மசக்கை-4 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்): மசக்கையை எதிர்கொள்ளும் மந்திரச்சாவி – டாக்டர் இடங்கர் பாவலன்

 

திரைப்படங்களில் காட்டுவதைப்போல பெண்ணொருவள் கருத்தரித்துவிட்டால் உடனே குமட்டிக் கொண்டு வாந்தியெடுக்கத்தான் வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு சிலருக்கு மசக்கை என்றால் என்ன? என்கிற அளவிலேயே கர்ப்பகாலத்தைக் கடந்து சுலபமாக பிள்ளையும் பெற்றுவிடுவார்கள். ஆனால் வேறு சிலரோ ‘ஹைபேரெமெசிஸ்’ என்கிற தீவிரமான குமட்டல் மற்றும் வாந்தியினால் அவதிப்பட்டு சிரமத்தோடு பிள்ளை பெற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள்.

சிற்பியின் கைப்பட்ட எத்தனையோ சிலைகளில் ஒன்று இன்னொன்றைப் போல இருப்பதில்லை, இல்லையா? ஒரே வயிற்றில் பிறந்த இரட்டையர்களாயினும் அவர்களுக்குள்ளும் சில வேறுபாடுகள் இருக்கத்தானே செய்கிறது. அதைப்போலவே மசக்கையும்கூட ஒவ்வொரு கர்ப்பிணிகளிலும் ஒவ்வொரு விதமான கண்கட்டு வித்தையைக் காட்டி ஆட்டிப் படைக்கத்தான் செய்கிறது. நாமும் மசக்கை வருகிற சமயங்களிலெல்லாம் குரங்கைப் போல குட்டிக் கரணமடித்துப் பார்த்தும் முடியாமல் பலவாறு தவித்தபடி இருக்கிறோம்.

கர்ப்பவதிகளில் ஒருவருக்கு காலையில் குமட்டல் அதிகம் என்றால் இன்னொருவருக்கு மாலையில் வருகிறது. ஒருவருக்கு வெறும் வயிற்றில் வாந்தி என்றால் இன்னொருவருக்கு சாப்பிட்டவுடன் வருகிறது. ஒருவருக்கு வாசனை வந்தால் குமட்டுகிறது என்றால் அடுத்தவருக்கு பார்த்தாலே குமட்டுகிறது. இப்படியாக மசக்கை ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொருவிதமாக பாடாய் படுத்தியெடுக்கத் தானே செய்கிறது. ஆனால் என்ன செய்ய? இதற்கான வைத்தியத்தை கர்ப்பவதியேதான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

மசக்கையென்று வருபவர்களுக்கு மருத்துவமனையில் பொதுவான மருத்துவ அறிவியலின்படி சிகிச்சை செய்யப்படுகிறதே தவிர ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் என்று தனித்தனியே மருத்துவம் அறிவுறுத்தப்படுவது இல்லை. இதற்கு மசக்கை என்பதே ஒரு நோயல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இத்தகைய மசக்கையும் ஒவ்வொரு கர்ப்பவதிக்கும் வெவ்வேறு விதமான வகையில் வெளிப்படுவதால் அதற்கான சிக்கலையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மசக்கையானது கர்ப்பகாலத்தில் உண்டாகின்ற அசௌகரியமான உணர்வுதான் என்றாலும்கூட அதையெல்லாம் சமாளிப்பதற்கென்று கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களுக்கென்று சில சித்து வேலைகளை கைவசம் வைத்திருக்கவே செய்கிறார்கள். ‘அச்’ சென்று தும்மினால் உடனே தலையில் தட்டிக் கொடுப்பதைப் போல, விக்கல் வந்தால் பயமுறுத்தி அதை சரிக்கட்ட முயலுவதைப் போல கர்ப்பவதிகளிடமும் ஏதோ விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதயம் துடிப்பதை எப்போதுமே நாம் உணராதிருப்பதைப் போல அவர்களும் தங்களிடமே இருக்கிற மசக்கையைப் போக்குகிற விசயத்தைப் பற்றி தாங்களே அறியாமல்தான் இருக்கின்றனர்.

கடைகளில் எத்தனையோ ஜோடிக் காதணிகளிருந்தும் நமக்கென்று தேடிப் பார்த்து அவை பொருந்திப் போகும்போது ஏற்படுகிற திருப்தி இருக்கிறதல்லவா! அதைப் போலத்தான் நமது அம்மாக்களிடமும் பாட்டியிடமும் கேட்டால் அவர்களுக்குத் தெரிந்த சில கை வைத்தியங்களைச் சொல்வார்கள். மேலும் சிலவற்றை நம் அன்றாட பழக்க வழக்களிலே இருந்துகூட கண்டு கொள்ள முடியும். இவற்றிலிருந்து நமக்குப் பொருந்திப்போய் திருப்தியளிக்கிற விசயங்களாகத் தேடிப்பார்த்து அவரவர்களுக்கான மசக்கையின் தடுப்பு மருந்துகளை அவர்களே தனியே கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

இக்கட்டான சூழலில் கர்ப்பிணி ...

இந்த மாதிரியான சமயங்களில் மருத்துவர்களின் வேலையென்பது கர்ப்பவதிகள் ஏதேனும் அதிதீவிரமான வாந்தியால் அவதிப்படுகிறார்களா என்று பரிசோதித்து சிகிச்சையளிப்பதும், அப்படியேதுமின்றி சாதாரண குமட்டல்தான் என்கிறபோது அவர்களுக்கு மசக்கையைப் பற்றி விளக்குவதும், அவர்களை எதற்கும் பயப்பட வேண்டாம் என்று ஆசுவாசப்படுத்துவதும் மட்டுமே ஆகும்.

இப்படியாக மருத்துவமனைக்கு வருகிற தாய்மார்களிடம் சகஜமாக உட்கார்ந்து பேசிப் பார்க்கிற போதெல்லாம் அவர்கள் சொல்லுகிற மசக்கையை சரிசெய்ய முயிற்சித்த கதைகள் மிகவும் சுவரஸியமாக இருக்கும். அதிலும் அவர்கள் செய்திருக்கிற குறும்புத்தனத்தை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கும். அதேசமயம் இவர்கள் இப்படியெல்லாமா கஷ்டப்படுகிறார்கள்? என்றபடி கவலைகளும் கூடவே தொற்றிக் கொள்ளும். ஆனால் மசக்கையை கட்டுப்படுத்த கர்ப்பவதிகள் எப்படியெல்லாம் எளிமையான வழிகளை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க ஒருபக்கம் ஆச்சரியமாக இருக்கிறது.

மசக்கையை சரிசெய்கிற இப்படியான எளிமையான விசயங்கள் கர்ப்பிணி ஒருவரிடமிருந்து இன்னொரு கர்ப்பிணிகளுக்குக்கூட சென்று சேருவதில்லை. அதனால்தான் இவர்களெல்லாம் இந்தக் கட்டுரையின் வழியே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு எல்லோரிடமும் மனம்விட்டுப் பேசுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இதன் மூலமாக நீங்களுமே சில விசயங்களை கற்றுக் கொண்டு அவர்கள் சொன்னபடியே மசக்கையை சரிசெய்ய முயற்சிக்கவோ அல்லது இதிலிருந்து வேறொரு வழியினை நீங்களேகூட கண்டுபிடிக்கவோ செய்யலாம் அல்லவா!

1.மலர்விழி, வருசநாடு

இதுதான் எனக்குத் தலைப்பிள்ளை. நான்கு மாசம்தான் ஆகிறது. எனக்கு குமட்டலும் வாந்தியும் இருந்தாலும்கூட அந்த அளவிற்கு மோசம் ஒன்றுமில்லை. ஆனால் மசக்கை பற்றிய உணர்வு வருவதாக தெரிந்தாலே அந்த இடத்தை விட்டே நான் விலகியே ஓடி விடுவேன். அந்த இடமோ அல்லது அந்த இடத்தில் உள்ள ஏதோ ஒன்றுதான் எனக்கு குமட்டலைத் தூண்டி வரவைத்திருக்கும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிடும். அப்படி வேறு இடத்திற்கு சென்றுவிட்டால் அத்தகைய உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து எனக்குச் சரியாகிவதால் மசக்கையை இப்படியே சமாளித்துக் கொள்கிறேன்.

2.ராபியா பானு, காடநேரி

இப்போது ஐந்து மாதம் முடிந்து ஆறாவது மாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. எனக்கு எப்போதாவதுதான் குமட்டல் வந்துபோகும். ஆனாலுமே அந்த சமயங்களில் நான் ஒரேயடியாக வீட்டை விட்டே கொஞ்ச நேரம் வெளியேறி வந்துவிடுவேன். சில சமயங்களில் நல்ல காற்றோட்டமான இடத்தைப் பார்த்து நடையைக் கட்டிவிடுவேன். அந்த நேரத்தில் கிடைக்கிற புத்துணர்வு அளிக்கக்கூடிய மாறுபட்ட இயற்கையான சூழல்தான் என்னை அத்தகைய தொந்தரவுகளில் இருந்து விடுவிப்பதாக இருக்கும். அப்போது என் மனதிற்கும் கொஞ்சம் ஆறுதலைத் தருவதாக இருக்கும்.

3. ஆனந்தி, கங்காபுரம்

இன்றோடு ஐம்பத்தியிரண்டு நாட்கள் ஆகின்றன. எனக்கு இலேசாகத்தான் குமட்டலும் வாந்தியும் வருகிறது. ஆனாலும் அப்படி தோணுகிற போதெல்லாம் உடனே தியானத்திலோ, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியிலோ நான் இறங்கிவிடுவேன். இதனால் என்னுடைய கவனச் சிதறலைக் கட்டுப்படுத்தி ஒருவாறு மசக்கையிலிருந்து என்னால் தப்பித்துவிடவும் முடிகிறது. மற்றபடி எனக்கு மசக்கையால் பெரிதாக பிரச்சனை ஏதுமில்லை.

4.மனோசித்ரா, குளத்துப்பட்டி

இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு ஏழாவது மாதம் துவங்க இருக்கிறது. ஆரம்பத்திலெல்லாம் மசக்கை எனக்கு ரொம்பவுமே கஷ்டத்தைக் கொடுத்தது. அதற்குப் பின்பாக நான் மசக்கை தரும் உணவுகளையோ, பொருட்களையோ பார்ப்பதைத் தவிர்த்தாலே நன்றாக இருப்பதாக உணர ஆரம்பித்தேன். ஒருசில சமயங்களில் இந்த குமட்டலைத் தருகின்ற உணவைப் பற்றி காதுகொடுத்து கேட்காமல் இருப்பதுகூட நல்ல பலனைத் தந்தது. அதைத்தான் இப்போதும் நான் முயற்சி செய்து பார்க்கிறேன். அதிலே எனக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

5.மகேஸ்வரி, ஆவடிக்குளம்

எனக்கு நான்காவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் என்னால் குமட்டலைக் கட்டுப்படுத்தவே முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அதனால் சாப்பாடு மட்டுமல்ல தண்ணீரைக் குடித்தால்கூட குமட்டிக் கொண்டு வந்துவிடும். அதைப் பார்த்து பக்கத்துவீட்டுத் தோழிகள் மற்றும் உறவினர்கள் என்று அவர்களது வீட்டிலே சமைத்த உணவை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தார்கள். இப்படி ஒருவர் வீட்டுச் சாப்பாடு என்றில்லாமல் பல வீடுகளின் உணவைக் கலந்து சாப்பிடம்போது எனக்கு மசக்கையே வராமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இப்போதும்கூட குமட்டல் வருவதாகத் தெரிந்தால் தோழியின் வீட்டிற்குத்தான் சென்று சாப்பிடுவேன். இப்போது அதுவே எனக்கு ஒரு பழக்கமாகிவிட்டது.

கொரோனா வார்டில் இருந்த கர்ப்பிணி ...

6.கணபதி, மல்லாபுரம்

எனக்கு இது இரண்டாவது குழந்தை. முதல் குழந்தைக்கு மசக்கை வந்ததைப் போலவேதான் இந்த இரண்டாவது குழந்தைக்கும் வருகிறது. எனக்குப் பொதுவாக தனியாக இருப்பதாக எண்ணம் வரும்போதெல்லாம் மசக்கை உணர்வு அதிகமாய் வருவதைப்போல இருக்கும். அதனால் எப்போதுமே எதையாவது செய்து கொண்டோ, யாரிடமாவது எதாவது பேசிக்கொண்டோதான் இருப்பேன். அப்படி இருக்கின்ற சமயத்தில் எனக்கு குமட்டலும் வாந்தியுமே சட்டென்று மறந்து போய்விடும். இந்த குழந்தைக்கும் அப்படித்தான் மசக்கையை சமாளித்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி எனக்கு எந்தச் சிரமமுமில்லை.

7.காளீஸ்வரி , ஆத்தூர்

இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறக்கப் போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு மசக்கையென்று பெரிதாக எதுவும் வரவில்லை. நான் நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். நான் சாப்பிடுவதைப் பார்த்துவிட்டு இப்படி சாப்பிட்டால் குண்டாகிவிடப் போகிறாய் பார்! என்று கேலிதான் செய்தார்கள். எங்கள் கிராமத்தில் மாசமாகிவிட்டாலே அம்மா வீட்டிலிருந்து வந்து அழைத்துப் போகிற வழக்கம் இருக்கிறது. அதைத்தான் ‘கஞ்சி கழித்தல்’ என்று சொல்லுவார்கள்.

புதிதாக கல்யாணமாகிப் போனவுடன் புதிய வீட்டுச் சாப்பாடு கர்ப்பவதிக்குச் சேராது அல்லவா! அதனால் தாய்வீட்டிலிருந்து வந்து எங்களை அழைத்துக் கொண்டு போவார்கள். அப்போது எங்களுக்குப் பிடித்த உணவாகப் பார்த்து ஆக்கிப் போட்டு உடம்பைத் தேற்றிவிட்டுத்தான் கணவர் வீட்டில் வந்து விட்டுச் செல்வார்கள்.

அதனால் எங்களுக்கு மசக்கையும் சரியாகிவிடும். அதே சமயத்தில் மசக்கையால் சாப்பிடாமல் மெலிந்துபோய் இருக்கிற உடம்பும் நன்றாகத் தேறிவிடும். ஆனால் கர்ப்பகாலத்தில் ஒரேயொரு வளைகாப்பு விழாவினை கர்ப்பிணிக்கு நடத்தவே வீட்டார்கள் இப்போது ரொம்பவும் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மசக்கை வருகிற மூன்று மாதங்களுக்குள்ளாகவே சாப்பிட்டு உடம்பைத் தேற்றுவதற்காக தாய்வீடு அனுப்பும் கலாச்சாரம் எங்கள் ஊரில் அந்தக் காலத்திலிருந்தே ஒரு வழக்கமாய் இருந்து வருகிறது. இதே மாதிரியே எல்லோருமே செய்ய ஆரம்பித்துவிட்டால் என்னைப் போலவே எல்லா கர்ப்பவதிகளும் கர்ப்ப காலத்தில் வருகிற கஷ்டங்களை மறந்து ரொம்பவுமே சந்தோசமாகத்தான் இருப்பார்கள். இப்படி நான் சொல்வதைக் கேட்டு யாராவது மசக்கை விழாவினைக் கொண்டாடினார்கள் என்றால் எனக்கு இன்னும்கூட சந்தோசம்தான்.

8. மீனாட்சி, கரிசல்குளம்

இன்றோடு மூன்றாவது மாதம் ஆரம்பிக்கிறது. எனக்கு வாந்தியென்றாலே அப்படி குமட்டிக் கொண்டு வரும். எதையாவது வாசனையான ஒன்றை சுவாசித்துவிட்டால் போதும் உடனே வயிற்றிலிருப்பது அப்படியே வெளியே குமட்டிக்கொண்டு வந்துவிடும். எனக்கு ஏனோ கடுகு தாழிக்க வேண்டுமென்றாலே பயமாக இருக்கும். அப்போது வருகிற புகைபோன்ற வாசம் குறைந்தது எனக்கு நாலு மணி நேரமாவது குமட்டிக்கொண்டே இருக்கும்.

அதனால் எப்போதும் எலும்பிச்சைப் பழத்தை சமையல்கட்டில் தயாராவே வைத்திருப்பேன். எனக்கு குமட்டல் வரும்போது எலுமிச்சையை சிலசமயம் நுகர்ந்து பார்த்துக் கொள்வேன். அதனால் இந்த சமையல்கட்டு வாசனையிலிருந்து கொஞ்சமாக தப்பித்துக் கொள்ள முடியும். எனக்கு மட்டுமல்ல மாசமாக இருக்கும் எல்லோருக்குமே சமையல்கட்டு என்பது கர்ப்பகாலத்தில் ஒரு குட்டி நரகம்தான்.

9.லதா லட்சுமி, நாமநாதபுரம்

மசக்கை எப்போதும் எனக்கு வந்தபடியேதான் இருக்கும். இப்போதுகூட தோள்பையில் எலுமிச்சையை பத்திரமாக வைத்திருக்கிறேன். எங்கேனும் செல்லும்போது திடீரென்று வாந்தி வந்துவிட்டால் என்ன செய்வது? உடனே பையிலிருந்து எலும்பிச்சை ஒன்றை எடுத்து கடித்துக் கொள்வேன். அதன் புளிப்புச் சுவையே என்னை மசக்கையிலிருந்து காப்பாற்றிவிடும். சில சமயங்களில் குமட்டலை சமாளிக்க பிஸ்கட், கிஸ்மிஸ் பழம், பூண்டு ஊறுகாய், உப்பு மாங்காய், புளியம்பழம் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

ஒருமுறை எங்கள் வீட்டுக் கோழிக்கு கம்பை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் போதே குமட்டிக் கொண்டு வந்துவிட்டது. அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே கம்பை அள்ளி வாயில் போட்டு மென்றுதிங்க ஆரம்பித்துவிட்டேன். உடனே குமட்டலும் வாந்தியும் வருவது எனக்கு நின்றுவிட்டது. இப்போதெல்லாம் காலையில் கிளம்பி வேலைக்குப் போகும்போது இயற்கை உணவகத்தில் முளைவிட்ட கம்பையும் வாங்கி பைக்குள்ளே வைத்துக் கொள்கிறேன். சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு, குமட்டலுக்கு மருந்தாவும் ஆச்சு.

கர்ப்பிணி பெண்கள் இந்த காயை ...

10.கயல்விழி, பட்டுக்கோட்டை

எனக்கு பிரசவத்தேதி நெருங்கிவிட்டது. ஆனாலும் குமட்டல், வாந்தி வருகிற அந்த நாட்களை நினைத்தால் இப்போதும் பயமாகவே இருக்கிறது. சமையலறைக்குள் போனாலே எனக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பித்துவிடும். அரிசியை அலசிப் போடும்போதே அந்த வாடையால் எனக்கு சட்டென்று குமட்டத் துவங்கிவிடும். அப்படியே சமாளித்துக் கொண்டாலும் சாதம் வெந்துவிட்டதா என்று பருக்கையை எடுத்துப் பார்க்கும்போது மூச்சுமுட்டி ரொம்பவும் கஷ்டமாகிவிடும். இதையெல்லாம் கொஞ்சமும் பொறுத்துக்க முடியாது. ஆனால் சாதம் வடிக்கும்போது அந்த வாசனையில் கட்டாயம் எனக்கு வாந்திதான். எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.

ஒவ்வொரு முறையும் சமைக்கும்போது எனக்கு இதே தலைவலிதான். இதனால் முடிந்தவரையிலும் தோசை, இட்லியென்று செய்தாலும் எத்தனை வேளைக்கு அதையே சாப்பிட முடியும் என்றபடி கணவர் வேறு ஜாடையாக முணங்க ஆரம்பித்துவிடுவார். அப்புறமாக தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் இதைப் பற்றி பேசும் போதுதான் ஒரு ஜடியாவைக் கொடுத்து குக்கரில் சமைக்கச் சொன்னார். அதாவது குக்கரில் சமைப்பதால் வடிக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அதனால் வடிதண்ணீர் வழியே வெளியேறக்கூடிய தண்ணீரில் கரைகின்ற வைட்டமின்களும் கிடைத்துவிடும் என்று வழிகாட்டினார். அப்பாடியா! என்றிருந்தது எனக்கு.

ஆனால் எனக்கு வருத்தமெல்லாம் ஏன் கணவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்பதுதான். மனைவிகளுக்காக அவர்கள் சமையலறைக்கு வந்து உதவுவதும் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் எதனால் குமட்டல் வருகிறது என்று தெரிந்த பின்பாவது அதை தவிர்ப்பதற்காவது கணவர்கள் முயற்சிக்கலாம் அல்லவா! ஒருவேளை என்னுடைய கணவர் மட்டும்தான் இப்படி இருக்கிறாரா என்னவோ? எப்படியோ, இன்னும் சில நாட்களில் குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறேன். அதுக்கப்புறம் யார் கணவர்களைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொள்ளப் போகிறார்கள் (சிரித்துக் கொள்கிறார்)

11. விஜயராணி, செம்பூக்கம்

நான் மாதமாயிருக்கும்போது செய்த சேட்டைகளை நினைத்தால் இப்போதும்கூட எனக்கு வெட்கம் வெட்கமாக வருகிறது. எனக்கு நாக்கு ஊறிக் கொண்டே இருக்கும். பிறந்த குழந்தைக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும்போது கண்டதையும் கடித்துத் திங்க ஆசைப்படுவார்களே அதே போலத்தான் நானும் எதையாவது எடுத்து மேய்ந்து கொண்டிருப்பேன். வழியில் எங்கேயாவது மச்சுவீட்டைப் பார்த்துவிட்டால் உடனே அதன் செம்மண் சுவரைச் சுரண்டியெடுத்து வாயில் போட்டுக் கொள்வன். சிலர் சொல்லுவதைப்போல சாம்பலையும் கரித்துண்டையும்கூட சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று ருசி பார்த்திருக்கிறேன். கடையில் யாருக்கும் தெரியாமல் சாக்பீஸ், பல்பம் வாங்கி மென்று தின்றிருக்கிறேன். ஏன், பற்பொடிகூட வாயில் போட்டு ருசித்திருக்கேன். இப்போது அதையெல்லாம் பற்றிச் சொல்வதை நினைத்தாலே எனக்கு கூச்சமாக இருக்கிறது.

பின்பு எங்கள் ஊருக்கு வருகிற மருத்துவரே என்னை அழைத்து இதைச் சாப்பிடுவதால் வருகிற குடற்புண், குடற்புழு தொற்றுநோய், அதன் தொடர்ச்சியாக மலச்சிக்கல், இரத்தச்சோகை என விலாவாரியாக எடுத்துச் சொன்னார். அதனால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் கேடாகி அவர்கள் பிரசவிப்பதற்கே சிரமப்படுவார்கள் என்று சொன்னவுடன் பயந்துகொண்டு அன்றிலிருந்தே அதை விட்டுவிட்டேன். பின்பு அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி எனக்கு வாய் ஊருகிற போது வெள்ளரி, பீட்ரூட் என்று எதாவது பச்சைக் காய்கறிகளாக அலசி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்குப் பழகிக் கொண்டேன். இப்போது மசக்கையிலிருந்து மீண்டு எட்டாவது மாதத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நல்லபடியாக நான் குழந்தையைப் பெற்றுக் கொள்வேன். ஆனால் கட்டாயம் என்னுடைய குழந்தையை மட்டும் கீழே மண்ணை திண்பதற்கு அனுமதிக்க மாட்டேன்.. (சிரித்துக் கொள்கிறார்)

கர்ப்பவதிகளே! உங்கள் தோழிகள் சொல்வதைக் கேட்டீர்களா? அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் மசக்கையை சரிசெய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தவுடன் நீங்களுமே ஏதாவது சந்தர்ப்பத்தில் இப்படியாக குமட்டலை சரிசெய்ய ஞாபகங்கள் வரலாம். அதுதான் உங்களுக்கான மசக்கையை சரிசெய்ய கிடைத்த மந்திரச்சாவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்ய

கட்டாயமாக இதுவொரு புதிர் விளையாட்டைப் போலத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மசக்கையைத் தூண்டுகிற ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்திக்கும் போதே அந்த விளையாட்டு சூடுபிடிக்கத் துவங்கிவிடுகிறது. இந்த விளையாட்டில் வெற்றித் தோல்வி என்பதே கிடையாது. கர்ப்பமாகிவிட்டாலே நீங்கள் இந்த விளையாட்டை விளையாடித்தான் ஆகவேண்டும். சிலர் உப்புச்சப்பாணியாகவே இருந்துவிட்டு போவதும் உண்டு. சிலர் களத்தில் இறங்கி அடித்து ஆட வேண்டியதும் நடப்பதுண்டு. நீங்கள் கர்ப்பத்தைப் பற்றியும் வயிற்றில் வருகிற பிள்ளையைப் பற்றியும் முழுவதுமாக புரிந்து கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. இந்த மசக்கைக்கான விளையாட்டின் விதியே அதுதான். இந்த விளையாட்டின் சூட்சமங்களை புரிந்து கொள்வதற்காக மருத்துவர்களோ, வயதில் முதிர்ந்தவர்களோ சில அறிவுரைகளை வழக்க முடியும். ஆனாலும் இந்த விளையாட்டை நீங்களேதான் ஆடி ஜெயிக்க வேண்டியிருக்கிறது.

புத்தனாகும் முன்பு சித்தார்த்தனுக்கு எழுந்த வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளுக்கு யாராலுமே பதிலுரைக்க முடியவில்லையே! வாழ்க்கையென்றால் என்னவென்பதை இறுதியில் அவனாகத் தானே தேடிக் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. சித்தார்த்தன் புத்தனாக உருக்கொண்ட ஒரு அரச மரத்தடியைப் போல கர்ப்பவதியாகிய உங்களுக்கும் ஒரு எலும்பிச்சை பழமோ, வெள்ளரிக்காய் துண்டோகூட ஞானபீடமாய் இருக்கக்கூடும், யார் கண்டது?

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-by-dr-idankar-pavalan/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-2/

தொடர் 3ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-3/