மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள்
– காலந்தோறும் காரல் மார்க்ஸ் –
இருபதாம் நூற்றாண்டு முடிவுறும் தருவாயில் லண்டன் பிபிசி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்நிறுவனம் பத்துப் பேரை குறிப்பிட்டு இவர்களில் கடந்த 1000 ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் யார் என்கின்ற கேள்வியைக் கேட்டது. உலகம் முழுவதும் இருக்கின்ற லண்டன் பிபிசி நேயர்கள் வாக்களித்தார்கள். அந்நிறுவனம் குறிப்பிட்ட 10 பேர்களில் இடம்பெறாத ஒரு பெயரைத் தான் அதிகமான நேயர்கள் குறிப்பிட்டார்கள். அவர்தான் காரல் மார்க்ஸ். அந்த அளவிற்கு கடந்த 1000 ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளராக காரல் மார்க்ஸ் விளங்கினார் என்றால் அது மிகையல்ல.
அத்தகைய மிகச் சிறந்த சிந்தனையாளர் காரல்மார்க்ஸ் குறித்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மாமேதை காரல் மார்க்ஸ் பிரஷ்ய நாட்டில் டிரையர் நகரில் பிறந்தார். 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி ஹென்ரிச் மார்க்ஸ் ஹென்றியேட்டா பிரஸ் பார்க் ஆகியோருக்குப் பிறந்தவர் காரல் மார்க்ஸ்.
காரல் மார்க்ஸ் தனது 12 வயது வரை வீட்டிலேயேதான் கல்வி பயின்று வந்தார்
பிறகு பள்ளிக் கல்வியும் மாணவனின் ஆளுமையைத் தூண்டவில்லை. அரசர்க்கும் நாட்டுக்கும் அரணாக இருந்த படித்த அற்பவாதிகளைப் பள்ளி தயாரிக்க வேண்டும். இது மார்க்சுக்குப் பிடிக்கவில்லை. இவருடன் பயின்றவர்கள் குட்டி முதலாளி வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கத்தைச் சாந்திருந்தார்கள். அவர்கள் மதத்தில் மூழ்கி இருந்தார்கள்.
காரல் மார்க்ஸ் எல்லா பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்கள் தான் பெற்றுவந்தார். அவருடைய கையெழுத்து கிறுக்கல் கையெழுத்து. ஆனால் மாக்ஸ் சுரண்டல் தலையெழுத்தை மாற்றி சமத்துவ உலகைப் படைக்க விரும்பினார்.
தனது 17-வது வயதில் பள்ளி இறுதி வகுப்பில் ‘ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற இளைஞனுடைய சிந்தனைகள்’ என்கின்ற தலைப்பில் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதினார். அக்கட்டுரை அழகியலுடன் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது.
அக் கட்டுரையில் அவர் குறிப்பிடுவார் ‘ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால் ஒருவேளை பிரபலமான அறிவாளி ஆகலாம். மாபெரும் ஞானியாகலாம். மிகச் சிறந்த கவிஞர் ஆகலாம். ஆனால் அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது’
மேலும் குறிப்பிடுகிறார்.. ‘மிகவும் எண்ணற்ற மனிதர்களை மகிழ்ச்சி அடையச் செய்தவர் மிகவும் அதிகமான மகிழ்ச்சியைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல
‘மனித குலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாக பாடுபடுவது குறித்த வேலையை நாம் தேர்ந்தெடுத்து விட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.’
மார்க்ஸ் தனது 17 வயதில் எந்த அளவிற்கு சமூக அக்கறையோடு மனித நேயத்தோடு இத்தகைய வரிகளை எழுதி இருந்தார் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அவரது தந்தையின் விருப்பம் மகன் வழக்கறிஞராக வேண்டும் என்பது அவ்வாறே அவரும் 1855ஆம் ஆண்டு பான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில செல்கிறார். சட்டம் படித்தால் மட்டும் போதாது என்று சொல்லி தத்துவமும் பயில்கிறார் அது பயின்ற பல்கலைக்கழகம் பெர்லின்
பெர்லின் பல்கலைக்கழகம் தத்துவக் குவியலாக இருந்தது. இளம் தத்துவ இயல் மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது தத்துவவாதிகள் உலக வாழ்க்கையை வியாக்கியானம் செய்கிறார்களே தவிர சமூக அமைப்பை மாற்றுவது எப்படி என்பதே முக்கியம். உலகை மாற்ற வெறும் சிந்தனை மட்டும் போதாது நடைமுறை செயலாக்கம் தேவை. அப்படியான ஒரு தத்துவத்தை தான் உருவாக்க தன் வாழ்நாளையே அர்ப்பணித்த காரல் மார்க்ஸ்.
ஜெர்மன் தத்துவவாதிகள் தத்துவவாதி ஹெகலைப் பற்றிப் பேசாதவர்கள் இல்லை எனலாம்.
எல்லாம் உருவாகிறது வளர்கிறது மாற்றம் கொள்கிறது எனினும் பரம்பொருள் இருக்கிறது என்றார் ஹெகல். கடவுளின் பிரதிநிதி மன்னர். மன்னராட்சி முறை மாறாதது. மாறாக சிறந்தது என்றார் ஹெகல்.
எல்லாம் மாறும் எனில் மன்னனும் மாறுவான் மன்னராட்சியும் மாறும் என்றார் மார்க்ஸ்.
ஃபயர் பாக் எனும் தத்துவவாதியோ ஹெகலின் கருத்துமுதல்வாதத்தைக் குப்பையில் போட வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஃபயர் பாக்கியம் பொருள் முதல்வாதமும் உதவவில்லை. இதை அடிப்படையாக வைத்து அத் தத்துவத்தில் உள்ள குறைகளைக் களைந்து மாற்றத்திற்கான மார்க்கம் காட்டாமல் இருந்ததற்கு மாற்றத்திற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து மார்க்சிய தத்துவத்தை படைத்தார் காரல் மார்க்ஸ்.
ஹெகலிய வாதிகள் மதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். பான் பல்கலைக் கழகம் கொடுத்த சான்றிதழில் கொலோனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து இருந்தார் மாக்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. காரணம் அரசுக்கு எதிராக எழுதினார் என்பதுதான். ஒருவழியாக பெர்லின் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார் மார்க்ஸ்.
‘ரைன் கெஜட்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியரானார் காரல் மர்க்ஸ். அரசை விமர்சித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ். “சுதந்திரத்தை அனுபவிக்க மக்கள் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கோடாரி கொண்டு போராடுவார்கள் என எழுதினார். இது முதலாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. மார்க்ஸ தண்டிக்கப்பட்டார். கருத்துச் சுதந்திரம் இல்லாத காரணத்தினால் மாக்ஸ் தன்னுடைய பணியை ராஜினமா செய்தார்.
“எழுத்தாளன் வாழ்க்கை நடத்துவதற்காகவும் எழுதுவதற்காகவும் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அவன் வாழ்வதும் எழுதுவதும் சம்பாதிப்பதாக இருக்கக் கூடாது” என்றார் மார்க்ஸ்
மார்க்ஸின் தந்தை மீது மார்க்சுக்கு அன்பு அதிகம். அதிமுக ஆட்கள் சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை முன்பு வைத்திருந்தார்கள். இப்போது எடப்பாடி படத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக நபர்கள் முன்பு கலைஞர் படத்தையும் தற்போது ஸ்டாலின் படத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்லாமல் தான் இறக்கும் வரை தன் சட்டைப் பையில் தன் தந்தையின் படத்தை வைத்திருந்தார் மார்க்ஸ்.
தன் தந்தையின் நண்பர் வெஸ்ட் பாலன் குடும்பம் ஓர் இலக்கியக் குடும்பம். எனவே அக்குடும்பத்தின் அங்கத்தினர் ஆகவே மாறிப்போனார் மார்க்ஸ்.ஷெல்லியை கதேயை மில்டனை ஷேக்ஸ்பியரைக் குடும்பமே படித்தது. வெஸ்ட் பாலன் மகள் ஜென்னியைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். காதல் கவிதைகளை எழுதி பகிர்ந்து கொண்டார். ‘நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்’ என்று காரல் மார்க்ஸ் கேட்டபொழுது ஜென்னி சொன்னாள்..” நீ ஒரு குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து எனக்குத் தெரியும்”.. ஆமாம். காரல் மார்க்ஸ் ஜென்னியை விட நான்கு வயது இளையவர். ஆனாலும் அவர்கள் காதலுக்கு வயது ஒரு தடையாக இருக்கவில்லை. அவர்களின் காதல் இலக்கியக் காதல். திருமணப் பேச்சு வரும்பொழுது காரல் மார்க்ஸ் தமக்கு வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக ஜென்னியிடம் கூறினார். அவ்வாறே காத்திருந்தார் ஜென்னி. ஒன்றல்ல இரண்டல்ல ஏழு ஆண்டுக் காலம் காத்திருந்தார்.
1843 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி காரல் மார்க்ஸ் ஜென்னியின் திருமணம் நடைபெற்றது. பேரழகி செல்வச் சீமாட்டி. 9 மொழிகள் அறிந்த இலக்கியவாதி. அப்படிப்பட்ட ஜென்னி ஏழ்மையில் உழன்ற காரல் மார்க்சைக் கைப்பிடித்த காரணம் காரல் மார்க்சின் விசாலப் பார்வையும் மனிதநேயமும் சமூக அக்கறையும் என்றால் அது மிகையல்ல.
திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தேனிலவுக்குச் செல்கின்றார்கள். சென்றபோது அங்கே புத்தகங்களை வாரிச் செல்கிறார்கள். புத்தகங்களோடு தேனிலவுக்குப் போன ஒரே ஜோடி இவர்கத்தான் இருக்க முடியும். விடுதியில் பணம் உள்ளிட்ட எல்லாவற்றையும் வைத்துவிட்டு வெளியில் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் புத்தகங்களைத் தவிர எதுவும் இல்லை. இது அவர்களுடைய தேனிலவு அனுபவமாக இருந்தது.

காரல் மார்க்சுக்கு இரண்டு கண்கள் என்றால் அது ஜென்னியும் பிரெட்ரிக் எங்கெல்சும். எழுத்துக்களில் மட்டுமே மார்க்சும் எங்கெல்சும் சந்தித்துக் கொண்டிருந்த நிலையிலிருந்து மாறி நேரடி சந்திப்பிற்கு வாய்ப்புக் கிடைத்தது 1844 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குப் போகும் வழியில் பிரடெரிக் எங்கெல்ஸ் காரல் மார்க்சைச் சந்தித்தார். அச் சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஏனென்றால் மனிதகுல விடுதலைக்காக அவர்கள் நடத்திய விவாதம் மிக நீண்ட விவாதம். விவாதம் என்றால் சில மணித்துளிகள் சில மணி நேரமோ அல்ல. பத்து நாட்கள் விவாதமாக இருந்தது அது. இருவருக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. இருவரும் உழைக்கும் மக்கின் விடுதலைக்காக இணைந்து பயணிப்பது என்கின்ற முடிவை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட மகத்தான பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட காரல் மார்க்சுக்கு உற்ற தோழனாக பிரெட்ரிக் ஏங்கல்சு விளங்கினார்.
தன்னுடைய வாழ்க்கையை மார்க்சுக்காக அர்ப்பணித்தவர் எங்கெல்ஸ். தானியங்கள் பார்மனில் பிறந்த டெக்ஸ்டைல்ஸ் அதிபரின் மகன் எங்கெல்ஸ் தன்னுடைய தந்தையின் விருப்பப்படி முதலாளியாக விரும்பவில்லை. மாறாக தொழிலாளி வர்க்க விடுதலைக்காக அரும்பாடு படவேண்டும் எனவே எண்ணினார் ஆகவேதான் ஆலைகள் நிறைந்த நகரில் ஒரு தொழிலாளியாக வேலை செய்து அந்தப் பணத்தில் மார்க்ஸை வாழ வைத்து எழுத வைத்தார்.
மார்க்சும் எங்கெல்சும் இணைந்து மனிதகுல வரலாற்றைப் படித்தனர். உழைப்பு தான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகிறது என்பதைக் கண்டறிந்தனர் அதற்கு அவர்களுக்கு சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு உதவியது. ‘மாற்றம் ஒன்றே மாறாதது. சமூக அமைப்புகளும் மாறும் என்ற முடிவுக்கு வந்தனர். புராதன பொதுவுடமைச் சமுதாயம் துவங்கி அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், சோசலிச சமுதாயம், கம்யூனிச சமுதாயம் என சமுதாய மாற்றம் நிச்சயம் நிகழும் என்கின்ற வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை அவர்கள் கண்டறிந்தனர். இத்தகைய சமூக மாற்றம் தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் இணைந்து புரட்சியை நடத்துவதன் மூலமாக சாத்தியம். அதற்கு ஒரு புரட்சிகர கட்சி தலைமை தாங்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்தனர் மார்க்சும் எங்கெல்சும்.
புரட்சிக்கு இடையூறாக மதம் என்னும் அபினை (போதை) மருந்தை மனிதன் தன் வாழ்க்கை துயர்களைப்போக்க உட்கொள்கின்றான். மதத்தைக் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்று திரள வேண்டிய அவசியத்தைத் தொழிலாளி வர்க்கத்திற்கு தங்களுடைய படைப்புகள் மூலம் உணர்த்தினார்கள்.
பிரஷ்யாவிலிருந்து பெல்ஜியம் அங்கிருந்து பிரான்சும் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து என தொடர்ந்து அவர் தேசாந்திரி யாக நாடு கடத்தப்பட்டார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை போல அலைந்து திரிந்து இல்லற வாழ்க்கையில் பெரும் சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தனர் மார்க்சும் ஜென்னியும். அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் ஏராளம் ஏராளம். ஆனாலும் இத்தகைய இணையர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது அறவே வரவே இல்லை. செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்கின்ற குறுந்தொகைப் பாடல் போல அவர்கள் அன்பால் கட்டுண்டு கிடந்தனர். அதன் முன்பு வறுமை தெரியவில்லை. தாங்கள் வரித்துக்கொண்ட கொள்கைக்காக லட்சியத்துக்காக உழைத்துக் கொண்டே இருந்தார்கள்.
உலகிலேயே மிகப் பெரிய நூலகமான லண்டன் மியூசியம் நூலகத்தில் காரல் மார்க்ஸ் இரவும் பகலும் தொடர்ந்து படித்தார். படித்து குறிப்பெடுத்து குறிப்பெடுத்தவற்றை விரிவுபடுத்தி கட்டுரைகளாக நூலாக தமது கிறுக்கல் கையெழுத்தால் படைத்தார். அவற்றை ஜென்னி நகல் எடுத்தார். ஒரு காரியதரிசியைப் போல செயல்பட்டார் ஜென்னி. கார்ல் மார்க்ஸினுடைய கிறுக்கல் கையெழுத்து 3 பேருக்குத் தான் புரியும். ஒருவர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றொருவர் ஜென்னி மூன்றாமவர் உளவுத்துறை அதிகாரி. அந்த அளவிற்கு கிறுக்கல் கையெழுத்தைப் பெற்றிருந்தார் காரல் மார்க்ஸ்.
தான் வறுமையின் காரணமாக வேலை தேடிச் செல்கிற பொழுது இவரது கிறுக்கல் கையெழுத்தால் ரயில்வே துறையில் இவருக்கு வேலை மறுக்கப்படுகிறது. மார்க்சின் வறுமையான வாழ்க்கையைச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொன்னால் குழந்தை பிறந்தபோது தன்னுடைய குழந்தைக்குத் தொட்டில் வாங்க பணமில்லை குழந்தை இறந்த போது அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கவும் பணம் இல்லை. ஒரு குழந்தை இறந்ததைக் கூட உடனடியாக மார்க்ஸிடம் ஜென்னி சொல்லவில்லை. காரணம் அப்போதுதான் மிகவும் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார் மார்க்ஸ். அனைத்தையும் சகித்துக்கொண்டார் ஜென்னி. தான் கட்சி ஊழியர் என்பதில் மிகவும் பெருமை கொண்டார் ஜென்னி. ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய குழந்தைக்குப் பாலூட்டினால் மார்பிலிருந்து இரத்தம் வரும் நிலையிலும் மார்க்சைக் கடிந்து கொள்ளவில்லை என்பதையும் நாம் இங்கே பார்க்க வேண்டியிருக்கிறது.
எல்லாப் பெண்களைப் போலவே ஜென்னியும் ஏழு பிள்ளைகளைப் பெற்று எடுத்தாள். நான்கு பிள்ளைகள் வறுமையாலும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமலும் இறந்து போகிறார்கள். சவப்பெட்டி வாங்குவதற்குப் பணம் இல்லாமல் ஒரு நாள் தள்ளி தன்னுடைய பெண் குழந்தையை அடக்கம் செய்கின்றாள் ஜென்னி.
ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டது. அனாதைகளாக குழந்தைகளோடு வீதியில் நின்ற போதும் விரக்தி அடையாமல் தன் பணியைத் தொடர்ந்தார் மார்க்ஸ். துணையாக நின்றார் ஜென்னி. இலக்கியங்களை நுகர்ந்து நுகர்ந்து இருவரும் இன்பம் பெற்றார்கள். காரல் மார்க்ஸ் எழுதினால் அதில் கவித்துவம் இருக்கும். இலக்கிய மேற்கோள்க ளும் இருக்கும்.

ஒரு கட்டத்தில் பிரான்ஸ் அரசு ஜென்னியைக் கைதுசெய்து விபச்சார வழக்கில் சிறையில் அடைத்தது என்பதுதான் வரலாறு. இந்த மனிதகுல விடுதலைக்காக எல்லாப் பழியையும் ஏற்றாள் ஜென்னி.
சமூக மாற்றத்திற்கான பணியாக எழுத்துப்பணி மட்டுமே நிறைவாக இருக்காது. களப்போராளியாக செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையில் கார்ல் மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்டு லீக் என்கின்ற ஒரு குழுவை அமைக்கிறர்கள். தொழிலாளி வர்க்கம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து சுருக்கமாக அறிக்கை தருமாறு கம்யூனிஸ்ட் லீக் மார்க்சைக் கேட்டுக் கொண்டது. காரல் மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உருவாக்கி 1848ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையை பிப்ரவரி 21ம் தேதி வெளியிட்டார்கள். உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான நூல் பைபிள். கம்யூனிஸ்ட் அறிக்கை 1930 இல் தமிழ்நாட்டில் குடியரசு இதழில் தந்தை பெரியார் அவர்களால் வெளியிடப்பட்டது என்பதை இங்கு நாம் குறிப்பிட வேண்டிய அவசியம். கேள்வி பதிலாக அமைந்த மகத்தான நூல் கம்யூனிஸ்ட் அறிக்கை.
‘இதுவரையில் நடந்த வரலாறுகள் அனைத்துமே வர்க்கப் போராட்ட வரலாறு’ என்பதும் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள். இழப்பதற்கு எதுவுமில்லை அடிமை விலங்கைத் தவிர. அடைவதற்கு ஒரு பொன்னுலகு காத்திருக்கிறது’ என்பது போன்ற வரிகளும் மகத்தான வரிகளாக பார்க்கப்படுகின்றன. 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கைதான் கம்யூனிஸ்ட் அறிக்கை.
நாம் கூட சிவப்பு புத்தக வாசிப்பு என்கிற அடிப்படையில் கடந்த 2019,20ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் ஆகியவற்றை வாசித்து நினைவுபடுத்திக் கொண்டோம். உழைக்கும் வர்க்கம் புரட்சியின் மூலமாக எப்படி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான விடையை சொல்லக்கூடியது தான் கம்யூனிஸ்ட் அறிக்கை.
அது நடைமுறையில் 1871 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் மூலம் பார்க்க முடிந்தது. மூன்று மாதங்கள் நீடித்தாலும் பாரிஸ் கம்யூன் என்று சொல்லக்கூடிய அந்த மாற்றம் என்பது வரலாற்றில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதனுடைய அனுபவங்களை உள்வாங்கி 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றத்கது. “ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி” என கூத்தாடிப் பாடினார் பாரதி.
காரல் மார்க்ஸ் உருவாக்கிய தாஸ் கேப்பிட்டல் என்றழைக்கப்படும் மகத்தான நூல் மூலதனம் அதன் முதல் தொகுதி மட்டுமே காரல் மார்க்ஸின் வாழ்நாளில் வெளியிட முடிந்தது. பிற தொகுதிகளை எல்லாம் தன்னுடைய மகத்தான உழைப்பால் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் ஏங்கெல்ஸ் வெளியிட்டார்.
மூலதனம் நூலை முதலில் மொழிபெயர்த்து வெளியிட்ட நாடு தொழிலாளி வர்க்கப் புரட்சி நடத்திய ரஷ்யா. மார்க்ஸ் உருவாக்கிய தத்துவத்தை செயல்படுத்தி சமூக மாற்றம் கண்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி.
உலகில் எத்தனையோ தத்துவங்கள் தோன்றின. வளர்கின்றன. மறைகின்றன. எத்தனையோ மதங்கள் எத்தனையோ வழிகாட்டுதலை எல்லாம் கொடுத்து இருக்கின்றன. ஆனால் சுரண்டலுக்கு எதிரான அல்லது சுரண்டலை முடிவுகட்டி எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்கின்ற ஒரு சமத்துவ சமூகத்தை அமைப்பதற்கு எந்த ஒரு மதமும் எந்த ஒரு தத்துவமும் வழி காட்டவில்லை. மாறாக காரல் மார்க்ஸ் உருவாக்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கம்யூனிஸ்ட் அறிக்கை மூலதனம் போன்ற ஆவணங்கள் தான் பாட்டாளி வர்க்கத்திற்கு சரியான வழிகாட்டியது. அத்தகைய வழியில் தான் உலகில் முதன் முதலாக ரஷ்யாவில் புரட்சி நடைபெற்று ஒரு தலைமுறை சமத்துவ சமூகமாக வாழ்ந்தது என்பதை வரலாறு உணர்த்துகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜோசப் ஸ்டாலின் தலைமையில் பாசிசம் வீழ்த்தப்பட்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிஸம் வளர்ந்தது. அதற்குப் பிறகு சீனா வடகொரியா வியட்நாம் கியூபா போன்ற பல நாடுகளில் சோஷலிச புரட்சிகள நடைபெற்றன. ஒரு கட்டத்தில் உலகின் மூன்றில் ஒரு பகுதி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோசலிச நாடுகளாக இருந்தன என்பது வரலாறு. அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட சூழ்ச்சிகளும் ரஷ்யாவில் கிளாஸ் நாத், பெரிஸ்த்ரோய்கா போன்ற தவறான முடிவுகள் சோஷலிசத்திற்கு 1990களில் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் அது தற்காலிகமானது தான் என்பதை மற்ற சோசலிச நாடுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
முதலாளித்துவத்தால் உழைக்கும் மக்களுக்கு உன்னதமான வாழ்வைத் தர இயலாது என்பதை நடைமுறை உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி .. அதன் விளைவாக உலகம் முழுவதும் ஏராளமான பாதிப்புகள் நிகழ்ந்தன. அக்காலகட்டத்தில் வாடிகனில் இருக்கக்கூடிய கிறிஸ்துவ மதத் தலைவர் போப் ஜான்பால் மார்க்சியத்தைப் படியுங்கள் மூலதனத்தைப் படியுங்கள் தீர்வைக் காணுங்கள் என்றார்.
கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா இன்றும் தொடர்கிறது. கடந்த ஆண்டு மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் 56 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்கள். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களிடம் பணம் சென்று சேர வேண்டும். அது ஒன்றுதான் கொரோனா கொடூரத்திலிருந்து உழைக்கின்ற மக்களைக் காக்கும் என்றனர். அவர்கள் மார்க்சியத்தைப் படித்துவிட்டுத்தான் அந்த கோரிக்கை வைத்தார்கள். ஆக அன்றும் இன்றும் என்றும் உழைக்கும் மக்களுக்கு மார்க்சியம் தான் தீர்வைத் தந்தது தந்து கொண்டிருக்கிறது தரும். அந்த வகையிலே காரல் மார்க்ஸ் உருவாக்கிய மார்க்சிய தத்துவம் தொழிலாளி வர்க்கத்தின் சுவாசம் போன்றது.
இத்தகைய மகத்தான தத்துவத்தை உருவாக்கிய காரல் மார்க்ஸ் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று மரித்துப் போனார். தனது இன்னுயிர்க் காதலியும் மனைவியுமான ஜென்னி இறந்தபொழுது மார்க்ஸ் இறந்துவிட்டார் என்று எங்கெல்ஸ் சொன்னார். அவ்வாறே தான் ஓராண்டு காலத்திற்குள்ளாக 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இதுகுறித்து பிரெடரிக் எங்கெல்ஸ் மார்க்ஸின் இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மார்க்சின் பெயர் யுகம் யுகாந்தரங்களுக்கும் நிலைத்திருக்கும் என்று எங்கெல்ஸ் கூறியது உண்மையானது.
“மனித குலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாக செய்வதற்குரிய வேலையைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்” என்று தனது பதினேழாம் வயதில் எழுதிய காரல் மார்க்ஸ் அவ்வாறே வாழ்ந்து காட்டினார் என்பதைப் பார்க்க முடிகிறது. ஆகவே தான் உலகில் எந்த ஒரு தலைவருக்கும் 200வது பிறந்த நாள் விழா கொண்டாடாத நிலையில் மார்க்ஸுக்காக மட்டுமே உலகம் முழுவதும் 200 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும். ஆகவே இத்தகைய சிறப்பு வாய்ந்த காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூர்ந்து உலகத் தொழிலாளி வர்க்கம் மனித விடுதலைக்கான போராட்டத்தில் மேலும் மேலும் முன்னேறிச் செல்லக் கூடிய வகையில் மார்க்ஸைப் பயில்வதும் செயல்படுத்துவதும் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 24 வது அகில இந்திய மாநாடு நடைபெற உள்ள இக்காலத்தில் மார்க்சிய தத்துவத்தை மேன்மேலும் உயர்த்திப் பிடிக்கவும் இந்திய மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை அமுல்படுத்தவும் உறுதியேற்போமாக.
கட்டுரையாளர் :
பெரணமல்லூர் சேகரன்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்,
சி.பி.ஐ.(எம்), திருவண்ணாமலை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.