“பாதகத்தி பாதகத்தி பாதகத்தி” – “வாழை” திரைப்பார்வை
“அய்யோ… ஏம் மவனெ ஒருவாய் கூட திங்காமெ வெறட்டிட்டேனே…”
கஞ்சியின் ஈரம் சொட்டும் பழைய சோறு நிரப்பட்ட அலுமினியத் தட்டை நெற்றியில் பலமுறை சடார் சடார் என அடித்து கதறும் தாயின் கதறலில் தெறித்த கண்ணீரின் ஈரத்தோடு நான் வீடுவந்து சேர்ந்தேன்.
சமூகப் போருக்குக் கணவனையும் நிறைசுமை கூலிக்கு இரு பிள்ளைகளையும் பரிகொடுத்து
“பாதகத்தி பாதகத்தி பாதகத்தி ”
என்று குற்றவுணர்ச்சியில் குறுகும் அந்தத் தாயின் பேரோலம் இன்னும் என் காதில் இடைவிடாமல் மீண்டும் மீண்டும் ஒலித்து வலி செய்கிறது.
உணர்வுள்ள இந்தத் திரைப்படத்தின் ஒற்றை உயிரை ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும் இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணனும் செம்மையாகத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நாம் இருப்பதைப் போன்ற உணர்வு ஒளிப்பதிவில் ஜொலிக்கிறது. உரையாடலில் பேசமுடியாததை காட்சியில் பேசவைத்திருக்கிறார்.
இசையை வாசிக்கும் போதும் வாசிக்காமல் மெளனிக்கும் போதும் சந்தோஸ் நாராயணன் நரம்பில் உணர்வைப் பாய்ச்சுகிறார். கதைக்குத் தேவையான உணர்வை கடத்தியிருக்கும் விதம் நேர்த்தி.
வாழையடி வாழையாக வாழை சுமந்தவர்கள் தங்கள் பசிக்கு கூட வாழைப்பழம் பறித்துத்தின்ன வக்கற்றவர்களாக புறக்கணிக்கப்படுவது வர்க்கத்தின் இரக்கமற்ற சுரண்டலை ரத்தமும் சதையுமாக தோலுரித்து காட்டுகிறது.
தோப்பில் பசிதாங்க முடியாமல் வாழைப்பழத்தைத் தின்ன முயற்சித்து, அதன் குலை எட்டாத காரணத்தால் வாழையின் ஒரு இலைக்கொம்பை இழுத்து ஒரே ஒரு வாழைப்பழம் தின்றதற்காக மட்டையால் வாங்கிய ஒவ்வொரு அடியும் என்மீது விழுந்ததாக உணர்ந்தேன். திடீர் தாக்குதலில் பயந்து நடுங்கி ஒடுங்கி உடைந்து கதறும் காட்சி, திரைமொழியின் உச்சம்.
ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் வாழையின் குறியீடு இயல்பாகவே பின்தொடர்வது கதைக்கு இன்னும் முழுமை சேர்த்திருக்கிறது. மண்ணின் செந்நிறமும் வாழையின் மரகத நிறமும் ஒளிப்பதிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அழகு!
அச்சு அசலான ஒரு கிராமத்தை அப்படியே காட்சிப்படுத்திய விதம் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் நுட்பமான திறமைக்கு சாட்சியங்களாக விளங்குகின்றன. பழைய கிராமியப் படங்களை அசைபோட்டு பார்க்கையில் வாழை பேரனுபவத்தையும் எல்லைக் கடந்த ஆச்சர்யங்களையும் தந்திருக்கிறது.
இடம், உரையாடல், ஆடை வடிவமைப்பு ஆகிய மூன்று முக்கிய கூறுகளும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகள். குறிப்பாக இந்தப் படத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் இயற்கை ஒளி அழகு. செயற்கை ஒளியும் அரிதாரம் பூசாத பேரழகு.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பதை கதாபாத்திரங்களின் மூலம் உணர்வைக் கடத்திய நுட்பத்திலிருந்தும் திரையரங்கைவிட்டு வெளியே வந்த பிறகும் விழிகளில் வழிந்த கண்ணீரிலிருந்தும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
” ப்போ…ப்போ…ப்போ…” என்று படத்தின் தொடக்கத்தில் ஒலமிடத்தொடங்கி ” ப்போ…ப்போ..ப்போ..” என்று ஓலமிட்டு அழுவைத்திருக்கும் காட்சிகள் அத்தனை தத்ரூபமாக இருக்கின்றன.வஞ்சத்தாலும் பஞ்சத்தாலும் தொலைத்ததை ஒரு சமூகம் தேடிக்கொண்டிருப்பதன் ஒப்பாரிதான் அது “ப்போ…”
வைக்கோல் கன்றைக் கூட வாரி அணைத்து கொஞ்சி பாசம் செய்கிற கிராமத்து மனிதர்களின் வெள்ளந்திமனங்கள் மனிதத்தின் உச்சம்.
கதை எப்படி தொடங்கி எப்படி வளர்கிறது என்று ஊகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை இயல்பாக பல திருப்பங்களோடு நகர்வது பார்ப்பவர்களுக்கு பரவச அனுபவத்தைக் கொடுக்கிறது.
நான்கு இடங்களில் நான் உடைந்து உடைந்து மெளனமாக அழுதேன். கதை அதன் போக்கில் என்னைக் கடத்தி சென்றதுதான் அதற்குக் காரணம்.
நாயகர்களுக்காக கதைகளை உருவாக்காமல், கதைகளுக்காக கதாபாத்திரங்கள் தேர்வு செய்யப்படும் போதுதான், சினிமாவை பணம் அள்ளித்தரும் டிஜிட்டல் மாஃபியா குதிரைப்பந்தையமாக கருதாமல் மக்களின் கதையை மக்களின் கலையாக மாற்றி மக்களிடம் கொண்டுபோகும் போதுதான் தமிழ்ச்சினிமா உயிர்ப்பிழைத்திருக்கும்.
உன்னத திரைக்கலையைக் கலையாக மட்டும் காட்டாமல் பொழுதுபோக்கு கூறுகளோடு கலந்து தந்திருப்பது அவரின் இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். மாரி செல்வராஜ் தமிழ்ச் சினிமாவிற்கு மருத்துவம் செய்து மகத்துவம் செய்திருக்கிறார்.
வெட்டப்படும் ஒவ்வொரு வாழைக் குலையிலும் ஒரு கிராமத்து மனிதத் தலை தெரிகிறது. அது எந்த தகப்பனின் தலை எந்த தாயின் தலை எந்த ஆக்காளின் தலை எந்த தம்பியின் தலை என்பதைக் கூர்ந்து பாருங்கள் தோழர்களே!
பார்க்காதவர்கள் வாழையைப் பாருங்கள். சாப்பிடாதவர்கள் வாழைப்பழத்தை இனியாவது சாப்பிடத்தொடங்குங்கள்.
அத்தனைக்கலைஞர்களுக்கும் அன்பு முத்தங்கள்.
ஆக்கம் : போ.மணிவண்ணன்
நாள் : 31.08.2024
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.