Marichappi Marichjhapi பாரதி புத்தகாலயம் மரிச்ஜாப்பி

 

 

 

ஆய்வெனும் பெயரிலான அவதூறுகளுக்கு பதிலடி

நான் அப்படியொன்றும் நூல்களை விரைந்து படித்துமுடிக்கக் கூடியவனல்ல. ஆனால் “மரிச்ஜாப்பி- உண்மையில் என்ன நடந்தது?” என்கிற நூலை எனது சுபாவத்துக்கு மாறாக ஒருமூச்சில் படித்து முடித்தேன். இரவு தொடங்கி மறுநாள் காலை 9 மணிக்கு 328 பக்கத்தையும் படித்து முடித்தேனென்றால் அதற்கு அகவயமான காரணமிருந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பொதுவெளியில் நடக்கும் விவாதங்களிலோ அல்லது தனிப்பட்ட உரையாடல்களிலோ பங்கெடுக்கும் என்னால் எதிர்கொள்ள முடியாததொரு கேள்வி உண்டென்றால் அது மரிச்ஜாப்பி பற்றியதுதான். “மேற்கு வங்கத்தில் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி மரிச்ஜாபியில் 17,000 தலித்துகளை கொன்றொழித்த மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு தலித்துகளின் உரிமைகள் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?” என்கிற அந்தக் கேள்வி உண்மையில் என்னை நிலைகுலையச் செய்தது.

17,000 பேரா 17 பேரா என்பதல்ல, ஒருவரை கொன்றிருந்தாலும் அதற்கு கட்சி பொறுப்பேற்கத்தானே வேண்டும் என்று மனதைக் குடையும் கேள்வியை எப்படி புறந்தள்ள முடியும்? ரோஸ் மல்லிக், தீப் ஹல்தர் போன்றவர்கள் எழுதியவற்றை நூலாதாரமாக வைத்துக்கொண்டு எழுப்படும் அந்தக் கேள்விக்கு “நம்முடைய கட்சி அவ்வாறு செய்திருக்காது” என்கிற நம்பிக்கையிலிருந்தும் விசுவாசத்திலிருந்தும் மழுப்பலாக அப்போதைக்கு ஏதேனும் பதிலைச் சொல்லி விட்டு வந்தாலும் எனது பதில் சரிதானா, அது உண்மையின்பாற்பட்டதா என்கிற உளைச்சல் நீங்கியபாடில்லை. இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் யார், பரப்புகிறவர்கள் யார், அவர்களது நோக்கம் என்ன என்பதற்கும் அப்பால் இந்தக் கேள்வியின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள வலுவான எந்தவொரு சான்றாவணமும் கிட்டாத நிலையில் ஒருவேளை நடந்திருக்குமோ என்கிற சஞ்சலமும் உண்டானது என்பதை வெளிப்படையாக சொல்லத்தான் வேண்டியுள்ளது. அப்படியான உளைச்சலும் சஞ்சலமும்கூட உருவாகாத மொன்னை விசுவாசத்தைக் கட்சி கோருவதுமில்லை. எனவே, மரிச்ஜாப்பியில் என்னதான் நடந்திருக்கும் என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு இந்தப் புத்தகம் பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது.

அதேவேளையில், கட்சியின் மீதும் அதன் தலைமையிலான அரசின் மீதும் இவ்வளவு பெரிய கொலைப்பழி சுமத்தப்படும்போது அதை மறுக்கும் அடுக்கடுக்கான ஆவணங்கள் அனைத்தும் கைவசமிருந்தும் கூட மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதில் நாம் ஏன் இவ்வளவு பின்தங்கியிருந்தோம் என்கிற புதிய பெருங்கேள்வியை இப்புத்தகம் எழுப்பியுள்ளது. ஊடகங்களும் அமைப்புகளும் ஆய்வுகளும் சிபிஎம்முக்கு எதிராக பரப்பிக்கொண்டிருந்த அவதூறுகளுக்கு 2020ஆம் ஆண்டு ஹரிலால் நாத் எழுதிய “Marichjhapi: Asale Ki Ghotechilo” என்கிற இந்த நூல்தான் எனக்கு தெரிய முதன்முதலில் வந்துள்ள உண்மை விளக்கம் எனக் கருதுகிறேன். நல்வாய்ப்பாக, மரிச்ஜாபி பற்றி இதே மனநிலையுடன் தேடிக்கொண்டிருந்த தோழர் ஞா.சத்தீஸ்வரன் கண்ணில் இந்நூல் படவே, இப்போது அது நம் கைகளுக்கும் வந்து சேர்ந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது இருநாட்டு எல்லைப் பகுதிகளிலும் நடந்த புலப்பெயர்வுகளின் துயரங்கள் எழுதிமாளாதவை. அப்படி மேற்கு பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியப்பரப்புக்குள் வந்தவர்கள் பஞ்சாப், அரியானா, டெல்லி பகுதிகளில் இந்திய அரசால் குடியமர்த்தப்பட்டனர். அதேபோல 1958ஆம் ஆண்டுவரை கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (வங்கதேசம்) புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்திற்குள் வந்தவர்கள் தாங்களாகவும் அரசின் வழியாகவும் குடியமர்ந்தனர். அதற்குப்பிறகு வங்கதேசத்திலிருந்து வருபவர்களை ஏற்கமுடியாது என்று அறிவித்த ஒன்றிய அரசின் மறுவாழ்வுத்துறை அமைச்சகம் அங்கிருந்த அகதி முகாம்கள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்ததை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. அகதிகளின் மறுவாழ்வுக்காக போராடுவதற்கென்றே கம்யூனிஸ்ட்களால் 1950 ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட United Central Refugee Council என்கிற கூட்டமைப்பு உறுதிமிக்கப் போராட்டங்களை நடத்துகிறது. இதன் விளைவாக பலரும் மேற்கு வங்கத்திலேயே குடியமர்த்தப்பட்டு வந்த நிலையில், வங்காள சாதியமைப்பின் அடிநிலையினரான நாமசூத்திரர் என்கிற சாதியினர் தம்மீது கிழக்கு பாகிஸ்தானில் தொடர்ந்த ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் தாளவியலாது 1962 ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்கத்திற்குள் அடைக்கலம் புகுகின்றனர். அப்போதைய காங்கிரஸ் மாநில அரசு அவர்களை ஏற்க மறுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியோ அம்மக்களை மேற்கு வங்கத்திற்குள்ளேயே குடியமர்த்துவதற்கான திட்டத்தை முன்வைக்கிறது. அந்தத் திட்டத்தை ஏற்காத மாநில காங்கிரஸ் அரசு ஒன்றிய காங்கிரஸ் அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் நேரு அவர்களை தண்டகாரண்யத்தில் (இன்றைய ஒரிஸா, சத்தீஸ்கர், மகாராஷ்ட்ரம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) குடியமர்த்தும் திட்டத்தை 1962ஆம் ஆண்டு உருவாக்குகிறார். கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பையும் மீறி நாமசூத்திரர் தண்டகாரண்யத்தில் குடியமர்த்தப்படுகின்றனர்.

