கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” நூலை முன்வைத்து….
நிழலின் உள்ளுறங்கும் சொர்க்கபுரி
மௌனம், ஒருமையா? பன்மையா?
மௌனத்தின் எதிர்ப்பதம், இரைச்சலா? அதே மௌனமா?
மௌனம் எப்பொழுதும் எங்கும் மௌனமாகவே தான் இருக்குமா?
முதலும் முடிவுமான எல்லைக்குள் மாறாத ஒருணர்வாய் இருந்து விடுவதில் சாத்தியப்படுகிறதா மௌனம்?
என்ற கேள்விகளெல்லாம் “மரநிழல் மௌனங்கள்” கவிதைத் தொகுப்பைப் படித்ததிலிருந்து மனதிற்குள் கிளரி விட்டிருக்கின்றன.
மௌனமாக இருந்து விடுவதென்னவோ வெளியாகத்தான். உள்ளே, பல எரிமலைகள் ஓரிடத்தில் வெடித்துச் சிதறுவதைப்போல் நமைச்சல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு மரம், பிரபஞ்சத்தில் மௌனத்தின் வெளிப்பாடாகிறது. அதன் நிழல் அதைவிட அப்பட்டமான மௌனமே. இந்த இரண்டு மௌனங்களும் அருகருகே இருப்பதால் தான் மரநிழல் அமைதியின் சுகமாகவும், நூல் தலைப்பில் ‘மௌனங்களாகவும்’ தர்சனம் தருகிறது.
“புயலைப் பொருட்படுத்தாத
சந்திப்பின் பின்னணி
அகாலமொன்றில்
மௌன பாஷைகள்
மொழிந்தாய்
அநாதை ஞாபகமென்று
வளர்கிறது.
தண்மணலை
கைகளாலளந்து பிரிந்த
பிறிதொரு
நாளென்றின் மீதே
ஏனோ
பறந்து கொண்டிருக்கிறது
பறவை மனம்.
அகாலம், அநாதை, ஊர்கிறது, பறத்தல், பறவை மனம் போன்ற சொல்லாட்சிகள், இக்கவிதையின் வெளிப்பாட்டுத்திறனில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகள். மௌன வெளிக்கும் இச்சொற்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு என்பதை இதன் மூலம் உணரலாம். பறத்தலின் அனுபவக்கூறுகள் நளினத்தோடு, வார்த்தைகளோடு உறவாடியிருக்கின்றன.
இக்கவிதைத் தொகுப்பு முழுவதும், மனம் சார்ந்த ஊடாடல்கள், உணர்வுகள், கோபம், அன்பு, காதல் ஏக்கம், தனிமை, இரசித்தல் எனப் பார்வைகளின் பதிவுகளாக மிளிர்கின்றன. சிறு சிறு நெருடல்களும், அன்பின் உரசல்களும், சுகமான காதலும் அப்படியே நெளிந்தும், சுருண்டும் பளபளத்துப் போய்க் கிடக்கின்றன. காதலர் உள்ளத்தின் களிநிலையைக் கூறும் பொழுது நந்தவனங்கள் இடம் மாறுகின்றன. பூச்சென்டுகளைப் போல் இதயங்களும் நிறைகின்றன என்பதில் காதல் ரசங்கள் கொட்டுகின்றன.
கடந்து வந்த பாதைகளில், நடந்து முடிந்த நிகழ்வுகள், கோடி. அவை ஒவ்வொன்றும் நம் மனதை ஏதோ ஒரு விதத்தில் நிழலாடும். அந்த உணர்வை மீட்டிப் பார்க்கும் இலாபகம் கவிஞருக்கு கைவந்த கலையாகயிருக்கின்றது என்பதை,
“பசுங்கிளை விரிக்கும்
இளமைக்கால
இனிமை நினைவொன்றின்
நிழலில் இளைப்பாறி
சற்றே மறக்கலாம்
சரேலென ஏறும் வயதை”
எனும் கவிதை வரிகள் மெய்ப்பிக்கும். எதார்த்த நிகழ்வுகளிலிருந்து விடுபட்டு, தூரமாய் நின்று கொண்டு நடப்பைக் கவனிக்கும் மெய்யனுபவம் நடைமுறைக்கு அப்பாலுளதாகும். அதுகூடச் சாத்தியமென்கிறது கவிஞர் மகேஷ் கவிதைகள். இவரின் கவிதைகளில் பெரும்பாலும் உளவியல் தாக்கங்களும். நோக்கங்களும் உள்ளன. இதனை வாசகன் எனும் நோக்கில் உளவியல் கோட்பாட்டுடன் அணுகும் போது, தத்துவார்த்தமானவைகள் பல வண்ண நிறத்துடன் வடிவம் கொண்டிருக்கின்றன.
உளஇயங்காற்றல் (Psychicdynamism) ஃப்ராய்டியத்தை அடிப்படையாகக் கொண்டது. அகமனஅமைப்புகளே (இட், ஈகோ, சூபர் ஈகோ) ஆளுமையைத் தீர்மானிக்கின்றன என்று ஆய்வது மேலும் நனவிலி ஊக்கிகளும், போராட்டங்களும். குழந்தைப் பருவம் போராட்டங்களும் ஆளுமையைக் கட்டமைப்பதில் கலந்து கொள்கின்றன எனும் உளவியல் இயங்காற்றல் கருத்து, கவிஞரின் ஒவ்வொரு கவிதையிலும் ஒப்பிட்டுக் காணமுடிகின்ற உளவியல் தன்மை கொண்டதாகும். மனதின் விருப்பு, வெறுப்புக்களைக் கூறுபோடத் தெரிந்த மாயாஜாலக்காரராகக் கவிஞர் இதன் மூலம் தென்படுகின்றார்.
எதார்த்தவியல்(Realism)கவிதைகளாக இவைகளிருந்தாலும் இதனூடாகச் சங்க இலக்கியப் பாடல்களின் மையமான படிம, உருவகப் பாணியிலும் பல கவிதைகள் காணப்படுகின்றன. அதிலொன்று வாழ்ககையைப் படம் பிடிக்கும்.
“கலையாது அழகாய்
சலவை செய்து
மடித்து வைக்கப்பட்ட
நினைவுத் துணிகளை
மனப்பானையொன்று
துவம்சம் செய்து
கலைத்து வீசும்”
“பரந்து விரிந்த
பிழைத்தலுக்கான
சப்தங்களின் சாகசங்களில்
உதிர்கின்றன சிறகுகள்”
இக்கவிதையில், சப்தம், சாகசம், சிறகுகள், பிழைத்தல் எனும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், வேறொன்றையுணர்த்தும் படிமங்களானவை. கவிதை வாசகனோடு உறவாடும் அற்புதமானயிடங்கள் இவை. சமூகத்தாக்கமுடன் கூடியச் சமூகக் கவிதைகளும் பலவுள்ளன அவற்றில்,
“ஏரி சுருங்கிய
அடுக்கு மாடி வீட்டின்
அழகிய
வரவேற்பறைத் தொட்டியில்
வண்ண மீன்கள்”
இக்கவிதைச் சமூகத்தின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றது. மற்றொரு கவிதை நூலின் தலைப்பை ஒட்டிப் பேருண்மையை வெளிப்படுத்துகிறது. அக்கவிதை,
“நான்கு சுவர்களில்
அடைபட்ட சந்ததிகளைச்
சென்றடையவில்லை
நிழல் சொர்க்கம்…”
என்பதாகும். நிழலின் உள்ளுறங்கும் சொர்க்கபுரிக்குள் தரிசனம் தேடி அலையப்போவது யார்? என்ற ஏக்கம் கவிஞரின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றது. ஒட்டு மொத்தக் கவிதைகளுக்குள் பெருவெளி, சிறகு, பிரதானம், வயது, நேரம், நாள், போன்ற வார்த்தைகளும் அதன் மையப் பொருளும் அதிகமாகக் கவிஞரால் எடுத்தளாப் பெற்றுள்ளன. இவை கவிஞரின் கவிதைகளுக்கான சாவிகளாகவும் அவதாரம் எடுத்திருக்கின்றன.
மௌனம் குறித்தே ஒரு கவிதை பேசுகிறது. அக்கவிதையில். யாரும் உள்ளே நுழைந்து விடாத மாதிரித் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிற நளினத்தைப் பேசும் திறன் சிறப்பானதாகும். மௌனம் எப்பொழுதும் மௌனமாகவே இருந்து விடப்போவதில்லை.அது எப்படியும் மௌனத்தைப் பேசி விடும்.
“கனமான பொழுதுகளில்
மௌனங்களைத் தன் வசமாக்குதலின்
பொருட்டு
பெரும் பூட்டொன்றை
ஏந்திக் கொள்கிறது”
கவிஞரின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும், சொல்ல முடியாத உணர்வுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை உணர மட்டுமே முடியும். வாசகனை இவ்வாறே உள்நிறுத்தித் தேன் குடிக்க வைக்கின்றார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
இதுபோல் இன்னும் தொடர்ந்து தமிழைக் கவிதையுலகிற்குப் பல படைப்புகளைத் தர வேண்டும். அதைத் தமிழுலகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நூல் அறிமுகம் ஏழுதியவர் :
பாரதி சந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பாரதிசந்திரனின் மரநிழல் மௌனங்கள் நூல் அறிமுகம் கவிதையின் ஆழங்களை மிக எளிமையான சொற்களில் அலசிப் பார்க்கிறது. கவிதையின் சொற்களின் அழகுகளை தோலுரித்துப் பார்க்கிறது. கனமான பொருள்களை மிக எளிதாகச் சொல்கிற கவிதையின் நயத்தைக் காட்டுகிற பாரதிசந்திரனின் வரிகள் ரசிக்கத்தக்கன. யதார்த்தவியல் கவிதைகளில் சங்க இலக்கியப் படிமங்களின் சாயலான கவிதைகளையும் படம்பிடித்துக் காட்டியிருப்பது சிறப்பு. நண்பர் பாரதிசந்திரனுக்கு வாழ்த்துகள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதி சந்திரன் அய்யாவின் ஒரு எழுத்தாக்கத்தை வாசிக்க நேர்ந்தது. எப்போதும் போல் தான், மூலை முடுக்கெல்லாம் தண்ணீர் பாய்வது போல், நீள அகலங்களை அளந்து படைக்கப்பட்டிருக்கிறது l
விமர்சனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் டாப் ரகம்தான்
“அடுக்கு மாடி வீட்டின்
அழகிய
வரவேற்பறைத் தொட்டியில்
வண்ண மீன்கள்”
சமூக அவலங்களை பட்டென்று அறைந்து சொல்லும் இடங்களை
சந்திரன் அய்யா படம்பிடிக்க தவறுவதில்லை .
சந்திரன் ஐயாவுக்கும் புக் டே இதழுக்கும் வாழ்த்துக்கள்.