மசக்கை-7 (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்

 

உணவுகளைப் புரிந்து கொள்ளுதல்

நாம் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பல உணவுகள் தரமானதாக இல்லை. கடைகளில் விற்கப்படுகின்ற உணவுகள் யாவும் அதிக நாள் கெடாமல் இருக்கும் வகையில் பதப்படுத்தப்பட்டு பல வண்ணங்களாக கவர்ச்சியூட்டுவதாகவும், சுவையூட்டப்பட்டதாகவும் இருக்கிறது. இத்தகைய சூழலில் நாம் இதுவரை சாப்பிட்டுக் கொண்டிருந்த துரித உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது.

நமது அன்றாட உணவுகளும்கூட செயற்கையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என உற்பத்தி செய்யப்படுவதால் இவையெல்லாம் ஆரோக்கியத்தைத் தருவதை விட்டுவிட்டு நோயைத் தருவதாகவே இருக்கின்றன. இவை அத்தனையையும் கடந்து இயற்கையான உணவுகளாகத் தேடிப்பிடித்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று இருக்கின்றோம்.

நமக்கு அறிவுறுத்தப்படுகின்ற உணவுப்பட்டியல் யாவும் வசதியானவர்களுக்கானதாக மட்டுமல்லாமல் அடித்தட்டு மக்களுக்காகவும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையிருப்பவர்களுக்காகவும் இருக்க வேண்டுமென்கின்ற அவசியத்தை இன்று நாம் உணர்ந்துள்ளோம். கர்ப்பிணிகளுக்கென்று அறிவுறுத்தப்படும் உணவுகள் யாவும் உள்ளூரிலேயே எளிதில் கிடைத்துவிடக்கூடியதாகவும், விலை மலிவானதாகவும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும், அவர்களின் கலாச்சார முறைக்கு ஒத்துவரக் கூடியதாகவும், சைவம் மற்றும் அசைவப் பிரியர்களுக்கு ஏற்றதாக பாரம்பரியத்துடன்கூடிய சத்தான உணவுகளை உள்ளடக்கிய நிறைவான பட்டியலாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு ...

இன்றும் நமக்குத் தெரிந்த உறவினர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உடனே நமக்கு ஞாபகம் வருவது ஆரஞ்சு, ஆப்பிள், ஹார்லிக்ஸ் மட்டுமே. தினக்கூலி வேலை செய்பவர்கள்கூட இத்தகைய ஆடம்பரக் கலாச்சார கட்டாயத்தின் காரணமாக வட்டிக்குப் பணத்தை பெற்று மேலே சொன்ன பொருட்களுடன் மருத்துவமனைக்கு உடல்நலம் விசாரிக்கச் செல்பவர்களாக இருக்கிறார்கள். நமது ஊர்த் தெருக்களில் விற்றுத் திரிந்த கொய்யாப்பழங்கள், நெல்லிக்கனிகளெல்லாம் சத்தான உணவுகள்தான் என்பதையே நாம் மறந்துவிட்டோம். ஆப்பிளை விட கொய்யாவிலும், ஆரஞ்சுப் பழத்தைவிட நெல்லிக்கனியிலும் பலமடங்கு சத்துகள் நிறைந்திருப்பதைகூட ஏனோ இன்னமும் நாம் புரிந்துகொண்டபாடில்லை.

வீட்டில் வெறுமனே தயிர் சாதத்தைக் கிண்டி வைத்தால் அதை நாம் நக்கலாகப் பார்க்கிறோம். அதுவே கேரட், கொத்துமல்லிச்செடி தூவி முந்திரியை உதிர்த்துப் போட்டு கடைகளில் ஜம்மென்று அலங்காரப்படுத்திக் கொடுத்தால் அதே தயிர்சாதத்தைப் பெருமையோடு சாப்பிடுகிறோம். இப்படித்தான் நாம் சாப்பிடும் உணவில் கூட ஆடம்பரத்தினைக் கொண்டு வந்து சத்தான எளிய உணவுகளை ஏளனமாகவும் சத்துக்களே இல்லாத வெறுமனே அலங்காரப்படுத்தப்பட்ட உணவுகளைக் கௌரவமாகவும் பார்க்கின்றோம். இதன் எதிர்வினையாகத்தான் இன்று நாம் பலவித நோய்களை சந்தித்தபடி  இருக்கிறோம்.

விலை அதிகமாக இருந்தால்தான் அவை சத்தான உணவாக இருக்கும் என்ற எண்ணம் நம் மனங்களில் மிக ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. பூங்காக்களில் நடைபயணம் செல்கிறவர்களுக்கென்றே வெளியே விற்கப்படுகிற சுண்டல், பாசிப் பயறுகளைவிடவா சத்தான உணவுகள் நமக்கு வேண்டும். இன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கண்டால் ஒவ்வொருவருக்கும் ஒரு உணவியல் நிபுணர் தனியாகத் தேவைப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனாலும் நம்மால் முடிந்தவரை நம் வாழ்க்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு நாம் கொஞ்சமாவது சில முயற்சிகளைச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

Pregnancy Diet and Nutrition - Words Wagon

நமக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் ஒரே உணவிலிருந்து பெற முடியாது என்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்குத் தேவையான ஆற்றல் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு, வைட்டமின், தாது உப்புகள் மற்றும் நீரிலிருந்தே கிடைக்கிறது. ஆனால் இவையனைத்தையும் சரியான விகிதத்தில் எந்தக் குறைபாடுமின்றி எப்படி எடுத்துக் கொள்வது என்பதைப் பற்றிய முடிவிற்கு நாம் வரவேண்டியுள்ளது.

நாம் இன்றுவரை சாப்பிட்டு வருகின்ற உணவுமுறையே நமக்கு ஒரு சிறந்த உதாரணம்தான். சாதம் அனைத்தும் மாவுச் சத்து நிறைந்ததாக உள்ளது. அதில் ஊற்றப்படும் சாம்பாரானது பருப்பு மற்றும் காய்கறிகளுடன் புரதச் சத்து நிறைந்ததாக இருக்கிறது. எண்ணெயில் பொறிக்கப்படும் கூட்டுப்பொரியல் கொழுப்புச் சத்துடையதாக உள்ளது. தயிர், அப்பளம், ஊறுகாய் போன்றவை தாது உப்புகளையும், மிளகு ரசம், காய்கறிகள், பழங்களெல்லாம் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. தண்ணீரும் சரியான அளவில் அருந்துவதால் அன்றாடம் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நாம் சாப்பிடுகிற உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகிறது.

ஆனால் அதே உணவினை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சுகர், பிரஷர் என்று நோய்கள் வீடுதேடி வந்துவிடுகிறது. இதன்மூலம் உணவினைச் சரியாக எடுத்துக்கொண்டாலும் ஒரு நாளைக்குச் சாப்பிட வேண்டிய அளவிலும், அதன் தரத்திலும் கவனம் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு அதிகாலை நேரத்திலும் வெறும் வயிற்றிலுமே மசக்கை உணர்வு அதிகமாக வருகிறது. மேலும் கர்ப்பகாலத்தில் அல்சர் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருப்பதால் இவை அனைத்திலும் இருந்து தப்பிப்பதற்காக காலை உணவினை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலோ, வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டே கணவரையும் குழந்தைகளையும் கிளப்புகிற பதட்டத்திலோ நேரத்திற்குச் சாப்பிடாமல் காலை உணவினைத் தள்ளிப்போட்டால் பிரச்சனைகள் சீக்கிரமே உங்களைத் தேடி ஓடி வந்துவிடும்.

COVID-19: What Pregnant Women Need to Know | Community Health Network

நாம் ஆசைப்பட்டுச் சாப்பிடுகிற துரித உணவுகளான பப்ஸ், நூடுல்ஸ், கேக், பானிப்பூரி, பிரைய்டு ரைஸ், பரோட்டா, சேவு, மிக்சர், இனிப்புகள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். நாம் நொறுக்குத்தீனிகளைக் கூட இயற்கையான முறையில் கொண்டுவர முடியும். நறுக்கி வைத்த பச்சைக் காய்கறிகள், புத்தம் புதிய பழங்கள், அவித்த  பயறுகள், முளைகட்டிய தானியங்கள் என இயற்கையில் கிடைப்பவற்றை நொறுக்குத் தீனிகளாக மாற்றிக் கொள்ளலாம். பச்சை கொய்யா, மஞ்சள் மாம்பழம், கருப்புத் திராட்சை, சிவப்பு மாதுளை, வெள்ளைத் தேங்காய் என எல்லாவற்றையும் பல வண்ணங்களில் கலந்து வைத்து கண்குளிரச் சாப்பிடலாம். அதேபோல் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் கர்ப்பிணிகளுக்கென்று இலவசமாக கொடுக்கப்படுகிற சத்து மாவுகளையும் வாங்கி வந்து உருண்டைகளாகச் செய்து சாப்பிடலாம்.

சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களில் சத்துகள் ஏதுமில்லை என்பதுடன் அவை அல்சரையும் துரிதப்படுத்தும் என்கிற காரணத்தால் கர்ப்பகாலத்தில் அதனைக் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக நெல்லிச்சாறு, லெமன் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றைப் பழங்களாக வாங்கிவந்து குளிரூட்டப்படாத சுத்தமான தண்ணீரில் நீங்களாகவே ஜூஸ் செய்து குடிக்கலாம். இளநீர், காய்கறி சூப் மற்றும் எளிமையான வீட்டு குடிபானங்களான சோறு வடித்த தண்ணீர், பருப்பு கடைந்த நீர், கீரைத் தண்ணீர், தானியக்கஞ்சி போன்றவற்றையும் செய்து அருந்தலாம்.

டீ, காப்பிக்குப் பதிலாக கால்சியம் சத்து கிடைப்பதற்கு பசும்பாலினைக் காய்ச்சிக் குடிக்கலாம். மூலிகை டீ அல்லது சூப்புகள் வைத்தும் அருந்தலாம். நாம் உபயோகப்படுத்தும் சர்க்கரைக்குப் பதிலாக இரும்புச் சத்து நிறைந்த வெல்லம், கருப்பட்டியை உபயோகப்படுத்தலாம். எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக பச்சையாகவே உண்ணக்கூடிய கேரட், வெள்ளரி, பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகளையோ, முளைக்க வைத்த தானியங்களையோ அழகழகான வடிவங்களில் நறுக்கி வைத்து உண்ணலாம்.

15 Best Foods To Eat When You're Pregnant – Kayla Itsines

சாலையோரங்களில் விற்கிற தரமில்லாத எண்ணெயில் செய்யப்படுகிற நூடுல்ஸ், பரோட்டா போன்றவற்றை சாப்பிடுவதையெல்லாம் நாம் பேஷனாக எண்ணிக்கொண்டு கம்மங்கூழ் குடிப்பதை ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்தால் இறுதியில் நஷ்டப்படப்போவது என்னமோ நாம்தான்.

மேலும் இப்போதெல்லாம் இயற்கை உணவகங்களில் காய்கறி சூப்புகள், பருத்திப்பால் பாயாசம், உளுந்தங்களி, தானிய கேக்குகள், நவதானியக் கொழுக்கட்டைகள், கம்மங்கூழ், கேப்பை ரொட்டி, கேப்பை புட்டுகள் என விதவிதமான உணவுகளைச் செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் ஓரக்கண்ணால் பார்த்து இரசிப்பதோடு நிற்காமல் அன்றாட உணவுப்பட்டியிலிலும் கொண்டு வந்து எல்லாவற்றையும் ருசித்து ஜமாய்க்க வேண்டாமா!

தொடர் 1ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-by-dr-idankar-pavalan/

தொடர் 2ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-2/

தொடர் 3ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-3/

தொடர் 4ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-4/

தொடர் 5ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-5/

தொடர் 6ஐ வாசிக்க 

https://bookday.in/masakkai-medical-series-for-pregnant-women-6/