“மறைத்தல்”
மறைத்து விட்டதாக
மார் தட்டிக் கொள்கிறீர்கள்
மறைத்ததால் தான்
உற்று நோக்குகின்றன
ஊரின் கண்கள் எனும்
உண்மை உணராமல்
விழிகளை மூடிவிட்டு
உலகம் இருண்டு விட்டதாக
எண்ணிக் கொள்ளும்
உங்கள் பூனைத்தனம்
அறிவாளித்தனமா
இல்லை
அறிவிலித்தனமா
புரியவில்லை
நாடகத்தனம் என்பது
ஒவ்வொரு முறையும்
வேடம் கலையும் போது
வெளிப்பட்டு விடுகிறது
மறைக்க மறைக்க
வெளிப்படுகிறீர்கள்
வெளிப்பட வெளிப்பட
மறைக்கப்படுவீர்கள்…
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்.