ரமாதேவிஇரத்தினசாமியின் “மனுஷி”

ரமாதேவிஇரத்தினசாமியின் “மனுஷி”

 

ஆசிரியரைப் பற்றி:  ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்.. ஐநா சபையில் உரையாற்றியவர். பல்வேறு பெண்கள் அமைப்பில் தொடர்ந்து ஊக்கத்துடன் பணிபுரிபவர்.. கனவுகள் மெய்ப்படட்டும், வேர்களைத் தேடி, என்ன சொல்கிறது ஐ.நா? போன்ற பல நூல்களை எழுதியவர்.

நூலைப் பற்றி:  மனு’ஷி(SHE) என்ற தலைப்பே திரும்பிப் பார்க்க வைக்கிறது. மனு (அ)நீதியை அழிக்கப் புறப்பட்டுள்ள மனு’ஷி என்ற பாலபாரதி அவர்களின் அணிந்துரையோடு தொடங்குகிறது புத்தகம்.

20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது..
பெண்களின் மனதில் புதைக்கப்பட்ட வலிகளையும், வினாக்களையும் இந்த ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுத்துகிறாள். சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் பெண்கள் உட்பட தன் சொல்வீர்கள், வினாக்கணைகளைத் தொடுக்கிறார். நூற்றாண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் பிற்போக்குச் சிந்தனைகளை இந்நூல் சிதறடிக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார் .

முன்னணி நடிகையின் திருமண செய்தி அளவிற்கு இந்த செய்தியில் கிக் இல்லாததால் இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் வாழ்வு ரிஸ்க்குக்கும் ரஸ்குக்கும் இடையில் இருப்பது சகஜம்தான் போன்ற எள்ளல் தூக்கலான எழுத்து நடையுடன் தான் காத்திரமான பல விஷயங்களை நமக்கு தந்துள்ளார்.
3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் முதற்கொண்டு சமீபத்தில் எழுதப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் வரை பெண்களுக்கு எதிரான அனைத்தையும், கேள்விகள் கேட்டு, நம் கண் முன்னே ஆவணப் படுத்துகிறார். நியாயமா நியாயமாரே? என்ற முதல் கட்டுரை தாலியைப் பற்றியது. மனதால் கொடுமைப்படுத்தும் நோக்கத்துடன் தாலியை மனைவி கழட்டியது மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடியது// என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிலிருந்து ஆரம்பிக்கிறார். தாலி பெண்ணுக்கு வேலி அல்ல.. அவளுக்கான அடிமை சாசனம் என்று சூழல் தாமதமாகத் தன் தோழிக்குப் புரிய வைத்ததைப் பதிவு செய்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செக்கடி குப்பம் ,கோட்டுவங்குப்பம் ,அதியந்தல் , புறையூர் கிராமங்களில் பெண்கள் தாலி அணிவதில்லை.. 55 ஆண்டுகளுக்கு முன் மேல்மலையனூரில் நடைபெற்ற கூட்டம்தான் இதற்கெல்லாம் காரணமாம். அதில் யார் பேசி இருப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பெண் வாரிசு கொள்ளி வைத்தால் பிணம் எரியாதா ?என்ற கட்டுரையில் ஆண் குழந்தை மோகத்தில் இருக்கும் பெற்றோர்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்களின் வாழ்வு ரிஸ்க்குக்கும் ரஸ்க்குக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருப்பது சகஜம் தான் என்று ஆசிரியர் விளையாட்டாக கூறினாலும், இந்தியா ஆண் பெண் விகிதாச்சாரத்தில் பின்தங்கியுள்ளது என்பதை அழுத்தமாக கூறி, நமது பார்வைக் கோளாறை உடனடியாக சரி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் ஆண்கள் சிங்கிள் ஆக சிங்கி அடிக்க வேண்டியது தான் என்று எச்சரிக்கிறார்.

பட்டினி கிடக்கும் அன்னபூரணிகள் கட்டுரை குடும்பத்திற்கு வித விதமாக சமைத்தாலும் அழகு, விரதம், விரக்தி, நேரமின்மை எனப் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடந்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் பெண்களைப் பற்றிப் பேசுகிறது.. குளிர் நீங்காத, இருள் பிரியாத அதிகாலைகளில் உங்கள் தெருவைச் சுற்றி வாருங்கள். எத்தனையோ வீடுகளில் சமையல் அறைகளில் மட்டும் விளக்கெரிவதைப் பார்க்கலாம் என்ற ஆசிரியரின் நுட்பமான பார்வை பெண்களின் நிலையை வாசிப்போரை நிச்சயம் யோசிக்க வைக்கும்.

பெண்ணை முடக்கிப் போடும் மூடநம்பிக்கைகள் என்ற கட்டுரை மாதவிடாய், விதவைச் சடங்குகள் போன்றவற்றைப் பற்றியும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கொடுக்கிறது. அமெரிக்க பத்திரிகையாளரான கேத்தரின் மேயோ 1927 ல் ‘மதர் இந்தியா’ என்னும் நூலில் இந்தியாவில் சடங்கு சமப்பிராயங்கள் எப்படி எல்லாம் பெண்களை சுரண்டுகின்றன என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.. அவை இன்னும் தொடர்கின்றன என்பதுதான் வருத்தத்துக்குரிய ஒன்று.

நரகத்துக்கு போகலாம் வாங்க என்ற கட்டுரை இந்த நவீன நூற்றாண்டிலும் பெண்களுக்கான கருத்து சுதந்திரம் எப்படி எல்லாம் பறிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. ஊடகங்களை பயன்படுத்தும் பெண்களைப் பற்றிய தவறான கற்பிதங்கள் நன்கு படித்தவர்களிடத்தில் கூட வெளிப்படுவதைத் தன் அனுபவமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். கருத்துச் சுதந்திரத்தை பயமுறுத்தி பறிக்கும் வாய்ச்சவடால் வீரர்களை தூக்கி எறிந்து, வாழும் காலத்தை சொர்க்கமாக்கி நரகத்துக்கே போகலாம் வாங்க தோழிகளே என்று அழைத்திருப்பது மிகச் சிறப்பு.

இந்த தொகுப்பில் உள்ள மிக முக்கியமான கட்டுரை சுதந்திர தினத்தில் நீதியின் மீதான கறை. இக்கட்டுரை 75வது சுதந்திர தினத்தில் கோத்ரா சிறைச்சாலையில் இருந்து வெளிவந்த வர்களையும், அவர்களை வரவேற்க ஒரு கூட்டம் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. பில்கிஸ் பானுவின் வாழ்வில் நடந்த கொடிய சம்பவங்கள் எப்படி ஒரு கலவரத்திற்கு சம்பந்தமில்லாத எளிய மனிதர்களின் வாழ்வையும் சூறையாடும் என்பதற்கு ஒரு உதாரணம்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம், சுப்ரீம் கோர்ட் என பல வருடப் போராட்டங்களை எப்படி எதிர்கொண்டார் என்பது மலைப்பாக உள்ளது. ஆனால், அப்படிப்பட்ட போராட்டங்களை சந்தித்து, தற்போதும் தன் பாதுகாப்புக்காக கோரிக்கை வைக்கச் செய்யும் நம் நாட்டின் சூழலை என்னவென்று சொல்வது?

வரலாற்றில் தொலைந்து போனார்களா பெண்கள்? என்ற கட்டுரையில் ஆசிரியர் கேட்கும் வினாக்கள் தரமானவை.. உதாரணத்திற்கு.. அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆண் பிசியாக இருந்தபோது உறங்கிக் கொண்டிருந்தாளா? நாடு நாடாக போரிட்டு ஆண் வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருந்தபோது பெண் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாளா? கோட்டைகளை, கட்டிடங்களை ஆண் தனி ஒருவனாய் நிர்மாணித்துக் கொண்டிருந்தபோது இந்த பேதைப் பெண் தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தாளா? என்று அடுக்கடுக்காக வினாக்களைத் தொடுத்துக் கொண்டே செல்கிறார். பாகிஸ்தானில் திருமண அழைப்பிதழில் இன்றும் கூட மணமகளின் பெயருக்குப் பதிலாக தந்தையின் பெயர் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வரலாற்றில் பெண்களுக்கான இடத்தில் பெண்களை பதிவு செய்ய தொடங்கி இருப்பது தற்காலத்தில் தான். அடையாளம் அற்றிருந்த பெண்களை அடையாளப்படுத்திய எழுத்தாளர் அம்பை பற்றியும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

