ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை
மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது.
இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை ஆளும் சக்தியாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் முன்வைத்த நியாயத்தின் பக்கம் உலகம் திரண்டுகொண்டு இருக்கிறது.

digital illustration of Marx
மக்கள் மீது அதிகாரம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசுகள் அனைத்துக்கும் மார்க்ஸ் என்னும் பெயர் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அவர் ஒலித்துக்கொண்டே இருக்கிறார். இவை யாவும் மார்க்ஸின் சிந்தனைகளுக்கு உலகம் செவிசாய்த்துக்கொண்டிருப்பதன் அடையாளம்.
உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்தச் சிந்தனைகளை மார்க்ஸ் எங்கோ தனியாகப் போய் உட்கார்ந்து கடும் தவம்செய்து பெறவில்லை. அதிகார அமைப்புகளால் நாடு விட்டு நாடு விரட்டப்பட்ட சோதனையான நாட்களிலிருந்து பெற்றார். இருந்த ஒரே மேல் கோட்டையும் கடும் குளிர்காலத்தில் விற்ற வறுமையிலிருந்து பெற்றார். மக்களின் போராட்டங்களிலிருந்து பெற்றார். தொடர்ந்த வாசிப்பிலிருந்து பெற்றார். நண்பர்களுடன் செய்த விவாதங்களிலிருந்து பெற்றார். ஜென்னி செலுத்திய மகத்தான காதலில் இருந்து பெற்றார். எங்கெல்ஸின் தோழமையிலிருந்து பெற்றார். குழந்தைகள் ஒவ்வொன்றாக இறந்துகொண்டிருந்த பெரும் துயரத்தை உதறி நின்று பெற்றார்.
மார்க்ஸின் சிந்தனையை உள்வாங்கிக்கொண்டவர்கள், அது குறித்து மட்டுமே கவனம்கொண்டு அவரைப் போற்றுகிறவர்கள் அந்த சிந்தனையின் ஊற்றுக்கண்ணாக இருந்த அவரது வாழ்க்கை குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. இந்த புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. இந்தப் புத்தகம் வழியாக மார்க்ஸ் வாழ்ந்த நாட்களை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
“மார்க்ஸோ அவருடைய மனைவியோ வீட்டுக்கு வருபவர்களை அன்பாக உபசரிப்பார்கள். பிறகு அறிவுபூர்வமாக கலந்துரையாடத் தொடங்கிவிடுவார்கள். அப்படி பேசத் தொடங்கியவுடன் வீட்டின் நிலைமை நம் கண்களில் இருந்து மறைந்துவிடும். காரணம், அவர்கள் நம் மனதுக்கு நெருக்கமானவர்களாகி விடுவதுதான்.” – வாசகரை மார்க்ஸின் உலகத்துக்குள் சட்டெனக் கொண்டு செல்லும் வரிகள் இவை. புறச் சூழலிலிருந்து அறிவின் தளத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்த வாழ்க்கைதான், மார்க்ஸுக்கும் மார்க்ஸின் சிந்தனைகளுக்கும் ஆதாரமாக இருந்திருக்கிறது.
காலமெல்லாம் அவதிப்படும் மக்களை, அவர்களுடைய துயரங்களிலிருந்து விடுவிப்பது ஒன்றே அவருடைய அக்கறையாக இருந்தது. அதற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். அவற்றை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அவரது துடிப்பாக இருந்தது. காலம் அவரை அலைக்கழித்தது. தாங்க முடியாத கஷ்ட காலத்தில் ஒருமுறை ரயில்வே நிறுவனத்தில் எழுத்தர் வேலைக்கு விண்ணப்பித்தார். அந்த வேலை கிடைக்கவில்லை. மார்க்ஸின் இந்த வாழ்க்கைச் சித்திரங்களின் ஊடே அவரது சிந்தனைகளைப் பற்றி யோசிக்க வைக்கிறது இந்த புத்தகம்.
எங்கெல்ஸ் தன் மனைவி இறந்து போனது குறித்து மார்க்ஸுக்குக் கடிதம் எழுதினார். வறுமையில் வாடிய மார்க்ஸ் அது குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டு, தான் படும் கஷ்டங்கள் குறித்து பதில் கடிதம் எழுதினார். எங்கெல்ஸுக்கு வருத்தம் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு மார்க்ஸ் மன்னிப்பு கேட்டார். எங்கெல்ஸும் அதைப் புரிந்துகொண்டார். ரத்தமும் சதையுமான சாதாரண மனிதர்களாய் – பிழைகளும் அதை சரி செய்யும் பக்குவமும் கொண்ட நம்மைப் போன்ற மனிதர்களாய் – இருந்தவர்களிடமிருந்து பெற்ற சிந்தனைகளைத்தாம் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம் எனும்போது, அவை அர்த்தமும் உயிரும் கொண்டவைகயாக வீரியம் பெறுகின்றன.
உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸைக் கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். பூமியில் எந்தத் தலைவருக்கும், ஏன் எந்த ’கடவுளுக்கும்’கூட இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ஆனால் அவர் தலைவருமல்ல, கடவுளுமல்ல. மனிதர்களை சிந்திக்கத் தூண்டிய ஒரு சாதாரண மனிதர். இந்த புத்தகம் அந்த மனிதரைப் பற்றிச் சொல்கிறது.
மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது. இந்த நூல் காலத்தின் தேவை.
ஆதி வள்ளியப்பனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
[button link=”https://thamizhbooks.com/ilaiyorukku-marx-kadhai.html”]  புத்தகத்தை இங்கு வாங்கலாம்[/button]
featured cover image courtesy: twitter/KarlMarxCymraeg