நூல் அறிமுகம்: மார்க்ஸ் பார்வையில் இந்தியா – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்

நூல் அறிமுகம்: மார்க்ஸ் பார்வையில் இந்தியா – சுபாஷ் சந்திர போஸ், இந்திய மாணவர் சங்கம்



புத்தகம் : மார்க்ஸ் பார்வையில் இந்தியா
ஆசிரியர் : இஎம்எஸ்.நம்பூதிரிபாட், தமிழில் இந்திரன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 20
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/markas-parvaiyil-indiya-8861/

கம்யூனிசமா? அது வெளிநாட்டு சரக்காயிற்றே!? இந்தியாவிலெல்லாம் எடுபடாது!? யாரப்பா அந்த மார்க்ஸ்? அவருக்கென்ன தெரியும் இந்தியாவை பற்றி? அவரின் தத்துவமெல்லாம் இங்கு எடுபடுமா? என்று கேட்கும் அதிமேதாவி கூட்டத்தின் கேள்விகளுக்கு “மார்க்ஸ் பார்வையில் இந்தியா” என்ற சிறுபிரசுரத்தின் மூலம் விடையளித்திருக்கிறார் இந்திய மார்க்ஸ் இஎம்எஸ். குறிப்பாக மார்க்சை பின்பற்றும் மார்க்சியவாதிகளுக்கும் மார்க்ஸின் கண்கள் வாயிலாக இந்தியாவை காண ஒரு வாய்ப்பளித்திருக்கிறார்.

சொடுக்கும் நேரத்தில் விரல் நுனியில் உலகை நிறுத்தும் டிஜிட்டல் உலகமில்லாத காலத்திலேயே ஒரு மனிதன் எப்படி தூர தேசங்களின் மீது இவ்வளவு ஞானம் கொண்டிருக்க முடியும் என்பதே வியக்க செய்கிறது. வாழ்ந்தது என்னமோ சிலப் பத்தாண்டுகள். ஆனால் வளர்த்த அறிவோ பல நூற்றாண்டு வயது முதிர்ந்ததாக உள்ளது. அத்தகைய பெருமைமிகு பேராசான் காரல் மார்க்ஸ் மட்டும் இந்தியாவை குறித்து மூன்று கட்டுரைகளையும், எங்கல்ஸோடு இணைந்து 28 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். குறிப்பாக நம் பாடப்புத்தகங்களில் மட்டுமே படித்திருக்கும் சிப்பாய் கழகம் பற்றி மார்க்ஸ் எழுதியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!?

மானுட கலாச்சார முன்னேற்றத்தில் இந்தியர்களின் பங்கு விலை மதிப்பில்லாதது. அதை மார்க்ஸ் வரவேற்றார். ஆனால் அதே நேரத்தில் சாதி, மத, இன பண்புகள் மலிந்த இந்திய சமூகத்தை வன்மையாக இகழுவும் செய்தார். அப்படியானால் அந்த மானுடவியலாளன் மார்க்ஸ் இந்தியாவின் பரந்து விரிந்த மனிதக்குடிகளின் வரலாற்றில் எவ்வளவு ஆழ பயணித்திருப்பான் என்பதே பிரமிக்க வைக்கிறது.



இந்திய தேசிய இயக்கமும், இங்கிலாந்து பாட்டாளி வர்க்கமும் இணைய வேண்டிய தேவைகளை வலியுறுத்தினார் மார்க்ஸ். இந்திய விடுதலைக்கும், சீனப்புரட்சிக்கும் இடையேயான பூகோள தொடர்பை தெளிவுப்படுத்தினார் அவர். அதைதான் சொன்னார் காரல் ” ஒடுக்கும் நாடுகளில் எழும் பாட்டாளி வர்க்கமும், நசுக்கப்படும் தேசங்களில் எழும் தேசிய எழுச்சிகளுக்கும் இடையே ஒரு பிரிக்கமுடியாத தொடர்பு உண்டு என்று.

இவை மட்டுமின்றி இந்திய விவசாயம் அதை சார்ந்த பொருளாதாரம் பற்றியெல்லாம் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார் அவர். இந்திய மாகாணங்களை கிராமங்களை ஆங்கில வந்தேறிகள் எப்படி அழித்து, அவர்களுக்கு தேவையான பலனடைந்தனர் என்பதையெல்லாம் தரவுகள் உட்பட புள்ளியளோடு கட்டுரையாக கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் இந்த மாற்றங்களால் உருவான புதிய சமூக அமைப்பை மார்க்ஸூம், எங்கல்ஸூம் கவனிக்க தவறவில்லை. உலகம் முழுவதும் முதலாளித்துவப் புரட்சி இன்றியமையாதது. அதனால் உருவாகும் பாட்டாளி வர்க்கம் அதைப் பெற்றெடுத்த முதலாளித்துவத்திற்கே முடிவு கட்டும் என்பது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதில் மார்க்ஸ் உறுதிபட நின்றார். இந்திய கம்யூனிஸ்டுகள் பிறப்பதற்கு முன்னே இந்தியாவில் சாதி, மத, இன வெறி ஒழிப்பு நடக்காமல் புரட்சி சாத்தியமில்லை என்று சூழுறைத்தவர் காரல்மார்க்ஸ்.

” ஐரோப்போவோடு தன் வேலையை நிறுத்தியிருந்தால் அவரும் மற்ற எல்லா சமூக தத்துவஞானிகள் வரிசையில் நின்றிருப்பார். ஆனால் அவர் உழைத்தது வெறும் சமூக அவலங்களை விளக்குவதற்காக அல்ல மாறாக அந்த சமூக அமைப்பையே அடியோடு மாற்றுவதற்காக”. அதனால்தான் அவர் ஒரு இயங்கியல் தீர்க்கதரிசி. இந்த பூமிப்பந்தின் விடுதலைத் தூதுவன்.


Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *