மேற்கு வங்காளத்தில் வங்கக்கடலில் சுந்தரவனக் காடுகளுக்குள் அமைந்திருக்கும் யாருமற்ற வனத் தீவு மரிச்ஜாப்பி.
1970களில் நடந்த அரசியல் நிகழ்வு 2000த்தில் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு மக்களை மேம்படுத்த போராடிய அரசியல் கட்சியின் மீதான காழ்ப்புணர்ச்சியை கிளப்பி விடுகிறது.உண்மையில் அகதிகளின் மீதான அரசியலில் நடந்தது என்ன என்பதை ஆய்வுகள் மூலமும் அன்றும் இன்றும் வந்த ஊடகங்களின் கட்டுரைகளின் வழியேயும் ஆராய்ந்து எழுதியிருக்கும் ஹரிலால் நாத் அவர்களின் நூலினை தமிழில் சிறப்பான மொழிபெயர்ப்பில் கொணர்ந்திருக்கிறார் ஞா.சத்தீஸ்வரன்.
அரசியலின் கூர்முகம் மக்களுக்கான வளமையை மேம்படுத்துவதில் சிறப்பான தலைவர்களை உருவாக்கி மக்களின் உழைப்பை பண்படுத்த உதவுகிறது.தேசத்தின் மேம்பாட்டை சிறப்பாக்கிட மக்களுக்கான திட்டங்களை நன்முறையில் இயற்றிட அரசியலின் நகர்தல் கைகொடுக்கிறது. ஆனால் மக்களை நல்வழிப்படுத்தவும் வசதிகளும் மேன்மையும் நிறைந்த வாழ்வுமுறையையும் வழங்கிட உழைக்க வேண்டிய அரசியல்வாதிகள் மக்களின் அறியாமையை அடித்தளமாகக் கொண்டு தங்களின் மேம்பாட்டை மட்டுமே முன்னேற்ற முயற்சித்தால் நிகழும் விளைவுகளை காலத்தின் சாட்சியாக நம் தேசம் உணர்ந்ததை நமக்கு உணர்த்த வருகிறது இந்நூல்.
ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் சிக்கிக்கொண்ட தேசத்தில் அகிம்சை போராட்டமும் மக்களின் விடுதலை வேட்கையும் ஒன்று கூடியதால் எழுந்த மன எழுச்சியால் தேசம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது.தாய்நாட்டின் அடிமை விலங்கொடிக்க முயற்சிக்கையில் நாடு இரண்டாகத் துண்டாடப்படுகிறது. தேசத்தின் எல்லைகள் மக்களின் வாழ்வுமுறையை தலைகீழாகப் புரட்டிப்போடும் என்பதை உணராமல் மக்களுக்குள் பிரிவினையும் பேதமும் தலைதூக்க இனத்தின் வழியில் பிரியும் மக்கள் எல்லைகளைத் தாண்டி அகதிகளாக இடம்பெயர்கின்றனர்.
கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) நாட்டிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு இடம்பெயரும் பல்லாயிரம் மக்களின் நிலையை தேசம் உணரத் தொடங்கினாலும் வறுமையின் ரேகைகள் படர்ந்திருக்கும் நமக்குள் நம்மையே சரிசெய்யவும் மேம்படுத்தவும் கட்டமைப்பின் தேவையும் அதிகரிக்க அகதிகளை ஏற்கவும் முடியாமல் புறம்தள்ள முடியாமலும் தடுமாறுகிறது.
பாகிஸ்தானின் தலைமையை ஏற்க விரும்பாமலும் அச்சத்தின் காரணமாகவும் இடம்பெயரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்குகையில் மேற்கு வங்க காங்கிரஸ் அரசு அவர்களைத் திருப்பி அனுப்ப தீவிர நடவடிக்கை எடுக்கிறது. காவல்துறை உதவியுடன் அகதிகள் விரட்டப் படுகின்றனர். மத்திய அரசின் தலையீட்டினால் ஒரிசா பீகார் மேற்குவங்காளம் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் பங்களாதேஷ் மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். தண்டகாருண்யம் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் லட்சக்கணக்கான மக்கள் வாழத் துவங்குகையில் மேற்கு வங்காளத்தில் எதிர்க்கட்சியாக இருந்த இடது முன்னணி அகதிகளின் மேம்பாடு தொடர்பாக சில கோரிக்கைகள் வைக்கிறது. அகதிகள் மேற்கு வங்காளத்திலேயே குடியம்ர்த்தப்படவேண்டும் என்றும் அவர்களுக்கான வாழ்வு முறைகளை மேம்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராடுகிறது.
