நூல் அறிமுகம்: எழுத்தாளர் யெஸ்.பாலபாரதியின் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” –  பா.அசோக்குமார்

குழந்தைகளுக்கான கதைப் புத்தகமாக மட்டும் இதனை கருத இயலாது. ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் படிக்க வேண்டிய புத்தகமாகவே இதனை நிச்சயமாகக் கூறலாம்.
குழந்தைகளின் குழந்தைத்தனமான வெகுளித்தனத்தை, ஆர்வத்தை, சிந்தனையைத் தூண்டக்கூடிய அற்புதமான படைப்பே இந்த நூல்.
யெஸ்.பாலபாரதி அவர்கள் சிறார்களுக்காக எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். அதில் “மரப்பாச்சி சொன்ன ரகசியம்” நிச்சயம் ஒரு முத்திரை கதையாகவே உள்ளது எனலாம்.
“குட் டச்”, “பேட் டச்” (GOOD TOUCH, BAD TOUCH) என்று வெறுமனே போதிப்பதை விட அதை ஒரு கதை வடிவில் குழந்தைகள் இடத்திலும் பெரியவர்கள் இடத்திலும் சொல்லத் துணிந்த துணிவு போற்றுதலுக்குரியதாகும்.
குழந்தைகளுக்கு, ” தன் உடல் தன் உரிமை” எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் உயரிய சிந்தனையை கொண்ட அரிய நூலே இது. அக்கருத்தை வெறும் கருத்துச் செறிவுகளாக  கடத்திச் செல்லாமல் மாயாஜால தந்திர உத்தி என்னும் அற்புத கலை வடிவிலான புனைவு வாயிலாக தெளிவுபடுத்திய பாங்கு பிரம்மிக்கத்தக்கதாகும்.
சிறுவர்களுக்குள் இயல்பாக நிகழக்கூடிய உரையாடல் வாயிலாகவும், எளிய குடும்பச் சூழலை மையமாகக் கொண்டு இந்த கதை நகரும் வண்ணம் அமைத்துள்ளார்.
குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு அழகிய படச் சித்திரங்கள் வாயிலாக எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த  புத்தகமானது அமைந்துள்ளது.
பத்து வயது நிரம்பிய குழந்தைகள் நிச்சயமாக இந்நூலை எவ்வித தங்கு தடையுமின்றி இயல்பாகவே வாசிக்க இயலும் என்றே நான் கருதுகிறேன்.
“மரப்பாச்சி” என்ற பழங்கால விளையாட்டு பொம்மை வாயிலாக கதையை கூறிக்கொண்டே குழந்தைகளின் மீதான வன்முறையை தவிர்க்கும் வழிமுறையை தெளிந்த நீரோடை போல எடுத்துக்காட்டிய விதம் ரசிக்கத்தக்கதாகும்.
குழந்தைகளிடம் யாரேனும் அத்துமீற முயற்சித்தால் மறுப்பை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க கற்றுத் தரும் நூலே இது. அத்துமீறுபவர்களைப் பற்றி பெற்றோரிடம் வெளிப்படையாக பேசும் தைரியத்தை அவர்களுக்கு அளிப்பதையே மையமாக கொண்டு பவனி வருகிறது இந்நூல்.
மரப்பாச்சி சொன்ன ரகசியம் (PB) | Buy Tamil ...
அதுமட்டுமின்றி, “உண்மை பேசுதல்”, “பிறர் பொருட்களைக் கவராமை”, “பிறரை ஏளனம் செய்யாதிருத்தல்”, “பிறருக்கு உதவுதல்” போன்ற பல்வேறு நற்பண்புகளை இலைமறைக் காயாக குழந்தைகளிடம் கடத்துகிறது இந்நூல். புனைவின் வெற்றியே அதுதானே…
ஆண், பெண் பாலின வேறுபாடின்றி அனைத்து குழந்தைகளையும் இந்நூலை படிக்க வைத்தல் நலம் பயக்கும்.
வருமுன்னர் தடுக்க அதுவே சிறந்த வழியாக பாவிக்கிறேன்.
இந்நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ள “வானம் பதிப்பகம்” சிறுவர்கள் படிப்பதற்கு ஏதுவாக பெரிய பெரிய எழுத்துக்களில் நல்ல இடைவெளியுடன்  சிறு சிறு பத்திகளாக அமைத்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
இந்த புத்தகத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் கதையில் பவனி வரக்கூடிய பல்வேறு  புதிய வார்த்தைகளுக்கு எளிய தெளிவுரையை நூலாசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கியுள்ளதைக் கூறலாம்.
மரப்பாச்சி, தஞ்சாவூர் பொம்மை, கோகோ விளையாட்டு, ஏலகிரி, பாராகிளைடிங், குட் டச் ,பேட் டச் பார்வை குறைபாடு, பரதநாட்டியம் முதலான பலவற்றுக்கும் பெட்டிச் செய்தி வாயிலாக விவரங்களை தனியே வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
அவைகளும் முழுவதும் தகவல்களாக மட்டுமில்லாமல் மேலும் விவரங்களை அறிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பக்கத்துணையாக கொள்ள வழிகாட்டி இருப்பது கூடுதல் தனிச் சிறப்பாகவே கருதுகிறேன்.
ஆக மொத்தத்தில் இந்தப் புத்தகம் சிறுவர்களின் இயல்பூக்கங்களைத் தூண்டி அதன் வழியே  தாமே நன்னெறிகளை அறிந்து சிறந்தவர்களாக ஒளிவிட தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது என ஆணித்தரமாக நம்பலாம்.
தானே தனியே வாசிக்கும் முதிர்ச்சி நிலையை எய்தாத இளஞ்சிறார்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசித்து கதையாக கூறி கவரச் செய்யலாம்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். குழந்தைகளும் வாசிக்கும் நல்வாய்ப்பை ஏற்படுத்தி  தந்து உதவுங்கள். நன்றி.
“மரப்பாச்சி சொன்ன ரகசியம்”
யெஸ்.பாலபாரதி.
வானம் பதிப்பகம்
பக்கங்கள்:88
₹.60
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.