தமது எதிர்ப்பையும் மீறி மாநில – ஒன்றிய அரசுகள் வேளாண்குடிகளாகிய வங்கமக்களை வறண்ட தண்டகாரண்யத்தில் குடியமர்த்திவந்த நிலையில் அங்கு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியும் அகதிகள் கூட்டமைப்பும் முன்னெடுக்கின்றன. இதன்பொருட்டு ஒன்றிய / மாநிலங்களின் அமைச்சர்களையும் பிரதமரையும் முதல்வர்களையும் தலைவர்கள் பலமுறை சந்தித்து வலியுறுத்துகின்றனர். இதன்விளைவாக வீடு, குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம், பாசனத்திட்டங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை அங்கு உருவாக்கப்படுகின்றன. இந்தத் தேவைகள் கிடைக்க ஆரம்பித்த சூழலில் அடுத்துவந்த 15 ஆண்டுகளில் மக்கள் அந்த மண்ணில் தம்மைப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனாலும், மொழி மற்றும் இன்னபிற பண்பாட்டுறவுடைய வங்க மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்கிற தவிப்பும் அவர்களுக்கிருந்தது. இந்தத் தவிப்பை முதலீடாக வைத்து அவர்களை அணிதிரட்ட 1972 ஆம் ஆண்டு உருவாகிறது உத்பாஸ்து உன்னயன்சீல் சமிதி என்கிற அமைப்பு. கம்யூனிஸ்ட்களின் தலைமையிலான அகதிகள் கூட்டமைப்பில் சேர மறுத்து விட்ட இவ்வமைப்பின் நோக்கம், தண்டகாரண்யத்தில் குடியமர்த்தப்பட்ட வங்கதேசத்தினரை அழைத்துவந்து மேற்கு வங்கத்தின் மரிச்ஜாப்பி தீவில் தங்களுக்கான ஒரு சுதந்திரபூமியை உருவாக்குவதுதான். கங்கை, பிரம்ம புத்திரா, மேக்னா நதிகள் வங்காள விரிகுடாவைச் சேரும் கழிமுகப் பகுதியில் அமைந்திருக்கும் அலையாத்திக் காடுகளைக்கொண்ட சுந்தரவனத்திலுள்ள ஒரு சிறிய தீவுதான் மரிச்ஜாபி. இதற்காக தண்டகாரண்யத்திலிருந்து சமிதியினால் அழைத்து வரப்பட்டவர்களை ரயிலைவிட்டு இறங்குவதற்கும்கூட அனுமதிக்காமல் தண்டகாரண்யத்துக்கே விரட்டியடித்தது மேற்குவங்க காங்கிரஸ் அரசாங்கம். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிதான் களமிறங்கி அவர்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டுமெனப் போராடியது.

1977ஆம் ஆண்டு மாநிலத்தில் இடது முன்னணியும் ஒன்றியத்தில் ஜனதா கட்சியும் ஆட்சியமைக்கின்றன. மேற்குவங்கத்திற்குள் தஞ்சமடைந்துள்ள வங்க தேசத்தவரின் கண்ணியமான மறுகுடியமர்வுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே வேளை தண்டகாரண்யத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் முயற்சியினை மேற்கொண்டன இடது முன்னணி அரசும் மார்க்சிஸ்ட் கட்சியும். ஒருமுறை குடியமர்த்தப்பட்டு 10/15 ஆண்டுகளில் அங்கு வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொண்டவர்களை அவற்றையெல்லாம் துறந்து மேற்கு வங்காளத்திற்கு வருமாறு தூண்டிவிடுவதையும் அழைத்துவருவதையும் நிறுத்துமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது. தண்டகாரண்யத்திலிருந்து வந்து மரிச்ஜாப்பிக்கு செல்லவியலாமல் ஆங்காங்கே முகாமிட்டுள்ளவர்கள் திரும்பிச் செல்வதற்கும் அவர்கள் தண்டகாரண்யத்தில் துறந்து வந்தவற்றை மீண்டும் பெறுவதற்குமுரிய ஏற்பாடுகளையும் மேற்குவங்க அரசு ஒன்றிய அரசின் உதவியுடன் மேற்கொண்டது.

ஆனால் மரிச்ஜாப்பியில் குடியேறுவதற்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் தந்து விட்டதாக உத்பாஸ்து உன்னயன்சீல் சமிதி தண்டகாரண்யாவில் பொய்ப் பிரச்சாரம் செய்து ஆயிரக்கணக்கானவர்களை அங்கிருந்து மேற்கு வங்கத்திற்கு அழைத்து வந்தது. இடது முன்னணியின் ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் ஏதேனும் நெருக்கடியை உருவாக்கவேண்டும் என்கிற பதைப்பிலிருந்த காங்கிரஸ், அப்போது காங்கிரஸ் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஆதரித்துவந்த சிபிஐ, ஒன்றிய ஆளும் கட்சி என்கிற மமதையில் மாநிலத்திலும் ஆட்சியமைத்து விட முடியாதா என்று நப்பாசை கொண்டிருந்த மாநில ஜனதா கட்சி, இந்து மகாசபையின் நிகில் பங்க நாகரிக் சங்கம், ஆனந்த் பஜார் பத்ரிகா போன்ற சிபிஎம் எதிர்ப்பு ஊடகங்கள் ஆகியவை தமது குறுகிய நோக்கிலிருந்து இதற்கு ஆதரவளித்தன. நாமசூத்திரா மக்களிடையே ஆதரவுதளத்தைக் கொண்டிருந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி அம்மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க அவர்களது உறவினர்களான அகதிகளை மரிச்ஜாபியிலேயே குடியமர்த்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டை மேற்கொண்டது.

ரயில்/ பேருந்து பாதை முடிவடையும் இடமான ஹாசானபாத்தில் எல்லோரையும் கொண்டுவந்து இறக்கி அங்கிருந்து படகுகள் வழியாக மரிச்ஜாப்பிக்கு இட்டுச்செல்வதுதான் அழைத்து வந்தவர்களின் திட்டம். இப்படியாக அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் தண்டகாரண்யத்திற்கே திரும்பிச் செல்வதும், புதிதாக சில ஆயிரம் பேர் வந்திறங்குவதுமாக இருந்தனர். 1978 ஜூலைவாக்கில் மேற்குவங்க அகதி முகாம்களில் 51,187 பேரும், முகாமுக்கு வெளியே அருகாமையில் 56,396 பேருமாக குவிந்திருந்தனர். திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் வந்து குவிந்ததால் உள்ளூர் சமூகத்தில் பலவித நெருக்கடிகள் ஏற்பட்டு சிற்சில மோதல்களும் வெடித்துள்ளன. ஆனால் அது இனமோதலாக அல்லாமல் தனிப்பட்ட பிரச்னைகளாக தீர்க்கப்பட்டன. அகதிகள் என்றாலே அடித்துவிரட்டப்பட வேண்டியவர்கள் என்று கடந்த காலங்களில் பழகியிருந்த காவல்துறையினர் புதிய ஆட்சியின் மென்மையான நிலைபாட்டை ஏற்கவியலாமல் குமைந்தனர். ஆனால் அரசின் நிலைப்பாட்டினால் வேறுவழியின்றி அகதிகளுடன் மோதல் போக்கை கைக்கொள்ளாதிருந்தனர்.

முகாம்களில் இருப்பவர்களை இணங்கவைத்து தண்டகாரண்யத்திற்கே திருப்பியனுப்பும் அரசின் முயற்சியில் முன்னேற்றேம் தென்பட்டதும் எஞ்சியுள்ளவர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பதற்றமடைந்த சமிதியின் தலைவர்கள் 14 ஆயிரம் அகதிகளை ஆற்றுக்குள் இருக்கும் மணல்திட்டுக்கு (சர் ஹாஸானாபாத்) அழைத்துக்கொண்டு போய்விட்டனர்.
அங்கிருந்து மரிச்ஜாப்பி தீவுக்குச் செல்வது அப்படியொன்றும் எளிதாக இருக்கவில்லை. அப்படியே போனாலும் அங்கு வாழத்தகுந்த சூழல் இல்லை. வந்தவர்களில் ஒருபகுதியினர் திரும்பிச் செல்கின்றனர். அங்கேயே இருந்த 10-12 ஆயிரம் பேர் தங்களுக்கான வசிப்பிடங்களையும் வாழ்வாதாரங்களையும் மற்ற தேவைகளையும் உருவாக்கிக்கொள்ள பெரிதும் அல்லலுறுகின்றனர். தமது தேவைகள் ஒவ்வொன்றுக்கும் அவர்கள் ஆற்றைக்கடந்து மறுகரைக்கு வந்து செல்ல வேண்டியிருந்தது. அதற்கெல்லாம் எந்தத் தடையினையும் அரசு உருவாக்கவில்லை. ஆனால் சமிதி அங்கு ஓர் இணை அரசாங்கத்தை நடத்துகிறது. சமிதியால் உருவாக்கப்பட்ட தன்னார்வலர் குழுவின் கட்டுப்பாட்டில் தீவின் எல்லை விடப்படுகிறது. அவர்களே மரிச்ஜாப்பிக்குள் யார் வந்துபோக வேண்டும் என்பதை தீர்மானித்தனர். அரசு அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ காவல்துறையினரோ உள்ளே வருவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

எனினும் முதல்வர் ஜோதிபாசு அகதிகளை பரிவுடனேயே அணுகுகிறார். ”சர் ஹாசனாபாத்தில் நிவாரணம் இல்லை, நீரும் இல்லை. அகதிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். அவர்கள் இக்கரைக்குத் திரும்பி வரவேண்டுமென்பதே அரசின் விருப்பம். அனைவரும் ஒரே இடத்தில் தங்கினால் சரியான முறையில் நிவாரணம் வழங்கமுடியும். ஆனால், அவர்கள் திரும்பச் சம்மதிக்கவில்லை… சர் ஹாசனாபாத்திற்குச் சென்ற குடும்பங்களின் குடிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக அங்கே இரண்டு குழாய்க்கிணறுகள் மராமத்து செய்யப்பட்டு, மேலும் இரண்டு புதிய குழாய்க்கிணறுகள் பாரத சேவாஸ்ரம சங்கத்தின் மூலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அணுகிய ஜோதிபாசு மீது 17 ஆயிரம் பேரை கொன்றவர் என்கிற பழி எப்படி சுமத்தப்பட்டது?

முதல் பழி : 1978 ஜூலை 21 அன்று பர்தமானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அகதிகள் எட்டு பேர் கொல்லப்பட்டதாக ஆனந்த பஜார் பத்திரிகை பொய்ச்செய்தி வெளியிட்டதுடன், கொல்லப்பட்டவர்களில் நால்வரின் பெயரையும்கூட அது வெளியிட்டிருந்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் எனப் பட்டியலிடப்பட்டவர்கள் உயிருடன் வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்த கேலிக்கூத்தெலாம் நடந்திருப்பதை ஹரிலால் நாத் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

அன்றைக்கு இறந்த ஒரே அகதி ஃபணிபூஷன் மண்டல் என்பவர்தான். ஆனால் அவர் துப்பாக்கிச்சூட்டினால் அல்லாமல் நீண்டநாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் இறந்திருந்தார். உண்மையில் அன்றைய மோதலில் அகதிகளால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டவர் ஒரு காவலர் மட்டுமே என்பதை ஜூலை 24 கணசக்தி உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்திகளும் முதல்வரின் அறிக்கையும் பிற்பாடு வெளியான இந்திரமித்ரா என்பவரின் “அகதிகள் மீதான பாசாங்குத்தனமான ஆதரவுக்குப் பின்னால்” என்ற கட்டுரையும் அம்பலப்படுத்தின.

இரண்டாம் பழி: 1979 ஜனவரி 31 அன்று சுமார் 1,000 அகதிகள் மரிச்ஜாப்பிலிருந்து படகு மூலம் குரான்காலி ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள குமிர்மாரி என்கிற ஊருக்குச் செல்கின்றனர். அப்போது கேயாகாட் என்ற இடத்திலுள்ள காவல்முகாம் உத்பாஸ்து உன்னயன்சீல் சமிதியின் தன்னார்வலர் படையினரால் தாக்கப்பட்டதையடுத்து மோதல் ஏற்படுகிறது. இருகட்டங்களாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்ட இருவரும் அகதிகள் அல்ல; அவர்கள் உள்ளூர் பழங்குடிகள். அகதிகள் இந்தப் பழங்குடிகளின் வீட்டுப்பக்கமிருந்து தாக்குதலை நடத்தியதால் அவர்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக பழங்குடியினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அகதிகள் ஆத்திரமூட்டியிருந்தாலும் இந்த துப்பாக்கிச்சூட்டை தவிர்த்திருக்க வேண்டும் என்பதே கட்சி மற்றும் ஆட்சியின் கருத்து.

உண்மை இவ்வாறிருக்க, 1979 பிப்ரவரி 1 தேதியிட்ட ஆனந்த் பஜார் பத்ரிகா, “மரிச்ஜாப்பியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி, 5 பேர் காயம்” என்று பொய்ச்செய்தி வெளியிட்டது. முன்பு கொல்லப்பட்டவர்களின் பெயர் என்று வெளியிட்டு மாட்டிக் கொண்ட அனுபவமிருப்பதால் இம்முறை பெயர்களைப் போடாமல் எண்ணிக்கையை மட்டும் பிரசுரித்தது. தவிரவும் குமிர்மாரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை மரிச்ஜாப்பி என்று திரித்துச் சொன்னது. உண்மை என்னவென்றால் அதுவரையிலும் மரிச்ஜாப்பிக்குள் போலிஸ் அனுமதிக்கப்படவேயில்லை என்பது தான். மேலும், பிப்ரவரி 3ஆம் தேதி குமிர்மாரி ஹாட்கோலா மைதானத்தில் இடது முன்னணி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், இறந்தவர்கள் அகதிகள் அல்ல, உள்ளூர் விவசாயத்தொழிலாளர்கள் என்பதை தெளிவுபடுத்துகின்றனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சமிதியின் ஆட்களும் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 30 / 36/ நூற்றிசொச்சம் என்று எவ்வித ஆதாரமுமற்று உயர்த்த்தினர். அதிலும் ஒன்பது பிணங்கள் ஆற்றில் மிதந்தன என்றும் முப்பது பிணங்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டன என்றும் புனைந்துரைத்த்னர்.

மூன்றாம் பழி: 1979 மே 14 அன்று மரிச்ஜாப்பிக்குள் நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த அகதிகளை வெளியேற்றும் வெறியாட்டத்தில் 17000 ஆயிரம் பேரை கொன்றொழித்தனர் என்று அமெரிக்காவில் உள்ள பிரளென் பல்கலைக்கழகத்தின் நிலாஞ்சனா சாட்டர்ஜி என்பவர் தனது வெளியிடப்படாத முனைவர் பட்ட ஆய்வறிக்கையில்(!) குறிப்பிடுகிறார். இதே எண்ணிக்கையை கனடாவைச் சேர்ந்த ரோஸ் மல்லிக் என்கிற ஆய்வாளரும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். இதற்கான ஆதாரம் எதையுமே குறிப்பிடாத இருவரும் இவ்வெண்ணிக்கையை வந்தடைய மேற்கொண்ட நகைப்புக்குரிய கணக்கீட்டு வழிமுறையை ஹரிலால் நாத் அம்பலப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னு ஜலாய்ஸ் என்பவரும் இப்படியான தகிடுதத்தங்களை ஆய்வு என்று புளுகியதையும் ஆசிரியர் கவனப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த ரோஸ் மல்லிக் மரிச்ஜாப்பி பற்றிய தனது கட்டுரையில் மரிச்ஜாப்பியில் கொல்லப்பட்டவர்களின்
பிணங்கள் ஆற்றில் மிதக்கும் புகைப்படங்களை ஆனந்த் பஜார் நாளிதழ் வெளியிட்டுள்ளதாக மேற்கோள்காட்டுகிறார். அந்த மேற்கோளின் எண் 54. அந்த எண்ணிட்ட மேற்கோளில் அவர் குறிப்பிட்டிருப்பதோ ‘‘Amrita Bazar Patrika, Feb 8, 1979’’. நாளிதழின் பெயரே தவறு என்பது ஒருபுறமிருக்க, 1979 மே மாதத்தில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களின் புகைப்படங்களை 1979 பிப்ரவரி எட்டாம் தேதியே முன்கூட்டி எப்படி ஒரு நாளிதழ் வெளியிட்டிருக்க முடியும் என்று கேள்வியெழுப்பிய அப்போதைய காவல் அதிகாரி அமிய சாமந்த், ஆனந்த பஜாரிலும் அப்படியான புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை என்று ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.

“அகதிகள் எதிர்ப்பின்றி கிளம்பிச் சென்றனர் என்பதை எதிர்க்கட்சியினரும் செய்தியாளர்கள் பலரும் நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. ஏனென்றால், மரிச்ஜாப்பி அகதிகளில் பாதிப்பேர் மார்ச் மாதத்தின் மத்தியிலேயே மரிச்ஜாப்பியிலிருந்து வெளியேறிவிட்டனர் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அதனைத் தெரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. தலைவர்கள் மற்றும் தன்னார்வலர் படையின் அச்சுறுத்தல், தாக்குதல்கள் முதலியவற்றைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்தும் அவர்கள் நம்பவில்லை. அவர்கள் சில தலைவர்களின் பொய்யான அறிக்கைகளையே நம்பினர்.” – அமிய சாமந்தின் இந்த விவரிப்பு வெளியேற்ற நடவடிக்கையின் சித்திரத்தை விளக்குகிறது.

மே 14 அன்று வெளியேற்ற நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கும் முன்பாகவே சமிதியின் மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் மரிச்ஜாபியை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்ட நிலையில் தனித்துவிடப்பட்ட மக்கள் காவல்துறையுடன் சேர்ந்து தீவை விட்டு வெளியேறியுள்ளனர். அங்கு எதிர்ப்போ மோதலோ வன்முறையோ நிகழாத சூழலில் காவல்துறை அத்துமீற வேண்டிய அவசியமே எழவில்லை என்று அப்போதே தெளிவுபடுத்தப்பட்ட பிறகும், சிபிஐஎம்/ கம்யூனிஸ்ட் ஒவ்வாமையில் நொதிப்பவர்கள் இந்தக் கொலைப் பழியை–பன்மொழிகளிலும் பலவடிவங்களிலும் பரப்பிவருகின்றனர். இந்த சதிவலையை அறியாமல், மரிச்ஜாப்பியில் என்ன நடந்தது என்று தேடுகிறவர்களுக்கு எதிர் பரப்புரை நூல்களே கிடைத்ததால் அவற்றை வெளியிட்டுள்ளனர். ஒருவேளை ஹரிலால் நாத்தின் “மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது?” என்கிற இந்தப் புத்தகம் அவர்களுக்கு முன்னமே வெளிவந்து கிடைத்திருந்தால் அவர்கள் இதையும் வெளியிட்டு தங்களது ஜனநாயக அக்கறையை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். இப்போதும்கூட அவர்களுக்கு ஒரு வாய்ப்புள்ளது, சிபிஐஎம் / கம்யூனிஸ்ட் ஒவ்வாமையல்ல – உண்மைநிலையை வாசகர்களுக்கு அறியத்தருவதுதான் தங்களது நோக்கமென்றால் அவர்கள் மரிச்ஜாபி பற்றிய தமது புத்தகங்களுடன் தமிழ்மார்க்ஸ் – பாரதி புத்தகாலயம் வெளியீடான இந்தப் புத்தகத்தையும் பரவலான விவாதத்திற்கு கொண்டு சேர்க்கலாம்.

நூல்: மரிச்ஜாப்பி – உண்மையில் என்ன நடந்தது?
ஆசிரியர்: ஹரிலால் நாத் (தமிழில் : ஞா.சத்தீஸ்வரன்)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 330.00

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

One thought on “நூலறிமுகம்: மரிச்ஜாப்பி (உண்மையில் என்ன நடந்தது) – ஆதவன் தீட்சண்யா”
  1. மரிஜாப்பி நூல் அறிமுகம் , எப்படிப்பட்ட உணர்வுடன் ஆதவன் தீட்சயா தேடி உண்மையை அறிந்து கொள்ள உதவுகிறார்கள். நன்றி ஆதவன் தீட்சயா தோழர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *