புத்தகம் : மார்க்சிய பார்வையில் அம்பேத்கர்
ஆசிரியர் : பி.பி.சான்ஸ்கிரி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 20
புத்தகம் வாங்க: https://bit.ly/3b9XxOU
சமூக சீர்திருத்தம் பேசுவோருக்கும், சோசலிசம் பேசுவோருக்கும் மேலோட்டமான காட்சிப்படுத்துதல் இரண்டும் ஒன்று போன்றது என்ற பார்வையை வழங்கினாலும், உள்ளார்ந்து அவர்கள் முரண்பட்டவர்களாகவே உள்ளனர். அதிகார கட்டமைப்பின் மூலமாகவே சமூக சமத்துவத்தை நிறுவ முயலுவதே சமூக சீர்திருத்தம் . இதற்கு சமூக அமைப்பை மாற்ற வேண்டியதில்லை. சில ஜனநாயக உரிமைகளின் மூலம் சீர்திருத்தம் நடந்தால் போதும். ஆனால், அந்த அதிகார கட்டமைப்பையே கட்டுக்குள் வைத்திருப்பது சொத்துடைமை வர்க்கம்தான். அதுவே வர்க்க ஏற்றத்தாழ்வை உருவாக்குவதன் மூலம் இன்ன பிற ஆதிக்க நிலைகளை சமூக ,பொருளாதார ரீதியாக வழிநடத்தி செல்கிறது . எனவே தனிசொத்துடைமை மற்றும் அதை பாதுகாக்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார சமூகத்தின் கட்டமைப்பையே மாற்றியமைப்பதன் மூலம் பொதுவுடைமை மற்றும் அதன் பிரிவுகளான ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம் இன்ன பிறவற்றை நிறுவ முயல்வதே சோசலிசம்.
இன்றும் இது பலரால் புரிந்துக் கொள்ளபடாத கருத்தாகவே இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்டுகள் சாதிய ஒடுக்குமுறை பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவில்லை என அம்பேத்காரும், சாதிய ஆதிக்கமே பெரும் வர்க்க நலனை காக்கும் கேடையம்தான். அத்தகைய வர்க்க பிரச்சினையில் பெரிதாக அம்பேத்கர் அக்கறை காட்டவில்லை என இந்திய கம்யூனிஸ்டுகளும் விமர்சனம் வைத்தனர். ஆனால் அந்த காலத்திலேயே இந்த விமர்சனங்களுக்கான தீர்வு எட்டப்படாததன் காரணம் இரண்டு வகை. கம்யூனிஸ்டுகள் தரப்பில் பார்த்தோமானால், வெளிநாட்டில் கிளையாக உருவெடுத்து, பின் இந்திய மண்ணில் செயல்படத் துவங்கி, துவக்கக்காலத்திலேயே எண்ணற்ற சதி வழக்குகளைக் கண்டு, தகவல் தொடர்பு குறைபாடுகளால் பெரியளவு மார்க்ஸிய பாடமும் கிட்டாமல் , இந்தியாவின் கம்யூனிச குழந்தையாகவே இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இருந்தனர். ஆரம்ப காலத்தில் சமூகத்தின் ஆணிவேரை அறிவதில் சிரமங்களும் இருந்தன. மறுபுறம் அம்பேத்கர் தரப்பில் பார்த்தோமானால், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் நிலவிய ஜனநாயக அமைப்பு முறைகளின் மூலமாகவே தங்களுக்கு தேவையான அடிப்படை மாற்றங்களை செய்துவிட முடியும் என்று நம்பியதாலோ என்னவோ, “கம்யூனிஸ்டுகளுடன் என்னால் நிச்சயமாக உறவு ஏற்படுத்திக் கொள்ள இயலாது” என வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் இந்திய சமூக அரசியலில் முதிர்ச்சியுறாத அன்றைய கம்யூனிஸ்டுகள் சமூக ரீதியான போராட்டங்களை விட, வர்க்க பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்ததும் கூட அம்பேத்கர் தள்ளி சென்றதற்கு காரணமாய் அமைந்தது.
இத்தகைய பல்வேறு தகவல்களை உள்ளடக்கி மார்க்சிய பார்வையில் அம்பேத்கர் என்ற பி பி சான்ஸ்கிரி அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுதிய கட்டுரையே புத்தகமாக பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் துயர்மிகு தொடக்க வாழ்க்கையோடு துவங்கும் கட்டுரை பூலே, அம்பேத்கர் போன்றவர்கள் எத்தகு சமூக சூழலின் கொதிநிலையில் தவிர்க்க முடியாத தலைவர்களாக வார்க்கப்படுகிறார்கள் என்பதையும் சுட்டுகிறது. முதலில் தலித்துகளுக்கான , ஒடுக்கப்பட்டோருக்கான போராட்டங்களை முன்னெடுத்து அவர்களுக்கான தனிக் கட்சியை துவங்கும் அம்பேத்கர் அந்த தனித்து போராடும் உத்தி தோல்வியில் முடியவே இந்திய குடியரசு கட்சி என்ற அனைத்து வகுப்பினருக்கான கட்சியை துவங்குகிறார். அதன்மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை சாத்தியமாக்க முடியும் எனவும் நம்பினார். ஆனால் அம்பேத்கர் முதலில் அப்படி செய்ததற்கும் சமூக சூழலே காரணம். பல ஆதிக்க நடைமுறைகளை எதிர்த்து , சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து சட்ட ரீதியாக அவர் நகர்வுகளை முன்வைக்கும்போது கூட பாராளுமன்றத்திலும் கொடிகட்டிப் பறந்த பிராமண ஆதிக்கம் அவற்றை முட்டுக்கட்டை போட்டு தடுத்தது. அப்படி அவர் இயற்றிய ஆக்கிரமிப்பு சட்டத்தையே “அதை எழுதிய ஒரு எழுத்தாளியே நான்’ என அவரே சொல்லும்படி நிலை இருந்தது.
அத்தகு சூழலிலும் சமரசமின்றி நிலபிரபுத்துவ முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்டுகளோடு அவர் பெரிதாக கைக் கோர்க்கவில்லை.
இருப்பினும் ஒருசில கோரிக்கைகளில் கம்யூனிஸ்டுகள் உடன் இணைந்து போராட்டங்களை அம்பேத்கர் முன்னெடுத்துள்ளார். அதே போல் வர்க்க பார்வையில் அம்பேத்கர் சொன்ன கருத்துக்களும் இப்புத்தகத்தில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.
எது எப்படியாகினும் இரு தரப்பையும் சுயபரிசோதனை உள்ளாக்க வேண்டியிருந்த நிலையில் அந்த பரிசோதனையின் ஓரளவு முடிவாகவே தற்போது “கருப்பு சிவப்பு நீலம்” என்ற கோஷமாக வெளிப்படுவதை காணமுடிகிறது. இருப்பினும் இன்னும் வெறும் “சமூக போராட்டமே முன்னுரிமை அல்லது வர்க்கப் போராட்டமே முன்னுரிமை” என்ற முதிர்ச்சியற்ற குரல்கள் நின்றபாடில்லை. எந்த புள்ளியில் இந்தியாவில் சமூக நீதிக்கான போராட்டமும் வர்க்கப் போராட்டமும் இணைகிறதோ அங்குதான் இந்தியாவில் சுதந்திர காற்று சுவாசிக்கப்படும். அம்பேத்கரும் மார்க்ஸூம் பெரியாரும் இணைவது காலத்தின் கட்டாயம்.