மறைமலை இலக்குவனார் எழுதிய "செயற்கை நுண்ணறிவு" புத்தகம் | Maraimalai Ilakkuvanar's Seyarkai Nunnarivu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

மறைமலை இலக்குவனார் எழுதிய “செயற்கை நுண்ணறிவு” – நூல் அறிமுகம்

ஓய்வுபெற்ற ஒரு தமிழ் பேராசிரியர் இந்த வயதில் ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பைப் பற்றி தமிழில் அறிமுகம் செய்திருப்பது என்பது ஒரு தனிச்சிறப்பு. அதுவும் புதியதாக வந்தவுடனே தமிழில் எழுதப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்கிற இந்த நூல் மூன்று நூல்களை உள்ளடக்கி இருக்கிறது.

1. செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்,
2.ரோபோட்டுகள்: கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பு வரை,
3. வானில் பறக்கும் கண்கள் – ட்ரோன் உலகம்.

மூன்று நூல்களுக்கும் இந்நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் தனித்தனி முன்னுரையை எழுதியுள்ளார்.

இந்த நூல் குறிப்பிட்ட ஒரு பிரிவு வாசகருக்கு என்று இல்லாமல் அனைத்துதரப்பட்டவர்களுக்கும் உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவைப் பற்றி தமிழில் அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த நூல் பயன்படும், அதாவது மாணவர், ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப ஆர்வலர், பொதுவாசகர் என அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது.

இன்று அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்து விட்டது, அதனால் அதனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பெரும்பாலோருக்கு ஏற்படும், அப்படிப்பட்ட அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை புரிதலை இந்நூல் தருகிறது. குறிப்பாகத் தமிழில் செயற்கை நுண்ணறிவுப் பற்றி அறிய விரும்பும் மாணவர்களுக்குப் பெரும் பயனளிக்கும்படியாக இந்நூல் இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு அனைத்துத் துறைகளிலும் நுழைவதால், பழைய வேலை வாய்ப்புகள் இழக்க நேரிடுகிறது என்பது உண்மையே, அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளையும் அளிக்கிறது. அதனைப் பற்றியும் இந்த நூல் பேசுகிறது, இது இந்த நூலின் சிறப்புகளில் ஒன்று.

“செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்” என்கிற முதல் நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தாலேயே இந்த நூல் எப்படிப் பிரித்து ஒவ்வொன்றையும் விளக்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 1.அறிமுகம் மற்றும் அடிப்படை கருத்துகள், 2.மாதிரிகள் கிளைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், 3. கருவிகள் சொற்கள் மற்றும் நடைமுறை பயன்பாடுகள், 4.நன்மைகள் சவால்கள் மற்றும் ஆட்சிமுறைகள், 5.எதிர்கால நோக்கு மற்றும் கேள்வி-பதில். இந்த ஒவ்வொரு பகுதிகளிலும் சிறு பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. அடிப்படை புரிதலுக்கு மட்டுமல்லாது அதற்கு மேலான புரிதலுக்கும் உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? எப்படிச் செயல்படுகிறது? அதன் கூறுகள், வகைகள், அதன் மாதிரிகள், அதன் கிளைகள், தெரிந்திருக்க வேண்டிய செயற்கை நுண்ணறிவுச் சொற்கள் என்பது போன்று தேவைப்படுவதைத் தலைப்பிட்டு ஒவ்வொன்றாகப் பிரித்து விளக்கி இருப்பது இந்த நூலின் எளிமைக்குக் காரணமாக இருக்கிறது.

சான்றுக்குச் செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? என்பதற்கு நூலாசிரியர் எப்படிப் பதிலளிக்கிறார் என்று பார்ப்போம்.

“செயற்கை நுண்ணறிவு (AI) என்பது இயற்கை மனித நுண்ணறிவைப் போலச் செயல்படும் திறனைக் கணினி மற்றும் இயந்திரங்களுக்கு வழங்கும் தொழில்நுட்பமாகும். இது தரவிலிருந்து கற்றல், முறை காண்பித்தல், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் போன்ற மனித உணர்திறனுக்கேற்பச் செயல்கள் செய்யும் திறனை வழங்குகிறது. இயந்திரக் கற்றல் (Machine Learning) மற்றும் ஆழமான கற்றல் (Deep Learning) போன்ற முறைகளைப் பயன்படுத்தி, A1 தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.”

இங்கே உணர்திறன் அல்லது அறிவு திறனைப் பற்றிதான் பேசுகிறது அதனால் Artificial Intelligence என்கிற ஆங்கிலச் சொல்லிற்குச் செயற்கை அறிவுத்திறன் என்று தான் தமிழில் குறிப்பிட வேண்டும், தொடக்கத்தில் இருந்தே நுண்ணறிவு என்கிற சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற இடங்களில் நுண்ணறிவு என்பதற்கு அறிவுத்திறன் என்றே பொருள் என்று நாம் புரிந்து படிக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு என்பது கணினி அறிவியலின் ஒரு கிளையாகும், இது கற்றல், பகுத்தறிவு, சிக்கல் தீர்க்கும் மற்றும் உணர்தல் உள்ளிட்ட மனித அறிவை உருவகப்படுத்தும் திறன் கொண்ட அமைப்புகளை உருவாக்குகிறது. பெரிய தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, மொழியைப் புரிந்துகொள்வது போன்ற சிக்கலான பணிகளைச் செய்யச் செயற்கை நுண்ணறிவு, கணினிகளை அனுமதிக்கிறது, பெரும்பாலும் இயந்திரக் கற்றல் மற்றும் ஆழமான கற்றல்மூலம் துல்லியத்தை மேம்படுத்துகிறது.

இதில் மிகவும் முக்கியமானது இயந்திரக் கற்றலாகும். மொழிகளில் கற்றுத் தரவுகளைச் சேகரித்துக் கொள்கிறது செயற்கை நுண்ணறிவு. மொழியைக் கற்கும் முறையில் உரை, படம், இசை, வீடியோ ஆகியவற்றை உருவாக்குகிறது.

ChatGPT: உரை உருவாக்கும் AI. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மனிதனுக்குச் சமமான பதில்களை உருவாக்குகிறது.

DALLE: உரையின் அடிப்படையில் படங்களை உருவாக்கும் AI.

MusicLM: உரையின் அடிப்படையில் இசை உருவாக்கும் AI.

RunwayML: வீடியோக்களை உருவாக்கும் மற்றும் திருத்தும் AL கருவி

இவ்வாறு இந்த நூல் ஒவ்வொன்றுக்கும் சான்றுகள் கொடுத்து விளக்குவதால் அனைவராலும் செயற்கை நுண்ணறிவை எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது.

செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது என்பது ஓர் அடிப்படைக் கேள்வி, இதனைப் புரிந்து கொண்டால் மற்றவைகளைப் புரிந்து கொள்வது எளிது. செயற்கை நுண்ணறிவு தரவுகளைச் சேகரிக்கிறது, சேகரித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்கிறது அதனுடன் கூடவே கற்கவும் செய்கிறது, மாதிரிகளின் மூலம் பயிற்சியும் பெறுகிறது, தரவுகள் அடிப்படையிலும் பயிற்சிகள் பெறுவதன் மூலமும் முடிவுகளை எடுக்கிறது. முடிவுகள் மீதான கருத்துகளைப் பெற்றுத் தம்மைத் திருத்தி கொள்கிறது.

இன்றைய நிலையில் காணப்படும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எதிர் காலத்தில் செயற்கை மிகை நுண்ணறிவாக மாறும் என்பதையும் இந்த நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

மறைமலை இலக்குவனார் எழுதிய "செயற்கை நுண்ணறிவு" புத்தகம் | Maraimalai Ilakkuvanar's Seyarkai Nunnarivu Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

“செயற்கை மிகை நுண்ணறிவு (Artificial Super Intelligence – ASI) என்பது மனித நுண்ணறிவைக் கடந்துபோகும் திறன் வாய்ந்த, மிகவும் மேம்பட்ட, சுய-விழிப்புணர்வு கொண்ட AI அமைப்பாகும். செயற்கை மிகை நுண்ணறிவு (ASI) என்பது மனித அறிவை மீறிச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு. இது மனிதனின் அறிவாற்றல், உணர்வு, சுய விழிப்புணர்வு, மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனைவிட மேம்பட்ட திறன்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இது கற்பனையின் நிலை – தற்போது உலகில் எந்த AI-யும் ASI நிலையை அடையவில்லை. ஆனால், இது எப்போது உருவாகும்? எப்படிச் செயல்படும்? என்ற கேள்விகள், AI ஆராய்ச்சியில் மிக முக்கியமானவை..”

இதை அறிந்து கொள்ளும் போது எதிர்காலத்தில் முக்கியமான முடிவுகளை மனிதன் செய்யப் போகிறானா? செயற்கை மிகை நுண்ணறிவு முடிவு செய்யப் போகிறதா? என்கிற அச்சம் ஏற்படவே செய்கிறது. மனிதனே பல நேரங்களில் சமூகத்துக்குக் கேடுவிளைவிக்கும் முடிவுகளை எடுத்துவிடுகிறான், அதனால் இதுவரை பேரழிவுகளைச் சமூகம் கண்டுள்ளது, அப்படி இருக்கச் செயற்கை மிகை நுண்ணறிவு எடுக்கும் முடிவுகள் மனிதனையும் சமூகத்தையும் பேரழிவுக்கு உள்ளாக்குமா? என்கிற கேள்வி எழுவது இயற்கையே. இதற்கு ஒரே பதில், செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடனும் (Responsible) அறநெறியுடனும் (Ethical) வடிவமைக்க வேண்டும். இதனை இயந்திரத்திடம் ஒப்படைக்காமல் மனிதன்தான் தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும்.

தற்போது செயற்கை நுண்ணறிவு இருபது துறைகளில் செயல்படுவதாக இந் நூலாசிரியர் தொகுத்துத் தந்துள்ளார். 1.மின்னணு வணிகம், 2.கல்வி, 3.ரோபோடிக்ஸ், 4.வழிசெலுத்தல் (GPS & Navigation), 5.மருத்துவம், 6.வாகனத் தொழில்நுட்பம், 7.வேளாண்மை, 8.மனிதவள மேலாண்மை, 9.நமது வாழ்வியல், 10.சமூக ஊடகம், 11.விளையாட்டு, 12.வானியல், 13.Chatbot-கள், 14.பாதுகாப்பு, 15.நிதி, 16.தரவுப் பாதுகாப்பு, 17.பயணம் மற்றும் போக்குவரத்து, 18.சந்தைப்படுத்துதல், 19.பொழுதுபோக்கு, 20.பாதுகாப்பு மற்றும் இராணுவம்.

மிகமிக முக்கியத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு செயல்படுகிறது, அதனால் அது பாதுகாப்புடனும் மனிதனுக்குத் தீங்கு நேராவண்ணம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும். இது மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தீங்கு என்னவென்றால், உணர்வு இல்லாத முடிவுகள், தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சனைகள், பாகுபாடு மற்றும் நேர்மை குறைபாடுகள், மனிதர்கள் மீது விருப்பப்படியான சார்பு அதாவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயல்படுவது, இதைவிட மிகவும் மோசமானது என்னவென்றால் தவறான தகவல்களை உருவாக்கிப் பரப்புதல். இவைகளை மனதில் கொண்டு மனிதர்கள் தான் இதற்கான நெறிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டும்.

இரண்டாம் நூல் ரோபோட்டுகள் பற்றியது. இதன் பொருளடக்கமே இந்தப் பகுதியினை வெளிப்படுத்துகிறது. ரோபோக்களின் அடிப்படைகள் மற்றும் வரலாறு, கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம், பயன்பாடு மற்றும் வகைகள், எதிர்காலம் மற்றும் நெறிமுறைகள், ஒழுக்கம் சமூகம் எதிர்காலம், மாணவர்கள் ஆர்வலர்களுக்கான கற்றல். இதைப் படிக்கும் போதே இந்த நூல் எவ்வகையில் பிரித்து விளக்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ரோபோக்கள் என்றால் என்ன என்கிற கேள்வியினை எழுப்பி நூலாசிரியர் பதிலளிக்கிறார்.

“ஒரு ரோபோ என்பது, பொதுவாக ஒரு நிரல் (program) மூலம் இயக்கப் பட்டு, தானாகவே வேலைகளைச் செய்யக்கூடிய ஒரு இயந்திரச் சாதனம் ஆகும். இது மனிதர்களைப் போல் வடிவமைக்கப் பட்டிருக்கலாம் அல்லது தொழிற்சாலைகளில் காணப்படுவது போல் ஒரு இயந்திரக் கரமாக (arm) இருக்கலாம். ரோபோக்கள் மனித முயற்சிகளைக் குறைக்கவும், ஆபத்தான அல்லது சலிப்பூட்டும் வேலைகளைச் செய்யவும் உதவுகின்றன.”

ரோபோக்கள் என்பது வெறும் இயந்திரங்கள் அல்ல, அவை உணர்ந்து செயல்படக்கூடிய, மனிதனுடன் தொடர்பு கொள்ளக்கூடிய, சில நேரங்களில் மனிதனைப் போலவே தோன்றும் ஒரு புதிய வகை உயிர்கள் என்கிறார் நூலாசிரியர்.

ரோபோக்கள் மனித உருவத்தை மட்டும் கொண்டதாக இல்லை, பெரும்பாலான ரோபோக்கள் மனித உருவம் அற்றவை. இவை பொதுவாக இயந்திரக் கைகள், சக்கரங்கள் கொண்ட தளங்கள் அல்லது குறிப்பிட்ட பணி சார்ந்த வடிவங்களில் இருக்கிறது. ரோபோக்கள் பொதுவாகக் குறிப்பிட்ட பணிக்காக வடிவமைக்கப்பட்டவை, அவை நிரலாக்கப்பட்ட பணிகளை மட்டுமே சிறப்பாகச் செய்கிறது.

ரோபோட்டுகள் பல வகைப்படும். 1.தொழிற்சாலை ரோபோட்டுகள், 2.சேவை ரோபோட்டுகள், 3.நகரும் ரோபோட்டுகள், 4.மனித வடிவ ரோபோட்டுகள், 5.மருத்துவம் அறுவை சிகிச்சை ரோபோட்டுகள், 6.இராணுவம் பேரிடர் மீட்பு ரோபோட்டுகள். ஒவ்வொன்றையும் நூலாசிரியர் விவரிக்கிறார். விரிவாகச் செல்லாமல் தேவைப்படுகிற அளவுக்கு விளக்கங்கள் கொடுப்பதால் இந்த நூல் படிப்பதற்கு எளிதாக இருக்கிறது.

ரோபோக்களால் பல்வேறு தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படுகிறது, அதில் பொருளாதாரத் தாக்கம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

“ரோபோட்டியலின் பரவலான பயன்பாடு பொருளாதாரத்தின் கட்டமைப்பில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உற்பத்தி செலவு குறைவு: ரோபோக்கள் 24/7 வேலை செய்வதாலும், பிழைகளைக் குறைப்பதாலும், நிறுவனங்களுக்கான உற்பத்திச் செலவு குறைகிறது. இது சில நேரங்களில் பொருட்களின் விலைகள் குறைவதற்கும், சந்தை விரிவடைவதற்கும் வழிவகுக்கும்.

லாபம் மற்றும் சமநிலை சிக்கல்: நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைத்தாலும், இந்த லாபங்கள் இயந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தின் உரிமையாளர்களிடமே குவிவதால், சமுதாயத்தில் வேலைவாய்ப்பு சமநிலை சிக்கல் உருவாகிறது.

அசமத்துவம் (Inequality): உயர் கல்வி மற்றும் அதிகத் திறன்கள் (High Skills) கொண்டவர்கள் (ரோபோக்களை வடிவமைப்பவர்கள்) பெரும் பயன் பெறுவார்கள். அதேசமயம், குறைந்த திறன்கள் கொண்டவர்கள் வேலை இழப்பால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள்.

அரசுகளின் தலையீடு: இந்த ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க, அரசுகள் புதிய பயிற்சி (Reskilling) மற்றும் திறன் மேம்பாடு (Upskilling) திட்டங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.- வருமான வரி அல்லது “ரோபோ வரி” மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் விவாதங்களும் நடைபெறுகின்றன.”

எந்தப் படைப்பாக இருந்தாலும் அதில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும், அளவுகள் மட்டுமே மாறுகின்றன. இதனை மனதில் கொண்டு மனிதனே நெறிப்படுத்த வேண்டும்.

மூன்றாவது நூல் ட்ரோன் பற்றியதாகும். ட்ரோன் என்பதை, மனிதன் இல்லாமல் வானில் பறக்கும் விமானம் என்று சொல்லாம். முதலில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்டது இன்று பல தேவைகளை நிறைவு செய்ய ட்ரோன் உருவாக்கப்படுகிறது.

ட்ரோன்கள் ஒரு தனிப்பட்ட தொழில்நுட்பம் கிடையாது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் ஆகிய கல்வியுடன் இணைந்தது ஆகும். ட்ரோன்கள் பல்வேறு தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதனைப் பற்றிய கல்வியும் வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. ட்ரோன்களின் அடிப்படைக் காரணமாக இருப்பது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டுகள், ட்ரோன்கள் ஆகியவை ஒன்றிணைந்த தொழில்நுட்பமாகும் அதனால்தான் இந் நூலாசிரியர் மறைமலை இலக்குவனார் நம் தாய் மொழி தமிழில் இந்த மூன்றைப் பற்றி எழுதி வெளியிட்டுள்ளார்.

தமிழில் புதிய அறிவியலைப் படிக்கும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: செயற்கை நுண்ணறிவு (2026)
ஆசிரியர்: மறைமலை இலக்குவனார்
வெளியீடு: மின்னங்காடி
விலை:  ₹.300/-
அறிமுகம் எழுதியவர்:    அ.கா.ஈஸ்வரன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *