நூல் அறிமுகம்: ஒடுக்கப்பட்ட ஜீவராசிகளின் பெருமூச்சு – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

“மார்க்ஸ் மதத்தை அபின்” என்று கூறிவிட்டார். மதத்தை இழிவுபடுத்தி விட்டார். மக்களின் நம்பிக்கைகளை களங்கப்படுத்தி விட்டார், என்று கூப்பாடு போடுபவர்களே கொஞ்சம் அதை முழுமையாகக் கேளுங்கள். மேலும் அவர் சொல்கிறார். “மனிதன் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை. தன்னை இன்னும் அறியாத அல்லது ஏற்கனவே தன்னை தொலைத்துவிட்ட மனிதனின் சுய உணர்வே, சுய புகழ்ச்சியே மதம். அது ஒடுக்கப்பட்ட ஜீவராசிகளின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், உயிர்ப்பற்ற சூழல்களின் உயிர்ப்பு, அது மக்களின் அபின்.
 மார்க்சியம் என்பது வறட்டு நாத்திக வாதத்தின் முட்டுச்சந்து அல்ல. அது வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவியல் பார்வை கொண்ட விஞ்ஞான நாத்திகம். மதத் துவேஷம் செய்வதோ, குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் காலத்துக்கும் தாக்கிக் கொண்டு இருப்பதும் அதன் வேலை அல்ல. மாறாக மதப் போர்வையில் பொதிந்து கிடக்கும் புனிதம் என்ற  பேராபத்தையும், அந்த பேராபத்தின் மூலக்கருத்தியலையும்  மக்கள் முன் அம்பலப்படுத்துவது மார்க்சிய நாத்திகமாகும். இப்படியான பல்வேறு தகவல்களை உள்ளடிக்கி மதம் குறித்த மார்க்சிய பார்வையை உரையாடல் வடிவில் பிரசுரமாகத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர்.அருணன்.
முரட்டுவாதமும், அறிவியல் பார்வையும்.. 
 மத உணர்வாளருக்கும்  மார்க்சிய வாதிக்கும் தொடங்கும்  உரையாடல் மத நம்பிக்கைக்கும்  மதவெறிக்குமான வித்தியாசம் வரை நீள்கிறது. மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அதன் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்கப்பட்டவர்களாகவே நிலைத்திருக்கச் செய்ய உருவாக்கப்பட்டவை என்கிற வரலாற்று உண்மைகளைப் போட்டுடைக்கிறார் அருணன். குறிப்பாக முரட்டு நாத்திகவாதம் மற்றும் அறிவியல் நாத்திகவாதத்திற்கான வித்தியாசத்தை விமர்சன பார்வையோடு முன்வைத்துள்ளார்.
சமீபத்தில் கந்தசஷ்டிகவசம் மீதான சர்ச்சை அரசியல் ஆதாயத்திற்காகப் பெரிதாகக் கிளப்பப்பட்டது. நாம் எந்த மக்களுக்காகக் களத்தில் போராடுகிறோமோ அந்தப் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக, இதயமாக மதங்களும் மத நம்பிக்கைகளும் விளங்குகின்றன. அந்தவகையில் பெரும்பான்மை நம்பிக்கையை நேரடியாகத் தாக்குவது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். இருப்பினும் பெரும்பான்மை நம்பிக்கை என்பதாலேயே  அது கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல. இதே உடல் அங்கங்களைப் பாடலாகப் புனிதம் என்று கற்பிக்கப்படும் கோவிலுக்குள் பேசலாம் எனில் கல்வி நிலையங்களில் அறிவியல் நோக்குடன் பாலியல் கல்வி வழங்கக் கூடாது, பொது வெளியில் இதுகுறித்து பேசக் கூடாது என்று அவர்கள் கூறுவது ஏன்? என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே?
புனிதக் கருத்தியலை நாம் ஆதாரங்களோடு உடைக்கும் போதுதான் எளிய மக்கள் மத மாயையிலிருந்து விடுபடுவர்.
மக்கள் தங்களை ஒடுக்குபவர்களை நேரடியாக அடையாளம் கண்டு எதிர்த்துவிடக்கூடாது என்கிற அச்சமே மத பழமைவாதம் நீடிப்பதற்கான அடிப்படையாகவுள்ளது. ஒடுக்குபவனை எதிர்த்துப் போராட வேண்டிய மக்கள் எல்லாவற்றையும் “ஆண்டவன் பார்த்துப்பான்” என்று தங்கள் கஷ்டங்களை நம்பிக்கையாக ஒன்றின்மீது செலுத்துகின்றனர். “என்னால் ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள்தான் போராட வேண்டும்” என்று கடவுள் வந்து சொல்லப்போவதில்லை. வறட்டு நாத்திகம் பேசி மக்களிடமிருந்து விலகிவிடாமல், நம் முன்னேற்றத்திற்காகவும் வாழ்விற்காகவும் நாம் போராடவேண்டியுள்ளது. எல்லாம் அவன் செயல் அல்ல என்பதை வாய்வார்த்தையாக அல்லாமல் களத்தில் மக்களைத் திரட்டி போராடி அது சாத்தியம் என்பதை எதார்த்தத்தில் நிறுவுவதே முற்போக்கு கருத்துக்களோடு மக்களை ஒன்றச்செய்யும். இதுமட்டுமின்றி நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் தங்கள் அதிகாரத்தை ஆதிக்கத்தை நிலைநாட்ட தங்களை அடக்குபவர்களாகவே நிலைநிறுத்திக்கொள்ள மதத்தைக் கருவியாகப் பயன்படுத்துவதை அருணன் அவர்களின் இவ்வுரையாடல் ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது.
சமூக நீதி – THE TIMES TAMIL
அரசும் மதமும் 
 அரசு என்பது மதச்சார்பற்ற அரசுகளாக இருக்க வேண்டியதற்கான அவசியத்தைப் புராண இதிகாசங்கள் தொட்டு, இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய எல்லா மதத்திற்குமான பிரதமர் மோடி உண்மையில் ஒரு மத சார்பாக நடந்துகொண்டு பிற மதங்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்தது போன்ற மதச்சார்பு அரசின் கோரமுகத்தை எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார். பெரியபுராணத்தில் சிவனுக்காக சமணப்பள்ளி இடிக்கப்பட்டது, மோடி புராணத்தில் ராமனுக்காக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. மனிதர்களும், மதங்களும் மாறியிருக்கின்றனவே தவிர, மதவெறி தொடர்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “எம்மதமும் சம்மதம்” என்பது மத உணர்வு, “என் மதம் தான் உயர்ந்தது” என்பது மதவெறி என்பதை தன் உரையாடல்களின் ஊடாக உணர்த்துகிறார்.
எப்படி மதம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்கள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர் என்பதை தோலுரித்திருக்கிறார். குறிப்பாக ஆத்திகர்கள் நமது எதிரிகள் அல்ல, அவர்களோடு நாம் இணைந்து பயணிக்க வேண்டிய புள்ளிகளும் உள்ளது என்று  நிகழ்கால நிதர்சனத்தை அரசியல் தெளிவோடு விளக்குகிறார். எனவே  மார்க்சியம் என்பது ஆத்திக எதிர்ப்போ,  முரட்டு நாத்திக கூடாரமோ அல்ல.. “வர்க்கப் போராட்ட அனுபவத்தாலும், கிடைக்கும் தத்துவ போதனையாலும், அறிவியல்பூர்வ நாத்திகர்களாக மாறிக்கொண்டு வருவோரின் புகலிடம் என உரையாடல் நீள்கிறது.
புத்தகம்- மதம் பற்றி மார்க்சியம் (ஒரு உரையாடல்)
ஆசிரியர்- பேராசிரியர்.அருணன்
வெளியீடு- பாரதி புத்தகாலயம் 
பக்கங்கள்- 40
விலை – 30