அழகு முக்கியம் இல்லை என்று ‘ஊஹூம் சொல்லு பெண்ணே’ ‘என் கரு ,என் உரிமை’ , ‘பேசாப்பொருளைப் பேசுவோம்’ ‘பெண்ணை வீழ்த்த முனையும் உருவக் கேலிகள், ‘பெண்ணின் ஆடைக்குள் ஒளிந்திருக்கிறதா கலாச்சாரம்?’ ‘திருமணம் என்றொரு அட்ஜஸ்ட்மென்ட்’ ‘பெண்களை துரத்தும் கேள்விகள்’ ‘ஞாயிறு இல்லாத பெண்களின் காலண்டர்’ ‘பெண்களின் கண்ணீருக்கு பின்னால்’ ,பெண் சிசுக்கொலையை விவரிக்கும் ‘போய் வாடி அன்னக்கிளி’ போன்ற கட்டுரைத் தலைப்புகளே ஓராயிரம் சம்பவங்களை நம் கண் முன்னே நடமாட விடுகின்றன.

ஆண்கள் ஏன் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்? என்ற கடைசி கட்டுரைத் தலைப்பின் கேள்வியோடு புறப்பட்டு, தொடர் துன்பங்களின் தொகுப்பாகத் தன் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார் தாரா கௌஷல். உடலுக்கு அப்பால் அறிவு ,சிந்தனை ஆகியவற்றால் பெண்ணை அடையாளம் காணும் கலாச்சாரத்தை உருவாக்க முயல வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து கவனிக்கத்தக்கது.

பாலின பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க , நூலில் உள்ள சிந்தனைகள் பரவலாக்கப்பட வேண்டும். ஆண்களிடம் மட்டுமல்ல ஆணாதிக்கச்சிந்தனை மிக்க பெண்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்படுத்த இந்த புத்தகம் உதவும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அனைவரும் வாசிக்கலாம்.


நூலின் தகவல் 

 நூல்              : “மனுஷி”

ஆசிரியர்   : ரமாதேவிஇரத்தினசாமி

பதிப்பகம் :  சுவடு பதிப்பகம்

வகை           : பெண்ணியக் கட்டுரைகள்

பக்கங்கள் : 142

                             எழுதியவர்

                              பானுரேகா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 3 Comments

3 Comments

  1. S.SUMATHI

    அருமை அருமை.பெண்ணியம் பற்றி புரிந்து கொள்ள இப்படிப்பட்ட நூல்களும் சிறந்த விமர்சனங்களும் தேவை ஏனெனில் பெண்ணியம் பல தவறான புரிதல்களுடன் உள்ளது .

    • நன்றிங்க மேம். தொடர்ந்த உரையாடல் பொதுப்புத்தியில் படிந்த படிமங்களை மாற்றும் என்பது நிச்சயம்.

  2. ம.கவிதா

    கருத்தாழமிக்க கட்டுரைகள் அடங்கிய சிறந்த புத்தகத்தை அறிமுக ஆய்வு செய்துள்ளார் தலைமையாசிரியர் பானுரேகா அவர்கள். தாலி அணியாத பெண்கள் வசிக்கும் கிராமங்கள் பற்றிய செய்திகள் தாலி மீதான அச்சத்தைத் தூக்கி எறிய உதவும்.
    பட்டினி கிடக்கும் அன்னபூரணிகள் அன்னப் பூரணிகள், வரலாற்றில் தொலைந்து போனார்களா பெண்கள் என்பவை சிறந்த சிந்தனைகளை அள்ளித்தரக்கூடியவை. நூலாசிரியருக்கும்
    ஆய்வாளருக்கும்
    நன்றி சொல்வோம்! சமத்துவ சிந்தனைகள் பெருகட்டும்!!💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *