மரு’மகன்’ – சிறுகதை
மனச்சுமை அழுத்தியதால் தலைச்சுமையைச் சுமக்க இயலாமல் சோர்ந்து இறக்கி வைத்தாள் மாரி. மாரிக்கு வயது எழுபதைத்தாண்டியிருக்கும். அவளின் சம வயதில் வாழ்ந்தவர்கள் பல பேர் இறந்து விட்டனர். அதோடு கணவனையும் மரணம் விட்டு வைக்காததால் உடைந்து போனாள்.
மாரி பதினைந்து வயதில், வயதுக்கு வந்த மூன்று மாதத்தில் அவளது பெற்றோர், தாயின் சகோதரனான இரண்டு குழந்தைகளுக்குப்பின் மனைவியை இழந்த மாமன் காரிக்கு முப்பது வயது வித்தியாசத்தில், முக்கியமாக குழந்தைகளை வளர்க்கும் பொருட்டே திருமணம் செய்து வைத்து விட்டனர்.
கணவனின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இருந்ததால் மாரிக்கு குழந்தை ஆசை வராததோடு குழந்தையும் உருவாகவில்லை.
அதைப்பற்றி கணவனோ, பெற்றோரோ, உறவுகளோ கேட்டகவில்லை.
குழந்தைகள் பெரியவர்களாகி, திருமணம் முடிந்து கணவனும் இறந்த பின் தனியாக வசிக்கும் நிலைக்கு ஆளானதோடு வளர்த்த குழந்தைகளும் கண்டு கொள்ளாமல் போனதால் இரவில் உறங்காமல் கண்ணீர் சிந்துவாள்.
சேமிப்பும் இல்லையென்பதை விட சேமிக்கத்தெரியவில்லை, சேமித்தும் பழக்கமில்லை என்பதால் அன்றாட உணவுக்கு ஏதாவது வேலை தேட வேண்டுமென்கிற நிலையில் ஒரு நாள் வீட்டில் கிடந்த வளர்ப்பு மகன்கள் படித்த நோட்டுகளையும், புத்தகங்களையும், சில அட்டைகளையும் அதை வாங்க வந்தவருக்கு போட்டதில் ஒரு மாத செலவுக்கு பணம் கிடைத்தது.
நூறு நாள் வேலைக்கு போக வாய்ப்பிருந்தாலும் உடல் ஒத்துழைக்காததால் போகாமல் இருந்தாள். சில நாட்கள் பசியிருந்தும் முடியாததால் பட்டினியும் கிடப்பாள். சிறுவயதில் குழந்தைகளை பெற்றோர் பசியைப்போக்க உணவளிப்பது போல் குழந்தைகளும் வயதான பெற்றோரின் பசிக்கு உடனிருந்து, உணவு கொடுத்து காப்பாற்றுவது தான் மனிதப்பிறப்பின் இயல்பு நிலை என்பதை வாரிசுகள் படித்திருந்தும் புரிந்திருக்கவில்லை.
புத்தகங்களையும், அட்டைகளையும் வாங்கியவரிடம் வாரம் ஒரு முறை தன் வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தாள் மாரி. காலை எழுந்தவுடன் வெயில் வருவதற்குள் வீதி வீதியாகச்செல்வதும், வீடுகளுக்கு வெளியில் குப்பையாகக்கிடக்கும் அட்டைப்பெட்டிகளை சேகரித்து தலையில் வைத்து எடுத்து வந்து தன் வீட்டில் வைத்து அட்டை வாங்குபவருக்கு விற்று, அதில் வரும் வருமானத்தில் செலவு செய்வதுமாக யாரிடமும் கையேந்தாமல் எளிமையாக வாழ்ந்தாள்.
இப்படியிருக்க ஒரு நாள் தலைச்சுமையுடன் நடந்து வரும் வழியில் மயக்கமாகி பாதையிலேயே சுருண்டு விழ, வழியில் சென்றவர்கள் ஓடி வந்து மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்ததும் பரிசோதித்த மருத்துவர் ‘பசி மயக்கம் தான். இருந்தாலும் வயது முதிர்வினால் இதயம் பலவீனப்பட்டிருப்பதால் சுமை தூக்கவோ, வெகுதூரம் நடக்கவோ கூடாது. தனிமையும் அவரை மேலும் பலவீனப்படுத்தும் என்பதால் உறவுகளுடன் சேர்ந்து இருப்பதே மேல்’ என அறிவுரை கூறியதுடன்,வெளியூரிலிருக்கும் அவரது வளர்ப்பு மகனிடமும் அலை பேசியில் நிலைமையை எடுத்துக்கூறினார் மருத்துவர்.
“உங்கொம்மான்னா வயித்துல சுமந்து பெத்தவங்களா…? உங்கொப்பனுக்கு ரெண்டாவது தாரமா வந்தவங்கதானே…? ஆவங்களுக்குக் குடியிருக்க சொந்தமா ஊடு உங்க பேர்ல இருந்தாலும் வாடகையா கேக்கறோம்…? அதையென்ன நாம வித்தா போட்டோம்…? ஊர்ல சொந்த ஊட்ட வெச்சுட்டு இங்க நாம தான் வாடகை ஊட்ல இருக்கறோம். ஒன்னி எடம் வாங்கி, ஊடு கட்டி, கொழந்தைகள படிக்க வெச்சு கரை சேத்த வேண்டாமா...? அவங்கள இங்க கூட்டிட்டு வந்தா அவங்கள கவனிச்சிக்கிறதுக்கு ஒரு ஆள் போடோணும். ஆஸ்பத்திரி செலவு வரும். பேசாம அங்கயே விட்டிடுங்க. உங்க அக்கா வேணும்னா சொந்த ஊடு வெச்சிருக்கறாங்க. அவங்களையும் தானே வளர்த்தாங்க. அவங்க பார்க்கட்டும்” என மனைவி சுகி பேசிய பேச்சில் நியாயம் இருப்பதாகப்படவில்லை சுகந்தனுக்கு.
தான் பெற்றெடுக்கவில்லையென்றாலும் பெற்ற தாயை விட அன்பாக, பாசமாக அரவணைத்து வளர்த்த மாரியை தனித்து விட மனமில்லாமலும், மனைவியின் பேச்சை மீறி செயல்படுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து இரவு உறக்கமின்றி தவித்தான் சுகந்தன்.
தான் பெற்றெடுக்கவில்லையென்றாலும் பெற்ற தாயை விட அன்பாக, பாசமாக அரவணைத்து வளர்த்த மாரியை தனித்து விட மனமில்லாமலும், மனைவியின் பேச்சை மீறி செயல்படுவதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளையும் ஆராய்ந்து இரவு உறக்கமின்றி தவித்தான் சுகந்தன்.
“பொண்ணா இருந்தாலும், சொத்து வாங்காம வந்தாலும் பெத்தவங்களையும், வளர்த்தவங்களையும், பெத்து வளர்த்தவங்களையும் வயசான காலத்துல அனாதையா விடறது நியமா…? அப்ப சொத்தே இல்லாதவங்க வயசானா பசில, நோயில செத்துப்போக விட்டுறலாமா…?” என தன் கணவன் ரகு கேட்டது கன்னத்தில் அறைந்தது போல இருந்தது சுகந்திக்கு.
சகோதரன் சுகந்தனுடைய பேருக்குத்தான் வீடு, தோட்டம் என சொத்துக்களை தந்தை இறப்பதற்கு முன் எழுதி வைத்ததால், சொத்து வாங்கியவர் தான் பெற்றோரைக்கவனிக்க வேண்டும் என நடைமுறையில் உள்ள எழுதாத குடும்ப சட்டப்படி யோசித்ததால் நலம் விசாரித்து விட்டு அழைத்து வராமல் கல் மனதுடன் வந்து விட்டாள். தற்போது கணவனின் கேள்வியால் யோசித்தவள் வளர்ப்புத்தாய் மாரியை தன்னுடன் வைத்து கவனித்துக்கொள்ள தன் வீட்டிற்கு அழைத்து வர புறப்பட்டாள் சுகந்தி.
கதையாசிரியர்:
அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
மேலும் சிறுகதைகளை படிக்க கிளிக் செய்யவும் : அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

