ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட முதல்நாளன்றே அஜய் குமார் எதிர் கொண்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவைகளாகும். சித்திரவதை, பழைய உணவு, கடும் குளிர், கடுமையான வேலை என திரைப்படங்கள் பலவற்றில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்திருந்தபோதிலும், அவற்றை நேரடியாக அனுபவிக்கும் நிலை அஜய் குமாருக்கு ஏற்பட்டது.
அஜய் குமார் விசாரணைக் கைதியாக மத்திய சிறையின் மாபெரும் இரும்பு கேட் அருகில் கொண்டுவரப்பட்டதுமே, அங்கேயிருந்த போலீஸ்காரர், “என்ன குற்றம் செய்தாய்?” என்று கேட்டிருக்கிறார். இவர் ஏதோ கூற, அது அவருக்குச் சரிவரக் காதில் விழவில்லை. பின்னர் “நீ, என்ன சாதி?” என்று கேட்டு, மீண்டும் பளார் என்று ஓர் அறை. அஜஸ் தன் சாதியைச் சொன்னதும், உள் சாதி என்ன என்று கேட்டு அவர் தலித்துகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்று கருதிக்கொண்டு, அதன்பின் அவர் சிறையிலிருந்த காலம் எல்லாம், கழிப்பறைகளைச் சுத்தம் செய்திடும் வேலைக்கு அமர்த்தப்பட்டார். இவ்வாறு கடந்த 97 நாட்களாக அவர் சிறையில் இருந்த நாள் முழுவதும் இந்த வேலையைச் செய்து வந்திருக்கிறார்.
பதினெட்டே வயதான அஜய், கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது, வராந்தாவை சுத்தம் செய்வது, தண்ணீர் பிடித்து வைப்பது, தோட்ட வேலைகளைச் செய்வது என்று செய்துள்ளார். காலையில் சூரியன் உதயமாவதற்கு முன் ஆரம்பித்திடும் இவருடைய வேலைகள், ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி வரை நடைபெறும்.
“ஆரம்பத்தில் இதுபோன்று எல்லா சிறைவாசிகளும் செய்ய வேண்டியிருக்கும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒருசில நாட்களிலேயே சிறையில் இருக்கின்ற ஒருசிலருக்கு மட்டும் இதுபோன்று வேலைகள் தரப்படுவதை அறிந்தேன். என்னைப்போன்று கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள்தான் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் வேலைக்கு உள்ளாக்கப்பட்டோம்,” என்று அஜய் கூறினார்.
சிறையில் உள்ள ஏற்பாடுகள் மிகவும் தெளிவானவை. சாதி அடுக்கில் அடித்தட்டில் இருப்பவர்கள், சுத்தம் செய்யும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதில் சற்றே உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு சமையல் கூடங்களில் வேலை. பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு உள்ளவர்களுக்கு எவ்வித வேலையும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு இவர்களுக்கு வழங்கப்படும் வேலைக்கும் இவர்கள் புரிந்த குற்றங்களுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இவை அனைத்தும் இவர்களின் சாதியின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகிறது.
அப்படி என்ன குற்றத்தை அஜய் செய்துவிட்டான்? அவன் வேலை பார்த்தக் கடையின் முதலாளி அவன்மீது திருட்டுக் குற்றம் சுமத்தி, போலீசாரிடம் கூற அவர்கள் அவன்மீது வழக்குப் பதிவு செய்து விட்டனர்.
“நான் ஸ்விட்ச்போர்டுகளுக்கான பெட்டிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்தேன். சில பெட்டிகள் காணாமல் போய்விட்டன. அப்போதுதான் நான் கடையில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இளைஞன். முதலாளி, போலீசாரிடம் என்னைக் கை காண்பிக்க, நான் கைது செய்யப்பட்டேன்,” என்று அஜய் கூறுகிறார்.
97 நாட்கள் சிறையில் கழித்தபின், ஆல்வார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, இறுதியாக அஜஸ் விடுதலை செய்யப்பட்டார். இனி ஆல்வாரில் வேலை பார்ப்பது உசிதம் அல்ல என்று கருதி அஜய் இப்போது மத்திய தில்லியில் ஒரு மாலில் மின்பணியாளராக (எலக்ட்ரிசியனாக) வேலை செய்து வருகிறார்.
சிறையில் கொஞ்ச காலமே இருந்த அஜய் வாழ்க்கை இதனால் முற்றிலுமாக மாறிவிட்டது. “ஒரேயிரவில் நான் ஒரு கிரிமினலாக முத்திரை குத்தப்பட்டேன். மேலும் ஒரு கீழ் சாதிக்காரனாகவும் ஆக்கப்பட்டேன்,” என்று அஜய் கூறுகிறார்.
அஜய் குடும்பத்தினர், பூர்வீகமாக பீகாரைச் சேர்ந்தவர்கள். 1980களில் தில்லிக்கு வந்தார்கள். அஜய்யின் தந்தை தில்லியில் ஒரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்தார். அவர் சகோதரர் ஒரு தேசிய வங்கியில் பாதுகாவலராக இருந்தார். “நாங்கள் வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் எவரும் இப்போது அந்த வேலையைச் செய்யவில்லை. கிராமத்திலிருந்த கொடூரமான சாதிய எதார்த்த நிலைமைகளிலிருந்து தப்பிப்பதற்காகவே என் தந்தை நகர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருந்தார். ஆனால் சிறையில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன.”
“சிறையிலிருந்தபோது ஒரு நாள் மிகவும் மோசமான நாளாக மாறியிருந்தது. அன்றையதினம் சிறையில் நிரம்பி வழிந்த ‘செப்டிங் டேங்கை’ இறங்கி சுத்தம் செய்ய என்னை நிர்ப்பந்தித்தார்கள். நான் இதையெல்லாம் செய்ததில்லை என்று கூறியும் கேட்காமல் கட்டாயப்படுத்தி என்னைச் செய்ய வைத்தார்கள். நான் இறங்கியபின் மூச்சுத்திணறி அநேகமாக இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். பின்னர் என்னை வெளியே தூக்கி என்னைக் காப்பாற்றினார்கள்.”
‘மனிதர்களின் மலத்தை மனிதர்களே’ சுமக்கும் கொடுமைக்கு நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சட்டரீதியாகத் தடை விதிக்கப்பட்டபோதிலும், 2013இல் இச்சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு, இப்போது நடைமுறையில் அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. சிறை அதிகாரிகள் அஜய்யைச் செய்யச்சொன்னது ஒரு கிரிமினல் குற்றமாகும்.
“இந்தச் சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் என் உடம்பு நடுங்கத்தொடங்கிவிடும். பசியை இழந்துவிடுவேன். தெருவில் நகரசுத்தித் தொழிலாளர்கள் எவரைப் பார்த்தாலும் என் சொந்தக் கதை நினைவுக்கு வந்துவிடும்,” என்று அஜய் கூறுகிறார்.
இது அஜய்யின் கதை மட்டுமல்ல. சிறைக்கு எவர் கொண்டுவரப்பட்டாலும், அவர் தண்டனைக் கைதியாக இருந்தாலும் சரி, அல்லது விசாரணைக் கைதியாக இருந்தாலும் சரி, அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, “நீ என்ன சாதி?” என்பதுதான். ஆனாலும், அஜய் போன்று விசாரணைக் கைதிகளை சிறை நிர்வாகம் வேலை வாங்குவதுதான் அதிகமாகும்.
சிறை விதிகளே சாதிய அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன
பல மாநிலங்களில் உள்ள சிறைக் கையேடுகள் (Prison Manuals), சாதிய அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் நாடு காலனியாதிக்கத்தின்கீழ் உருவான சிறைக் கையேடுகள்தான் இன்னமும் அமலில் இருந்து வருகின்றன. இவற்றில் திருத்தங்கள் என்பது அநேகமாகக் கிடையாது. இந்தச் சிறைக் கையேடுகள் அனைத்தும் அநேகமாக 1894ஆம் ஆண்டு சிறைச் சட்டத்தை (The Prisons Act, 1894) அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன.
அஜய்யின் அனுபவம் என்பது ராஜஸ்தான் சிறைக்கையேட்டை ஒத்திருக்கிறது. சிறையில் சமையல் செய்வதையும், மருத்துவக் கவனத்தை மேற்கொள்வதும், உயர் சாதியினரின் வேலை என்றும், கூட்டுவதும், சுத்தம் செய்வதும் கீழ் சாதியினரின் வேலை என்றும் நேரடியாகவே கூறுகிறது.
சமையல் துறை குறித்து, சிறைக் கையேடு கூறுவதாவது:
“எந்தவொரு பிராமணனோ அல்லது உயர்சாதி இந்துவோ, சமையல்காரனாக நியமனம் செய்யப்படத் தகுதி உடையவராவார்கள்.”
அதேபோன்றே, மேற்படி கையேட்டில், 10ஆவது பாகத்தில், வேலைவாய்ப்பு, தண்டனை பெற்றவர்களுக்கு அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடு என்னும் தலைப்பின்கீழ், 59(12)ஆவது பிரிவின்கீழான விதிகளில் கூறப்பட்டிருப்பதாவது:
“கூட்டுபவர்கள், மாவட்டத்தில் வழக்கமாக கூட்டும் வேலையைச் செய்பவர்களிலிருந்து தெரிவு செய்திட வேண்டும். மேலும் இதனை தாமாக முன்வந்து செய்யக்கூடியவர்களையும் அமர்த்திடலாம். எனினும் இந்த விதியானது, கூட்டும் சமூகத்தினரிடமிருந்து ஒப்புதம் பெற வேண்டுமா என்பது தொடர்பாக எதுவும் கூறாது மவுனம் கடைப்பிடிக்கிறது.
மருத்துவப் பணியாளர்களைப் பொறுத்தவரை, “நீண்ட காலம் தண்டனை பெற்றவர்களில் நல்ல சாதியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, மருத்துவப் பணிகளுக்குத் தெரிவு செய்திட வேண்டும்,” என்று ராஜஸ்தான் சிறைக் கையேடு கூறுகிறது.
அநேகமாக எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை. வேலை பிரிவினை என்பது சாதி அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.
பீகார் மாநில சிறைகளில் சமையலர் எப்படி இருக்க வேண்டும் என்று சிறைக் கையேடு கூறுகிறது? “எந்தவொரு ‘ஏ கிளாஸ்’ பிராமணன் அல்லது போதுமான அளவிற்கு உயர் சாதி இந்துக் கைதி சமையலராக நியமனம் செய்யப்படத் தகுதி படைத்தவராவார்,” என்கிறது.
நாட்டில் உள்ள சிறைகள் அனைத்திலும் அநேகமாக இதுதான் நிலை. பிராமணர்கள் மற்றும் உயர் சாதிக் கைதிகளுக்கு சிறைகளில் வேலைகள் எதுவும் அளிக்கப்படாத அதே சமயத்தில், மற்ற சாதிக்காரர்கள், அவர்களின் சாதி அடிப்படையில் வேலை வாங்கப்படுவார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் கைதிகளுக்கு அளிக்கப்படும் வேலை குறித்து சிறை நிர்வாகம், கைதியின் நியாயத்தன்மை மற்றும் பொருந்தக்கூடிய தன்மை குறித்து முடிவு செய்வதற்கு அதிகாரம் பெற்றிருக்கிறது. நியாயத்தன்மை என்பது கைதியின் சாதியின் அடிப்படைதான்.
மத்தியப் பிரதேச சிறைக் கையேடும், சிறைகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கு, வெளியில் அந்த வேலை செய்திடும் சாதியைச் சேர்ந்தவர்களை நியமித்திட வேண்டும் என்கிறது.
இதேபோன்றே ஹர்யானா மற்றும் பஞ்சாப் சிறைகளில் கூட்டுபவர்கள், முடிதிருத்துவோர், சமையலர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவருமே சாதியின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகிறார்கள். ஏதேனும் ஒரு சிறையில் இவ்வாறு தொழில்களை மேற்கொள்வதற்கு ஆள் கிடைக்கவில்லை என்றால், வேறு சிறைகளிலிருந்து தருவித்துக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், கையேட்டில் உள்ள விதிகளில் எவ்வித மாற்றமும் கிடையாது.
இதேபோன்றே தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் விசாரணைக் கைதிகள் சாதி வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டிருப்பதாக செல்வம் என்பவர் கூறுகிறார்.
தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் வழக்கறிஞர் திஷா வடேகர், இந்திய சாதி அமைப்பும், சிறைச் சட்டங்களும் மனு (அ)தர்மத்துடன் ஒத்துப்போகின்றன என்று கூறுகிறார்.
இந்திய சிறைகள், நாட்டில் ‘சட்டத்திற்குமுன் அனைவரும் சமம்’ என்ற அடிப்படையில் செயல்படவில்லை. மாறாக, மனு(அ)தர்மத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என்கிறார்.
(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)
(நன்றி: தி ஒயர் இணைய இதழ்,)

