இன்று நாம் சந்தித்து வரும் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் மார்க்சிய பார்வையில் கேள்வி, பதில் வடிவத்தில் விளக்குகிறது இந்நூல். நுகர்வு கலாச்சாரமும், மக்கள் தொகை பெருக்கமும் தான் சூழலியல் சிக்கல்களுக்கு காரணம் என கூற முடியாது. உற்பத்தி அமைப்போடும் அதன் அதிகார மையத்தின் இயக்கத்தோடும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டிய தேவை உள்ளது என்பதை வலுவாகப் பதிவு செய்கிறது இந்நூல். வர்க்கப் போராட்டமும் சூழலியல் போராட்டங்களும் வெவ்வேறானவை அல்ல; இரண்டு போராட்டங்களும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை என்பதை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
சுற்றுச்சூழல் என்றால் என்ன? என்கிற அடிப்படையான கேள்வியிலிருந்து துவங்கும் நூல் தொல் சமூகத்தில் சூழல் சிக்கல்கள் எதனால் ஏற்பட்டது? இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவையும் அதில் உண்டான பிளவையும் விளக்குகிறது.18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலாளியத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதும் வந்த பிறகு விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற மைய நீரோட்டத்தின் கீழ் தனது உற்பத்தி முறையை வடிவமைத்தது.இப்புவியிலிருந்து சுரண்டப்படும் மூலதனத்தின் இருப்பைப் பற்றியோ அதனால் சாரமிழந்து நிற்கும் வளங்களை பற்றியோ முதலாளியம் அக்கறை கொள்ளவில்லை. அதன்விளைவுகளை நாம் இப்போதும் அனுபவித்து வருகிறோம்.
பல்வேறு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து தள்ளுகிறது முதலாளியம்.அது தேவைக்கான உற்பத்தியாக அல்லாமல் லாபத்திற்கான உற்பத்தியாக மட்டுமே இருக்கிறது. “மனிதத் தேவைகளோ,சமூக நலனோ முதலாளியத்தை இயக்கும் அச்சாணியல்ல; மாறாக மூலதனக் குவித்தலும், அதிக லாபமுமே முதலாளியத்தை இயக்குகிறது” என்னும் மார்க்சின் கருத்தை மிகை உற்பத்தியோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.முதலாளித்துவ சமூகத்தின் லாப நோக்க உற்பத்திக்காக இயற்கை வளங்கள் வேகமாகச் சுரண்டப்பட்டு வருகிறது. இந்த நிகழ்முறையில் தனது உற்பத்தி கழிவுகளை புவியின் மீது செலுத்துகிறது முதலாளியம்.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் சூழலுக்கு ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களை நூலாசிரியர் வரிசைப்படுத்துகிறார்.
1.வருடத்திற்கு 18,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அமேசான் காடுகள் அழிக்கப்படுகின்றன.இதன் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் உலகில் 25% பல்லுயிரியம் அழியக் கூடிய வாய்ப்பு உள்ளது.
2.அணு உலைக் கழிவுகளை என்ன செய்வது என்ற சிக்கலுக்கு முதலாளியத்தால் இன்று வரை தீர்வு காண முடியவில்லை .
3.கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
4.உலகின் 17,000 விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக உலக இயற்கை பாதுகாப்பு மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையினால் ஏற்பட்டுள்ள சூழலியல் சிக்கல்களையும் அதன் விளைவுகளையும் அரசும் அதன் சார்பான ஆளும் வர்க்க அறிவுஜீவிகள், ஊடகங்கள் மறைத்தும் திரித்தும் வளர்ச்சி என்கிற போர்வையில் கருத்து நிலை ஆதிக்கத்தை மக்களிடம் திணித்து வருகிறார்கள்.
![தீவிரமாகும் ...](https://static.hindutamil.in/hindu/uploads/news/2018/03/28/large/165740.jpg)
தமிழகத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை போராட்டமும் அதனையொட்டி நடைபெற்ற நிகழ்வுகளுமே இதற்கு சாட்சி. இதுவரை நடைபெற்ற சர்வதேச அளவிலான மாநாடுகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கேற்பும் இயற்கை வளங்களின் மீதான அவர்களின் அக்கறை(!!) நமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. உதாரணம்:கியாட்டோ வரைவு ஒப்பந்தம். இதனை நூலாசிரியர் உரிய ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
சூழலியல் சிக்கல்களுக்கான நிரந்தர தீர்வு என்பது லாப நோக்கு மட்டுமே கொண்ட முதலாளித்துவ சமூகத்தில், அம்முறைக்குப் பாதுகாப்பாக நிற்கும் முதலாளித்துவ அரசின் கீழ் சாத்தியமில்லை.தனியுடைமை உற்பத்தி முறை ஒழிக்கப்பட்ட அவசியத் தேவைகளுக்கென திட்டமிடப்பட்ட பொருளாதார உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடமைச் சமூகத்தில் தான் சாத்தியம் என நூலாசிரியர் விளக்குகிறார்.
எனவே சூழலியல் போராட்டம் என்பது சமூக மாற்றத்துக்கான போராட்டத்தோடு இணைந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.”அரசின் வர்க்கத்தன்மை பற்றிய புரிதலை உள்வாங்கிக் கொண்டால்தான் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்ற மார்க்சின் கருத்தை உள்வாங்குவோம்.மார்க்சியப் பார்வையில் சூழலியல் சிக்கல்களை அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்நூலை அனைவரும் வாசிப்போம்.
நூல்: மார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம்
நூலாசிரியர்: அருண் நெடுஞ்செழியன்
வெளியீடு: பூவுலகின்நண்பர்கள்
விலை: ரூ 50.
பக்கங்கள்: 64.
நூல்அறிமுகம்: மு.தெய்வேந்திரன் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம்
Very good informative , excellent article it leads me eager to read