மசக்கை -10 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

 

உணவும் மருந்தும்

உணவே மருந்து என்பது நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைதான். ஆனால் அத்தகைய உணவுகளே ஆரோக்கியமானதாகக் கிடைப்பதில்லை என்பதுதானே இங்கு பிரச்சனையாகவே இருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் மக்களிடையே துரித உணவுகள் மீதான ஆர்வம் குறைந்து இயற்கை உணவுகளான ஆர்கானிக் அரிசி மற்றும் காய்கறிகளின் மீதான மோகம் தற்போது அதிகரித்து வருவதை மருத்துவ உலகில் ஓர் ஆறுதலை அளிக்கும் விஷயமாகப் பார்க்கலாம்.

“டாக்டர்! நான் சாதம் வேணும்னா நல்லா சாப்பிடுறேன், மாத்திரைய மட்டும் சாப்பிடச் சொல்லிடாதீங்க, பிளீஸ்! மாத்திரையப் பாத்தாலே எனக்கு குமட்டிக்கிட்டு வர்ற மாதிரி இருக்குது” என்று சொல்லும் கர்ப்பிணித் தாய்மார்களும் மாத்திரைகள் தொடர்பான சில விஷயங்களைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

சாதாரணக் காய்ச்சல் மற்றும் சளி பிடித்தவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சில குறிப்பிட்ட மாத்திரைகளைக்கூட கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டாம் என மருந்து கம்பெனிகளே விழிப்புணர்வு கடிதத்தையும் அட்டைப் பெட்டிக்குள் மடித்து வைத்துக் கொடுக்கிறது. மேலும் கர்ப்பிணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத மாத்திரைகளையும் தனித்தனியே மருந்துக் கம்பெனிகள் தயாரித்தும் வைத்திருக்கின்றன. அதாவது பொதுவாக பெரியவர்களுக்குப் பரிந்துரைக்கின்ற மாத்திரைகளை குழந்தைகளுக்குக் கொடுக்காமல் வீரியம் குறைக்கப்பட்டு அவர்களின் பிஞ்சு உடலுக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் டானிக்குகளாக தயாரித்துக் கொடுப்பதைப்போல கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் என தனியே கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஆதலால் ஒரு நோய்க்கு ஒரே மருந்துதான் என்கிற மனநிலையிலிருந்து முதலில் நாம் அனைவரும் விடுபட வேண்டும். ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அவர்களின் வயது மற்றும் உடல் எடையை வைத்தும், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் என குறிப்பிட்ட காரணங்களை வைத்தும், கல்லீரல் பாதிப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் என நோயுள்ளவர்களை வைத்தும் வெவ்வேறான மாத்திரைகளைப் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய காரணத்தினால்தான் பெட்டிக் கடைகள், மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்துகளை யாரும் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அதனால் கர்ப்பவதிகளுமே, இது நாம எப்போதும் சாப்பிடுற மாத்திரைதானே! என்று அலட்சியமாக தாங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

அன்பானவர்களே! நீங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகும் செய்தியானது வயிறு பருத்துப் பெரியதாக இல்லாத பட்சத்தில் உங்களைப் பரிசோதிக்கும் மருத்துவருக்கோ அல்லது மாத்திரைகள் கொடுக்கும் மருந்துக் கடைக்காரருக்கோ நீங்களே வாய் திறந்து சொல்லாமல் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. “இவுகளப் பாத்தா மாசமா இருக்குற மாதிரித் தெரியலயே!” என்று பொதுவாக தரக்கூடிய ஆனால் அதுவே கருவினைப் பாதிக்கக்கூடிய மாத்திரைகளைக்கூட ஒருவேளை அவர்கள் பரிந்துரைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

நீங்கள் புதிதாகத் திருமணமானவரா? இரண்டாவது, மூன்றாவதாக பிள்ளையைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்களா? அப்படியென்றால் அதைப் பற்றி உங்களது மருத்துவரிடம், “மேடம்! நாங்க கொழந்தையப் பெத்துக்க முடிவு பண்ணிருக்கோம், நீங்க தர்ற மாத்திரையால வயித்துல வளரப் போற எங்க கொழந்தைக்கு ஏதாச்சும் பாதிப்பு வருமா?” என்று கேட்டால் கட்டாயமாக அவர் உங்களுக்கும் இனிமேல் வளரப்போகும் கருவிற்கும் பாதிக்காத மருந்து மாத்திரைகளையே பரிந்துரைப்பார். குழந்தை பெற வேண்டுமென்ற முடிவெடுத்தகணமே மருந்துகளை அநாவசியமான முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்துவார். ஆதலால் மருத்துவமனை சென்று மருத்துவரிடம் பரிசோதிக்கும் போதோ, மருந்துக் கடைக்காரரிடம் சீட்டைக் கொடுத்து மருந்து வாங்கும் போதோ உங்களது கர்ப்பம் தொடர்பானவற்றை மனம்திறந்து பேசுங்கள்.

சரி, மருத்துவரோ மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிட்டார். நீங்களும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று வாங்கிக் கொண்டீர்கள். அதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதா? இல்லை, கட்டாயமாக இல்லை.

கர்ப்பிணி பெண்களுக்கு பாதாம் ...

நாம் மருந்துகளை வாங்கியவுடன் இந்த மருந்தை எப்போ தயாரிச்சுருக்காங்க? இந்த மருந்தோட காலாவதியாகுற தேதி எப்போ? இந்த மருந்தோட அட்டைக்குப் பின்னாடி மாசமா இருக்குறவங்களுக்கோ, தாய்ப்பால் கொடுக்குறவங்களுக்கோ, குழந்தைகளுக்கோ எச்சரிக்கையா இருக்கச் சொல்லி ஏதாச்சும் செய்தி போட்டுருக்காங்களா? என்று படித்துப் பார்க்க வேண்டும். மருந்துக் கம்பெனிகளும்கூட குறைந்தபட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான எச்சரிக்கை செய்திகளையாவது மக்கள் படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக அந்தந்த மாநில மொழியில் அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும்.

மருத்துவமனைக்குச் சென்று கர்ப்பத்திற்காக நாம் பரிசோதிக்கும் போதும், பரிசோதித்து அதற்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் போதும் நாம் என்னவெல்லாம் மருத்துவரிடமோ, செவிலியரிடமோ கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தோமோ அதையெல்லாம் கேட்டுவிட்டோமா அல்லது கர்ப்பகாலம், குழந்தை வளர்ப்பு சம்பந்தமான எல்லா சந்தேகமும் தீர்ந்துவிட்டதா என்பதையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒவ்வொருமுறையும் வீடு திரும்புகையில் ஏதோ ஒன்றை மருத்துவரிடம் சென்று கேட்க நினைத்து அது மறந்துவிட்டால் மருத்துவரிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொண்டு மறவாமல் அதை கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

பொதுவாகவே மருத்துவமனைகளில் யாரிடம் போய் எதைக் கேட்பது என்பதைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. வரவேற்பறையில் இருப்பவர்களிடம் போய் மருந்துகளைப் பற்றி விசாரிக்கிறோம், நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் மருத்துவரிடம் போய் அடுத்த பன்னிரெண்டாம் நம்பர் பேருந்து எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டு நிற்கிறோம். இப்படியாக ஒரு குறிப்பிட்ட விசயத்திற்குச் சம்பந்தம் இல்லாதவர்களிடம் சென்று கேட்பதால் நமக்குத் தவறான வழிகாட்டலே கிடைக்கிறது.

குறிப்பாக மருந்துக் கடைக்காரரிடம் சென்று, நீங்கள் கொடுத்த மருந்தை எப்போது சாப்பிடுவது, இதை சாப்பிடுவதற்கு முன்பா அல்லது பின்பா எப்போது எடுத்துக் கொள்வது, ஒருவேளைக்கு எத்தனை மாத்திரையை எடுத்துக் கொள்வது, ஒருநாளைக்கு எத்தனை வேளைக்குச் சாப்பிட வேண்டும், இதை எத்தனை நாளுக்குச் சாப்பிட வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு மருந்தை எடுத்துக் கொள்ள மறந்துவிட்டால் அடுத்த வேளைக்கும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டும். அப்படியும் சந்தேகம் தீரவில்லையென்றாலும்கூட மாத்திரைகளுடன் மருத்துவரிடமே மீண்டும் சென்று நமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். அத்தோடு மருந்துக்கடைகளில் மருந்துகளை வாங்கும் போது எப்போதும் காகிதப் பையினுள் போட்டு காலை, மதியம், மாலை, இரவு என குறிப்பிட்டு வாங்கிக் கொள்ளுவதும் முக்கியம்.

மருத்துவரிடம்கூட சென்று, இது என்ன மாத்திரை, இதை எதற்காக சாப்பிட வேண்டிய மாத்திரை, நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவிருப்பதால் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாமா, அதனால் எனக்கோ என் குழந்தைக்கோ ஏதேனும் பாதிப்பு வருமா, தாய்ப்பால் கொடுப்பதால் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா, இந்த மருந்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் வருமா, எனக்கு எது சாப்பிடாலும் குமட்டல் வரும்போது இதனை எடுத்துக் கொண்டாலும் வாந்தி வருமா, அப்படி தொந்தரவுகள் வந்தால் அதை சாப்பிடாமல் நிறுத்திவிடலாமா, எனக்கு அல்சர் தொந்தரவு இருப்பதால் என்ன செய்ய வேண்டும், இந்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது ஏதேனும் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டுமா, நீங்கள் கொடுத்த மாத்திரைகள் காலியாகிவிட்டால் மீண்டும் வந்து உங்களிடம் வாங்கிக் கொள்ளலாமா, அடுத்தாக உங்களை நான் எப்போது சந்திக்க வரவேண்டும் என்பதான கேள்விகளை கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுமே தங்களுக்கு கத்தரிக்காய், கருவாடு, முட்டை, நண்டு, இறால் போன்ற உணவு அலர்ஜியோ, சல்பா மருந்துகள், வலி மருந்துகள், ரத்த ஊசிகள் போன்ற குறிப்பிட்ட மருந்து அலர்ஜியோ, அல்சர் புண் பற்றிய அறிகுறி இருந்தாலோ, வேறு ஏதேனும் நாள்பட்ட நோயோ அதற்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ அதை மறைக்காமல் மருத்துவரிடம் தெரிவித்து அதற்கேற்ப சரியான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம். கர்ப்பகாலத்தில் இரத்தஊசி அலர்ஜிகள் தொடர்பான விழிப்புணர்களை கர்ப்பவதிகள் ஒவ்வொருமே தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

இப்படியாக ஒவ்வொருவரும் தங்களுக்கான கேள்வியைக் கேட்க ஆரம்பித்தாலொழிய உங்களுக்கான அறிவுரைகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியில்லையென்றால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து தவறான அறிவுரைகளைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள். அப்புறம் உங்களதுபாடு திண்டாட்டம்தான்.

நீங்கள் மாத்திரைகளை உதிரிகளாக வாங்கும்போது பின்பக்கம் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று உங்களால் படித்துத் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இதனால் காலாவதியான மருந்துகள் பற்றிய விவரங்களும் எச்சரிக்கை செய்திகளும் உங்களுக்கு கிடைப்பதில்லை. அதனால் மருந்துகளை வாங்கும்போது தேவைக்கு அதிகமானாலும் பரவாயில்லை முழு அட்டையாக வாங்குங்கள். ஆனாலும் இப்போதுதான் அரசு மருத்துவமனைகளில் இலவசமகவே மருந்துகள் தருகிறார்களே.

கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவேண்டிய ...

இப்போதெல்லாம் கிராமங்களில் பெட்டிக்கடைகளில்கூட பல மருந்துகள் எளிதாகக் கிடைப்பதால் மருத்துவர்கள் அறிவுரையின்றி அனைவரும் வாங்கிச் சாப்பிட பழகிக் கொண்டார்கள். இதில் கர்ப்பிணித் தாய்மார்களுமே விதிவிலக்கல்ல. அதன் விளைவாக

“வயித்துல புள்ள உண்டாகி அம்பது நாளு, அறுபது நாளுன்னு என்ன காரணமுன்னே தெரியாமலே தீட்டா கழிஞ்சிப் போயிடுது. கடையில வயிறு வலின்னு மருந்து வாங்கிச் சாப்புட்டது தப்பாப் போச்சே” என்று மருந்துகளால் கருச்சிதைவிற்குள்ளான பின்பு புலம்பித் தவிக்கிறார்கள்.

மாத்திரைகள் சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அது நன்றாகத் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து விதத்திலும் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கும் மேலாக மருந்துகள் அனைத்தும் சரியாக வேலை செய்வதற்கு ஏற்ற உடற் தகுதியை நாம் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால் நாம் சரியாகச் சாப்பிடுவதில்லை. வயதிற்கு ஏற்ப உடல் எடையைப் பெற்றிருப்பதில்லை. சுற்றுச்சூழலும் மோசமாய் கெட்டுக் கிடக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கிறது. காய்ச்சல் வருகிறது. ரத்தசோகை உள்ளிட்ட பலப்பல நோய்களால் அவதிப்படுகின்றோம். மேலும் நாம் சாப்பிடுகின்ற ஆரோக்கியமே இல்லாத உணவுகள்கூட மருந்துகளை உடம்பு ஏற்றுக் கொள்ளாத வண்ணம் தடுத்து விடுகிறது.

நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களெல்லாம் பற்களாலும், இரைப்பை அமிலங்களாலும் நன்கு அரைக்கப்பட வேண்டும். அப்படி அரைக்கப்பட்ட உணவுக்கூழானது கணையம் மற்றும் பித்தப்பையினால் சுரக்கப்படுகின்ற மேஜிக் பொருட்களால் (Enzymes) சிறுசிறு துகள்களாக உடைக்கப்பட்டு அவை குடல்களில் உறிஞ்சப்படவேண்டும். இவைதான் கல்லீரலுக்குச் சென்று நமக்குத் தேவையான சக்திகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவிலுள்ள சத்துகள் சரியாக உறிஞ்சப்படுவதற்கு குடல்களின் மேற்பரப்பு மென்மையானதாகவும் எந்தவித நோய்த்தொற்று இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் நம்முடைய மோசமான நடைமுறைப் பழக்கவழக்கங்களால் வாய்ப் பகுதியிலிருந்து குடற் பகுதிவரை ஏதாவது ஒரு இடத்தில் நோய் தாக்குவதற்கான வழியை ஏற்படுத்தி வைத்துள்ளோம். அதனால் நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையும் அதற்கேற்ப செயல்பட முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு மலக்குடல் வழியே வெளியேறிவிடுகிறது. சில மருந்துகளோ “என்னடா, இவங்களோட உடம்பையே இப்படி கொஞ்சம்கூட அக்கறையே இல்லாம மோசமா வச்சுருக்காங்களே?” என்று கோபப்பட்டு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான் நோய்வாய்பட்டவர் மது அருந்துபவரா, புகை பிடிப்பவரா, மோசமான கடை உணவுகளை உண்பவரா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு அவரது உடலுக்கேற்ப எந்தவகை மாத்திரைகளை கொடுக்க வேண்டும், அப்படி மருந்துகளைக் கொடுக்கும்போது அவரது உடல் ஏற்றுக்கொள்ளுமா, ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதா என ஒவ்வொருவரையும் பரிசோதித்துவிட்டு மாத்திரைகளைக் கொடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பதைப் போல பெரும்பாலான கர்ப்பிணிகளுமே மசக்கை, ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கம், அடிக்கடி நோய்வாய்படுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கருவாக வளரும் குழந்தைக்கும் சேர்த்தே கர்ப்பகாலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் சத்துகளைப் பூர்த்தி செய்யாமலிருத்தல் போன்றவற்றால் கிட்டத்தட்ட அனைவருமே சத்துமாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது வந்துவிட்டார்கள்.

கர்ப்பவதியோ மசக்கையால் சரியாகச் சாப்பிட மாட்டாள். இரைப்பையில் அமிலச்சுரப்பும் குறைவாகச் சுரப்பதால் செரிமானமாக அவளுக்கு நீண்ட நேரம் ஆகிறது. குடலும் மந்தமாக வேலை செய்வதால் கார்ப்பவதி எப்படி சாப்பிட்டாலும் ஊட்டச்சத்து குறைபாடுகளைச் சந்திக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. மேலும் வளரும் குழந்தைக்கேற்ப அதிகமாக தேவைப்படுகிற ஊட்டச்சத்தும் இதனால் பூர்த்தியாவதில்லை. இத்தகைய காரணங்களினால் கர்ப்பிணிகளும் இரத்தசோகை, இரத்தஅழுத்தம் போன்ற கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய நோய்களினால் எளிதாகப் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

இவையனைத்தையும் கருத்தில்கொண்டே மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக ஊட்டச்சத்து மருந்துகளைப் பரிந்துரை செய்கிறார்கள். உலகலாவிய மற்றும் நாட்டின் பல்வறு காலகட்டங்களில் பலதரப்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கர்ப்பவதிகளுக்கென்று அடிப்படையாகத் தேவைப்படுகிற சில மருந்துகளை அரசும் பரிந்துரைத்துள்ளது. அதையுமே கர்ப்பத்தின் மசக்கைக்கால துவக்கத்தில் இருக்கிற நாமும தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா.