மசக்கை 11 : (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

மசக்கை 11 : (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

11. கர்ப்பகால மருந்துகள் அறிவோம்!

இக்காலகட்டத்தில் நவீன மருத்துவம் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிப் போய்விட்டது. தினந்தோறும் மருத்துவமனைகளில் நூற்றுக்காணக்கான கர்ப்பிணிகள் கர்ப்பமாயிருப்பதை உறுதி செய்வதற்கு, பரிசோதித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு, பிரசவிப்பத்திற்கு, குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளுக்கு என வந்த வண்ணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய கர்ப்பகாலம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிகள்கூட எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. ஆனால் கர்ப்பகால மருந்துகள் தொடர்பாக எழுகிற குழப்பங்களுக்குத்தான் இன்னமும் சரியான விடைகள் கிடைத்தபாடில்லை.

பலப்பல பெயர்கள், பலவிதமான வண்ணங்கள், சிறியது முதல் பெரியதானவை, இரண்டு மூன்று மருந்துகள் சேர்ந்த கூட்டு மாத்திரைகள் என வகைவகையான மாத்திரைகளை கைகள் நிறைய வாங்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வருகிற கர்ப்பவதிகள் அதை எதற்காகச் சாப்பிடுகிறோம் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே பிரசவித்து குழந்தையும் பெற்று விடுகிறார்கள். மருத்துமனைகளில் அறிவுறுத்தப்படுகிற மாத்திரைகளை கர்ப்பவதிகள் பலர் சாப்பிடுவதேயில்லை. மாத்திரையைச் சாப்பிட்டால் குமட்டல், வாந்தி வருமேயென அதை யாருக்கும் தெரியாமல் தூர எறிந்துவிட்டு சாப்பிட்டுவிட்டதாகச் சொல்பவர்களும் உண்டு. மாத்திரைகளைச் சாப்பிடாவிட்டாலும் நமக்குத்தான் ஒன்றும் தொந்தரவு இல்லையே என்று நினைத்துக் கொண்டு கர்ப்பகாலத்தை வெறுமனே கடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே கர்ப்பகால மருந்துகளைப் பற்றிய சில விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கர்ப்பகாலத்தின் துவக்க காலத்தில் மாதமொருமுறை மட்டும் தான் மகப்பேறு மருத்துவரைச் சென்று நாம் பரிசோதித்துக் கொள்கிறோம். பிரசவத் தேதி நெருங்க நெருங்கத்தான் மாதத்திற்கு இருமுறை, வாரமொருமுறை, வாரத்திற்கு இரண்டு நாள் என்று மருத்துரைச் சந்திக்க அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். மசக்கைக் காலத்தில் பொதுவாக மருந்து மாத்திரைகள் எதையும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதேயில்லை. இந்த மசக்கை காலமானது கரு உருவாகி அது தங்கி வளருவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் முக்கியமான காலகட்டமாதலால் பெரும்பாலும் மருந்துகளை தவிர்ப்பதற்கே மகப்பேறு மருத்துவர்கள் முயலுவார்கள்.

மசக்கை காலம் முடிந்து பிரசவம் வரையிலான காலகட்டத்தில்தான் கர்ப்பவதிக்கு வேண்டிய அத்தியாவசிய மருந்துகளை பரிந்துரைக்கவே ஆரம்பிப்பார்கள். ஆரம்ப காலத்தில் முப்பது நாட்களுக்கு ஒருமுறையென சந்திக்கைகளில் அந்த இடைப்பட்ட காலத்திற்கான மருந்துகளை ஒரு மகப்பேறு மருத்துவர் கைநிறைய அள்ளிக் கொடுக்கையில் கர்ப்பவதியோ அதைப் பார்த்து என்னவோ ஏதோ என்று பதட்டமாகி விடுவகிறார்கள். ஆகவேதான் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடனே அவர்களுக்குக் கொடுக்கப்படுகிற பொதுவான மருந்துகளைப் பற்றிய அடிப்படையான விசயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

போலிக் அமில மாத்திரைகள்

20200828_093827.jpg

போலிக் அமில மாத்திரைகளைக் கர்ப்பவதிகளின் உண்மையான தோழி என்றே கூறலாம். மருத்துவர்கள் பொதுவாக கருத்தரித்த நான்காவது மாதத்திலிருந்தே மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். ஆனால் போலிக் அமில மாத்திரைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாவதற்கு முன்பாகவே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் திருமணமான முதல் நாளிலிருந்தேகூட அதனை எடுத்துக் கொள்ளலாம்.

பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் தள்ளிப்போன பிறகோ, மசக்கை ஆரம்பித்த பிறகோதான் தாங்கள் கருவுற்றிருப்பதையே புரிந்துகொண்டு அதை சிறுநீர் பரிசோதனையின் மூலமாக உறுதி செய்து கொள்வார்கள். அதற்கும் மாதவிடாய் தள்ளிப்போகிற நாற்பது நாற்பத்தைந்து நாட்கள் என தேவையாயிருக்கிறது. ஆனால் கருத்தரித்த மூன்றாவது வாரத்திற்குள்ளாகவே மூளையும் மூளை தொடர்பான ஏனைய பகுதிகளும் வளர்ந்துவிடுகின்றன. அத்தகைய மூளையானது நன்றாக வளரவும் அதன் மூளை தொடர்பான பிறவிக் குறைபாடுகளில் இருந்து சிசுவானது தப்பிப் பிழைக்கவும் ஒவ்வொரு கருத்தரிக்கும் பெண்ணுக்கும் போலிக் அமிலச் சத்துகள் தேவையாயிருக்கின்றன.

ஆனால் நமது உடலின் தேவையானது அன்றாட உணவுகள் மூலம் பாதியளவுகூட பூர்த்தியாவதில்லை. எனவேதான் கர்ப்பிணிகளுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமலிருக்க கருத்தரிக்கும் முன்பே மாத்திரையை எடுத்துக் கொள்வதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘ப்ரி கன்செப்சனல் போலிக் ஆசிட் சப்லிமென்டேசன்’ (PRE CONCEPTIONAL FOLIC ACID SUPPLEMENTATION) என்பார்கள். இதனால்தான் கருத்தரித்த பின்பாக மருத்துவரிடம் செல்லுகிற வழக்கத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டு திருமணமான பின்பு ஒருமுறை மருத்துவரிடம் சென்று கருத்தரித்தல் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் போலிக் அமில மாத்திரைகளை கருத்தரிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மசக்கைகால முதல் மூன்று மாதம் வரையிலும் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் நமக்குத்தான் கரு எப்போது ஜனிக்கும், ஜனித்த கருவின் அறிகுறி எப்போது நமக்கு காட்டும் என்பதே தெரிவதில்லையே. அவ்வாறு தெரிவதற்குள் மூளையும் வளர்ந்துவிடுகிறதே. அதற்காகத்தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்த நாளிலிருந்தே மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள். ஆக, அத்தைகளே! கொளுந்தியாக்களே! இனிமேல் முதலிரவிற்குள் செல்லும் பெண்ணிடம் பாலும் பழமும் கொடுத்தனுப்புவதுடன் போலிக் அமில மாத்திரைகளையும் கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே நடைமுறையில் கருத்தரித்த இரண்டு மாதங்களுக்குப் பின்பாகத்தான் முதல் முறையாக  மருத்துவரிடமே கர்ப்பவதிகள் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் போது அத்தகைய கர்ப்பவதிகளின் உடல் ஆரோக்கியம், கருப்பையில் வளருகின்ற குழந்தையின் நலம் பற்றி தாமதமாகவே அவரால் அறிய முடிகிறது. அதேசமயம் ஒரு பெண் கருத்தரித்தலுக்கு முன்பாகவே சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்கையில் குழந்தைப்பேறுக்காக ஒரு கர்ப்பவதி மனதளவிலும் உடலளவிலும் தன்னை தயார்படுத்திக் கொள்ள அது உதவியாக இருக்கும் அல்லவா!

இரண்டாவது குழந்தைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற பெண்களும்கூட தாங்கள் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்த நாளிலிருந்தே போலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகும் ஒவ்வொரு குடும்பத்தினுடைய வீட்டின் படுக்கையறையிலும் போலிக் அமில மாத்திரைகள் இருப்பது அவசியம். ஆனால் அதற்கு முன்பாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையும் மிகமிக முக்கியம் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

எனக்கு கரு ஜனிச்சிடுச்சு, ஆனா இப்பவும் மாத்திரை சாப்பிடனுமா? என்றால், ஆம் கட்டாயம் கருத்தரித்த பின்பும் தொடர்ந்து சாப்பிடத்தான் வேண்டும். ஆனால் நீங்கள் கருத்தரித்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் முடியும் வரை போலிக் அமிலம் தவிர வேறு எந்த மாத்திரைகளையும் மருத்துவரின் அறிவுரையின்றி தொடவே கூடாது.

முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் உணவுத் தேவையானது குறைவாகவே இருக்கிறது. நான்காவது மாதத்திலிருந்து ஆரம்பித்து பிரசவம் நெருங்க நெருங்க ஊட்டச்சத்துக்களின் தேவையும் அதிகரிக்கிறது. அதனால்தான் இயற்கையாகவே முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் அவதிப்பட்டு சாப்பிட முடியாமல் தவித்தவள் பிறகு பிரசவம் நெருங்கி வரவும் ‘பசி’ ‘பசி’ என்று கிடைத்ததையெல்லாம் சாப்பிடத் துவங்கிவிடுகிறாள். மேலும் கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கப்படும் சத்து மாத்திரைகளும்கூட அவர்களுக்கு அத்தகைய சத்துக்குறைபாடு இருக்கிறது என்பதற்காகக் கொடுக்கவில்லை. மாறாக அத்தகைய மாத்திரைகள் குழந்தை வளரத் தேவைப்படும் கூடுதலான சத்துக்களை ஈடுகட்டுவதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வைட்டமின்-பி காம்பளக்ஸ் மாத்திரைகள்

20200828_090655.jpg

போலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடுபவர்கள் கூடவே வைட்டமின் பி-12 சத்துக்களை உள்ளடக்கிய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம் என்று அறிவுறுத்துகிறார்கள். போலிக் அமிலத்தைப் போலவே வைட்டமின் பி-12 சத்துக் குறைபாடு இருந்தாலும் கருவாக வளரும் போதே மூளை வளர்ச்சி மற்றும் மூளை தொடர்பான பிறவிக்குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் புத்தம் புதிய இரத்தச் செல்களையும், நரம்பு செல்களையும், மரபணுக்களை உள்ளடக்கிய டி.என்.ஏ வையும் உற்பத்தி செய்வதற்கு வைட்டமின் பி 12 சத்துகள் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

மேலும் வைட்டமின் பி-12 சத்துகள் பொதுவாக காய்கறிகளில் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் அசைவ உணவிலே நிறைந்திருக்கிறது. சைவ உணவைப் பொறுத்தவரையில் தயிரில் மட்டுமே ஓரளவு இருப்பதால் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் கர்ப்பகாலத்தில் வைட்டமின் –பி12 சத்து மாத்திரைகளைச் எடுத்துக் கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும்.

போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள்

20200828_093827.jpg

மூன்று மாதங்கள் முடிந்த பின்பு போலிக் அமிலம் மட்டும் உள்ள மாத்திரைக்குப் பதிலாக போலிக் அமில மாத்திரையுடன் இரும்புச்சத்து கலந்த கூட்டு மாத்திரையை சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்பகாலம் செல்லச் செல்ல தாய் மற்றும் குழந்தையின் இரத்தத்தில் புதிய இரத்த செல்களின் உற்பத்தி, இரத்தத்தின் அளவு அதிகரித்தல், பிரசவத்தின்போது வெளியேறும் ரத்தத்தை ஈடுசெய்தல் போன்றவற்றால் இரும்புச்சத்தின் தேவை அதிகமாகிவிடுகிறது.

தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைக்கு ஆகாரமாக கொடுக்கும் போது அத்தகைய தாய்ப்பாலில் இரும்புச்சத்தும் குறிப்பிடும்படியாக இருப்பதில்லை. இதனால் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே தன் உடலில் இரும்புச்சத்தினை சேமித்து வைப்பதற்கான தேவை தாயிற்கு வந்துவிடுகிறது. இத்தகைய காரணத்தினாலும் கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்தின் தேவை மிக அதிகமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனை பூர்த்தி செய்வதற்காக கர்ப்பிணிகள் கட்டாயம் எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் நான்காவது மாதத்திலிருந்து போலிக் அமிலத்துடன் இரும்புச் சத்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஏதேனும் மாத்திரைகள் மூலம் அலர்ஜி ஏற்படுமாயின் உடனே மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொண்டு வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தைகள் கருப்பாக பிறப்பார்கள் என காதுபட பேசிச் செல்பவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். நாவல் பழத்தைச் சாப்பிட்டால் குழந்தைகள் கருப்பாக பிறப்பார்கள், குங்குமப் பூவை எடுத்துக் கொண்டால் குழந்தை சிவப்பாக இருப்பார்கள் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தான். மேலை நாட்டினரும்கூட இதே மாத்திரைகளைத்தான் சாப்பிடுகிறார்கள் என்றால் இந்நேரத்தில் அனைவருமே கருப்பாகத்தானே இருந்திருக்க வேண்டும்? ஆதலால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் எதையும் தவறாகப் புரிந்துகொண்டு இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்துவிடக் கூடாது. மேலும் கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவது தொடர்பான சில அடிப்படையான விசயங்களைப் பற்றி நாம் கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.

1. இரும்புச்சத்தானது வயிறு காலியாக இருக்கும் போதுதான் நன்றாக உறிஞ்சிக்கொள்ளும். அதனால் மாத்திரையை உணவைச் சாப்பிடும் முன்போ, பின்போ இரண்டு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

2. இரும்புச்சத்து மாத்திரையை காலியான வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது அல்சரை ஏற்படுத்தும் என்பதால் மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுத்துக்கொள்வதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

3. இரும்புச்சத்து மாத்திரைகள் மசக்கையை அதிகமாக்கும் என்ற காரணத்தினால் முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

4. இரும்புச்சத்து மாத்திரை மலச்சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் அதனுடன் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டுமென்றும், நார்ச்சத்துள்ள உணவுகளை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் சொல்கிறார்கள்.

5. இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிடும்போது அதனால் மலம் கருப்பாக வெளியேறலாம். ஆனால் உங்களுக்கு அல்சர் பிரச்சனையோ, மலச்சிக்கல் மற்றும் மூலம் பற்றிய தொந்தரவோ இல்லாதபட்சத்தில் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.

6. இரும்புச்சத்துக்களை உணவுச் செரிமானப் பகுதிகள் உறிஞ்சுவதற்கு கால்சியம் சத்துகள் தடையாக இருப்பதால் அச்சத்துகள் நிறைந்த பால் மற்றும் முட்டைகளை மாத்திரையைச் சாப்பிடும் முன், பின்பாக இரண்டு மணி நேரத்திற்குள்ளாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

7. டீ, காப்பியில் உள்ள டேனிக் அமிலம் இரும்புச்சத்துக்களை குடலின் வழியே உறிஞ்சிக் கொள்வதைத் தடுப்பதால் டீ, காப்பி சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.

8. இரும்புச்சத்துகளை உறிஞ்சுவதற்கு வைட்டமின்-சி சத்துகள் உதவுவதால் அச்சத்துகள் நிறைந்துள்ள ஆரஞ்சு, லெமன் ஜுஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

9. வைட்டமின்-சி மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைக்கும்போது அதை இரும்புச்சத்து மாத்திரையுடனும், கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் போது அதைத் தனியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் மாத்திரைகள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிக் கொள்வதற்காக தொந்தரவு செய்யுமே.

10. இரத்தம் உற்பத்தியாவதற்குத் தேவையான இரும்புச்சத்து மாமிசத்திலேதான் நிறைந்துள்ளது. இவை குடல்மூலமாக நன்றாகவே உறிஞ்சப்படுகிறது. ஆனால் தாவர உணவிலிருந்து கிடைக்கக்கூடிய இரும்புச்சத்து மெதுவாகவே குடலினால் உறிஞ்சப்படுகிறது. மேலும் நமது உடலின் இரத்தம் உற்பத்தியில் அதன் பங்கும்கூட மிகக்குறைவுதான். ஆதலால் அசைவ உணவின் மூலமாக இரும்புச்சத்தை பெறுவதிலே அதிக கவனத்தைச் செலுத்தலாம்.

ஆக, வாந்தி வந்துவிடும் என்று மாத்திரைகளை சாப்பிடாமல் கீழே போடுவதும், மருத்துவர் கேட்டால் திட்டுவார் என்பதற்காக சரியாகத்தான் சாப்பிடுவதாக மாற்றிச் சொல்வதுமாக நடந்து கொண்டால் அதுவே உங்களையும் உங்களது குழந்தையும் பாதிக்கக்கூடும். நீங்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு மாத்திரையை விழுங்குவீர்களோ அல்லது மாத்திரையைப் போட்டுவிட்டு தண்ணீரை குடிப்பீர்களோ என்பது உங்களது வசதிதான். ஆனால் மருத்துவர் அறிவுறுத்துகிற மாத்திரைகளை மறவாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின்-சி மாத்திரைகள்

20200828_093811.jpg

கர்ப்பிணிகள் வைட்டமின் சி சத்து மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. கர்ப்பவதி இரத்தச்சோகை நோயால் அவதிப்படும்போது பரிந்துரைக்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளுடன் சேர்த்து வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் இரும்புச்சத்தினைக் குடல் நன்றாக உறிஞ்சிக்கொள்வதை ஊக்குவிக்க முடியும்.

கால்சியம் மாத்திரைகள்

20200828_094015.jpg

கர்ப்பவதியின் வயிற்றில் வளருகின்ற சிசுவின் எலும்புகள் மற்றும் பற்களுக்கும், குழந்தையைச் சுமக்கின்ற தாயிற்கும் தேவையான கால்சியம் சத்துகள் நாம் சாப்பிடுகின்ற உணவின் மூலம் முழுவதுமாக பூர்த்தியடைவதில்லை. ஒரு நாளைக்கு கர்ப்பிணிகளுக்குத் தேவையான 1200 மி.கிராம் கால்சியம் சத்தில் இந்தியத் தாய்மார்கள் 400 மி.கிராம் அதாவது தினசரி தேவையில் 30 சதவிகிதத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் பிரசவக காலம் நெருங்க நெருங்க கால்சியம் சத்துக்களின் தேவையும் இன்னும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. எனவேதான் கால்சியம் சத்து மாத்திரைகளை நான்காவது மாதத்தின் ஆரம்பத்திலிருலிருந்தே சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. கூடவே கருத்தரித்த காலத்திலிருந்தே முட்டை, பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள் போன்ற உணவின் மூலமாக கிடைக்கக்கூடிய கால்சியம் சத்திலும் கர்ப்பவதிகள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

கால்சியம் மாத்திரைகளை உணவு சாப்பிட்ட பின்பாக எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்துக்களை குடல் நன்றாக உறிஞ்சிக் கொள்வதற்கு வைட்டமின் சி உதவுவதைப்போல கால்சியம் சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதற்கு வைட்டமின் டி யும் உதவுகிறது. ஆதலால் காலையில் மிதமான சூரியஒளி படுமாறு அன்றாடம் நடைப்பயணம் செல்வது நல்லது. இப்போது அதனைக் கருத்தில் கொண்டே சில மருந்து கம்பெனிகளும் வைட்டமின்-டி உள்ளடக்கிய கால்சியம் சத்து மாத்திரைகளை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளன.

அல்பெண்டசோல் மாத்திரை

20200828_090740.jpg

கர்ப்பிணிகளுக்காக நடத்தப்படும் விழாக்களில் “மருந்து கொடுத்தல்” எனும் வழக்கத்தை சில சமூகத்தில் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அதாவது ஐந்தாவது மாதத்தில் கருவுற்றிருக்கும் மகளைத் தாய்வீட்டிற்கு அழைத்து வந்து தாய்க்கும் பிள்ளைக்கும் நோய்நொடி வராமலிருப்பதற்காக இந்நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். கிராமங்களில் வீட்டைச் சுற்றியே கிடைக்கக்கூடிய வேப்பிலைக் கொழுந்து, கருவேப்பிலை, கொட்டாங்குறிஞ்சி இலை ஆகியவற்றுடன் ஐந்து கோவில் தீர்த்தங்களையும் கொண்டு வந்து துவையலாக அம்மியில் வைத்து நன்றாக அரைத்து அதனை ஐந்து முதல் ஏழு பெரியவர்கள்வரை தங்கள் விரலளவில் கர்ப்பவதிக்கு எடுத்து ஊட்டிவிடுகிறார்கள். இதனால் கர்ப்பவதிகள் நோய்நொடியின்றி குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை நீண்டகாலமாகவே இருக்கிறது. இது சம்பிரதாயமாக, கலாச்சாரமாக, காலங்காலமாக நம் சமூகத்தில் நடக்கின்ற ஒரு நிகழ்வுதான். இதில் ஆய்வு செய்யப்பட வேண்டிய மருத்துவ பின்புலமும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் திறந்தவெளியில் மலம் கழித்தல், காலணி இல்லாமல் நடத்தல், சுகாதாரமற்ற உணவுகளை உண்ணுதல், தன் சுத்தம் பேணாதிருத்தல் போன்றவற்றால் ஆங்கைலோஸ்டோமா, நிகேட்டர் போன்ற கொக்கிப்புழுக்கள் உயிர்வாழ்வதற்கு நம் மனிதக்குடலுக்குள் தஞ்சம் புகுந்து அங்கு பத்தாயிரத்திற்கும் மேலான முட்டைகளை இட்டுவிடுகின்றன. அத்தகைய குறுகிய காலத்திலேயே பல்கிப் பெருகி ஒரு மாநிலத்தையே அங்கு உருவாக்கிவிடுகின்றன.

Hookworm_filariform_A.jpg

ஒரு ஆங்கைலோஸ்டோமா கொக்கிப்புழு ஒரு நாளைக்கு 0.2மில்லி ரத்தத்தை உறிஞ்சிக் கொள்கிறதென்றால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு நாளைக்கு 0.76மி.கி இரும்புச்சத்தை இழக்கிறார்கள். ஒரு நிகேட்டார் கொக்கிப்புழு ஒரு நாளைக்கு 0.03மில்லி ரத்தத்தை உறிஞ்சுவதால் அதன்மூலம் 0.45மி.கி இரும்புச்சத்தை பாதிக்கப்படுவர்கள் இழந்துவிடுகிறார்கள். இதனால் வெகுவிரைவிலே தொற்றுக்கு ஆளானவர்கள் இரத்தசோகை நோயாலும் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

இந்தியாவில் 200 மில்லியன் மக்களும் அதில் 20 சதவிகிதத்திற்கும் மேல் கர்ப்பிணிப் பெண்களும் இத்தகைய குடற்புழுத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்திலே ரத்தசோகை நோயால் அவதிப்படாமலிருக்கவும், குடற்புழு நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கருத்தரித்த நான்காவது மாதத்தில் ஒரு அல்பெண்டசோல் மாத்திரையை சாப்பிடுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இப்படியாக கர்ப்பகாலத்திலே கர்ப்பிணிகளுக்கு போலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் பி, சி சத்து மற்றும் அல்பண்டசோல் மாத்திரைகளை தடுப்பு மருந்துகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். அதைப்போலவே கர்ப்பவதிகள் பிரசவ காலங்களில் இரண ஜன்னி நோயினால் பாதிக்கப்படாமலிருக்க நான்கு வார இடைவெளியில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் இரண்டு டி. டி தடுப்பூசியைப் போடுகிறார்கள். ஏற்கனவே குழந்தையைப் பெற்றெடுத்த பின்பாக அவர்கள் மீண்டும் மூன்று வருடங்களுக்குள்ளாகவே கருத்தரித்துவிட்டால் அதற்கு ஊக்க ஊசியாக ஒரு தடுப்பூசியை மட்டும் போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

கடைசியாக இப்போது நமக்குள்ளாக ஒரு சோம்பேறித்தனம் வரும். சாப்பிட்டாதான் நமக்கு வாந்தி வருதே! பேசாம மாத்திரைய போட்டே சமாளிச்சுடலமா? என்று யோசித்தால் அதுவும்கூட தவறானது தான். இயற்கையாக முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவையும் மருத்துவர் அறிவுறுத்துகிற சத்து மாத்திரைகளையும் சேர்ந்து தவறாமல் எடுத்துக்கொள்ளும் பொழுது கர்ப்பகாலத்தில் தேவைப்படுகின்ற அனைத்து சத்துக்களும் சரியான அளவில் கர்ப்பிணிகளுக்குப் பூர்த்தியாகிவிடுகின்றன.

கர்ப்பவதிகளே, இங்கு விவரிக்கப்பட்ட மருந்துகள் யாவுமே கர்ப்பவதிகளுக்காக பொதுவாக சொல்லப்பட்டவைதான். அவரவர் உடல் தகுதிக்கு ஏற்பவும் கர்ப்பகால பரிசோதனை முடிவுகளை வைத்தும் அவரவர் குடும்ப மகப்பேறு மருத்துவர்கள் சில மருந்துகளை கூடுதலாகவோ குறைவாகவோ கர்ப்பவதிகளுக்குப் பரிந்துரைக்கக்கூடும். ஆக, இவற்றைப் பொதுவான புரிதலுக்கான வழிகாட்டியாய் எடுத்துக் கொண்டு கர்ப்பவதிகள் தங்களது மருத்துவர் அறிவுறுத்துகிற மாத்திரைகளை கவனமாக எடுத்துக் கொள்வதுடன் அவற்றிற்கான விழிப்புணர்வையும் கேட்டு நன்றாகத் தெளிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லாவற்றையும்விட அறியாமைதான் முதல் நோய். விழிப்புணர்வு பெறுதல்தான் முதல் வைத்தியமே.

Reference:

  1. D.C.Dutta’s textbook of obstetrics

  2. William’s obstetrics

  3. Maternal Health Division, Ministry of Health & Family Welfare, Government of India, National Guidelines for Calcium Supplementation During Pregnancy and Lactation

  4. http://www.who.int/nutrition/publications/micronutrients/guidelines/daily_ifa_
    supp_pregnant_women/en/

  5. மருந்து கொடுத்தல்- தகவல், திருமதி ஷோபா, கானாடுகாத்தான்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *