மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி

மரணம் எப்படி இருக்கும்? கவிதை – ஜெயஸ்ரீ பாலாஜி




குழந்தைக்காக ஏங்கித் தவிக்கும்
தம்பதியினரிடம் விசேஷம் இல்லையா
என்று கேட்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

நரை ஏற்பட்டு நடை தளர்ந்த
காரணத்தால்
ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் மூப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

ஏதோ ஒரு காரணத்தால்
இணையைப் பிரிந்து வாழும்
ஆணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

யாரோ ஒருவர் வியர்வை சிந்தி
நட்டு வைத்த செடி மரமாகி
அது வெட்டி வீழ்த்தப்படுவதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

வகைவகையாய் தின்று
சுவை சலித்து மீந்து விட்டதை
குப்பையில் கொட்டி கவிழ்ப்பதில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

இல்லையே என்று கைநீட்டி
ஒருவர் கேட்கும் போது
இல்லையென்ற தலையசைப்பில்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

மரணம் இன்று கூட வரலாமென
தெரியாமல் ஒவ்வொரு நாளும்
பொருளுக்காய் ஓடும் மனதிற்குள்
ஒரு மரணம் ஒளிந்துள்ளது

– ஜெயஸ்ரீ பாலாஜி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. ந.காஜா முகைதீன்

    மரணத்தில் இத்தனை வகைகள் இருப்பதை உங்கள் கவிதை வரிகளில் தெரிந்து கொண்டேன்.

    ஏதோ ஒரு காரணத்தால்
    இணையைப் பிரிந்து வாழும்
    ஆணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே
    ஒரு மரணம் ஒளிந்துள்ளது

    மா ரணத்தை ஏற்படுத்திய வரிகள்.

  2. Neya Puthuraja

    மரணம் பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு முறையில் நிகழ்த்தப்படுவதை சொன்ன விதம் அழகு…வாழ்த்துகள் தோழர்💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *