சிவந்த சீனத்திலிருந்து மலர்ந்த வெள்ளைப் பூக்கள்
உலகைப் புரட்டிப் போடும் அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கியதில் இன்றளவும் ஜெர்மானியத் தாடிக்காரன் மார்க்சுக்குத் தனியிடம் உண்டு. ரஷ்யாவில் அந்த மண்ணுக்கு ஏற்ற வகையில் இலெனின் வடிவமைத்தார். மார்க்ஸ், எங்கெல்ஸ், இலெனின் ஆகியோரின் தத்துவங்களை உள்வாங்கி சீனாவுக்கு ஏற்ற வகையில் மாவோ வடிவமைத்தார். மாவோ சீனாவின் சிந்தனைச் சிற்பி!
ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு முரண் இருக்கிறது. ஒரு பொருளுக்குள்ளிருக்கும் முரண்தான் அதனை மேலும் மேலும் வளர்த்தெடுக்கிறது. இப்படி முரண்கள் பற்றியும் முரண்களின் வளர்ச்சி பற்றியும் மாவோ மிகப் பெரிய அளவில் சிந்தனைப் பங்களிப்புச் செய்திருக்கிறார்.
மாவோ என்றதும் சீனாவின் நெடும்பயணம் நினைவுக்கு வரும். ஆச்சரியமான ஒரு விஷயம். மார்க்ஸைப் போலவே மாவோவும் ஒரு கவிஞர். மாவோ கவிதைகள் எழுதியிருக்கிறார். போராட்டங்களையே பார்த்திருந்தவர் பூக்களையும் பார்த்திருக்கிறார். பாசறைகளை வடிவமைத்தவர் இயற்கையின் பருவங்களில் இலயித்திருக்கிறார். குருதித் திட்டுகளைப் பார்த்தவர் குருவிச் சிட்டுகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
போராட்டங்களின் தலைமைப் பண்பு உள்ளவர்களின் கவிதைகள் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களாக மட்டும் அமைந்துவிடுவதில்லை. ஒரு காலத்தின் வரலாறாகவும் மாறிவிடுகிறது. மா சேதுங் கவிதைகள் என்ற தலைப்பில் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் மொழிபெயர்ப்பைப் படித்திருக்கிறேன்.
“சீன நாட்டின் மகளிர் மனங்கள்
உயர்ந்த குறிக்கோள் உடையன.
பட்டும் மிருதுப் பருத்தியும் வேண்டார் –
படைச் சீருடையையே விரும்புகின்றனர்”
என்று பெண்களைப் பெருமைப் படுத்தும் கவிதையும்
“ஐந்து முடியாட்சிகளையும் முப் பேரரசர்களையும்
தெய்வங்களாக்கும் கட்டுக் கதைகள்
வரலாறு நெடுகிலும்
எண்ணற்ற வழிப் பயணிகளை ஏமாற்றியுள்ளன”
என்று வரலாறு கற்றல் குறித்தும்‘இன்றும் என் நினைவில் நிழலாடுகின்றன.
மாவோவின் மறுபுறத்தை ஆங்கிலத்தின் வழியாக மாலன் தமிழில் தந்திருக்கிறார். போர்க்களத்திலிருந்த மாவோவைக் கைப்பிடித்துப் பூந்தோட்டத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்.
மாலன் பத்திரிகையாளராக இருந்து பத்திரிகையாசிரியராக உயர்ந்து பத்திரிகை உலகில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருப்பவர்.. பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் மொழிபெயர்ப்பில் உதவிகரமாக இருக்கிறது. மாலன் மொழிபெயர்ப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா பரிஷத் விருதை முழுமையான படைப்பாளுமைக்காகப் பெற்றவர். சிங்கப்பூர் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசிலைப் பெற்ற முதல் இந்தியரும் ஒரே தமிழரும் இவர்தான். 2019 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டதோடு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி பரிசினையும் பெற்றிருக்கிறார்.
கவிதைகளின் மொழிபெயர்ப்பில் எளிமையைக் கையாண்டிருக்கிறார். மாவோ பற்றி மாலன் நூலின் முன்னுரையில் எழுதியிருப்பவை மிகவும் முக்கியமான வரிகள்:
“மாவோவும் படை நடத்தியவர்தான். படையணியினரை உற்சாகமூட்ட முழக்கங்களைத் தந்தவர்தான். ஆனால் அவருக்குள் ஒரு மென்மையான கவிதை நெஞ்சம் இருந்தது. நெடும் பயணத்தில் வரும் வழியெல்லாம் அவர் கண்ட இயற்கைக் காட்சிகள் அவர் மனதைக் கொள்ளை கொண்டன. சீனத்தின் நெடிய வரலாறு அவர் நெஞ்சில் புரண்டது. அவரது கவிமனம் அவற்றைக் கவிதைகளாக சமைத்தன.”
ஒரு போராட்டக்காரன் நெடுநாட்களுக்குப் பிறகு பழைய இடங்களைப் பார்வை இடுகிறபோது ஏற்படும் மனச் சித்திரங்களாகப் பல கவிதைகளைப் பார்க்க முடிகிறது.
சியான் நதியின் நடுவில் ஆரஞ்சுத் தீவுக்குக் கவிஞர் மீண்டும் வருகை புரிகிறார்…இலையுதிர் காலத்து இளங்குளிரில் தனியாய் நிற்கிறார். தலைச்சாயம் பூசியதுபோல் ஆயிரம் மலைகள் என்கிற உவமையின் மூலம் வயதான காலத்தில் வந்து பார்ப்பதை வாசகன் ஊகித்தறிய முடிகிறது. வானில் வட்டமிடும் வல்லூறுகள்… வளைந்தோடும் மீன்கள்… என கவிதையில் காட்சிகள் வந்த வண்ணமிருக்கின்றன. கவிஞனின் சிந்தையில் ஒரு வினா எழுப்புகிறது…அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எனப் பாரி மகளிர் வினா எழுப்பிய கபிலர் பாடல் நம் நினைவுக்கு வருகிறது… முன்னொரு காலத்தில், ஆரஞ்சுத் தீவில் “அதிகாரத்தை வெறும் களிமண்ணாய்க் கருதி மிதித்தோம்” மலரும் நினைவுகளில் மனம் பறிகொடுக்கிறார். “வேகம் கொண்ட ஆற்றின் நீரையும் அலைகளையும் விரையும் படகுகளிலிருந்து எதிர்கொண்டோம்” என்றெல்லாம் கவிதை நினைவுகளில் மூழ்கிக் கடைசியில் வினா எழுப்புகிறார்…“எப்படி?” அன்று சாகசங்களைப் புரிய முடிந்ததே அது எப்படி என்று தன் நினைவலைகளில் மூழ்கிப் போகிறார். மீளவும் நினைவுத்தூண்டிலில் ஒவ்வொரு மீனாகப் பிடித்துப் பிடித்து காலத்தின் கரையில் போடுகிறார்.
முன்னொரு காலத்தில் நடந்த நெடும்பயணத்தில், காற்றில் செங்கொடிகள் அணிவகுத்து நகர்ந்த காட்சிகள் மீண்டும் அவர் கவிதைகளில் நகர ஆரம்பிக்கின்றன.
“சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், வயலட்
இந்த வண்ண ரிப்பன்களை அலைத்துக் கொண்டு
வானில் நடனமாடுவது யார்?”
வானவில்லினை வண்ண ரிப்பன்களாக மாற்றிவிடுகிறார் கவிஞர் மாவோ.
ஜப்பானில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு திருடன் திருடிச் சென்ற வீட்டில்
நிலவு மிச்சமாயிருக்கிறது என்று கவிதை எழுதுவான் ஒரு ஜென் கவிஞன். எதிரிகள் தாக்கிச் சென்ற வீடுகளைப் பார்க்கையில் மாவோ எப்படி எழுதுகிறார் பாருங்கள்….
“துப்பாக்கி ரவைகள் துளைத்த கிராமத்துச் சுவர்கள்
அவற்றின் அழகை இரட்டிப்பாக்குகின்றன”
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு புரட்சிக்காரனுக்குள் எப்படியொரு ஜென் மனநிலை? அதனால்தான் இவரால் எழுத முடிகிறது…“இந்த நீல மலைகளைக் கடக்கும்போது ஒருவருக்கு வயது கூடாது”. நிறையத் தொன்மங்களையும் பயன்படுத்தியுள்ளார். “இன்று நம் கரங்களில் நீள்கிறது நீண்ட கயிறு, சாம்பல் வண்ண டிராகனை என்று நாம் கட்டப் போகிறோம்-” என்று தொன்மங்களின் கயிறுகளால் சாம்பல் நிற டிராகனைக் கட்ட முயல்கிறார். கவிதை வரிகளில் வரலாறுகள் அடங்கிவிடுகின்றன. இயற்கையை இயற்கையாகத் தரிசிக்கும் தாகத்தைப் பார்க்க முடிகிறது. மலைகளை மெழுகு யானைகள் என்கிறார். அதனால்தான் அவருக்கு, மலைகள் வெள்ளித் தாவணிகள் உடுத்தி நடனமாடுவதாகத் தெரிகின்றன.
ஓர் எழுத்தே ஒரு வார்த்தை என்ற தனித்துவத்தைக் கொண்ட சீன மொழியின் கவிதைகளை, மையக் கருத்தும் உணர்வும் சிதையாமல் தமிழில் கொண்டு வந்திருப்பது மாலனின் நிரம்பிய எழுத்தனுபவத்தை வெளிக்காட்டுகிறது என்று பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மையென நீருபிக்கின்றன இவரது மொழிபெயர்ப்புகள். மேலதிகமாக சீன வடிவத்திலும் ஆங்கில வடிவத்திலும் சேர்த்துத் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்திருக்கிற புஸ்தகா பதிப்பகம் பாராட்டுக்குரியது.
நூல் : மாசேதுங் கவிதைகள்
ஆசிரியர்: மாசேதுங்
தமிழில் மாலன்
விலை: ரூ.120/-
பதிப்பகம் :Pustaka Digital Media Pvt Ltd
7-002. Mantri Residency,
Bannerghatta Main Road
Bengaluru – 560 076
91 – 7418555884
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்