தத்துவம் வழிகாட்டட்டும், நடைமுறை வெல்லட்டும்!
– கே.சமயன்
தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு முக்கியத்துவம் பெறுகிறது. தத்துவம் இல்லாத நடைமுறை திசையற்றுப் போகும், மக்களின் வாழ்க்கையோடு இணையாத தத்துவம் வெறும் விவாதமாகவே முடங்கிவிடும். இந்த அடிப்பயை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ளது பேரா வெங்கடேஷ் ஆத்ரேயாவின், “மார்க்சிய-லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்” என்ற நூல்.
அவர் வெவ்வேறு காலகட்டங்களில், மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்த இந்த நூலில் மார்க்சிய அரசியல் சிந்தனையின் பல்வேறு அம்சங்களை வாசகர்களிடம் முன்வைக்கிறார்.
இன்றைய காலத்தில், இளைஞர்களிடையே அரசியல் ஆர்வம் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான முக்கியமான வெளியாக மாறியுள்ளன. அரசியல் தலைவர்களின் பேச்சுகள், விவாதங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் என அனைத்தும் உடனுக்குடன் மக்களைச் சென்றடைகின்றன. ஆனால், ஒரு தலைவரின் பேச்சைக் கேட்பதோ, அவருடைய புகைப்படத்தைப் பகிர்வதோ அரசியலை புரிய வைத்து விடுகிறதா?. ஒரு தலைவரின் கொள்கைகள் என்ன? யாருடைய நலன்களை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்? அவருடைய பொருளாதாரப் பார்வை என்ன? ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எத்தகைய முடிவுகளை எடுக்கிறார்? இத்தகைய கேள்விகளை எழுப்புவதுதான் அரசியல் புரிதலின் தொடக்கமாக இருக்க முடியும்.
எனவே, ஒரு தலைவரின் மீதான ஈர்ப்பு தவறானதல்ல. ஆனால், அந்த ஈர்ப்பு அவருடைய அரசியலைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுத்துவிடக் கூடாது.
பல ஆண்டுகளாகத் தொடரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? என்ற கேள்வி முக்கியமானது. மார்க்சியமே, இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறது என்பதை வெங்கடேஷ் ஆத்ரேயா தெளிவுபட உரைக்கிறார்.
“பிற தத்துவங்களிலிருந்து மார்க்சியத்தை அடிப்படையில் வேறுபடுத்துவது – மார்க்சியத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை என்பதாகும்…
மார்க்ஸ் முன்வைத்த ஒரு மிக முக்கியமான கருத்து, ‘இதுவரை “மெய்யியலாளர்கள் உலகை வியாக்கியானம் செய்வதில் தான் முனைந்தனர். ஆனால், விஷயம் என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பது தான்’ என்பதாகும். இந்த அடிப்படையில் தனது தத்துவ நிலைப்பாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின் வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளைக் கொண்டு மார்க்சீய தத்துவத்தை வலுப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் பயன்படுத்துவதும் மார்க்சீய அணுகுமுறையின் இன்றியமையாத அம்சங்கள் ஆகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும் செழுமை அடைவதும் தான் மார்க்சீயம்.”
இன்றைய காலகட்டத்தில், பாஜக அரசின் மதவாத அரசியலும், மத்தியிலும்-மாநிலத்திலும் வேகமெடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் சவாலாக இருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் எனப் பல பிரச்சினைகள் இளைஞர்களின் எதிர்காலத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. அதற்கு ஆட்சியின் தன்மையை புரிந்துகொள்வது அவசியம்.
வெங்கடேஷ் ஆத்ரேயா தனது நூலில் “நமது நாட்டின் இன்றைய சூழலில் ஒரு பக்கம் அரசின் மதச்சார்பின்மையைக் காக்க தயக்கம் காட்டுகிற, பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் குடிமக்கள் சுதந்திரத்தையும் காவு கொடுக்கவும் தயங்காத, அமெரிக்க ஏகாதிபத்திய ராணுவ அரசியலுக்கு கைகோர்க்கவும் தயங்காத அரசியல் தலைவர்களின் கையில் அரசாங்க எந்திரம் உள்ளது. மறுபக்கம் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றமோ குதிரை சந்தையாகிவிட்டது. எனவே உண்மையான மக்களாட்சி மலர, மக்களின் விழிப்புணர்வு தேவைப்படுகிறது” என்கிறார்.
இந்த நூல் , தத்துவத்தை நடைமுறையில் செயல்படுத்திய இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், பி.ராமமூர்த்தி ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக முன்வைக்கிறது.
“உழைப்பாளி மக்களின் அமைப்பு ரீதியான செயல்பாடே அரசியலில் தூய்மையை உருவாக்கும் என்ற பாடத்தைப் போதிக்க, தலைவர்கள் பின்னால் போவதை மறுத்து ஸ்தாபனத்தின் மீது பற்றும் நம்பிக்கையையும் பேணும் பண்பாட்டை வளர்க்க பல ஆயிரம் பி.ராமமூர்த்திகள் தேவைப்படுகின்றனர்” என்ற அழைப்பு இளம் தலைமுறைக்கானது ஆகும்.
தனித்தனியாக நடைபெறும் போராட்டங்களை ஒரு விரிவான சமூக மாற்றத்திற்கான அரசியலோடு இணைப்பது இன்றைய தேவையாக உள்ளது. இந்தப் பின்னணியில்தான் தோழர் வெங்கடேஷ் பா. ஆத்ரேயா எழுதியுள்ள “மார்க்சிய-லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்” நூலை நாம் அணுக வேண்டும். வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட 17 கட்டுரைகள் ஒரே தொகுப்பாக வெளிவந்திருப்பது மார்க்சிய அரசியல் சிந்தனையின் பல்வேறு அம்சங்களை வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. குறிப்பாக, அரசியலில் புதிதாக ஈடுபடும் இளைஞர்கள் மார்க்சியத்தை வெறும் அரசியல் அடையாளமாகப் பார்க்காமல், சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான அறிவியல் சிந்தனை முறையாக அணுகுவதற்கு இத்தகைய நூல்கள் உதவியாக இருக்கும்.
இந்த நூலை எழுதிய தோழர் வெங்கடேஷ் பா. ஆத்ரேயா அவர்களுக்கும், நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் நன்றி. நூலை வெளியிட்ட மூத்த தலைவர் தோழர் டி.கே. ரங்கராஜன், கருத்துரை வழங்கிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி, பத்திரிகையாளர் என். ராம், மூத்த தலைவர் வே. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட அனைவரும் நூல் வாசிப்பை தூண்டும் விதமாக பேசினார்கள்.
அரசியலைத் தனிநபர்களின் புகழிலிருந்து விடுவித்து, மக்கள் நலனையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் மையமாகக் கொண்டதாக மாற்றுவதற்குப் பாடுபடுவோம்.
தத்துவம் வழிகாட்டட்டும்! நடைமுறை வெல்லட்டும்! புரட்சி ஓங்கட்டும்!
***********************************************
📚 எழுதியவர் :
கே.சமயன்,
சமூக ஊடகம், சிபிஐ(எம்)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

