தன் வயிற்றில் கருவானது வளரத் துவங்கிவிட்டதென அம்மாவிற்கு மெதுவாகவே புரிய ஆரம்பிக்கிறது. அதனை அறிந்து கொண்டதும் அம்மாவும், கருவிலுள்ள பிள்ளையுமாக சேர்ந்து கொண்டு ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுக் கொள்கிறார்கள்.

“அம்மா! நான் வளருவதற்கு நீ! உனது உடலையும், உதிரத்தையும் தந்தால் வளர்ந்த பின்னால் உன்னையும் அப்பாவையும் நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்று வயிற்றில் இருக்கும் போதே அம்மாவும் பிள்ளையுமாக சமரசம் செய்து கொள்கிறார்கள்.

பிள்ளைக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என பார்த்துப் பார்த்து செய்யும் அம்மாவுக்கு தன் பிள்ளை கேட்டவுடனே உள்ளம் பூரிப்படைந்து விடுகிறது. உடனே தனது வயிற்றிலுள்ள மற்ற உறுப்புகளையெல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு பிள்ளை வளருவதற்குத் தேவையான இடவசதியை வயிற்றுக்குள் ஏற்பாடு செய்துத் தருகிறாள். பிள்ளை சுகமாகப் படுத்து உறங்குவதற்குத் தண்ணீர் குடத்திலான படுக்கை அமைத்து தனது கர்ப்பப் பையினுள் பத்திரப்படுத்திக் கொள்கிறாள்.

Parvathi Visweswaran: நிலவைக் காட்டி அமுது ...

தாயானவள் பெற்ற பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறூட்டும் அழகே தனிதான். கருவாக இருக்கும்போதே அவளது குழந்தை வளரத் தேவையான போஷாக்குகளை தொப்புள்கொடியின் வழியே தனது இரத்தத்தை அனுப்பி சத்தானவற்றைத் தேர்ந்தெடுத்து ஊட்டுகிறாள்.

பிறந்த குழந்தைகள் தூங்குகின்ற கொஞ்ச நேரத்தில் நாமும் சாப்பிட்டு முடித்துவிட வேண்டுமென்று அவசர அவசரமாக சாப்பிடும் அம்மாக்களோ பிள்ளை அழுகின்ற சத்தம் கேட்டவுடன் கையைக் கழுவிவிட்டு உடனே ஓடிப்போய் பிள்ளையைத் தூக்குவார்கள். பிள்ளைகள் மலம் கழித்திருந்தால் அதை கழுவிவிட்டு அப்படியே மீண்டும் வந்து சாப்பிட ஆரம்பிப்பார்கள். இப்படி பிள்ளையின் மீதான பொங்கி வழியும் கருணையை தாயவள் கருவில் இருக்கும்போதே துவங்கிவிடுகிறாள்.

வயிற்றில் கருவாக வளரும்போதே குழந்தைகள் மலம் கழிப்பதில்லை. அப்படி தண்ணீர் குடத்திற்குள்ளேயே கழித்தார்களென்றால் மூச்சுத்திணறல் வந்துவிடும். பிறந்தவுடனே தான் அவர்கள் முதன்முதலாக பச்சை நிறத்தில் மலத்தை வெளியேற்றுகிறார்கள். ஆனால் சிறுநீரைக் கழிப்பதைப் பொருத்தவரை அப்படியில்லை. எந்நேரமும் அவர்கள் சிறுநீரை தண்ணீர் குடத்தினுள்ளேயே கழிந்தபடியே இருப்பார்கள். அப்படி வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்றுவதற்கு தண்ணீர் குடத்திலிருந்து அதே தொப்புள்கொடியின் வழியே தன் ரத்தத்தின் மூலமாக எடுத்து வந்து அம்மாவானவள் தனது சிறுநீரகம் மற்றும் குடலின் வழியே வெளியேற்றுகின்றாள். கருவாயிருக்கும் போதே தன் உறுப்புகளின் வழியே பிள்ளையின் கழிவுகளை சுத்தம் செய்கிற அவளது பேராண்மை யாருக்குத்தான் வரும்?

பஞ்சுமெத்தை போன்ற கர்ப்பப்பையும் குழந்தைக்கு ஏதும் அடிபடாதவாறு பார்த்துக் கொள்கிறது. தண்ணீர் குடத்தினுள் பத்திரப்படுத்தப்பட்ட பிள்ளையோ தேவைப்படும் போது கைகால்களை அசைத்து நீச்சலடிக்கிறது. அம்மா ஏதாவது கோபமாக பேசித் திட்டிவிட்டால் உடனே எட்டி உதைக்கிறது. வயிற்றைத் தடவிக் கொண்டே அம்மா தன்னை அரவணைத்து கொஞ்சம் பேசிவிட்டால் போதும் உடனே தன் அம்மாவின் மீது பாசம் கொண்டு பிஞ்சு விரல்களால் வயிற்றை மெல்ல வருடிக் கொடுக்கிறது.

கர்ப்பகாலம் நெருங்க நெருங்க கர்ப்பவதி வயிற்றை பெரியதாக வளர்த்துக் கொள்கிறாள். முன்னே தொப்பை போன்று வளருகிற தன் பிள்ளைக்காகத் தனது முதுகுத் தண்டினை வளைத்துக் கொண்டு கூன் போடுகிறாள். முதுகு வலியையும், இடுப்பு வலியையும் குறைப்பதற்காக அவளோ இடுப்பை அகட்டிக் கொண்டு வாத்து மாதிரியாக நடக்கப் பழகிக் கொள்கிறாள்.

No standardised maternity care' in Ireland as C-section rates vary ...

கர்ப்பகாலத்திற்கென்று கூடுதலாக அதிகரிக்கிற பன்னிரெண்டு கிலோ எடையை வேறு அவளது மூட்டுகள் தாங்கி நிற்க வேண்டியிருக்கிறதே! அதனால் தனது எடையுடன் சேர்த்து வயிற்றில் வளரும் பிள்ளையின் எடையினையும் தாங்கிக் கொள்வதற்காக தனது மூட்டுகளைத் தளர்த்திக் கொள்கிறாள். அப்போது மூட்டு ஜவ்வுகளும் மென்மையாகிவிடுவதால் அவளால் ஓரளவு மூட்டு வலியிலிருந்து தப்பித்து பிள்ளையின் எடையைத் தாங்கிக் கொள்ள முடிகிறது.

பிள்ளைக்கு ஏதேனும் ஒன்றென்றால் துடிதுடித்துப் போவாள் தாய். அதுபோலவே தன்னுள் வளரும் பிள்ளைக்கு சரிவர இரத்தம் கிடைப்பதற்காக அவளின் இதயமோ இன்னும் கூடுதலாகத் துடிக்கிறது. இரத்தம் அதிகமாக பிள்ளைக்குச் செல்லும் போது வெறுமனே அனுப்ப முடியுமா? என்று நுரையீரலும் வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆக்சிஜனை கூடுதலாக ரத்தத்தின் வழியே அனுப்புகிறது. இப்படியே மூச்சு வாங்கிக் கொண்டும், இதயம் படபடவென அடித்துக் கொண்டும் இருந்தாலும்கூட அவளது குழந்தைக்காக இவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படியான ஒவ்வொரு விஷயங்களையும் தாயுமானவள் வயிற்றிலுள்ள பிள்ளைக்காக ஆசையோடு பார்த்துப் பார்த்து செய்கிறாள்.

இதுவரை பெண்ணாக இருந்தவள் கர்ப்பிணியான பின்பு தன் உடம்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். உடம்பில் நடக்கின்ற அத்தனைக்கும் மூலக் காரணமே கர்ப்ப காலத்தில் சுரக்கின்ற ஹார்மோன்கள்தான் என்பதை அறியாமல் தவிக்கின்றாள். அதற்கு ‘மயக்கும் மந்திரவாதி’ என்ற அழகிய பெயரை வைத்தால்கூட பொருத்தமாகத்தான் இருக்கும். ஆம், வயிற்றுக்குள்ளாக வளரும் பிள்ளையோ அம்மாவின் மேல் சொக்குப் பொடியைப் போட்டு தங்களின் மீது பித்துப் பிடித்த வண்ணமே இருக்கச் செய்து விடுகிறார்களே! அவளும் அந்த மயக்கதில் சொக்கிப்போய் ‘பிள்ளையே கதி’ என்று தன் பிள்ளைக்காக எதையும் தியாகம் செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறார்கள்.

இந்த ஹார்மோன்கள் அவளது நாவிலுள்ள சுவை மொட்டுகளைக் குழப்பிவிடுகின்றன. இதனால் இதுவரை பிடித்து வந்தவை, பிடிக்காமல் இருந்தவை என ஒவ்வொன்றும் மாறிவிடுகின்றன. அதனால்தான் அவளோ புளிப்பு மாங்காவைக் கேட்கிறாள்; சாம்பலுக்காக அடுப்படிக்கு ஓடுகிறாள்; சிறுபிள்ளை போல் பற்பொடி, எழுதும் குச்சி போன்றவற்றை உண்ணுவதற்காக பித்துப் பிடித்தாற் போல் தேடியலைகிறாள்.

vomiting in pregnancy: கர்ப்பிணி : சோர்வு ...

இப்படி வாய் கேட்டதெல்லாம் ருசிக்க முடியுமா? வயிற்றில் வளரும் பிள்ளைக்காக எதை சாப்பிட்ட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறாள். அதன் மூலம் சத்தான உணவினைச் சாப்பிட்டு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக் கொள்ள அவளோ விரும்புகிறாள்.

ஆனால் பசித்தாலும்கூட கர்ப்ப காலத்தில் குமட்டலும் வாந்தியும் வந்து வாட்டுமே! என்று அவளோ சாப்பிடப் பயப்படுகிறாள். அப்படியே சாப்பிட்டாலும் கணவன் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த அனைத்தும் சாப்பிட்ட மறுகணமே குமட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறது. உடம்பில் இருக்கின்ற நீரும், அத்தியாவசிய சத்துப்பொருட்களும் வாந்தியின் வழியே வெளியேறிவிடுவதால் உடலிலுள்ள சக்தியெல்லாம் இழந்து கர்ப்பவதி அடிக்கடி சோர்ந்து போய் விடுகிறாள்.

கர்ப்பிணியின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்குமே அதிகப்படியான சத்துகள் தேவைப்படுகிறது. இதனால் உடம்பின் மற்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரத்தத்தையும் சேகரித்து வைத்து ஒட்டுமொத்த ரத்தத்தில் 25 சதவிகித ரத்தத்தை தன் பிள்ளை வளருகிற கர்ப்பப்பைக்கு மடைமாற்றி அனுப்புகிறது. இதன் மூலம் அம்மாவின் ஒவ்வொரு உறுப்புகளுமே தங்களுக்கு வேண்டிய ரத்தத்தை குழந்தைக்காக தியாகம் செய்கிறது. இதனால் ஏனைய உறுப்புகளும் மந்தமாகவே செயல்பட்டு கர்ப்பவதியை எப்போதும் சோர்வான நிலையிலேயே வைத்திருக்கிறது.

இப்படியாக கர்ப்பிணியின் உடம்பானது ஒவ்வொரு விசயத்திலும் தன் பிள்ளைக்காக வரிந்து கட்டிக்கொண்டு எதையும் செய்வதற்காகத் துணிந்து நிற்பதைப் பாருங்கள். அன்பானவர்களே! நீங்களுமே கர்ப்பத்தின் இனிய வசந்தகால துவக்கத்திற்கு மனதளவில் மகிழ்ச்சியோடு தயாராகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *