புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே!
மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன்
இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி.  அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில் எழுதியவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கொண்டே வந்து கடைசியில், செல்வலட்சுமியின் இறப்புக்கு காரணமான அந்த டைரி கண்களைக் குளமாக்கியது.
குலசேகர பட்டிணம்
குரங்குச்சாமி வேண்டாம்மா, கிருஷ்ணர் வேசத்துக்காக அம்மாவிடம் புளுகியது, வசூல் பணத்தை பிரிப்பதில் அண்ணுடன் திருட்டு ஒப்பந்தம், எங்க நாம சாமியாடலனா நம்ம விரதத்தை குறை சொல்லிடுவாங்களோனு போட்ட ஆட்டம் சிறப்பு.
(கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! 🙂 வாய் விட்டு சிரித்தாயிற்று.)
அதுமட்டுமா?! இன்னொரு நாள் திருவிழாவில்,
சுழன்றாடிய சம்படி ஆட்டம். ஆம் மாரி ஒரு பிறவிக் கலைஞன்.  கிடைக்கல கிடைக்கல என மேடையில் தூள் கிளப்பிய சுட்டிப்பையன் மாரி,  அதே மேடையில் மின்சார பூவேக்கு ஆடிய கார்த்திகாவுக்கு இணையாக கெத்து காட்டி கடைசியில், மேடையிலேயே  முத்தம் பரிசளித்த குறும்பு பையன் மாரி!
சோத்துக் களவாணிகள்
கடவுளின் கண்களையே தன்னுடைய கண்ணாக கொண்டு பார்க்கும் சாமிக்கண்ணு, மிக மிக ஏழையான தன் நண்பனின் மதிய உணவை மாரி குழாமினர் திருடி சாப்பிட்டு விட்டதாக பழி போட்ட சாமிக்கண்ணு, ஏன் அப்படி செய்தான் என மாரி தெரிந்து கொள்ளும் இடம் நெகிழ்ச்சி.
பறவைகளின் கடிதம்
கண்ணி வைத்து அத்தனை பறவைகளையும் பிடித்து சமைத்து சாப்பிட்டு விடும் மாரி குழு, எப்படி ஸ்டீபன் என்னும் பறவைக்காதலனின் இறப்புக்கு காரணமானதை மறக்கவே நினைக்கும் மாரி.
இதே மாரி தான் வளர்ந்த பின், ஒருநாள்….
ரயிலில் தன் கூண்டை வைத்து விட்டு காணாமல் போய்விட்ட கிளி ஜோசியக்காரனுக்காக மூன்று மணி நேரம் காத்திருக்கும் மென்மனம் கொண்ட மாரி…
மறக்கவே நினைக்கிறேன்.. |
ஜோசியக்காரர் வராததால் அங்குள்ள அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கையில், அந்த கிளியை அதிகாரிகள் தூக்கி மேலே பறக்க விட,   இறக்கைகள் ஒடிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட, அது சொத்தென்று தண்டவாளத்தில் விழுந்ததை நான் பார்த்திருக்கவே கூடாது, மறக்கவே நினைக்கிறேன் என்னும் மாரி! 🙁
எவரும் அறியாது நெல் அவிக்கும் பாத்திரத்தில் விழுந்து விட்ட ராஜி பூனையின் மறைவை மறக்கவே நினக்கும் மாரி! 🙁
கதைகள் சொல்லும் பாப்பா-அம்மா, மெல்லிதயம் கொண்ட, அதே சமயத்தில் தன் தங்க செயினைக் கொடுத்து விட்டு, போய் வா மாரி என வெறும் கழுத்துடன் கை அசைக்கும் அக்கா, சம்படி ஆட்ட கலைஞரான, ஒருநாளும் மாரியை அடித்திராத செல்வராசு அப்பா. ஆனால் ஒரே ஒரு முறை மாரியை அடித்தார். ஏன்? அதனாலே இன்றளவும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத மாரி!
பாலியல் தொழில் செய்த சொட்டு அக்கா,  கார்த்தி எனும் கார்த்திகா, தில்லான அழகு பெண் சுப்பக்கா, மாரியின் கஸ்டத்தில் உதவிய இருட்டு நாட்டு பெருமாள்,   மனநலம் பிறழ்ந்த, அதனால் பிச்செயெடுக்கின்ற, தன்னுடைய தந்தையை ஒருநாள்… என்னபடம் பார்த்தோம் என வெளியே சொல்ல இயலாத தியேட்டரில் வைத்து பார்த்து விட்ட மாரியின் நண்பன், மதுரை பஸ்ஸில் ஏற்றி விட்டு தந்தையை தொலைத்து விடுகிறான். பின் மாரியும் நண்பனுமாக அலைந்து தேடியும் இன்னும் கிடைக்காத சின்னகுப்பை மாமா. தன்னுடன் படித்த தோழியின் அக்கா திருமணத்திற்கு சென்று, அங்கு மிக மோசமாக நடத்திய தோழியின் தந்தை,  பசியினால் இரண்டே இரண்டு வாழைப்பழத்தை சாப்பிட்டதற்கு அடித்த மோசமான தோப்புக்காரன், என எல்லாவற்றையும் மறக்கவே நினைக்கும் மாரி. ஆனால் எதையுமே நாம் மறக்க இயலாத படி எழுத்தில் மாயம் செய்து, சமூக அவலமெனும் பெரும் பாரத்தை வாசக மனதில் இறக்கி வைத்து விடுகிறார்.
மறக்கவே நினைக்கிறேன் - மாரி ...
மாரிக்கு மட்டுமல்ல் எங்களுக்கும் மிகவும் பிடித்த ஜோ
❤️ ,
மற்றும் ஜோவின் கணவரான தாய்மாமா போன்றவர்களால் தான் மனிதம் இன்னும் இருக்கிறது.
தனக்கென யாருமே இல்லாத ஒரு பெருநகரத்தில் இறந்து போன மணிமேகலையின் தந்தையை அடக்கம் செய்ய சென்னையிலிருந்து வந்து, சவக்குழி தோண்டிய மாரியை என்றும் மறக்க இயலாது.
அன்பின் மாரி செல்வராஜ் அவர்களுக்கு,
மனிதர்களின் மீதான உங்கள் அன்பும், சமூக அக்கறையும் அதை நீங்கள் தெரிவிக்கும் பாங்கிலும் கூட மிகவும் உயர்ந்து நிற்கிறீர்கள். பரியேறும் பெருமாள் ஒன்றே போதும், சிறந்த எடுத்துக்காட்டு.
உங்களுக்கு மிகவும் பிடித்தது சினிமா துறைதான்,  என்றாலும், எழுத்தின் வழியாகவும் படைப்புகளைத் தாருங்கள். உங்களது சினிமாவைப் போலவே எழுத்தின் மூலமாகவும், சமூக அவலத்தை நுணுக்கமாக கேள்வி கேட்கும் கலை உங்களுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.
புத்தகம்: மறக்கவே நினைக்கிறேன்
ஆசிரியர்: திரு.மாரி செல்வராஜ் 
வெளியீடு: வம்சி பதிப்பகம் 
விலை: ரூ.233
-தமிழ்மதி