புத்தகத்தின் பெயர் – மறைக்கப்பட்ட பக்கங்கள்
ஆசிரியர் – கோபி ஷங்கர்
பதிப்பகம் – கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் – 296
விலை – 350

பாலினத்தேர்வு, பாலியல்த்தேர்வு இதன் அடிப்படையில் ஒருவர், தான் ஒடுக்கப்படுபவதாக நினைக்கும்படி சமூகம் இயங்குகிறது என்றால் அச்சமூகத்தின் வாழ்வியல் முறையில் ஒரு பெரும்பிழை நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். வயித்து பசி எப்படியோ அப்படித்தான் வயித்துக்கு கீழ இருக்குற பசியும் என்ற புரிதலே மனிதகுலத்தை மிகச்சரியாக நாகரீக தளத்தினை நோக்கி நகர்த்தும். மாறாக பாலியலின் வழி நாம் அதிகாரத்தை நிலைநிறுத்தி அதையே உண்மை என்று மீணடும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதில் உருவாகும் சிக்கல்களை தீர்க்க மீண்டும் அதிலிருந்தே தீர்வுகளையும் தேடுவதுதான் இந்த சமுதாயத்தின் அபத்தம் எனலாம். நாம் ஆண்,பெண் காதல், காமம் குறித்தே பேசுவது இல்லை… இதில் திருநங்கை, தன்பாலின ஈர்ப்பாளர்கள், பால்புதுமையினர் குறித்தெல்லாம் எப்பொழுது உரையாடலை துவக்குவோம்?

மறைக்கப்பட்ட பக்கங்கள் பால்புதுமையினர் குறித்த வரலாற்று பக்கங்களையும், உலகில் பெரும்பான்மையான நாடுகள் பாலின சமத்துவம் குறித்து நிகழ்த்தும் உரையாடல்களையும், அதன் வரலாற்றையும், நம் சமூகத்தின் முன் இருக்கும் மிகப்பெரும் பாலின சமத்துவம் குறித்த பொறுப்புகளையும் முன்வைக்கிறது. நம் ஆதிச்சமூகம் பாலியல் குறித்த பரந்துபட்ட பார்வையை பல்வேறு தளங்களில் கொண்டிருக்கிறது. இடைபட்ட காலங்களில் ஏற்பட்ட மத, அரசியல் மாற்றங்கள் நமது சமூக தளத்தில் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்திய்யுள்ளன. இன்று நாம் பாலியல் சம்பந்தமான அணுகுமுறைகளில் மிகவும் பிற்போக்குத்தனமான தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே நாம் அவமானகரமாக எண்ணவேண்டிய விஷயம் என நினைக்கிறேன். இதுவெறுமனே மனிதன் உருவாக்கிய அமைப்பு முறையல்ல. இயற்கை உருவாக்கிய அன்பின் வளம். ஆனால் அதைக்குறித்து கொஞ்சமும் புரிதலில்லாமல் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமே? எப்பொழுதுதான் நாம் இதற்கான உரையாடலை துவக்குவோம்?

நம் சமூகத்தில் முற்போக்கு என்னும் தளத்தில் இயங்குகிறவர்கள்கூட பெரும்பாலும் பால்புதுமையினர் குறித்து அறிவியல்ப்பூர்வமான எந்தஒரு சிந்தனைகளும் இல்லாமல், அதை கலாச்சார தளத்திலிருந்து அணுகுவதும், ஆண்,பெண் இடையே வருவதுதான் காதல் என்கிற தளத்திலிருந்து உரையாடுவதும் ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் மாற்றம், மனிதகுலத்திற்கான அறிவுத்தேடல், ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிறோம் என்று பேசுபவர்களே, பாலியல் சார்ந்த உரையாடல்களில் மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பது அவர்களது அரசியல் சார்ந்த நடவடிக்கைகளையே கேள்விக்குறியாக்குகிறது. இதை சொன்னதும், எப்படி நீங்கள் இப்படி பேசலாம் என்று கேட்கலாம். உண்மை இதுதானே, வாழ்வின் அத்தியாவசியமான செயல்பாடுகளில் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் இவர்கள் பேசும் விடுதலை அரசியல் என்பது எதற்காக? நம் சமூக அமைப்பே ஒருவிதத்தில் பாலியலை மிகவும் கொச்சைபடுத்தக்கூடியதாகவும், அதை அருவருக்கத்தக்கதாக காண்பித்தும் தன் அரசியல் குற்றங்களை நிகழ்த்துகிறது. ஒருவகையில் பாலியல் மீதுள்ள சிக்கல்களை விடுவிக்கும்பொழுது சமூகம் இயற்கையோடு இணைவதோடு நம் அமைப்பின் மோசமான முரண்களையும், சிக்கல்களையும் தீர்க்க முடியும். ஆனால் நாம் இதுக்குறித்து பெரியளவில் பேசுவதே இல்லையே? எப்போது நாம் பேச துவங்குவோம்?நம் சமூகத்தின் கடந்தக் கால பாலியல்த்தேர்வுகளை சுட்டிக்காட்டும்பொழுது நம் புராணங்களில் நிறைந்துக்கிடக்கும் சுதந்திரமான, கே,லெஸ்பியன், மற்றும் திருநர் பால் ஈர்ப்புகளை வரிசையாக அடுக்குகிறார் கோபி ஷங்கர். பலர் இங்கு தெய்வமாக கும்பிடும் கடவுள்களிடையே யதார்த்தமாக இருக்கும் சுதந்திரமான பாலின, பாலியல் உறவு தேவை நாம் ஏன் ஏற்க மறுக்கிறோம். நமக்கு தெரியாதா? நம் கடவுள்களின் பிறப்பின் அடிப்படையிலும் பாலியல்த்தன்மை இருப்பது? சிலையாகவும், புகைப்படங்களாகவும் இருக்கும் கடவுள்களின் மீது இருக்கும் மதிப்பு சக மனிதர்களாக, உயிரும் உணர்வும் மிக்க ஒருவராக, ஒருத்தியாக இருக்கும் இவர்கள் மீது தோன்றக்கூடாது? அவர்கள் எந்த தவறும் இழைக்கவில்லையே, இயற்கை அவரவர்க்கு அளித்த வாழ்க்கையை பரிபூரணமாக வாழ இந்த பூமியில் அனைவருக்கும் இடமுன்டு. அதை நாம் பின்பற்றுவதுதானே நமது கடமையும். எதிர்பாலின ஈர்ப்பினை கொண்டாடும் நாம், தன்பாலின ஈர்ப்பாளர்களை, திருநங்கைகளை இயற்கையின் அங்கமாக ஏன் ஏற்க மறுக்கிறோம். இது அவர்களின் மீது பரிதாபம் கொள்ளுங்கள் என்று சொல்லப்படுவதல்ல. அவர்களது உரிமைகளை தட்டி பறிக்காதீர்கள் என்கிற குரலே… நாம் எப்போது அவர்களது உரிமைக்குரலை மதிக்கப்போகிறோம்?

வரலாற்றில் மிகப்பெரும் சாதனைகள் புரிந்த பலர் பால்புதுமையினராக இருந்துள்ளனர். இன்றளவும் இருக்கின்றனர். மனித நாகரீகத்தின் மிகப்பெரும் சாதனையான பேப்பரை கண்டுபிடித்தது ஒரு திருநங்கையே. உலகப்புகழ்பெற்ற ஓவியர் டாவின்சி, அறிவுலக் மேதை சாக்ரட்டீஸ், என இன்னும் பலர் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். நம் காலத்திலும் அவர்களுக்கான சமவாய்ப்பினை உருவாக்கும்பொழுது நம் சமூகம் உளவியல் ரீதியாக செழுமையான மாற்றமடைவோடு சமத்துவமான அறிவியல்ப்பூர்வமான மாற்றங்களும் உருவாகும். கடந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டீன் தன் பாலின ஈர்ப்பினை ஆதரித்து அதை மனநோய் பட்டியலிலிருந்து விடுவிக்க கோரி தன் ஆதரவினை அளித்துள்ளார். ஆண், பெண் தவிர்த்து 20க்கும் மேற்பட்ட பல பாலினங்களும், பாலியல உறவுத்தேர்வுகளும் உண்டு என்பதை கண்டறிந்து அதை இயற்கையின் ஒரு அங்கம் என முன்னிறுத்தியது அறிவியலும் பகுத்தறிவும் நம் சமூகத்தில் நிகழ்த்திய மாபெரும் மனிதகுல செயல்பாடு என நாம் சொல்லலாம்.

ஒரு ஆண், பெண் தன் பாலினத்தை வெளிபடுத்துவதுபோல, பால்புதுமையினர் தங்கள் பாலின அடையாளங்களை வெளிப்படையாக சொல்லும் சூழல் இந்த அமைப்பில் வரவேண்டும். தன் பாலியல் தேர்வினை, அதாவது யாரை காதலிக்க வேண்டும், ஒரு ஆணையா? அல்லது பெண்ணையா? திருநங்கையையா? ஆணும் ஆணுமா? பெண்ணும் பெண்ணுமா? ஒரு தனிநபருக்கு திருமணம் வேண்டுமா, வேண்டாமா? குழந்தைகள் வேண்டுமா, வேண்டாமா? இதையெல்லாம் இந்த சமூகம் முடிவு செய்வதை நிறுத்தி, ஒவ்வொரு தனி நபரும் முடிவு செய்யும் சூழல் உருவாக வேண்டும். கோபி ஷங்கர் இந்த புத்தகம் முழுவதும் இதன் தேவைகளை மிக கனகச்சிதமாக வரலாற்று ஆதாரங்களுடனும், அறிவியல்பூர்வமாகவும் நிறுவுகிறார். தமிழ்ச்சூழலில் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். ஒவ்வொருவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய புத்தகம். நாம் இதற்காக ஒரு பெரும் பயணத்தை துவக்க வேண்டியுள்ளது. அது எவ்வுளவு சீக்கிரம் துவங்குகிறதோ அந்தளவிற்கு நம் சூழலில் மனிதர்களின் உணர்வும், உயிரும் பாதுகாப்பு பெறும். அதுவரை இதை மனிதர்கள் வாழும் சமூகம் என்றழைக்கவே நா கூசுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *