சிறுகதை: மருதம்மா……! (இன்றைய முதுமைக்கு முன்னோடி) – திருமதி.ப.சிவகாமி

சிறுகதை: மருதம்மா……! (இன்றைய முதுமைக்கு முன்னோடி) – திருமதி.ப.சிவகாமி



                       மருதம் அம்மையார் இம்முறை அனுப்பிய ‘வாட்ஸ் அப்’ பதிவு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது பத்மாவதிக்கு! “மேடையில் ஒரு கோட் சூட் ஆசாமி, அம்மையாரை கௌரவப்படுத்த வந்த ஆசாமி, அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்ணீர் மல்க ஏதோ கெஞ்சுகிறார். அம்மையாரும் அதிர்ச்சியோடு நிற்கிறார்கள். கூடியிருந்த அரங்கமே ஸ்தம்பிக்க அங்கே நடப்பதுதான் என்ன? அம்மையாருக்கு ஒரு மகள் இருப்பதாக மட்டும்தான் கூறியிருந்தார்கள். ஆனால் அந்த ஆசாமி, “தன்னை ஈன்றெடுத்த தாய் இவர், இவர்தான் என் அம்மா, பல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் இவரை பார்க்கிறேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதோடு, அம்மையாரை நோக்கி ‘மன்னித்து விடுங்கள் அம்மா’ என்று திரும்பத் திரும்ப கெஞ்சுகிறார்”. குழம்பிப்போனாள் பத்மாவதி!

                       இந்த வாரம் எப்படியாவது அம்மையாரை நேரில் சென்று சந்தித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தாள்.

                                                                     *************

                      அரசு பொதுத்தேர்வு. தேர்வறை கண்காணிப்பாளர் பணியில் இருந்த பத்மாவதிக்கு, அன்றைய தினம் தனித்தேர்வர்கள் அறை. அங்கு தேர்வெழுதியவர்களில், துவக்கத்திலிருந்தே அவள் கவனத்தை ஈர்த்தார் அப்பெண்மணி. வயது எப்படியும் 58க்கு குறையாமல் இருக்கும். மாணவர்களைக்காட்டிலும் சுறுசுறுப்பாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த வயதுக்கு மேல் +2 தேர்வு எழுதி பதவி உயர்வு பெறப் போகிறாரோ! சொல்லும் அளவுக்கு பலன் ஒன்றும் இருக்காதே! என்று எண்ணிக்கொண்டதோடு, ஆவல் மிகுதியால், அப்பெண்மணியை நோக்கி, ‘ப்ரமோஷனுக்காக எழுதறீங்களா?’ என்றும் கேட்டாள்.

                         இல்லைங்க மேடம். நான் வேலைக்கெல்லாம் போகலை. வீட்டில்தான் இருக்கிறேன். ஓபன் யுனிவர்சிட்டியில் முன்பே எம்.ஏ. முடித்து விட்டேன். இப்பொழுது என் ஆசைக்காக +2 தேர்வெழுதுகிறேன். உங்கள் பெயர் பத்மாவதியா?” என்றார். “ஆமாம்” என்றாள் பத்மாவதி.

                       “நுழைவுச்சீட்டை சரிப்பார்த்து நீங்கள் கையெழுத்திடும்போதே தங்கள் பெயரை தெரிந்து கொண்டேன். என் அம்மாவின் பெயரும் பத்மாவதி தான்! என் அம்மாவைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைப் போலவே உயரம், நிறம், பருமன், இடையை தாண்டிய கூந்தல் என்று எல்லாமும் என் அம்மாவுக்கு”, என்று நெகிழ்ச்சியுடன் அவர் படபடத்தது பத்மாவதியையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

                         தேர்வு முடிந்த கையோடு “மேடம் உங்க மொபைல் நம்பர் ப்ளீஸ்”, என்று கேட்க பத்மாவதி சொன்னாள்.

                        அந்த வார விடுமுறை நாளொன்றின் மாலை நேரத்தில் அலைப்பேசி ஒலித்தது. எடுத்து “ஹலோ” என்றவளிடம், “மேடம், நான் ‘மருதம் பேசுகிறேன். அன்று எக்ஸாம் ஹாலில் சந்தித்தோமே நினைவு இருக்கிறதா”? என்று ஆரம்பித்து, நலம் விசாரித்து, “உங்களை பார்த்தபோது என் அம்மாவை பார்த்ததுபோல் உணர்ந்தேன் மேடம்” என்று மீண்டும் நெகிழ்ந்து, “எப்போதாவது போன் செய்தால் தொந்தரவாக கருதமாட்டீர்களே?” என்று ஆரம்பித்த நட்பு சுமார் ஏழெட்டு வருடங்களைக் கடந்து ஆழம் பெற்றிருந்தது.

                            தன் வீட்டருகிலேயே இருக்கும் தன்ஒன்றுவிட்ட அண்ணனும் தமிழ் ஆர்வலருமான மலர்மன்னன் அவர்கள் வீட்டில் மாதம் ஒருமுறை தமிழ் ஆர்வலர்கள் ஒன்றுக்கூடி ஏதேனும் ஒரு தலைப்பில் விவாதிப்பார்கள். அந்தக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்து பேசச்சொல்வார் அண்ணன்.. நானும் தட்டுத்தடுமாறி ஏதோ பேசுவேன். கவிதை என்ற பெயரில் ஏதேனும் உளறி வைப்பேன். அவர் கொடுத்த ஊக்கம் தான் தன்னை இந்த வயதில் படிக்கத் தூண்டியதாக கூறியிருந்தார்.

                        அவரது பேச்சாற்றல் இன்று வீடுகடந்து, ஊர்கள்தோறும், விழாக்கள்தோறும், அரங்கங்கள்தோறும், தேசங்கள்தோறும் என்று வளர்ந்து விழுதுவிட்டிருந்தது.

                                                                       ***********

                      அம்மையார் ஓய்வில் இருக்கும் நாள் அறிந்து முன்னறிவிப்போடு அவர்கள் வீட்டிற்குச் சென்றாள் பத்மாவதி.

                   வரவேற்பு உபசரிப்புகளுக்குப் பிறகு, நட்பு கொடுத்த உரிமையில் ஒளிவு மறைவின்றி நேரடியாகவே கேட்டுவிட்டாள் பத்மாவதி, “அம்மையாரிடம் மன்றாடும் அந்தப்பிள்ளை யார் என்று”!

                   “அவன்தான் நான்கருவில் சுமந்து பெற்றெடுத்தப்பிள்ளை “, என்றார் அம்மையார். “என்னம்மா சொல்றீங்க”, என்றாள் பத்மாவதி சற்று அதிர்ச்சியுடன்!.

                        அம்மையார் கூறத்தொடங்கினார், “எனக்கு திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே என் கணவர் விபத்தில் காலமாகி விட்டார். அவர் காலமான பிறகு அவரது சொந்தங்களும் எங்களை கைவிட்டுவிட்டனர். ஒரே அண்ணன் வீட்டிற்கு செல்லலாம் என்றால் ஏற்கனவே அங்கிருக்கும் அப்பாவின் நிலையே பரிதாபம்! பிள்ளையைக் கைவிட்டு தற்கொலை செய்து கொள்ளவும் மனம் வரவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தேன். பசியட்டினி! வேதனை தாங்கமுடியாமல் இரண்டு மூன்று வீடுகளில் பெருக்கி துடைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது என்று வேலைகள் கேட்டுக்கேட்டு செய்தேன். அவர்கள் தரும் உணவை கொண்டு உயிர் பிழைக்க தொடங்கினோம். அவர்கள் தந்த பழைய துணிகளே எங்கள் மானம் காக்கும் ஆடையானது.



                    பிறகு ஒரு பள்ளியில் துப்புரவுப் பணி செய்தேன். அப்பணியில் நான் கொண்ட சிரத்தையை கவனித்த அப்பள்ளி முதல்வர், இரக்கம்கொண்டு என் மகனை கட்டணமின்றி அவர் பள்ளியில் சேர்த்துக்கொண்டார். நான் படும் கஷ்டங்களோ துயரங்களோ என் பிள்ளையை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன். அதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கும் அந்த பள்ளியில் என் மகன் மிக நன்றாகப் படித்தான். பள்ளி இறுதித் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றான். அண்ணா பல்கலையில் கேட்ட துறையில் இடம் கிடைத்தது.

                          என் காயங்களுக்கெல்லாம் மருந்தாக இருந்த என் மகன், கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களிலேயே, எப்படி மாறினான் என்றே தெரியவில்லை ! என் வறுமையை, ஏழ்மையை, இயலாமையை இழிவு படுத்திப் பேச ஆரம்பித்தான். என்னையும் அலட்சியப்படுத்தினான். போயும்போயும் இவளுக்கு மகனாக பிறந்து விட்டோமே என்று வேதனைப்படுவான் போலும்! விடுமுறைக்கு வந்த போதெல்லாம் வார்த்தைகளால் வதைத்தான்!

                      அவனது ஆடம்பர தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லையே தவிர, அவசியத் தேவைகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்துதான் செய்தேன்.

                  ‘பல்கலைக்கழகத்தில் படிக்கும் சகமாணவர்களைப் போல தன்னாலும் ஆடம்பரமாக இருக்க முடியவில்லையே!’ என்ற ஏக்கத்தை பிள்ளை யாரிடம் காட்டுவான். அதனால்தான் அப்படி நடந்து கொள்கிறான் என்று மனதை தேற்றிக்கொள்வேன்.

                   படிப்புமுடிந்து வேலைக்கு தேர்வாகி அமெரிக்கா சென்றான். அதற்குப் பிறகு அவன் என்னை ஒருமுறை கூட தொடர்புகொள்ளவே இல்லை. அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக அவன் நண்பன் ஒருவன் மூலமாக கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகு 12 வருடங்களுக்கும் மேலாக அவனைப்பற்றிய தகவல் கூட எனக்குத் எதுவும் தெரியவில்லை .

                          துயரங்களை, வலியை கடந்து உழைப்பே கதி எனப்போராடி அவனுக்காகவே வாழ்ந்தேன். அவன் ஏன் அப்படி மாறினான்? எனக்கு புரியவில்லை. என்விதியை நினைத்து அழுவதைத்தவிர வேறு வழி இல்லை ! பெற்றெடுத்துப் போராடி வளர்த்த மகன்கூட கைவிடும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்! இத்தனை காலம் பூமியில் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லையா! என்று கலங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான், மலர்மன்னன் அண்ணன் கற்றறிந்தோர் சபையில் என்னை பார்வையாளராக அமர வைத்தார். அவ்வாறு அமரவைத்தது வேதனைத்தீயில் வெந்து கொண்டிருந்த எனக்கு ஆறுதலாகவே இருந்தது. அதுவே பிறகு, நான் பயணம் செய்யவேண்டிய பாதையாகவும் அமைந்து போனது.

                        புதுப்பாதையில் பயணிக்க தொடங்கிய பிறகு ‘பழனியம்மா’ என்ற என் பழைய பெயரை மாற்றி ‘மருதம்’ என்ற புதுப்பெயரை சூட்டி விட்டார் அண்ண ன். வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும் அல்லவா ‘மருதம்’! பார்க்கும் இடமெல்லாம் பசுமை பொங்கும் வயலாய் இருந்த நிலை மாறி, இன்று பார்க்கும் இடமெல்லாம் பல்லடுக்கு கட்டடங்களாய், மனிதரெல்லாம் நோய்க்கு அடிமைகளாய்…! ஒரு நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் முதலில் நிற்பவன் வேளாளன் அல்லவா!’மேழிபிடிக்கும் கை, வேல் வேந்தர் நோக்கும் கை, ஆழி தரித்தே அருளும் கை, சூழ் வினையை நீக்கும் கை, என்றும் நிலைக்கும்கை, நீடூழி சுரக்கும் கையல்லவா காராளர் கை!’அந்தக் காராளனை நினைவுறுத்தும் ‘மருதம்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அப்பெயரே பிறகு நிலைத்தும் விட்டது!” என்று தன் கடந்த காலத்தை சொல்லி முடித்தார் அம்மையார்.

                  “அம்மா தங்கள் மகளைப் பற்றி சொல்லவே இல்லையே” என்றாள் பத்மாவதி.

              “ஆம்! என் மகள்! என்னைப் போலவே ஆதரவற்று இருந்த ஒரு பேதைப்பெண். எனக்கு மகள் மட்டுமல்ல! தாயுமானவள் அவள்!” என்றார் அம்மையார்.

               “கனடாவில் நடந்தது என்ன?” என்றாள் பத்மாவதி.

                 “நம்மூர் தமிழ்ச்சங்க அன்பர்கள் மூலமாகத்தான் அங்கு என்னை பேச அழைத்தார்கள். சங்கப் பொறுப்பாளர் என்ற முறையில் சிறப்பு அழைப்பாளரை கௌரவிக்கும் பொருட்டு மேடையேறினான் என் மகன். எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் சந்திக்க நேரிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆதலால் அந்த சந்திப்பு எங்கள் இருவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

                    பழைய ‘பழனியம்மா’ தான் புதிய ‘மருதம்மா’வாக மாறி இருக்கிறாள் என்று அப்போதுதான் அறிந்தான் போலும்!

                    ‘ஆடம்பரமோகத்தில் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கண்ணீர் சிந்தினான். ‘என்னுடன் தங்கி விடுங்கள். ‘என்றான்.



                   ‘இல்லையப்பா! உன் வேலைகளையும் உன்குடும்பத்தையும் நீ கவனி. எனக்கென்று சில கடமைகள் இருக்கின்றது என்னால் உன்னோடு தங்க முடியாது. எப்போதாவது நீ விரும்பினால் உன் தாய் மண்ணுக்கு வா’ என்று சொல்லிவிட்டு வந்தேன்” என்றார் அம்மையார்.

                                                                       ************

                     கடத்தற்கரிய கடுந்துயரங்களை எல்லாம் தன் மனோதிடத்தால் கடந்து வந்த அந்தப் பெண்மையின் பேராற்றலை எண்ணிப் பெருமை உணர்ச்சிப் பெருக்கெடுக்க, அம்மையாரை ஆரத்தழுவிக்கொண்டாள் பத்மாவதி! அத்தழுவலில் இருவருக்குள்ளிருந்த பேரன்பும் ஆற்றலும் பரிமாற்றம் அடைந்து இருக்கவேண்டும். இருவருக்குமே மகிழ்ச்சி!

                  இன்றைய மூத்த தலைமுறைக்கு முன்னோடியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மையாரை வணங்கி விடைபெற்று, அங்கிருந்து பெருமிதத்தோடு புறப்பட்டாள் பத்மாவதி.

                                                                        ***********

திருமதி..சிவகாமி,
புதுச்சேரி



Show 1 Comment

1 Comment

  1. Sugan

    மருதம்மா துவக்கத்தில் கண்ணீரையும் முடிவில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *