சிறுகதைச் சுருக்கம் 86: தேன்மொழியின் மரப்பாச்சிமொழி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

Marapachi Mozhi Short Story by Thenmozhi Synopsis 86 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 86: தேன்மொழியின் மரப்பாச்சிமொழி சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
தேன்மொழியின் பெண்கள் அவரது எழுத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் எழுத்திலிருந்து விடுதலை பெற்று இயங்குபவர்கள்.  படிப்பவர்களின் வாழ்க்கை சார்ந்த தூண்களை உடைத்து அவை தாங்கிக் கொண்டிருக்கும் கட்டுமானங்களை இடிபாடுகளாக்க முயல்பவர்கள்.

மரப்பாச்சிமொழி
தேன்மொழி

இந்த தார்ச்சாலை நீண்டு கிடக்கிறது.  விதவை ஒருத்தியின் அடர்ந்த மௌனம்போல் கருமை அதில் படர்ந்திருக்கிறது.  அந்த மௌனத்தைச் சுருட்டியெடுக்க முனைந்தபடி கார் ஒன்று அதில் விரைந்து கொண்டிருக்கிறது.  அடங்கிக் கிடந்த சாலையில் ஆங்காங்கே கருங்கல் ஜல்லிகள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.

அவள் என்னருகில் அமர்ந்திருக்கிறாள்.  அடுத்ததாக அவள் கணவன் அமர்ந்திருந்தான்.  வெட்டி ஒழுங்கு செய்து வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிபோல அவளின் வெளிப்புறத் தோற்றம் இருந்தது.  அவளது உணர்வுகள் சாணையேற்றப்பட்ட கத்திரிக்கோலால் கத்தரித்து விடப்பட்டிருந்தன.  மூன்று தலைமுறைக்கு முன் மூத்த பெண்ணுக்கான சீர்வரிசைக்காக நான் உருவாக்கப்பட்டேன்.   பூவரசு மரத்திலிருந்து பட்டு ஆசாரி இழைத்து இழைத்து என்னைக் கண்டெடுத்தார்.  பெண் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக நான் பாதுகாத்து வைக்கப்பட்டேன்.  ஆண் குழந்தைகள் என்னோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை.  

மூன்று தலைமுறைப் பெண்களும் என்னோடு சமையலறை வாசனையைத்தான் அதிகம் பகிர்ந்து கொண்டார்கள்.  கதவுக்குப் பின் வாழ்வதற்கு அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டார்கள்.  அது ஏழு கடல் தாண்டி எவரும் புகமுடியா அரண்மனைக்கூண்டில் நகம் நீண்டிருக்கும் கிளியின் இதயத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டபோது நான் என் காதுகளை மூடிக்கொள்வேன்.  அரண்மனையைத் தகர்த்து கூண்டை உடைத்து கிளியைக் கொன்று கற்பை விடுவிக்க மனதுள் படைகளைத் தயார்படுத்துவேன்.

பெண்குழந்தைகள் எனக்குக் காது குத்தினார்கள்.  காட்டாமணக்குச் செடியின் இலைத்தண்டிலிருந்து தொங்கட்டான் செய்து மாட்டினார்கள்.  அலங்கரித்து கல்யாணம் செய்து வைத்தார்கள்.  வீட்டு மூலையில் நிறுத்தினார்கள்.  தாவணி கட்டி மாராப்புப் போட்டு அழகு பார்த்தார்கள்.  நான் வயதுக்கு வந்துவிட்டதாக சடங்கு செய்து கும்மியடித்து விளையாடினார்கள்.  கும்மிப்பாடல் பெண்களுக்கான வஞ்சனைகளால் புனையப்பட்டிருந்தது.

தாவணி கட்டிக்கொள்ளவிரும்பாத என் கனவுகள் வேறு மாதிரி இருந்தன.  நான் குதிரைச் சவாரி செய்ய விரும்பினேன்.  நான் என்னைப் படைத்தலைவனைப் போல் உருவகித்துக் கொண்டேன்.  பெண்குழந்தைகள் சுவர்களுக்குள் சுவர் வைத்து  எனக்கான இருப்பிடத்தை உருவாக்கினார்கள்.  நானோ என் வீட்டைப் பறவையின் சிறகுகளில் கட்டி வைத்திருந்தேன்.  

கண்ணீரை விழுங்கியபடி அமர்ந்து கொண்டிருக்கும் இவளுக்குள் ஒரு காட்டுச் செடி வளர்ந்து கொண்டிருக்கிறது.   அதன் மலர்கள் ஒற்றை வண்ணத்தில் இல்லை.  அவள் பலவகையான மலர்களைப் பற்பல வண்ணங்களில் அந்தச் செடிக்குள் பூக்க வைத்தாள்.

படரவிரும்பும் ஒரு தாவரமாய் அவள் என்னருகில் அமர்ந்திருந்தாள்.  அவள் கணவனின் குரல் எவ்விதப்  பொருளுமற்ற ஒலியை இரைந்துக் கொண்டே இருந்தது.  இது சிதைக்கப்பட்ட இசை சுமந்த அந்திவானப் பயணம்.  எனக்கும் அவளுக்குமான உரையாடல் மொழியின் துணையின்றி தொடர்ந்து கொண்டிருந்தது.  மொழிகள் முளைத்திராத ஆதிகாலங்களில் பயணிக்க நாங்கள் எத்தனித்தோம்.  

அது பெண்கள் இயற்கையின் எஜமானிகளாக இருந்த காலம்.  அப்போது நிலமெங்கும் அவர்களின் சொற்களும் விளையாட்டுகளும் வேகாத அரிசிபோலச் சிதறிக் கிடந்தன.  அவர்கள் பறவையோடும் பூக்களோடும் மேகத்தோடும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.  வண்ணத்துப் பூச்சிகள் சுதந்திரமாய் நிலமெங்கும் திரிந்தன.  எனினும் அப்போது பெண்களை வண்ணத்துப் பூச்சிகளோடு யாரும் ஒப்பிடவில்லை.  

நிலம் புரள வெள்ளம் பெருக ஒரு பெருமழை பெய்தது.  அதற்குப்பின்தான் பெண்களை வண்ணத்துப் பூச்சிகளோடு ஒப்பிடும் காலம் தொடங்கியது,  பெண்களின் உலகம் புதிதாகத் தீர்மானிக்கப்பட்டது.  திசைகள் காணாமல் போயின.  புதைக்கப்பட்ட உண்மைகளின் மீது வலிந்து எழுப்பப்பட்ட கட்டடங்களாகப் பெண்கள் நிறுத்தப்பட்டார்கள்.  அப்போதுதான் மரப்பாச்சிகளாகிய நாங்கள் உருவாக்கப்பட்டோம்.

இதோ இவள் காய்ந்துபோன ஊற்றுப்போல் என்னோடு அமர்ந்திருக்கிறாள்.  முளைக்க முளைக்க  கனவுகளை அழித்துக்கொண்டேயிருப்பது அவளது வாடிக்கை.  வார்த்தைகள் மறக்கடிக்கப்பட்டவளாதலால் என்னோடனான உரையாடலை ஒரு புன்னகையால் தவிர்க்கிறாள்.  

இவளைப்போல் விடுதலையை முடக்கி கமண்டலத்தில் அடக்கி அதைச் சுமந்துகொண்டு திரிய நான் ஒரு முட்டாள் இல்லை.  இவர்களின் உள்ஞானத்தை தரிசித்தவள் நான்.  ஒரு பிணமாக தன்னை உணரும் இவளோடு நான் எப்படிப் பயணிப்பது.  தலைமுறைகளைக் கடந்த பயணத்தால் நான் அயர்ச்சி கொள்ளவில்லை.  இவர்களின் பொறுமைதான் என்னை இம்சித்துக் கொண்டிருக்கிறது.  

தன்னை அழித்து அழித்து இவள் தன் இருப்பை நகர்த்துகிறாள்.  தன்னை அழித்துக் கொள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்தபடி இவள் அமர்ந்திருக்கிறாள்.  நீர்ப்படுகையில் துயில்கொள்ள முயலும் இவளின் சாமர்த்தியம் வெட்கப்பட வைக்கிறது.

மரப்பாச்சிகள் இப்போது முன்போல் இல்லை.  அவை உணர்வு பெற்றுவிட்டன என்பது இவளுக்குத் தெரியவில்லை.  இவளிடமிருந்து வலிந்து வெளியேற்றப்பட்ட சுயம் இப்போது என்னுள் விருட்சமாக எழுந்து நிற்கிறது.  நான் எனக்கான மொழியை உருவாக்கிக் கொள்கிறேன்.   இனி அவளோடு எந்த சம்பாஷணையும் சாத்தியமில்லை.  என்னோடு உரையாட அவளிடம் எந்தச் சொல்லும் மிச்சம் இருக்கவில்லை.

நான் ஒரு முடிவோடு அமர்ந்திருக்கிறேன்.  சாலையின் தடுப்பு தூரத்தில் தெரிகிறது.  கார் நிலை தடுமாறியபடி சாலைத் தடுப்பைக் கடக்கிறது.  நான் அந்த காரிலிருந்து வெளியே குதிக்கிறேன்.  மூச்சுத் திணற வைக்கும் பெண்களின் உலகத்திலிருந்து நான் என்னை விடுவித்துக் கொள்கிறேன்,  கார் என்னைக் கடந்து செல்கிறது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.