1947 ல் இருந்து 1958 வரை மேற்கு வங்காளத்தின் வழியாக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்த பங்களாதேஷ் மக்களை அகதிகள் முகாமில் போதிய வசதிகளுடன் பாதுகாக்கிறது இந்தியா. தண்டகாருண்ய முகாமில் இருந்து சிலரின் தூண்டுதலின் பேரில் பல்லாயிரம் பேர் மரிச்ஜாப்பியை நோக்கி நகர்கின்றனர்.
காலம் மாறுகிறது கட்சிகளும் மாறி மேற்கு வங்காளத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வருகிறது.1970களில் நடைபெறும் இந்த அரசியல் மாற்றத்தை அகதிகளும் உணரத் துவங்குகின்றனர். நமது வாழ்வுமுறைக்காக போராடிய இடது முன்னணி ஆட்சியில் நமக்கான இருப்பியல் இன்னும் சிறப்புற அமையும் என்ற கனவின் வழியில் அகதிகள் தண்டகாருண்யத்திலிருந்து மரிச்ஜாப்பியை நோக்கி படையெடுக்கின்றனர்.
பழங்குடிகள் மட்டுமல்ல எந்த மனிதனும் குடியில்லாமல் வனத்தை மட்டுமே பசுமையெனக் கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் தீவு மரிச்ஜாப்பி.
அதில் மனிதர்கள் வாழ்வதற்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலில் உணவும் கிடைக்காமல் உயிர் வாழ்வதற்கான அமைப்பு இல்லாத நிலையில் அகதிகள் நுழைவு பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது.
மரம் வெட்டி வெளிநாட்டிற்கு கடத்துதல் ஆயுதக்கடத்தல் போன்ற முறைகேடான வேலைகளில் ஈடுபடும் அகதிகளின் செயல்பாடுகளால் அரசின் செயல்பாடுகளில் தொய்வும் தடையும் ஏற்படுகிறது.மாநில மக்களின் மேம்பாடுகளை நோக்கி நகரும் அரசின் செயல்கள் அகதிகளை நோக்கி நகருகையில் நிலைமை மாறிப் போகிறது.
தண்டகாருன்யத்தின் முடிவில்லா துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் வங்காள மண்ணில் தங்களது சொந்த உறவுகளுக்கு அருகில் வாழலாம் என்ற விருப்பத்துடனும் மரிச்ஜாப்பிக்கு அகதிகள் வந்தனர் விலங்குகளை போல உழைத்து காடுகளை சுத்தம் செய்து சதுப்பு நிலத்தின் உப்பு மண்ணில் வாழ முனைந்தனர் ஆனால் விவசாயிகளான மக்களுக்கு இவ்விடம் உகந்ததாக இல்லை இங்கு விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு ஏற்ற இயற்கை சூழல் இல்லை இதனால் தான் அவர்கள் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் சென்று மீன் பிடித்தல் சட்ட விரோதமாக வளத்தின் மரங்களை வெட்டி விற்பனை செய்தல் மற்றும் வங்கதேசத்திற்கு கடத்தல் தொழில் செய்தல் போன்றவற்றை நம்பி இருக்க வேண்டி இருந்தது இது எப்போதும் ஆரோக்கியமான வாழ்வாதாரமாக இருக்க முடியாது ஏழை மக்கள் இங்கே வந்து பிழைப்பதற்காக போராடினர் அத்தகையவர்களிடம் பறிவும் கருணையும் காட்டுவதே மனித தன்மையின் இயல்பு அதற்காக நியாயமும் அறமுமற்ற சட்டவிரோத செயல்களையும் உணர்ச்சிப்பூர்வமான அனுதாபத்துடன் ஆதரிக்க வேண்டும் என்பதில்லை எல்லாவற்றையும் அனுதாபத்துடன் அணுக முடியாது அது பகுத்தறிவு மற்றும் எதார்த்தத்தால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அதுவே உண்மையான பரிவும் தூய கருணையும் ஆகும்
எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவால் இடது முன்னணி அரசு மரிச்ஜாப்பியில் இருக்கும் அகதிகளின் மீது சாந்தமான நடவடிக்கையை நோக்கி நகர்கிறது. அவர்களிடையே மரிச்ஜாப்பியின் அமைப்பையும் அங்கே மனிதர்கள் குடியிருக்க முடியாத நிலையையும் அகதிகளுக்கு முழுமையாக எடுத்துரைத்து அவர்களை அமைதியான முறையில் தண்டகாருண்யத்திற்கு திருப்பி அனுப்ப காவல்துறையின் உதவியுடன் முயற்சிக்கிறது.
அரசின் மீதான சிலரின் காழ்ப்புணர்ச்சியினாலும் அகதிகளுக்குள் நிலவும் அறியாமையினாலும் சில அரசியல் கட்சியும் அமைப்புகளும் மரிச்ஜாப்பியை மனிதர் குடியிறுக்க வசதிகளை ஏற்படுத்தித் தர அரசை நிர்ப்பந்திக்கின்றன.
எண்பது லட்சம் பேர் அகதிகளாக இந்தியாவில் இருந்த பல்வேறு முகாம்களிலிருந்து பதினைந்தாயிரம் பேர் மரிச்ஜாப்பிக்கு இடம்பெயர்ந்தனர். ஒருபக்கம் மத்திய அரசு அகதிகளை மரிச்ஜாப்பியிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இடம்பெயர்த்த வேண்டும் என்ற நெருக்கடிகளும் மறுபக்கம் மரிச்ஜாப்பியில் இருக்கும் அகதிகளின் அங்கேயே வாழவேண்டும் என்ற கோரிக்கைகளும் அரசிற்கு பெரும் தலைவலியாக மாறுகிறது.
1978ம் ஆண்டிலிருந்து 1979ம் ஆண்டிற்குள் மரிச்ஜாப்பியில் சட்டவிரோதமாகக் குடியேறிய அகதிகளை அங்கிருந்து தண்டகாருண்யத்திற்கு திருப்பி அனுப்பும் அரசின் நடவடிக்கையில் 300க்கும் மேற்பட்ட அகதிகள் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டதாக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்பிய சில அரசியல்வாதிகளின் பொய்யுரைகள் அரசின் செயல்பாடுகளை நிலைகுலையச் செய்கின்றன.
1979ல் நடைபெற்ற இந்த நிகழ்வில் அன்றைய ஊடகங்கள் பரப்பிய தவறான தகவல்களை சரிசெய்துவிட்ட அரசால் அதே நிகழ்வின் நிலையை 2004ல் தேர்தல் அரசியலுக்காக சில கட்சியினர் மீண்டும் கட்டவிழ்த்துவிட்ட நிலையில் உண்மையில் நடந்த நிகழ்வுகளின் வழியாக இந்நூல் விவரிக்கிறது.
சுயநலத்திற்காகவும் அரசியல் வாபத்திற்காகவும் மனித அறியாமையைப் பயன்படுத்தி அவர்களின் ஆசைகளைத் தூண்டிவிட்டு குளிர் காயும் சில அரசியல்வாதிகளின் தேசப்பற்றில்லாத செயல்கள் எவ்வாறு மக்களை மட்டுமல்லாது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை ஒரு கட்சியின் அரசியல் எதிர்காலத்தை பாதித்து படுகுழியில் விழவைக்கிறது என்பதை இருபது கட்டுரைகளின் வழியாக உண்மையை கடுமையான முயற்சியிலும் தீவிரமான தேடுதலிலும் ஈடுபட்டு விளக்கியிருக்கிறார் ஹரிலால் நாத் அவர்கள்.
இது போன்ற உண்மை நிகழ்வுகளின் முழுமைத்தன்மை தேசமெங்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் அருமையான மொழிபெயர்ப்பில் நெருக்கமான எழுத்துவடிவில் தந்திருக்கும் சத்தீஸ்வரன் அவர்களின் இடையறாத உழைப்பிற்கு வாழ்த்துகள்.
சில கட்டுரைகளில் கூறியது கூறல் என்பதைப் போல ஒரே நிகழ்வுகள் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை தவிர்த்திருந்தால் கட்டுரையின் மூலம் கூறப்படும் நிகழ்வுகளின் வீரியம் நீர்த்துப்போகாது வாசிக்கும் நமக்குள் இன்னும் ஆழமாய் நிலைத்திருக்கும்.
கடந்த காலத்தின் முற்றத்திலிருந்து மரிச்ஜாப்பி தொடர்பான உண்மையையும் எதார்த்தத்தையும் கண்டறிந்து அதை நிகழ்காலத்திற்கு முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கட்டுரையாளரின் ஆதாரப்பூர்வமான தேடல்களும் அதை மொழிபெயர்த்தவரின் நியாயமான உழைப்பும் வாசிக்கும் நமக்குள்ளும் நிகழ்வுகள் குறித்த சரியான புரிதலை வழங்குவதில் நூல் நல்லதொரு பாதையை நோக்கிச் செல்கிறது.
நூலின் தகவல்கள்
நூல் : “மரிச்ஜாப்பி “ உண்மையில் என்ன நடந்தது (கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர் : ஹரிலால் நாத்
தமிழில் : ஞா.சத்தீஸ்வரன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924https://thamizhbooks.com/product/marichappi/
முதல் பதிப்பு : டிசம்பர் 2023
பக்கம் : 328
விலை : ரூ. 330
எழுதியவர்

இளையவன் சிவா
கி.சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) , தூரிகையில் விரியும் காடு (நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) , தீராக் கனவை இசைக்கும் கடல்- 2023 (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

