கதையின் கரு: பிள்ளைகள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல். அந்த பேரவலத்தில் இருந்து எப்படி அவர்கள் வெளி வர வேண்டும் என்று ஒரு மரப்பாச்சி பொம்மையின் வழிகாட்டலோடு கதை முடிகிறது. பிரச்சனைகளை பேசுவது மட்டுமே ஒரு படைப்பாளரின் நோக்கமாக இல்லாமல் அதற்கான தீர்வையும் ஆசிரியர் அளித்து இருக்கிறார்.
விமர்சனம்:
சமகாலத்தில் அதிகமாக நமது செவிகள் கேட்டு, கேட்க அஞ்சும் செய்தி. உலகத்தில் ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒரு குழந்தைக்கு, பாலைய வயது ஆண் பெண்ணுக்கு, மூதாட்டிக்கு நடந்த, நடக்கும் துயரமான……….. பாலியல் வன்கொடுமைகள்….
வயது எதற்கும் தடையில்லை என வயதை காரணமாக காட்டி முடங்கி விடும் முதியவர்களுக்கு நாம் ஆரோக்கியமாக வாழ ஊக்குவிக்கும் வழிமுறைகள் பின்பற்றி வருகிறோம். ஆனால் பாலியல் இச்சைக்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை என்பது ஒரு அவலநிலை.
அலுவலகம் செல்லும் போது பெரும்பாலும் பெண்களுக்கு வயதில் மூத்த நபர்களால் பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்பதை நாம் கேட்டு கடந்து வருகிறோம். அதை அவர்கள் திருமணத்திற்கு முன் பெற்றோர்களிடம் திருமணத்திற்கு பின் கணவனிடம் சொன்னாலும் நீ தவறாக புரிந்துக் கொண்டு இருக்கிறாய். பெரியவர்கள் அப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் என சொல்லி அதை காது கொடுத்துக் கூட கேட்காத நிலையும் இங்கு உண்டு.
ஒரு பெண்ணுக்கு தன்னை ஒரு ஆண் எந்த பார்வையில் பார்க்கிறான் என்பதை கண்டிப்பாக உணர முடியும். (ஆண்களும் அதை உணர முடியும்.) அப்படி அவள் சொல்வதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தும் நிலையில் இருக்கிறோம். வளர்ந்த பருவத்தினற்கே இந்த நிலையெனில் மழலை செல்வங்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்து கொள்ளலாம். பரிதாபத்திற்குரியது தான் என்பதில் ஐயமில்லை.
உறவுகளில் உரையாடல்கள் அவசியம். அந்த உரையாடல்களும் ஒற்றையடி பாதையாக இல்லாமல் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் கேட்கும் படி அமைய வேண்டும். Listening is a great healing therapy. பல சிக்கல்கள் தவிர்க்க அவசியம் நேரம் அளித்தல், உரையாடல்,கேட்டல் ..,….மிகவும் முக்கியம். பிள்ளைகளுக்கும் நமக்கும் இடைவெளி அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
மழலையரோடு நாம் நேரம் செலவிடுதல் ஒரு அடிப்படை தேவை. ஆடம்பர வாழ்க்கை அமைத்து தருகிறேன் என்று ஓடோடி வேலை செய்து அடிப்படை தேவைகளை கொடுக்க மறந்து விடுகிறோம்.
இந்த கதையில் பூஜாவிற்கு மரப்பாச்சி உதவி செய்கிறது. பூஜாவின் மன கிறலுக்கு, மயில் இறகால் மருந்தை தொட்டு லேசாக காயப்படுத்தாமல் குணமாக்கி, குற்றம் புரிந்தவனுக்கு தண்டனையும் வழங்குகிறது. மரப்பாச்சி எப்படி ஷாலு பூஜாவோடு மன பரிமாற்றம் செய்து கொள்கிறதோ அதே போல பெற்றோர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் மழலையர்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மழலையர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருத்தல் அவசியம்.
“கையை கட்டு வாயை பொத்து” இந்த சொல்லாடலே மழலையர் வரலாற்றில் அகற்றப்பட வேண்டும் . அவர்களின் வாய் மொழிக்கு தாழ் இடாமல், சுதந்திரமாக பேச நாம் இடையூறு செய்யாமல் இருக்க கற்க வேண்டும்.
சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் இந்த பிரச்சனை யார் வழியாக எங்கு எப்போது எப்படி ஏற்படும் என சொல்ல இயலாத காலகட்டத்தில் நாம் பயணிக்கிறோம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என யாருக்கு தெரியும். அதன் விஷம் நமது செல்வங்களை தாக்கிவிட கூடாது என்பதில் மட்டும் நாம் உறுதி எடுப்போம். ஆகவே குற்றவாளி யாராக இருந்தாலும் தாத்தா, ஆசிரியர், வேன் ஓட்டுநர், செக்யூரிட்டி…. அவலமான நிலை சில இடங்களில் அப்பா….. நெடு பட்டியலாக வளர்ந்துக் கொண்டே போகிறது…. ஆதலால் இந்தப் புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். இந்த புத்தகம் அவசியம் பள்ளியில் ஒரு பகுதியாக, அலுவலகத்தில் ஒரு பகுதியாக, வீட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய படைப்பு.
கசக்கி, கலங்க விடாமல் மொட்டுக்கள் மலர…. வழி விடுவோம்.
இந்த படைப்பு சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம். ஆசிரியர் யெஸ்.
பாலபாரதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40
பி. கு:
குறுஞ்செய்தி; மரப்பாச்சி, நுண் இயங்கும் திறன், பரதநாட்டியம், பார்வைக் குறைபாடு, பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கோகோ ஆட்டம், , பார்பி பொம்மை,, ஏலகிரி ( ஆம்பூர் எனது தாத்தா பாட்டி வாழ்விடம். எந்த ஒரு பொருளும் உறவும் ஊரும் நமது அருகில் இருக்கும் போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை. ஏலகிரி பற்றிய செய்திகள் வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமான உணர்வு உண்டாகிறது), பாராகிளைடிங், வைணு பாப்பு வானிலை ஆராய்ச்சி மையம் என ஒவ்வொரு அத்தியாயத்தில் சிறு சிறு குறுஞ்செய்திகள் கூடுதல் சிறப்பு.
புத்தகம்: மரப்பாச்சி சொன்ன ரகசியம்.
எழுத்தாளர்: யெஸ்.பாலபாரதி
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள்:79
விலை:ரூ.60/-
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.