தன்மையோடு கல்வியாளர்களைக் கொண்டு செயல்படக் கூடிய UGC, AICTE, ICMR, ICAR, BCI போன்றக் கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, சட்டம் சார்ந்த பல்வேறு அமைப்புகளைக் கலைத்து விட்டு NATIONAL HIGHER EDUCATION REGULATORY AUTHORITY (NHERA) என்ற மையப்படுத்தப்பட்ட அமைப்பை பரிந்துரைத்துள்ளது.
வாஜ்பாய் காலத்து பிர்லா அம்பானி அறிக்கை இதே கருத்தை வலியுறுத்துகிறது. மன்மோகன்சிங் அமைத்த யஷ்பால் குழுவும் NATIONAL COUNCIL OF HIGHER EDUCATION RESEARCH என்ற மையப்படுத்த அமைப்பு வேண்டுமென வலியுறுத்தியது. இதற்கு இவர்கள் கூறிய காரணம் தேவையற்ற காலதாமதம் மற்றும் ஊழல். நிர்வாக சீர்கேட்டுக்கும் ஊழலுக்கும் காரணமான அரசியல் தலையீட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தகுதியில்லாத இவர்கள் மையப்படுத்தப்பட்ட ஒரே அமைப்பை உருவாக்கினால் அரசியல் தலையீடு இன்னும் எளிமையாக இருக்கும் என்பதை மறந்துவிட்டார்களா?
இந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் RASHTRIYA SIKSHA AAYOG எனப்படும் ’தேசிய கல்வி ஆணையம்’ ஒன்றை உருவாக்கப் போகின்றனர். தலைமை அமைச்சரை தலைவராகவும் கல்வி அமைச்சரை துணைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ஆணையம் மேற்சொல்லப்பட்ட பல்வேறு தொடர்பான அமைப்புகளையும் கண்காணிக்கின்ற நெறிப்படுத்துகிற அதிகாரம் உள்ள அமைப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ் கல்வித் தளங்களைக் கட்டுக்குள் கொண்டு வருவது இன்னும் எளிது. அதற்கு இரண்டு நோக்கங்கள் ஒன்று – ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, இரண்டு – இவ்வாறு ஒருமுகப்படுத்தப்பட்ட மக்களை கார்ப்பரேட் மூலதன சேவகர்களாக, உலகவர்த்தகக் கழகச் சந்தையின் நுகர்வோர்களாக மாற்றுவது.
அனைத்து கல்லூரிகளும் தன்னாட்சி என்பதும், வகை 2 கற்பித்தல் பல்கலைக் கழகங்கள் வகை 3 கல்லூரிகள் எனப் பிரிப்பதும், இனிமேல் எந்த பல்கலைக் கழகமும் கல்லூரிகளை இணைப்பில் வைத்திருக்காதென்பதும், நிர்வகிக்க முடியாத கல்லூரிகள் பல்கலைக் கழகத்தோடு பிணைய வேண்டும் என்பதும் கூர்மையாக விவாதிக்க வேண்டிய செய்தியாகும்.
உலக வர்த்தகக் கழக நிபந்தனைப் படி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே அனுமதிக்கப்பட உள்ள நிலையில் வெளிநாட்டு ஆசிரியர்கள் வரப்போகும் கட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரும் தருணத்தில் கட்டமைப்பு அதற்கேற்றவாறு தகவமைக்கப்பட வேண்டும்.
SAT அனைத்து பட்டப் படிப்புக்கும் தேவை என்பதும் இதன் காரணமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கேள்விக்குறியே!
நிதி ஆயோக்கின் 2017 -18 செயல் திட்ட அறிக்கையில் “HIGHER EDUCATION ACTION AGENDA – WHAT WE DO WE SEEK TO ACCOMPOLISH” என்ற தலைப்பில் பரிந்துரைக்கப்பட்ட செயல்திட்டங்கள் [பக்கம் 134 – 135] கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது.
நிதி ஆயோக் செயல்திட்டம் கூறியுள்ளதை பார்ப்போம். “சீனா வகைப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் வகை I [Tier I] பல்கலைக் கழகங்களான பீஜிங் மற்றும் குவிங்குவா பல்கலைக் கழகங்களைத் தேர்ந்தெடுத்து குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிக நிதி வழங்குகிறது. சிங்கப்பூரும் Tier 1 ல் மேலிடத்தில் உள்ள தேசிய பல்கலைக் கழகம் சிங்கப்பூருக்கும், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கும் தாராளமாக நிதி உதவி செய்கிறது.
மிகச் சொற்பமே உள்ள நிதியை பகிர்ந்து தருவதை எச்சரிக்கையாக நாமும் செய்ய வேண்டும். எனவே அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு “Tired Funding” படிநிலை நிதி உதவி தான் கடைபிடிக்க வேண்டும்” [NITI AAYOG ACTION PLAN 20.23 page 134] இந்த நிதிவழங்கும் பாகுபாடு இனி எதிர் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் என்பதை கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த சூட்சமம் தெரிகிறது. இன்னும் தெரியாத சூட்சமங்கள் எத்தனையோ? வரைவு அறிக்கை பாடத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பரிந்துரைக்கிறது. B.Sc போன்ற பட்ட வகுப்புகளில் அறிவியல் பாடம் முதன்மை பாடமாகவும் கலைத்துறை சார்ந்த பாடங்களை துணை பாடமாகவும் [Major and Minor] கொண்டு வரலாம் எனவும் கூறுகிறது வரைவறிக்கை. நான்கு பட்ட வகுப்பில் மூன்றாண்டோடு வெளியே போனால் ஒரு பட்டம் நான்காண்டு முடிவில் வேறொரு பட்டம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைசார் [STEM] கல்வியுடன் கலைத்துறையும் சேர்த்து [Science, Technology, Engineering, Arts, Maths – STEAM] கற்பிக்க வேண்டிய அவசியம் குறித்து பல இடங்களில் விரிவாகக் கூறுகிறது அறிக்கை. செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோவின் தாக்கம் பற்றி தொட்டுச் செல்லும் வரைவறிக்கை இரண்டு நபர்களை துணைக்கு அழைக்கிறது. ஒருவர் பரீத் ரபீக் ஜக்காரியா [Fareed Rafiq Zakaria] இவர் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டின் கட்டுரையாளர். மற்றொருவர் ஆப்பிள் (APPLE COMPUTER) நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ் (Steev Jobs).
ஸ்டீவ் ஜொப்ஸ் கூறுவதை குறிப்பிடுகிறது வரைவறிக்கை. ”Mac கணிணி கணிப்பதில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கி உள்ளது. Mac மிகப் பெரிய இடம் பெற்றதற்கு காரணம் அதை உருவாக்கும் பணியில் இசைக் கலைஞர்களும், கவிஞர்களும், உயிரியலாளர்களும், வரலாற்று அறிஞர்களும் பங்குபெற்றதே காரணம். இவர்கள் சிறந்த கணிணி அறிவுடையவர்களாகவும் இருந்தனர் ” என ஸ்டீவ் ஜொப்ஸ் கூறுவதை பதிவு செய்துள்ளது வரைவு அறிக்கை.
இதழியலாளர் பரீத் ஜக்காரியா கூறுவதாக வரைவறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருப்பது ” தாரளவாத கலைக் கல்வி [Liberal Arts Education] ஒருவரின் முதல் வேலையைத் தீர்மானிப்பது மட்டுமல்ல அவரின் இரண்டாம் வேலை, மூன்றாம் வேலை அதற்கு மேலும் என ஜக்காரியா கூறுவதைக் குறிப்பிடுகிறது.
அதற்குப் பின்னர் செயற்கை நுண்ணறிவு சார்ந்து நடக்கப் போகும் நான்காம் தொழிற்புரட்சி வேலை வாய்ப்பு தளத்தை அதிவேகமாக மாற்றுகிறது எனவும் கலைப்பாடக் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிடுகிறது அறிக்கை.
இதன் பின்னணியில் அறிவியல் பாடங்களுடன் கலைப் பாடங்களும் பிணைக்கப்படுகின்றன என அறிக்கை தெளிவாகக் கூறவில்லை. உலக வங்கி கூட்டங்களிலும், உலகப் பொருளாதார அரங்க (World Economic Forum) கூட்டங்களிலும் AI மற்றும் ரோபோக்களால் 2030 க்கு அப்புறம் அதிவேக மாற்றங்கள் வேலை வாய்ப்பை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது குறித்த விவாதங்களின் சாரங்கள் வரைவறிக்கையில் இல்லை.
படிப்பதென்பது தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில்லை. படிக்கலாம் வேலைக்குப் போகலாம் மீண்டும் படிப்பை தொடரலாம் என கூறுகிறது வரைவறிக்கை. ஆனால் தொடர்ந்து அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திறன் (SKILL) மேம்பாடு குறித்து அடிக்கடி பேசப்படுகிறது. அதற்குப் பின்னால் மறைந்து இருக்கும் பள்ளிப் படிப்பிலேயே 3,5,8,10,12 என ஐந்து வடிகட்டலுக்குப் பின்னால், SAT தேர்வுக்குப் பின்னால் மேலும் ஒரு வடிகட்டல் என்றால் இடைநிற்றல் பெருமளவில் இருக்காதா? கவலை வேண்டாம் SKILL DEVELOPMENT COUNCIL அறிக்கையும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையும் தொழிற்கல்வி குறித்தும், திறந்தவெளி பல்கலைக் கழகம் குறித்தும் கூறியுள்ளதை ஒரு சேர படித்தால் புரியும்.
நான்காம் தொழில் புரட்சி குறித்த உலக பொருளாதார அரங்கில் (WEF) பொருளாதார அறிஞர்களும், கார்பரேட் நிறுவன சார்பாளர்களும், அறிவியல் அறிஞர்களும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகபோக மூலதன குவிப்பை நோக்கி வணிக விரிவாக்கத்தால் ஈடுபடும் நாடுகளின் சார்பாளர்களும் 2030க்கு பின்னால் ஏற்படும் மாற்றங்களின் பாய்ச்சல் குறித்து கூறியுள்ளதில் நாம் கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டியுள்ளது. இதன் பின்னணி தான் ‘STEAM’ எனப்படும் புதியக் கல்வி திட்டம்.
இப்போதுள்ள பாஜக அரசாங்கத்தின் கல்விக் கொள்கை தெளிவானது. அர்த்த சாஸ்திரமும் மனுதர்மமும் ஒரு கையில், கார்பரேட் வணிகத்துக்கும், AI க்கும் சேவை செய்யும் நிதி ஆயோக் மற்றொரு கையில். இவற்றால் பின்னிப் பிணைந்த சமூகத்தைப் படைப்பதே அவர்கள் கொள்கை.
இந்த வரைவு அறிக்கையில் திருத்தம் கோருவது நம் வேலையன்று. அது அமலாக்கப்போகும் ஆபத்துகளை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து போராடுவதற்கும் இயக்கம் கட்டுவதே நம் வேலை.