உண்மை வாய்மூடி மெளனித்தால் பொய்கள் உண்மையின் கல்லறையின் மீதேறி வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும். அந்த பொய்மைகளின் பெயரைத்தான் மரிஜாப்பியாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஏறத்தாழ 35 ஆண்டு காலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த போதும் ஒரு அவதூறு பிரச்சாரத்தை போதிய கவனம் செலுத்தி முறியடிக்காததால்  இன்று வரை அரசியல் எதிரிகள் சாம்பலாகி கிடக்கும் பொய்யை ஊதி ஊதி பெருந்தீயை ஏற்படுத்தி மார்க்சியமெனும் பெருவனத்தை அழித்து விட முயற்சித்து மூர்ச்சையாகி கிடக்கின்றனர்.

 நாமும் என்னதான் அவைகள் பொய்யென்றாலும் உலகின் முன் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இயல்பாக கடந்திருக்கிறோம் என்பது நமது செயல்பாட்டின் மீது நமக்கே அயற்சியாக இருக்கின்றது. அதற்கான தண்டனையாகத்தான் நந்திகிராம் பிரச்சனையும் ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு கடந்த 10 ஆண்டு காலம் நாம் ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் போயிருக்கிறது. இனிமேலாவது உண்மைகளை உரக்க ஏந்துவோம்வெங்காயத்தை உரிப்பது போல் பொய்களின் தோலுரித்து உலகின் முன் ஒன்றும் இல்லை என்று அறிவிப்போம்.

இந்தியா 1947 இல் சுதந்திரம் அடையும் போது நாடு இந்தியா பாகிஸ்தானாக துண்டாடப்படுகிறது. இந்தியாவின் மணிமுடிச் சிகரங்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த பகுதிகள் எல்லாம் வெட்டி எடுத்து பாகிஸ்தானாக பங்கு வைக்கப்படுகிறது. கிழக்கு வங்காளம் மேற்கு வங்காளம் எனும் இரு பகுதிகளில் கிழக்கு வங்காளம் பாகிஸ்தானோடு இணைகிறது. இணைந்த சில வருடங்களில் 1600 கிலோ மீட்டர் இடைவெளியில் மேற்கு பாகிஸ்தான் இருந்ததால் பூகோள ரீதியான பிரச்சனைகளும் நிர்வாக சிரமங்களும் மொழிச் சிக்கல்களும் 1971 ஆம் ஆண்டு வங்க தேசமெனும் தனிநாடாக பிரிகிறது. பிரிக்கப்பட்ட வங்க தேசத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஒடுக்கப்பட்ட நாம சூத்திரர்கள் இந்தியாவிற்கு மீண்டும் விரட்டியடிக்கப்படுகின்றனர்

எல்லை கோடுகளால் பிரித்தெடுக்கப்பட்ட தொப்புள்கொடி உறவுகள் புகலிடம் தேடி இந்தியாவின் கதவுகளை தட்டுவதும், அதனால் எழுந்த விபரீத பிரச்சனைகளும், அதை தூண்டிவிட்டு குளிர்காய்ந்த எதிர்கட்சிகளும், அதை நேர்மையாய் சந்தித்த இடதுசாரி அரசாங்கமும், ஊதிப் பெருத்த பொய்களும், உடைந்து சிதறிய சோப்பு நுரை குமிழ்களும் விரிவாக இந்நூலில் எழுதப்பட்டிருக்கின்றன. 1948 ஆம் ஆண்டே பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய உயர்சாதி இந்துக்கள் மேற்கு வங்காளத்தோடு கலந்து விடுகின்றனர் அவர்கள் வரும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. 1958 ற்கு பின் இந்தியா குடியரசு ஆனதற்கு பின்  பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களெல்லாம் அகதிகளாக்கப்பட்டு ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

தண்டகாரண்யம்.
அடிப்படையில் வறண்ட நிலப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற காடு ராமாயணத்தில் ராமன் வனவாசம் செல்லும் பகுதி தண்டகாரண்யம் என்றழைக்கப்படுகிறது. ஒரிசா சட்டீஸ்கர் மகாராஷ்டிரா தெலுங்கானாவின் சில பகுதிகள் அகதிகளுக்கான இடமாக தேர்வு செய்து மத்திய அரசு அமைக்கிறது. அகதிகள் வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை அறிய ஒரு நாள் உங்கள் ஊரை விட்டு தனித்திருந்து பாருங்கள் உள்ள மெல்லாம் கூசிப் போவீர்கள்.

 ஒன்றுபட்ட இந்தியாவில் இந்தியர்களாக இருந்தவர்கள் பாகப் பிரிவினையில் பாகிஸ்தானியாக மாறி அங்கிருந்து வங்கதேசமாக பிரிந்து அங்கே உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் துரத்தியடிக்கப்பட்டு வாழ்வதற்கான கையளவு நிலமின்றி திரிசங்கு சொர்க்கமாய் அல்லாடிக் கொண்டிருக்கும் அகதிகள் வேதனை இன்று வரை சொல்லும் தரமன்று. இழிந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் அகதிகள் வடித்த கண்ணீரே ஆழ்கடலினும் ஆகப் பெரிதாகிறது.

1950 களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஆடிய போது அப்போது எதிர்கட்சியாக இருந்த இடதுசாரி அமைப்புகள் கொடுத்த வாக்குறுதியே பிற்காலத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப் போனது. அகதிகளை மீள்குடியேற்றம் செய்வோம், கண்ணியமிக்க வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம், வாக்குறுதி கொடுத்த காலமும் 1977 ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட சூழலும் முற்றிலும் நேர் முரணாய் இருந்த நேரத்தில் இடது முன்னனி அரசை நம்பி சாரிசாரியாய் லட்சக்கணக்கான நாமசூத்திரர்கள் அணி வகுக்க துவங்கினர்

செய்வதறியாது திகைத்து நின்ற இடது முன்னனி அரசு மத்திய அரசை நாட அகதிகளை தண்டகாரண்யம் எனப்படும் மக்கள் வசிக்க தகுதியற்ற வனாந்தர காடுகளுக்கு அனுப்பியது. ஆனாலும் உத்பாஸ்து உன்னயன் சீல் சமிதி எனும் அமைப்பானது மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு அகதிகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி போலித்தனமான நம்பிக்கைகளை ஏற்படுத்தி மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் சுந்தரவனக்காடுகள் நிறைந்த மரிச்சாப்பி எனும் தீவை கைப்பற்றி வாழலாம் என்று கூறி மக்களை குடியேற்றத் துவங்கினர். தண்டகாரண்யத்தை விட மிக மோசமான வாழத் தகுதியற்ற நிலப்பரப்பாக மரிச் சாப்பி இருப்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட அகதிகளில் பெரும்பாலானோர் திரும்பவும் தண்டகாரண்யம் செல்லத் துவங்கி விட்டனர்

எஞ்சியிருந்த எட்டாயிரம் அகதிகள் மரிச்சாப்பியில் இருந்து கொண்டு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடத் துவங்கி விட்டனர். சுந்தரவனக்காடுகளை அழித்து மரங்களை கடத்த துவங்கினர் உள்ளூர் மர வியாபாரிகளுக்கு அது சாதகமாக இருந்தது. போதை பொருள்களை கடத்திக் கொண்டு பங்களாதேசத்திற்கு விற்பனைக்கு போயினர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமாக எழவே இடது முன்னணி அரசு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றத் துவங்கியது. அதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு உள்ளுர் பழங்குடியினர் மட்டும் இறந்துபோக மற்ற அனைவரும் தண்டகாரன்யத்திற்கு அனுப்பப்பட்டனர்

அரசியல் எதிரிகள் காங்கிரஸ் ஜனதா கட்சி உள்ளிட்டோர் 17  ஆயிரம் வரையிலான அகதிகளை பச்சை படுகொலை செய்த கம்யூனிஸ்டுகள் என வாய்க்கு வந்த படியெல்லாம் இல்லாத கணக்கை சொல்லி இடது முன்னனி அரசின் மீது களங்கத்தை சுமத்தினர். அதிலும் மனிதர்களை தின்னும் வங்காளப் புலிகள் எனும் கட்டுக் கதை வேறு அது மக்களிடம் எடுபடவில்லை என்பது அடுத்தடுத்த தேர்தலில் இடதுசாரிகள் தொடர்ந்து ஜெயித்து எதிரிகளின் பொய்க்குற்றச்சாட்டை முறியடித்தாலும் எதையாவது மென்று கொண்டிருக்கும் ஊடகங்கள் அவ்வப்போது பல்லுப்போன தங்கள் வாய்களுக்கு மரிச்சாப்பியை மென்று சுவைக்கின்றன. அதற்கு பதில் சொல்லும் விதமாக ஏறத்தாழ 45 வருடங்களுக்கு பிறகு தமிழில் இப்படி ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. வங்காளத்தில் எழுதிய ஹரிலால் நாத் அவர்களுக்கும் அதை தமிழில் மொழிபெயர்த்த ஞா. சத்தீஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.


             நூலின்  தகவல்கள் 

நூல் : ” மரிச்ஜாப்பி “ உண்மையில் என்ன நடந்தது
ஆசிரியர் : ஹரிலால் நாத்
தமிழில் : ஞா சத்தீஸ்வரன்
பக்கம்  : 328
விலை 330
பதிப்பகம் பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924

 

 அறிமுகம் எழுதியவர்

செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *