இது ஒரு ‘மொழிபெயர்ப்புக் கவிதைநூல்’ என்பதைப் பேராசிரியர் சொல்லாமல் இருந்திருந்தால், ‘இது ஒரு மொழிபெயர்ப்பு’ என்பதை நம்மால் நம்பியிருக்க முடியாது; கண்டுபிடித்திருக்க முடியாது. அதுதான் ஒரு மொழிபெயர்ப்பின் முழுவெற்றி.
இந்தக் கவிதைப்பனுவலின் முன்னுரையில் ‘மரணம், பற்றிப் பேராசிரியர் எழுதியுள்ளவை நம் மனத்தை விட்டு என்றும் அகலாதவை. ‘மரணம் எனும்
பொருண்மையிலான கவிதை களில் அமையும் அவலம் மனித உணர்ச்சிகளின் அழுக்கைக் கழுவித் தூய்மைப்படுத்தி, அவற்றைச்செம்மைப்படுத்துகிறது. இதுவே அரிஸ்டாட்டிலால் சுட்டப்பெறும் ‘உணர்ச்சிச்செப்பம்’ (Catharsis)’ என்கிறார் பேராசிரியர்.
“மறைந்தவர்களின் பெருமை களைப் பேசவும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தவும், அவர்களின் இழப்பால் உணடான துயரத்தையும் வலியையும் வெளிக்கொணரவும், அவர்கள்தம் இழப்பால் வருந்து வோருக்கு ஆறுதல் அளிக்கவும், வாழ்க்கையின் இயல்பையும்,
உடலின் மறைவையும், ஆன்மாவின் அழியாத்தன்மையையும் தத்துவநோக்கிலும் சமயநோக்கிலும் புலப்படுத்தவும் மரணப்பொருண்மையிலான கவிதைகள் வாய்ப்பளிக்கின்றன” என்கிறார் பேராசிரியர். இதுதான் இந்தக் கவிதைப்பனுவலின் நோக்கமும் பயனுமாகும்.
இறப்பு பற்றி உலகப்புகழ்பெற்ற நாற்பது பெருங்கவிஞர்கள், தங்கள் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்திய கருத்துகளையெல்லாம் தொகுத்துக் கவிதைகளாகவே தந்துள்ளார் பேராசிரியரும் கவிஞருமான அறிஞர் வ.ஜெயதேவன். கவிஞர் கினிசோ மொகலே அவர்களின்’மரணம் ஒருநாள் மரணிக்கும்’
என்னும் கவிதைத் தலைப்பையே நூலின் தலைப்பாகவும் ஆக்கியுள்ளார் பேராசிரியர். இதுதான்இந்த நூலின் முதற்கவிதை.
நானின்றி நாளை புணரும்போது, மரணத்தின் முகம், அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது, ஒரு பிரியா விடை, அது மரணம் அல்ல, அவர் பெயர் மரணம், மரணத்துடன் ஒரு சந்திப்பு, அருள்கூர்ந்து வருந்தாதீர்கள், மரணத்துடன் ஒரு போர், நல்ல சாவு நான் சாவேன்… போன்ற கவிதைத் தலைப்புகளே கவிதைகளைப் படிக்க நம்மைத் தூண்டுகின்றன. இந்த நூற்கவிதைகளுள் எவற்றைத் தருவது, எவற்றை விடுவது என்றே தெரியவில்லை. பானைச்சோற்றுக்குப் பதச்சோறாக, என் கண்ணில் பட்டுக் கருத்தில் நுழைந்த அடிகளுள் ஒருசில:
“அவர் போய்விட்டதாக நினைக்காதீர்கள்… அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது…”என்கிறார் கவிஞர் எல்லென் பிரென்மேன்.
“இவ்வுலகைப் பிரியும்நேரம்
இனிமையாக இருக்கட்டும்,
இது மரணமாக இல்லாமல்
வாழ்க்கை நிறைவாக இருக்கட்டும்”
என்கிறார் வங்கத்தின் சிங்கக்கவி #இரவீந்திரநாத் தாகூர்.
“வாழ்பவர்களுக்குத்தான்
மரணம் என்பது விதியின் முன்னறிவிப்பு… வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் வேறுபாடு இல்லை”
என்கிறார் கவிஞர் #இலானா லிடியா.
“வாழ்க்கை என்பது
இன்றைய நாளைய
நாட்களுக்கு அப்பாலான
ஒரு தொடர்வரிசை…
மரணத்தைப்
பொருட்படுத்தாமல்தான்
வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது”
என்கிறார் கவிஞரும் நம்முடைய முன்னாள் பிரதமருமான #அடல்பிகாரி_வாஜ்பாய்.
“வாழ்க்கை பற்றிய
உங்கள் பார்வை மாறுகையில்
மரணத்தை
அழகான ஒன்றாக வரவேற்பீர்கள்”
என்கிறார் கவிஞர் #அலி.
“அது மரணம் அல்ல
நான் எழுந்து நின்றேன்,
இறந்தவர்கள் அனைவரும்
தரையில் கிடக்கிறார்கள்”
என்கிறார் கவிஞர் #எமிலி டிக்கின்சன்.
“இலையுதிர்காலத்துப்
பசிமிக்க கரடிபோல
மரணம் வரும்போது…
இந்த உலகத்திற்கு
வந்துபோன ஒரு பயணியாக
என் வாழ்க்கை
வெறுமனே முடிந்துபோவதை
நான் விரும்பவில்லை”
என்கிறார் கவிஞர் #மேரி ஆலிவர்.
“நதியும் கடலும்
ஒன்றாக இருப்பதுபோல
வாழ்வும் சாவும்
ஒன்றாக இருப்பவைதாம்”
என்கிறார் கவிஞர் #கலீல் ஜிப்ரான்.
“தன்னால் தீர்க்க முடியாத
நோயின் பெயரைச் சொல்பவரான
எநத மருத்துவரையும் அழைத்து வராதீர்கள்.
சாகக்கிடக்கும் இந்த
ஏழைப் பாவியிடமிருந்து
கட்டணம் பெற
மருத்துவரை அழைத்து வராதீர்கள்.
அவருடைய சகோதரரான
ஆன்மாவின் மருத்துவர்
என் மூச்சை ஆராய்கிறார் ”
என்கிறார் கவிஞர் #மாத்திவ் அர்னால்ட்.
“கண்காணித்துக்கொண்டும்
காத்துக்கொண்டும்
தக்க தருணம் பார்த்துக்கொண்டும்
நீ இருப்பதை
நாங்கள் கவனிக்கவில்லை.
ஏனெனில்
நீ ஒலி எழுப்பவில்லை” என்றும்,
“மரணமே,
நீ என்னை அழைக்கும்போது
உன் கைகளுக்குள் நான்
விரைந்து வருவேன்.
நான் மகிழ்வுடன்
உன் மார்பில் என் தலைசாய்ப்பேன்,
இந்த உலகில்
என் இருப்பு முடிந்துவிட்டது”
என்றும் அறிவிக்கிறார் கவிஞர் #வால்லீ எம்.
“(மரணம்)
விரல் இல்லாத மோதிரத்தால்
கதவைத் தட்டுகிறது; வந்து
வாய் இல்லாது, நாக்கு இல்லாது,
தொண்டை இல்லாது கத்துகிறது”
என்கிறார் #பாப்லோ நெருடா.
“அருள்கூர்ந்து வருந்தாதீர்கள்
நான் போகவில்லை
கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறேன்…”
என்கிறார் கவிஞர் #ஸ்டீஃபன் முர்ரே.
மரணம் பற்றிதான் எவ்வளவு சிந்தனைகள்! வேறுபட்ட எவ்வளவு பார்வைகள்! இந்தக் கவிதைகளில் பொதிந்துகிடக்கும் அவலச்சுவையால் ஆன்மாவைக் கழுவிக்கொள்ளவும், மரணம் பற்றிய தெளிவைப் பெறவும், அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், வாழ்நெறியை அறிந்துகொள்ளவும் ‘மரணம் ஒருநாள் மரணிக்கும்’ என்னும் இந்த ஒப்பற்ற கவிதைப்பனுவல் நமக்குப் பேருதவி புரியும். பேராசிரியரும் கவிஞருமான முனைவர் வ.ஜெயதேவன் அவருக்குத் தமிழ்கூறு நல்லுலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. பேராசிரியருக்கு என் வாழ்த்தும் பாராட்டும் நன்றியும் என்றும் உரிய.
நூலின் தகவல்கள்
நூல் : மரணமும் ஒருநாள் மரணிக்கும்
ஆசிரியர் : வ.ஜெயதேவன்
பதிப்பகம் : பாரதிபுத்தகாலயம்
நூல் தேவைக்கு : 044 -24332424
எழுதியவர்
மருதூர் அரங்கராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.