காதலும் கம்யூனிசமும் கண்ணீரும்
கலந்த ஒரு திரைக் காவியம் வாழை (Vaazhai)!
==================================
வேம்பு, சிவனணைந்தப் பெருமாளின் அக்கா (திவ்யா துரைசாமி). வேம்பை காதலிக்கும் கலையரசன் (கனி).
ஒருநாள் வாழைத்தார் சுமந்து வரும்போது, சிவனணைந்தன் தன் அக்காள் வேம்புவிடம் சொல்வான், “அக்கா, நீ கனி அண்ணனைக் கட்டிக்கோ,” வெட்கத்தில் சிவப்பாள் வேம்பு. ஏற்கனவே தன் நெஞ்சில் “வே” என்று பச்சை குத்தியிருப்பான் கனி.
மருதாணி பறித்து வரும் தம்பியிடம், கொஞ்சம் மருதாணியை கனியிடம் தந்துவிட்டு வரச் சொல்வாள் வேம்பு. அவனோ, சிபிஎம் சின்னம் பொறித்த பேட்ஜ்-ம் எடுத்துப் போறேன், என்பான்.
ஏன், என்ற கேள்விக்கு, “நம்ம அப்பா நமக்காக விட்டுட்டுப் போனது அது தானே?. நான் ஸ்டிரைக் நடந்த அன்னிக்கே, இதைக் கனி அண்ணணிடம் கொடுக்கனும்னு நெனச்சேன் என்பான், வேம்புவின் தம்பி சிவனணைந்தன். அதே போல் கொண்டுபோய்க் கொடுப்பான்.
அந்த காதலின் சின்னமாக வந்த மருதாணிக் குவியலின் மேல், கம்யூனிச சின்னத்தை வைத்து காதல் பொங்க கலையரசன் பார்த்துக்கொண்டிருப்பான்.
இந்த இடத்தில் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டிய காட்சி, சிவனணைந்தன், வேம்புவின் அம்மா, தன் கையில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தைப் பச்சை குத்தியிருப்பாள். அதைத் தன் பிள்ளைகளிடம் காட்டி, “உங்க அப்பா, கட்சி கட்சினு அலைஞ்சிட்டு ஒண்ணுமே இல்லாம நம்மள விட்டுட்டுப் போனாலும் உங்கப்பாவா நெனச்சி இந்த சினத்தோட தான் நான் வாழ்ந்துட்டிருக்கேன். போராடிட்டு இருக்கேன். “என்பாள்.
கலையரசன் நெஞ்சில் வேம்பு, வேம்புவின் அம்மா நெஞ்சில் அவளது அப்பா வேலுச்சாமியின் நினைவாக, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், கேள்வி கேட்க துணிந்துவிட்ட கலையரசனிடம் தனது போராளி அப்பாவின் கம்யூனிஸ்ட் சின்னத்தை சேர்க்க நினைக்கும் சிவனணைந்தன்.
இப்போது நினைத்துப் பாருங்கள். காதலையும் வாழ்க்கைப் போராட்டத்தையும் கம்யூனிசத்தோடு கலந்து, இத்தனை கலை நேர்த்தியோடு வெறெப்படிச் சொல்வதாம். நம்மிடம் பத்துக்கோடி என்ன, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் இத்தனை காதலுடன் கலந்த கம்யூனிக் காவியம் படைக்க முடியுமா என்பது சந்தேகமே.
கதையைச் சொல்லக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், வாழை படத்தில் வரும் இந்தக் கதையை, இந்தக் காவிய நயத்தை நம்மைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்.
திரையில் ஓர் ஆச்சர்யம் வாழை!
நாலு பாட்டு ஆறு சண்டை கொஞ்சம் காமெடினு மசாலா இல்லாம, 1999, பிப்ரவி 22 ல் ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த துயரத்தை சொல்வது வாழை.
சிவணனைந்தன், சேகர்னு 2 சின்னப் பசங்கதான் கதையின் முன் வரிசை கதா பாத்திரங்கள். அடுத்து 2 அம்மாக்கள். அடுத்து கலையரசன், காதலி.பள்ளி மாணவர்களின் மாணசீக டீச்சர்.
வாழை சுமக்கும் கூலி எனும் வாழ்வாதாரம், ஒரு கூலி உயர்வுப் போராட்டம். இல்லையில்லை கேள்வி எழுப்பி ஒரு வாக்குவாதம்.
புளியங்குளம், கருங்குளம் ஊர், பள்ளிக்கூடம், வாழைத்தோப்பு, சிற்றோடைகள், சிறுகுட்டைகள். இவ்வளவு தான் மொத்தப் படமும். ஆனால், நள்ளிரவுக் காட்சியில் கூட படத்தில் எண்டு கார்டே போட்டாலும் மக்கள் யாரும் எழாமல் உறைந்திருக்கிறாகள்.
வடக்கு தெற்கு என்று திசைகள் கடந்து, கூலி, நடுத்தடுரவர்க்கம் என அடுக்குகள் கடந்து, கிராம நகர எல்லைகளைத் தாண்டி, சாதி, சமய இழுக்குகளையும் புறந்தள்ளி மக்களின் மனதை உறைய வைத்திடும் வித்தை மாரிக்கு வாய்த்திருக்கிறது.
கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்கணும். அவனது கலை மனித மனதை சலவை செய்யணும். பேரன்பு வாழ்த்துகள்… மிக்க நன்றியும் அன்பும் தோழர் Mari Selvaraj (மாரி செல்வராஜ்).
– சக்தி சூர்யா.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.