மசக்கைக்கால உணவுகள்

மசக்கைக் காலத்தில் உணவுகளைப் பற்றிய புரிதல்தான் கர்ப்பிணிகளுக்கு மிகமிக முக்கியமானது. கர்ப்பவதியாகிய அவளுக்குத் தேவையான சத்துகளை அளிக்கக்கூடிய உணவுகளோடு வயிற்றில் வளருகின்ற அவளுடைய குழந்தையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான உணவுகளாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக மசக்கைக் காலத்தில் தன்னுடைய உடலுக்கு ஒத்துப் போகக்கூடிய உணவுகளாகப் பார்த்து வேறு அவள் கவனமாக சமைத்துச் சாப்பிட வேண்டியிருக்கிறது.

மசக்கைக் காலத்தில் கர்ப்பிணிகள் தங்களுக்கு அன்றாடம் பழக்கப்பட்டுப்போன உணவுகளை மிகவும் எளிமையான வகையில் பிடித்தபடி சமைத்துச் சாப்பிட்டாலும்கூட உணவு மருத்துவத்தின் சில பொதுவான மருத்துவ அறிவியலையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமது தமிழ் மரபின் உணவுக் கலாச்சாரத்தில் வகை வகையான உணவுகள் கொட்டிக் கிடக்கின்ற போது அவற்றில் எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும், அவற்றில் எந்த மாதிரியான உணவில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பது போன்ற சில விசயங்களையும் நாம் புரிந்து கொள்ள கொண்டியிருக்கிறது. அதற்காக நாம் சில உணவுகள் தொடர்பான மருத்துவ ரீதியான விளங்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்ப்ப காலத்தின் உணவு வகைகள் முதல் ...

திரவ உணவுகள்

மசக்கைக் காலத்தில் பொதுவாக நாம் மென்று முழுங்கக்கூடிய திடஉணவுகளை விட பற்களுக்கு அதிக வேலை கொடுக்காத திரவ உணவுகளாகப் பார்த்து தேர்வு செய்து கொள்வது நல்லது. இதனால் மென்று சுவைத்து விழுங்குவதற்கான வாய்ப்புகள் குறைவதால் நாக்கிலுள்ள சுவை நரம்புகள் அதிகமாகத் தூண்டப்படாமல் கர்ப்பிணிகளால் கூடுதலாகச் சாப்பிட்டுவிட முடிகிறது. உதரணமாக, சாதம் வடிப்பதைவிட தானியக் கஞ்சியாக செய்து சாப்பிடும்போது அவை சாப்பிடுவதற்கு எளிமையாக இருப்பதோடு முன்னதைவிட சாப்பாடும் வயிற்றுக்குள் கூடுதலாக இறங்குகிறது.

வாசனை குறைவான உணவுகள்

கர்ப்பகாலத் துவங்கத்தில் வாசனைகள் தொடர்பான உணர்வுகள் வெகு அமர்க்களமாக இருக்கும். கர்ப்பகாலத்தின் துவக்கத்தில்தான் குழந்தையின் மிகமுக்கியமான உள்ளுறுப்புகள் கர்ப்பப்பையினுள் வளரத் துவங்கியிருக்கும். அதனால் கருத்தரித்தவுடனே உடலில் அதிகமாகின்ற ஹார்மோன்களால் வாசனை உணர்வுகள் அதிகமாக தூண்டப்பட்டு அதன் மூலம் அம்மாவை கவனமாக உணவுகளைத் தேர்வு செய்யும்படி எச்சரிக்கை செய்த வண்ணமாக இருக்கின்றன.

இதனால் கமகமவென்று வாசனைகள் மூக்கைத் துளைக்கிற சில உணவுகள் மசக்கைக் காலத்தில் குமட்டலை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆகையால் வாசனைக் குறைவான உணவுகளாகத் தேர்வு செய்து நாம் சாப்பிடுவதே நல்லது. அதாவது எலும்பிச்சைச் சாறு போன்ற பழச்சாறுகளைக் குடிக்கையில் வாசம் குறைவாக இருக்கும். ஆனால் அவை குடிப்பதற்கு இதமாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும் அல்லவா! அதைப்போலவே நாம் ஒவ்வொன்றையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

மிதமான குளிர் உணவுகள்

சூடாக ஆவி பறக்கத் தயாராகிற பலகாரங்களெல்லாம் காற்றில் வாசனையை அதிகம் வெளியிடுவதாக இருப்பதால் மிதமான அளவில் குளிர்ச்சியுடைய உணவுகளாக சளி பிடிக்காதவாறு எடுத்துக் கொள்வதன் மூலம் குமட்டலைத் தவிர்க்க முடியும். உதாரணமாக சூடான பாலைக் குடிக்கிறபோது குமட்டுகிறது என்றால் அதை ஆற வைத்த பின்பாக குடிக்கிறபோது முன்னதைப்போல குமட்டல் வருவதில்லை. ஒருசில கர்ப்பவதிகள் குமட்டல் வருகையில் ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு சுவைப்பதின் மூலம் அதைக் கட்டுபடுத்துவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

கொழுப்புக் குறைவான உணவுகள்

கர்ப்பகாலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் இரைப்பையில் செரிமானம் செய்யக்கூடிய ஆசிட் குறைவாகவே சுரக்கிறது. அங்கு செரிமான உணவுகளையெல்லாம் குடலும்கூட மந்தமாகவே வெளியேத் தள்ளுகிறது. சாதாரணமாகவே வயிற்றில் செரிமானமாவதற்கு தாமதமாகும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கர்ப்பகாலத்தில் செரிப்பதற்கு மேலும் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் மசக்கைக் காலங்களில் முடிந்த அளவில் எண்ணெய் பலகாரங்களை நம் அன்றாட உணவில் குறைத்துக் கொள்வது நல்லது.

கர்ப்பத்தின் முதல் மூன்று ...

நார்ச்சத்தான உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள் எளிதில் செரிமானமாகிவிடக் கூடியதாக இருப்பதால் கர்ப்பகால குடல்களின் மந்தமான வேலையால் ஏற்படுகிற மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து இவை பாதுகாக்கின்றன. இதனால் மசக்கை உணர்வுகள் தூண்டப்படுவதும்கூட குறைகிறது. எனவே மசக்கைக்கால உணவுகளில் நார்ச்சத்துகள் நிறைந்தவைகளாக இருக்குமாறு கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவை காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் அதிகமாக இருப்பதால் இவற்றை கணிசமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

சரிவிகித உணவுகள்

சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள் ஆகியவை ஏதாவதொரு வகையில் கர்ப்பிணிகளின் அன்றாட ஆரோக்கிய உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். உணவிலுள்ள வைட்டமின் பி-6 இயல்பாகவே குமட்டலைத் தடுக்கக்கூடிய ஆற்றுலுடையதாக இருக்கிறது.

சமைப்பதிலும் சாப்பிடுவதிலும் மாற்றம்

தினசரி சமைக்கின்ற உணவுகளையே கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சமைத்து சாப்பிடுப் பார்க்கலாம். அரிசி மாவு ஒன்று தான். ஆனால் அதையே நமக்குப் பிடித்தவாறு இட்லி அல்லது புட்டாக அவித்தோ, தோசையாகச் சுட்டோ வித்தியாசப்படுத்தி சாப்பிடுகிறோம் அல்லவா! அதைப்போலவே சாப்பிடுகிற உணவில் ஒன்று பிடிக்கவில்லையென்றால் அதை வைத்தே இன்னொன்றாகத் தயார் செய்து சாப்பிட்டுப் பார்க்கலாம். எப்போதுமே ஒரே மாதிரியான உணவாக இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் விதவிதமாக சமைத்துச் சாப்பிடலாம்.

ஒருநாள் அகத்திக்கீரை என்றால் மறுநாள் தண்டுக்கீரை என்று சமைப்பதிலும், சாப்பிடுவதிலும் வித்தியாசம் கொண்டுவரலாம். அதேபோல ஒரு கீரையை இன்று குழம்பாக வைத்தால் நாளை பொரியலாக வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் மசக்கைக் காலத்தில் எது நம் உடம்பிற்கு ஏற்றுக் கொள்கிறது என்று கண்டறிவதற்கும் வெவ்வேறு வகையான ருசிகளை இரசித்துச் சாப்பிடுவதற்கும் உதவியாக இருக்கும். சிலருக்கு மீன் குழம்பு பிடிக்காது ஆனால் அதைப் பொரித்து வைத்தால் சாப்பிடுவார்கள். சிலருக்கு தயிர் பிடிக்காது ஆனால் காரமாக மோர் வைத்துக் கொடுத்தால் நன்றாக குடிப்பார்கள். இப்படியாக உணவுகளை நாம் தயார் செய்து கொள்ளலாம்.

கர்ப்ப கால உணவுமுறை | Dinamalar

பழக்கப்பட்ட உணவுகள்

எப்போதுமே நமது உடம்பிற்குச் சேராத உணவுகள் என்று சில இருக்கும். எவ்வளவுதான் சிறந்த உணவாகவே இருந்தாலும், உலகின் நம்பர் ஒன் சமையல்காரரே வந்து சமைத்துக் கொடுத்தாலும் அது நமக்குப் பிடிக்கவே பிடிக்காது. அந்த மாதிரியான உணவுகளை மசக்கைக் காலத்தில் புதிதாக சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று முயற்சிக்காமல் இருந்துவிடுவதே நல்லது. நமக்கு நன்கு சாப்பிட்டுப் பழக்கமாகிப் போன உணவுகளையே முயற்சித்துப் பார்க்க வேண்டும். அத்தகைய உணவுகளெல்லாம் சுத்தமானதாகவும், சத்தானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருப்பது அவசியம்.

ஆக, கர்ப்பவதிகளே! மசக்கைக் காலத்தில் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் அறிவியல் விசயத்தில் பலவாறு முயற்சி செய்ததைப்போல நாமும் சாப்பாட்டு விசயத்தில் பல்வேறு முயற்சிகளாகச் செய்து பார்த்து ஒரு மசக்கைக்கால சாப்பாட்டு விஞ்ஞானியாக ஆகவிட வேண்டியதுதான். உடனே அதற்கான நோபல் பரிசுகளை யார் கொடுப்பார்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் உங்களிடமிருந்து பிறந்து உங்களின் கரங்களிலேயே தவழப் போகிற குழந்தைகள்தானே எல்லா தாய்மார்களுக்கும் கிடைத்தற்கரிய நோபல் பரிசுகள்!

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-by-dr-idankar-pavalan/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-2/

தொடர் 3ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-3/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-4/

தொடர் 5ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-5/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *