மரக் கிளையில் ஒரு தொட்டில் – சிறுகதை
இறுதி நாள். கடைசி நாள். ஓய்வு பெறும் நாள். விடை பெறும் நாள். இப்படி எத்தனையோ சொற்களால் அறியப்படும் அந்த நாள் வந்தது. மகேந்திரன் அந்த பிரிவு நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்காமல் நகர் வலம் வந்தார். அவர் நெருங்கிய நண்பர்கள் கவலையுற்றனர். மற்ற நாட்களில் வேலை வேலை என சுற்றுவார். அவருக்கு ஞாயிறும் இல்லை விடுமுறையும் இல்லை. ஒரு மாநில அரசுத் துறையில் உதவி பொது மேலாளர். அவர் வாங்கப் போகும் கடைசி மாதச் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம். அவர் கீழே வேலை செய்ய எந்த அதிகாரியும் விரும்பவில்லை, எழுத்தர்களோ வேலை ராஜினாமா செய்வோமே தவிர இந்த நேர்மை மகேந்திரன் கீழ் வேலை பார்க்க மாட்டோம் என்றனர். ஆனால் அவர் கீழே வேலை பார்க்கவும் ஒரு நேர்மை கூட்டம் இருந்தது. அதில் ஒரு சிலரே இப்போது விடை பெறும் விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். சுமார் ஐம்பது பேர் வரலாம். ஒருவர் வாழ்வில் அது மறக்க முடியாத நாள்.
’’இப்படியே நேரா போ அங்க ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடம் வருது, மே ஃப்ளவர் பேருன்னு நினைக்கிறேன். ‘’ ஓட்டுனரிடம் மகேந்திரன் சொன்னார். ஓட்டுனருக்கு எரிச்சல் அவர் மனதுக்குள் இருந்ததை வெளியே சொல்ல முடியாது. ’’கடைசி நாள் கூட நம்மள பிழிஞ்சி எடுக்குறானே இவன்’’ இந்த ஓட்டுனருக்கு மகேந்தரன் மகிமை தெரியாது. சில நாட்கள் முன்னரே அவர் கீழே ட்ரைவர் ஆனான். அவன் ஓட்டுனர் ஆன முதல் நாளே பல தொழிற்சாலைகளை ஆய்வு செய்தார். இவர்கள் அனைவரும் சிறு தொழில் வளர்ச்சி கழகத்தில் கடன் பெற்றவர்கள். ரொம்ப ’’ஸ்ட்ரிக்ட் ஆளு’’ என கடன் வாங்கிய எல்லோரும் நொந்து கொள்வார்கள். கடன் பெற்றவர்கள் நேர்மையாக கடன் தொகையை முதலீடு செய்ய வேண்டும், இதை சரி பார்ப்பதே மகேந்திரன் வேலை. முப்பத்தி ஐந்து வருடங்கள் கைகளில் கறை படியாமல் சேவை செய்து விட்டார். எவ்வளவு பெரிய தலைவர் பரிந்துரை செய்தாலும் ‘’ போடா உன் வேலையை பாத்துட்டு போடா’’ என சொல்லிவிடுவார்.
மகேந்தர் கூறிய இடத்திற்கு கார் சென்றது. ’’நான் தேடி வந்த தெய்வம் இங்க இல்ல’’ என்றார் மகேந்திரன்.. பொறுமை இழந்த ஓட்டுனர் கேட்டான்
‘’ சார் நீங்க தேடுறது எந்த கோவில்னு சொல்லுங்க சார் நானே அழைச்சிட்டு போறேன், எனக்கு எல்லா கோவிலும் தெரியும்.’’
’’ஆமா நான் தேடுறது கோவில்தான் ஆனா உன்னால கண்டு பிடிக்க முடியாது.’’
மாலை ஆறு மணியானது. கைபேசியில் அழைப்பு வந்தது. மறு முனை குரல், ஓட்டுனருக்கும் கேட்டது
’’சார் ஆறு மணியாச்சு, எல்லாரும் வீட்டுக்கு போகனும்னு சொல்றாங்க ட்ராஃபிக் அதிகரிக்கிற நேரம் வேற உடனே வாங்க,’’
’’சரி’ என்றார்
ஆனால் அந்த சரி முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ட்ரைவர் பதற்றம் அடைந்து உதவிப் பொது மேலாளரை பார்த்தான். அவர் கண்களில் நீர் வடிந்து கண்ணங்களில் நின்றது.
’’சார் நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா சொல்லுங்க சார் வேற எங்க போகனும்.’’’’
’’நேரா ஆஃபீஸ் போ.’’
சுமார் எழுபது பேர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஐம்பது பேரே அமர முடிந்த இடத்தில் எழுபது பேர். மேலும் பலர் சுற்றி நின்றனர். மகேந்திரன் முன் மேஜையில் பூங்கொத்துக்கள், மாலைகள் குவிந்து இருந்தன. எல்லோரும் பேசி முடித்து விட்டனர். நிகழ்ச்சியின் தலைவர் அறிவித்தார்,
’’நம்மோடு பல வருடங்கள் இருந்து நமக்கு ’பாஸ்’ ஆக இருந்து முப்பத்தி ஐந்து ஆண்டுகள் சேவை செய்து இன்று ஓய்வு பெரும் மதிப்பிற்குரிய மகேந்திரன் அவர்களை குறித்து நீங்கள் பலர் பேசி விட்டீரகள், இப்போது அவர் பேசுவார்,’’
தேனீக்கள் மொய்த்தன, மலர்களின் மணம் அரங்கில் நிரம்பியிருந்தது. கனத்த இதயத்துடன் மகேந்திரன் எழுந்தார். அவருக்கு பேச முடியவில்லை, நா மறுத்தது, கண்களில் குளம், மனதில் ஒரு இறுக்கம், கால்கள் இரண்டும் கல்லாகின.
முழு ஆற்றலையும் திரட்டினார். முழு நம்பிக்கையையும் வரவழைத்தார். கைக்குட்டையால் கண்களை துடைத்தார். ஒரு புன்னகையுடன் சொற்கள் வந்தன. முதலில் மெதுவாக, பின் வேகமாக, சூடாக.
’’இருபத்தி ஐந்து வயதில் இந்த நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்கு சேர்ந்தேன், படிப்படியாக போராடி பதவி உயர்வு பெற்று உதவிப் பொது மேலேளார் ஆனேன். இதோ என் இரு மகள்களும் ஒரு மகனும் வந்துள்ளனர், என் மனைவியும் இங்கே வந்துள்ளார். இவர்கள் அனைவரும் என்னுடன் ஒத்துழைத்தவர்கள், நான் நேர்மையாக உழைத்து கறை படியாத கரங்களுடன் ஓய்வு பெறுவதை என் மிகப் பெரிய சாதனையாக , நினைக்கிறேன், நான் எந்த ஒரு அரசியல்வாதியின் சிபாரிசுக்கும் அடி பணியவில்லை, இதனால் பல முறை ட்ரான்ஸ்பர் ஆனேன், ஒரு முறை ஒரே வருடத்தில் மூன்று முறை மாற்றப்பட்டேன், அதுவும் தொலை தூரங்களுக்கு, என் குடும்பத்தினர் ஒத்துழைத்தனர், எனது நேர்மைக்கு பின் ஒரு தாய் உள்ளார்,
அறுபது வருடங்களுக்கு முன் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ஒரு கட்டிட வேலை நடக்கிறது அங்கே ஒரு தாய் ‘’ மகேந்திரன் அழுகிறார், அடக்க முடியாமல் அழுகிறார், கண்ணீரை துடைத்துக் கொள்கிறார், தொடர்கிறார்…’ ’’அங்கே ஒரு தாய் தன் சேலையை தொட்டிலாக்கி ஒரு மரக் கிளையை விட்டமாக்கி தன் ஒரு மாத குழந்தையை தாலாட்டுகிறார், மேஸ்த்திரி’’…………………மீண்டும் நிறுத்துகிறார். அவர் மனைவி முன் வரிசையில் அமர்ந்திருந்தவர் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுகையை கட்டுப் படுத்துகிறார். எரிமலையின் மீது பூச்செண்டு. அடங்குமா நெருப்பு குழம்பு. மகேந்திரனுக்கு நீர் தருகின்றனர். நீர் அருந்திவிட்டு தொடர்கிறார்.
’’…..மேஸ்த்திரி கூவுகிறார், வாம்மா வந்து மணலை எடுத்து கலவையில் போடு, நாளையிலயிருந்து குழந்தையோட வந்தா வேலை கிடையாது. கட்டிட சித்தாள் அந்த தாய், ஒரு மாத குழந்தைக்கு பாலூட்டி பின் கிழிந்த சேலையில் செய்த தொட்டிலில் போட்டு மரக் கிளையில் தொங்க விட்டு தூங்க வைக்கிறார். இப்படித்தான் என் வாழ்க்கை துவங்கியது. அந்த மரக் கிளை தொட்டிலில் என் வாழ்வு துவங்கியது. அந்த தாயே என்னை நேர்மையாளன் ஆக்கினார், யாரேனும் லஞ்சம் தர முயற்சிக்கையில் அந்த தேவதை என் கண் முன் வந்தார். அவரை இழந்தேன். இன்று அவரை தேடினேன். பல கட்டிடங்களுக்கு சென்று மரக் கிளையில் சேலை தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்த தாயை தேடினேன், நான் ஓய்வு பெறும் நாளில் அத்தகைய ஒரு தாயை கண்டு அவருக்கு உதவி புரிய விரும்பினேன்.’’
பலர் கண்கள் ஈரமாகின. ஒரு சலசலப்பு. அரங்கின் வாயிலில் கடை நிலை ஊழியர் மாணிக்கம்
‘’ அய்யா இங்க பாருங்க, நான் கண்டு பிடிச்சிடேன் பக்கத்துல மேம்பாலம் பக்கத்துல இந்த அம்மா சேலைத் தொட்டிலை ரெண்டு மின் கம்பத்துல கட்டி ஆட்டிக்கிட்டு இருந்தாங்க, நீங்க மரக் கிளை தொட்டில தேடினீங்க அதனாலதான் கிடைக்கல்ல, போன வாரம் நீங்க சொன்னீங்க ஒரு ஏழை சித்தாளுக்கு உதவனும்னு, இவங்களுக்கு உதவி செய்ங்க.’’
மகேந்திரன் வேகமாக சென்று மாணிக்கத்தை தோளோடு தழுவினர். சித்தாள் மகன் உதவி பொது மேலாளர் இரு மின் கம்பங்களுக்கு இடையே சேலைத் தொட்டிலில் குழந்தையை ஆட்டிய அந்த சித்தாள் தாயின் முகத்தில் தன் தாயைக் கண்டார். அவர் கண் முன்னே ஒரு தொட்டில், அறுபது வருடங்களுக்கு முந்தைய தொட்டில் ஆடியது. அருவியாக பெருகிய நீர் அனைவரையும் அழ வைத்தது.
எழுதியவர் :
இராமன் முள்ளிப்பள்ளம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உலகமய சூழலில் ஊழல் பட்டுக் கொண்டிருக்கும் சமூகத்தில் ஊழலற்ற ஒரு அதிகாரியகவும் தான் பெற்ற தாய் தந்தையை கண்டுக் கொள்ளாத இந்த காலத்தில் தன் எழுத்தில் தாய் பாசத்தின் கொண்டுள்ள தேடல்… நல்ல முயற்சி தொடர்க சிறக்க உங்களின் பணி ராமன் முள்ளி பாளம் அவர்களே
இராமன் முள்ளிப்பள்ளம் அவர்களின் மரக்கிளையில் ஒரு தொட்டில் கதை எனது மனக் கிளையில் பாரமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. நேர்மையும் ஏழ்மையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் காலமெல்லாம் இருந்து வருகின்றன. தாய் என்றாலே நெகிழ்வுதான். அதிலும் ஏழைத் தாய் என்றால் நெஞ்சைப் பிழியும் உணர்வுகள்தான் வெளிப்படும். அத்தகைய உணர்வுகளைக் கிளர்த்திய இராமர் முள்ளிப்பள்ளம் அவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.
மரக்கிளையில் ஒரு தொட்டில் சிறுகதை எனது மனக் கிளையில் பாரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரியையும் ஏழ்மையில் வாழ்த்த தாயையும் நம் கண்முன் நிறுத்திவிட்டார் கதையின் ஆசிரியர் இராமன் முள்ளிப்பள்ளம் அவர்கள். அந்த அதிகாரியை மட்டும் அவர் அழவைக்கவில்லை. அக் கதையைப் படித்த என்னையும் அழவைத்துவிட்டார். தொடரட்டும் அவரது எழுத்துப் பணி!
மரக் கிளைகள் மின்கம்பங்களாக மாறியது காலம் செய்த கோலம். நேர்மையான அலுவலர், முறுமுறுக்கும் பணியாளர், தாய்ப் பாச நினைவுகள் – இதுபோன்ற பதிவுகளை விட, மாறிப் போன காலத்தைச் சுட்டும் எழுத்துக்களுக்கு என் வாழ்த்துகள்!
நேர்மையான அதிகாரிகள் பிழைக்கத் தெரியாதவர்களா ன இக்காலத்தில் நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கின்றது.
அரிதாகி வரும் உயரிய பண்பை கண்களில் கண்ணீர் வர கதையாகியுள்ளார்.