நூல் அறிமுகம்: “இயற்கைக்குத் திரும்பும் பாதை” – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: “இயற்கைக்குத் திரும்பும் பாதை” – பா. அசோக்குமார்



“இயற்கைக்குத் திரும்பும் பாதை”
மசானபு ஃபுகோகா
தமிழில்: வெ. ஜீவானந்தம்
இயல்வாகை பதிப்பகம்
பக்கங்கள் : 150
₹. 140

இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் சூழலியல் சார்ந்த புத்தகம் குறித்த தேடலின் போது புத்தக விற்பனையாளரால் பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களில் யான் தெரிவு செய்த புத்தகமே இது. சுற்றுச்சூழல் தினம் அன்றே இந்நூல் குறித்த ஞாபகம் வந்து வாசிக்கத் தொடங்கினேன். இவ்வளவு காலம் வாசிக்க மறந்ததை நினைத்து நானே வெட்கும் நிலையிலேயே இந்நூலை வாசித்து முடித்தேன்.

” இயற்கை விவசாயம்” குறித்து இதுகாறும் வரை யான் கொண்டிருந்த மாயபிம்பத்தை பிரிதொரு கோணத்தில் இந்நூல் சீர்தூக்கி தெளிவடைய முனைந்துள்ளது என்பதே உண்மை. ” ஒற்றை வைக்கோல் புரட்சி” என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய எழுத்தாளர் ” மசானபு ஃபுகோகா” என்பது மட்டுமே யான் அறிந்த தகவல். ஆனால் இந்நூலை படிக்க படிக்க அவரின் உழைப்பையும்(?) பயணங்களையும் அனுபவ பகிர்வுகளையும் அறிய அறிய பெருவியப்பில் ஆழ்ந்து இன்னும் மீளாமலே மிதந்து கொண்டிருக்கிறேன்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பயிர் பற்றிய சுங்கத் துறையில் பணியாற்றி ‘தாவர நோய் மூலம்’ குறித்த ஆய்வில் நுண்நோக்கியில் காலம் கழித்தவர், தனக்குள் உண்டான மனமாற்றம் மூலமே இயற்கை விவசாயம் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். அதன்பின் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் சோதனைகளும் ஏச்சு பேச்சுகளும் சங்கடங்களும் ஏராளம்; ஏராளம். அத்தனையும் கடந்து பின்னர் உலக நாடுகளுக்கு குறிப்பாக மேலை நாடுகளுக்கெல்லாம் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கங்களை நிகழ்த்தி தெளிவுபடுத்தும் மகத்தான சாதனை படைத்துள்ளார் என்பதை அறியும்போது மிகுந்த பெருமிதமே உண்டாகிறது.

இயற்கையை நாம் அணுகும் முறையில் உண்டான போலித்தோற்றத்தை கேள்விக்குள்ளாக்குவதில் தொடங்கும் கட்டுரை இயற்கைக்கும் கடவுளுக்குமான தத்துவார்த்த முறையில் பயணித்து நம்மைத் தெளிவுபடுத்தும் வண்ணம் தொடர்ந்து பயணிக்கிறது. இயற்கை என்பது என்ன? என்பதில் ஆரம்பித்து நம்மை கைப்பிடித்து அழைத்துக் கொண்டே தான் சென்ற இடங்(நாடு) களுக்கெல்லாம் நம்மையும் அழைத்துச் சென்று அவருடைய கண்களில் இயற்கையையும் விவசாயத்தையும் உணவு முறைகளையும் வேறுபடுத்திக் காட்டி அறிந்து கொள்ள உதவியுள்ளார் எழுத்தாளர் அவர்கள்.



ஜப்பானுக்கும் ஐரோப்பா , அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான காலநிலை, இயற்கை, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் வேறுபாடுகளை சுட்டிக் காட்டி அவைகளுக்கிடையே நிகழும் வியாபாரப் போட்டிகளையும் மிக அழுத்தம் திருத்தமாக தெளிவுபடுத்த முனைந்துள்ளார். அதிலும் குறிப்பாக மேலை நாடுகளைப் பார்த்து ஜப்பான் மேற்கத்திய கலாச்சாரத்தில் உணவு முறைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை சாடுவதிலும் எவ்வித சமசரமும் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது…

இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நம்மிடையே இனம்புரியாத ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியன என்பதே நிதர்சனம். ஆயுதப் போட்டிக்கு இணையாக விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி போட்டியை ஒப்பிட்டு கூறியிருப்பது முதலில் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகளாக தெரிந்தாலும் அவர் கூறியுள்ள தரவுகளும் எழுப்பும் கேள்விகளும் அவையாவும் மெய்தானே என்று நமது புருவத்தை உயர்த்தி சிந்திக்க வைப்பதாகவே உள்ளன…

வெளிநாட்டு பயணங்களில் நாம் பார்க்கும் பார்வையில் காணாமல் செல்லும் இடங்களிலெல்லாம் அங்குள்ள மண்ணையும், தாவரங்களையும் பறவைகளையும் பூச்சிகளையுமே கண்டும் ரசித்தும் கவனித்தும் அவர் உதிர்க்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ரத்தினங்களே. இதனால் அவர் எதிர்கொண்ட விவாதங்களை மிக நுட்பமாக விவரித்த பாங்கு பாராட்டுதலுக்குரியது. அவருடைய பேட்டியில் உள்ள கேள்விகளும் பதில்களும் சற்று சிக்கலான புரிதலாகவே என்னுள் உள்ள போதிலும் அதிலுள்ள மையச்சரடு மிக அவசியமானதே…

படித்து வியந்த சில கருத்துக்கள்:

# விவசாயம் பற்றி படித்தறியாமல் ஒருவர் அனுபவம், ஈடுபாடு கொண்டு இயற்கை வேளாண்மை செய்ய முடியும்.

# ஒரு குழந்தை விவசாயத்தை அறிய தாவரவியல் தேவையில்லை. பசுந்தாள் உரமாகும் என்பதை அறிந்து கொண்டால் போதும்.

# இயற்கை விவசாயம் என்பது குழந்தையின் அறியாமை போன்று தானாகக் கற்று, தானாகவே விளைவிப்பது.

# மண்ணில் கால் வைப்பதும், மண்ணைத் தொடுவதும் ஆரோக்கியமற்றது என்ற மனநிலை வளர்க்கப்படுகிறது.

# உழவில்லாத, ரசாயனமில்லாத, உழைப்பில்லாத, மகிழ்ச்சியான விவசாயமே என் லட்சியம்.

# காத்திருக்கும் கொக்குக்கு அந்த ஒற்றை மீனே உலகம். காலம் இல்லாமல் போகிறது காத்திருக்கும் கொக்கிற்கு. இயற்கை அறிதல், இயற்கையை உணர்தல் ஓர் பேரனுபவம். இதைப் ‘பசுமை உணர்வு’ என்போம்.

# மனிதத் தேவைக்கான உணவை குறைவான உழைப்பில் பெறுவதே இயற்கை வேளாண்மை.

# எளிமை, நிறைவு, கவிதை நிறைந்த வாழ்வு சொர்க்கம். வாழ்வின் சூட்டிலிருந்து தப்பித்தல் சொர்க்கம்.

# மனிதனும், பெரிய கால்நடைகளும் மண்ணின் வளத்தின் எதிரிகளே.



# எதை விதைப்பது, எப்போது விதைப்பது இதை அறிவதுதான் இயற்கை விவசாயம்.

# மண்ணுக்கேற்ற விதை எவை என்பதை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். இது நம்பிக்கையற்ற நிலத்தில் நம்பிக்கை விதைப்பதாகும்.

# வறண்ட புல்வெளி என்றபோதும் நிச்சயம் அதனடியில் நிலத்தடிநீர் இருக்கும் என்று உறுதியாக்கப்பட்டது.

# குருவி தன்னைச் சுற்றியுள்ள புற்களின் தானியத்தைக் கொத்தித் தின்று வாழ்வது போல், நீங்களும் எளிமையாக வாழுங்கள்.

# உடலுடன் மனதுடன் ஆன்மாவும் இணையாவிட்டால் இயற்கை விவசாயமும் மற்றுமொரு மாற்று காசு சம்பாதிக்கும் முயற்சியாகவே முடிந்துவிடும்

# ஒரு சாமுராயின் வாள் வீச்சும், விவசாயின் புல்வெட்டும் வீச்சரிவாளின் வீச்சும் ஒன்று போலவே இருக்கும்.

# வெறும் வைக்கோலை வயலில் தூவிவிட்டால் போதும், உரமிடத் தேவையில்லை என்பதை அறிய எனக்கு 30 ஆண்டுகளானது.

மேற்கூறியவை போல் ஏராளமான தகவல்களும் துணுக்குகளும் இக்கட்டுரைகள் முழுவதும் விரவியுள்ளன. இடையிடையே வரும் கவிதைகள் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்து சிந்தனையை கிளரச் செய்வதாகவே உள்ளன. இவரின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” நூலை விரைவில் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே உண்டாகியுள்ளது.

தனது பயணம் சார்ந்த கட்டுரைகளே இந்நூலில் அதிகமாக இருப்பினும் ஒரு பத்திரிக்கையில் வெளிவந்ததாக குறிப்பிடும் கட்டுரை மிக மிக நுட்பமானதே. தமிழாக்கத்தில் சில தடுமாற்றங்கள் இருப்பினும் படிப்பதற்கு சுவாரஸ்யமான அனுபவமாகவே உள்ளன. கட்டுரைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உணர்வும் மேலிடுகிறது. காலத்தை (நிகழுந்த ஆண்டுகளை) கவனத்தில் கொள்ளாததால் அப்படி தோன்றியிருக்கக் கூடுமென எண்ணுகிறேன்.

அருமையான நூலை பதிப்பித்து இயற்கையின் மீதும் சூழலியல் மீதும் தனிக்கவனம் செலுத்தி விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி களப்பணியும் ஆற்றி வரும் இயல்வாகை பதிப்பகத்தாருக்கும் சூழலியல் அமைப்பு (குக்கூ) நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இயற்கை வேளாண்மை செய்யும் கனவுள்ள ஒவ்வொருவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய நூலே இது. கனவு இல்லாவிட்டாலும் சமூகத்தின் மீதும் சூழலியல் மீதும் இயற்கையின் மீதும் உடல்நலத்தின் மீதும் நாட்டின் வளர்ச்சியின் மீதும் சிறு அக்கறையும் ஆர்வமும் கொண்ட யாவரும் வாசிக்க வேண்டிய நூலே இது. நமது இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஐயா கூறியுள்ளது போல் ” இந்நூலைப் படிப்பதும் பரப்புவதும் என்னை பொறுத்தவரை புண்ணியம்” என்பதே உண்மை.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். “ஒற்றை வைக்கோல் புரட்சி” நூலை அடியேன் வாசிக்க முயலுகிறேன்.
நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *