சிறந்த வாழ்க்கைத் தரமும் புலம் பெயர்தலும்..!
– சித்தார்த்தன் சுந்தரம்
கிரிக்கெட் வீரர் விராட் கோலி குடும்பத்துடன் லண்டனுக்கு புலம் பெயரக்கூடும் என அவருக்கு இளம் வயதில் பயிற்சியாளராக இருந்த ராஜ்குமார் சர்மா கூறியிருக்கிறார். அவர் லண்டனில் வீடு வாங்கியிருப்பதாகவும், அடிக்கடி லண்டன் சென்று வருகிறார் எனவும் இவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இது உண்மையாக நடக்குமா, இல்லையா என்கிற ஊகத்துக்குள் நாம் செல்ல வேண்டாம். ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்கள் (High Networth Individuals – HNI) புலம் பெயர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியத் தொழிலதிபர்கள் ஏன் NRI குடியுரிமைக் கேட்டு லண்டன், சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள்? முப்பத்தைந்தில் ஒரு பகுதியே இருக்கும் கனடாவிலும், பிரிட்டனிலும் நிரந்தர குடியுரிமையாளர்களாக மாற ஏன் அவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்? 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், சூடானுக்கும் அடுத்தபடியாக அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தது இந்தியாவில் இருந்து தான், ஏன் இந்த நிலை?
இங்கெல்லாம் பொருளாதார வாய்ப்புகள் நன்றாக இருக்குமென்பதைவிட அவர்கள் விரும்புவது அங்கிருக்கும் சிறப்பான வாழ்க்கைத் தரம் (better life quality) ஆகும். உலகில் அதிக மாசு நிறைந்த நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் காற்று தரத்தின் குறியீடு (AQI) 795 ஐ எட்டியது அனைவரும் அறிந்த ஒன்று. மும்பையில் கடல் இருப்பதால் அங்கு காற்று தரத்தின் குறியீடு டெல்லியை விடக் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதாலும், வாகனங்கள் உமிழும் புகையாலும் சுற்றுப்புற மாசால் அந்நகர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
வளர்ந்து வரும் ஒவ்வொரு நகரத்தின் நிலையும் இப்படித்தானே இருக்கும், வளர்ச்சிக்கு விலை கொடுத்துதானே ஆக வேண்டுமென என நீங்கள் நினைக்கலாம். ஆனால், லண்டனில் காற்று தரத்தின் குறியீடு 40, சீனாவின் தலைநகர் பீகிங்கில் 2023 ஆம் ஆண்டு AQI 775 ஆக இருந்தது ஆனால் இன்றைக்கு இது ஐந்தில் ஒரு பங்கு என்கிற அளவுக்குக் குறைந்திருக்கிறது.
ஒரு நாடு பெரிதாக வளர்ந்து வரும் நிலையில் பொருளாதாரத்தில் நல்ல நிலையை எட்டலாம் ஆனால் சுற்றுப்புறம், ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவில்லையெனில் வாழ்க்கைத் தரத்தில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது.
கட்டமைப்பு சம்பந்தமான திட்டங்கள் என எடுத்துக் கொண்டால் சீனாவை விட இந்தியாவில் அதிகமான காலம் ஆகிறது. 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தகவலின்படி, ஏற்கனவே 779 திட்டங்கள் தாமதமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதில் 36% திட்டங்கள் 25-60 மாதங்கள் தாமதமாகவும், 26% திட்டங்கள் 1-12 மாதங்கள் தாமதமாகவும், 23% திட்டங்கள் 13-24 மாதங்கள் தாமதமாகவும், 15% திட்டங்கள் 60 மாதங்களுக்கு மேல் தாமதமாகவும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்பரீதியாகவும் வணிகரீதியாகவும் மின்சார இழப்பானது 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் 15.4% லிருந்து 17.6% ஆக அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் 200 ரயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் 351 பேர் உயிர் இழந்ததோடு 970 பேர் காயமடைந்தனர்.
இந்தியாவின் சாலை நெட்வொர்க்கான 5.9 மில்லியன் கி.மீட்டரானது சீனாவின் சாலை நெட்வொர்க்கான 4.6 மில்லியன் கி.மீட்டரை விட அதிகமாக இருந்தாலும் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் வருவது 3% மட்டுந்தான். 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான 180 நாடுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின்படி (Environmental Performance Index), இந்தியாவின் நிலை 176!. இந்தியாவின் மக்கள் தொகையில் 1000 பேருக்கு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை 1.3 ஆகும். உலக அளவில் உருவாகும் குப்பைகளில் இந்தியாவின் பங்கு மூன்றில் ஒரு பங்காகும் ஆனால் இதில் 18% மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. உலகளவில் இதன் சராசரி அளவு 35% ஆகும்.
இந்தியாவுக்கு சாத்தியமாக இருப்பது நுகர்வு சார்ந்த அதன் பொருளாதாரமாகும். இந்த எந்தவிதமான தொழில் சுழற்சியையும் தாக்குப் பிடிக்கும் தன்மை கொண்டதாகும். அதே சமயம் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்வது மக்கள் தொகை அதிகரிப்பினால் நெருக்கடி நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
மேலே குறிப்பிட்டது தவிர்த்து இந்தியா இப்போது எதிர் கொண்டிருக்கும் பிரச்சனைகள் என்ன?
வளர்ச்சி என்றால் உள்நாட்டு உற்பத்தி, வருமானம் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகிறோமே ஒழிய வாழ்க்கைத் தர வளர்ச்சியில் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. உலகின் தலைசிறந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட், ` நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3% தாண்டும் பட்சத்தில் அரசியல்வாதிகள் மறு தேர்தலில் நிற்பதற்கு தகுதியற்றவர்கள் ஆகிவிடுவார்கள்’ என்றார். இதை நாம் பின்பற்றினால், காற்றின் தரமும், சாலைகளின் நிலையும் வேகமாக மேம்படக்கூடும். அதாவது, தெரிவு செய்யப்பட்டப் பிரதிநிதிகளுக்கு சமூகப்பொறுப்பு என்பது முக்கியமானதாகும்.
பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு வேலைகளில் உண்மையாக செலவழிக்கப்படும் தொகை எவ்வளவு? அதிக நிதிச் செலவில் தரமற்ற சாலைகளைப் போடுவதால் ஒரே சாலை பலமுறை போடப்பட்டு வருகிறதை நாம் தினசரி வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். இதைத் தடுக்கும் வகையில் அங்கங்கே அரசியல்வாதிகள், அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் `நிதி ஒழுகல்’களை அடைக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரி, இதற்கெல்லாம் தீர்வு என்ன?
உள்ளூர் அமைப்புகளுக்கு அதிக அதிகாரமும், அந்தந்தப் பகுதிகளுக்குத் தேவையான நிதியை பத்திரங்கள் வெளியிட்டுத் திரட்டுவதற்கான உரிமையையும், செய்யும் வேலைக்கு அந்தந்தப் பகுதி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தியாவின் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முன்மொழிவு வணிகத்திற்கு ஏற்றதாக மாற வேண்டும்.
நகர உள்கட்டமைப்புகளில் இருக்கும் இடைவெளியை சரி செய்ய செயற்கை நுண்ணறிவு, தரவுகள் ஆகியவற்றின் உதவி கொண்டு தீர்வு காண வேண்டும். இந்தியாவெங்கும் நடைபெறும் உள்கட்டமைப்பு வேலைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க டிஜிட்டல் முறையிலான டேஷ்போர்டுகளை உருவாக்க வேண்டும்.
திட்டங்களை திறம்பட, குறிப்பிட்டக் காலவரையறைக்குள் முடிக்கும் நகரங்கள், மாநிலங்களுக்கு பரிசளித்து ஊக்குவிக்க வேண்டும்.
இவையெல்லாவற்றையும் மேற்கொள்ளும்பட்சத்திலாவது அதிக சொத்துள்ள தனிநபர்களின் புலம் பெயர்வு குறையுமா? மேற்குறிப்பிட்ட சில தீர்வுகளோடு மேலும் சில நல்ல ஆலோசனைகளை அமல்படுத்தி பொருளாதாரத்தோடு வாழ்க்கைத் தரத்தின் நிலையையும் உயர்த்த முயற்சி எடுக்கவில்லையெனில் 2047 ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலரை எட்டுவது என்பது கானல்நீராகத் தான் இருக்கும்.
*********
(இக்கட்டுரை எகனாமிக் டைம்ஸில் மேக்மா வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சஞ்சய் சாம்ரியா எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)
கட்டுரையாளர்:
– சித்தார்த்தன் சுந்தரம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

